08 ஜூலை 2017

எழுத்தை சுவாசித்தவர்


  
     ஆண்டு 1954.

     சென்னை, அரசு பொது மருத்துவமனை.

     படுத்தப் படுக்கையாய் கிடக்கிறார் அவர்.

     இனி மீண்டு எழுந்து வருவது கடினம் என மருத்துவர்களுக்குப் புரிந்து விட்டது.


     ஆனாலும் நோய் வாய்ப்பட்டு, படுக்கையில் படுத்திருப்பவர் சாதாரண மனிதரல்ல.

     எழுத்தால் உலகை வென்றவர்.

     எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பின் மூலம், வாழ்வில் படிப்படியாய் முன்னேறியவர்.

     இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று, மூன்று முறை சிறைச் சாலையினையும் சுற்றிப் பார்த்து விட்டு வந்தவர்.

      தனக்குச் சரி என்று தோன்றுவதை, அஞ்சா நெஞ்சத்துடன் எடுத்துக் கூறச் சற்றும் தயங்காதவர்.

      சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர், விமர்சகர்.

     இவருக்குத் தேனீ என்றொரு புனைப் பெயரும் உண்டு.

     சோம்பல் என்பது இவரது அகராதியிலேயே கிடையாது.

       கடமையைச் செய்ய வேண்டும். சாவதாய் இருந்தாலும், கடமையைச் செய்துவிட்டுச் சாக வேண்டும். இதுவே இவரது தாரக மந்திரம்.

     இவரது எழுத்தைப் படிக்க, ஒவ்வொரு வாரமும், தமிழகம் மட்டுமல்ல, உலகே காத்துத்தான் கிடந்தது.

     இவரது எழுத்தில் நகைச்சுவை வெகு இயல்பாய் பொங்கி வழியும்.

    வரலாற்று நிகழ்வுகளின் மீது, சமையல் கட்டுக்குக் கூட ஆவலைத் தூண்டிவிட்டவர் இவர்.

      ஆம், அக்காலத்தில், அடுப்படியே கதியென்று இருந்த பெண்களைக் கூட, இதழ் எடுத்துப் படிக்க வைத்தவர்.

      இவர் இறந்து விட்டதாக, ஒரு முறை, தவறான தகவல் பரவிய போது, ஒரு வாசகர், இவரது வார இதழுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.

செத்ததுதான் செத்தீர், தற்பொழுது வரும், வரலாற்றுத் தொடரை, எழுதி முடித்து விட்டாவது செத்திருக்கக் கூடாதா.

       இவரது எழுத்தின் ஆளுமை அப்படிப்பட்டது.

       இப்படிப் பட்டவர், இதோ, உண்மையிலேயே மரணப் படுக்கையில் படுத்திருக்கிறார்.

       இவரது வார இதழ் அலுவலகம் சோகத்தின் மூழ்கி இருக்கிறது.

       ஆசிரியரின் மேசையும், நாற்காலியும் கூட, ஏக்கத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

       ஆசிரியரின் மேசையின் மேலிருந்த, தொலைபேசி, உயிர் பெற்று ஒலிக்கிறது.

      மருத்துவமனையில் இருந்து அழைப்பு.

      வார இதழின் போர்மேன் தொலைபேசியை எடுக்கிறார்.

      ஏன், தொடர் கதையின் கையெழுத்துப் பிரதியை வாங்க யாரும் வரவில்லை?

      ஆசிரியரின் குரல், மெல்ல, கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல் கேட்கிறது.

       தாங்கள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறீர்கள், தங்களைச் சிரமப்படுத்த வேண்டாம் என்றுதான்…..

      வார்த்தையை முடிக்க முடியாமல் மெல்ல இழுக்கிறார்.

      உடனே புறப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வா

      அச்சகத்தின் போர்மேன் ராஜா பாதர் உடனே, மருத்துவ மனைக்கு விரைகிறார்.

இந்தா, இதை உடனே எடுத்துப் போய், கம்போஸ் செய்து, பாரத்தில் சேர்த்து விடு.

இந்த உடல் நிலையிலும் தாங்கள் எழுத வேண்டுமா?

     எழுத்தாளருக்குக் கண்கள் கலங்கித்தான் போகின்றன.

வாசகர்கள் கதையைப் படிக்க எவ்வளவு ஆர்வமாக இருப்பார்கள்? அவர்களை ஏமாற விடலாமா? அதனால் தவறாமல் எழுத வேண்டியதுதான் முறை.


      நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா?

       இவர் எழுத்தை நேசித்தவர் அல்ல.

       எழுத்தையேச் சுவாசமாய் சுவாசித்தவர்.

      மரணப் படுக்கையில் நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்த வேலையில், இவரைக் காண வந்த இவரது நண்பர், ஒரு கருத்தைக் கூறினார்.

ஒரு முறை ஜாதகத்தைப் பார்க்கலாமே

தம்பி, இந்த ஜாதகம் பார்க்கிற பைத்தியம் மட்டும் எனக்குக் கட்டோடு பிடிக்காது. ஏன் தெரியுமா?

காலில் நகம் முளைத்த நாளில் இருந்து, நாம் எத்தனையோ கஷ்டப்பட்டு, எத்தனையோ இடத்தில் அடிபட்டு, மிதிபட்டு, குட்டுகள் வாங்கி முன்னுக்கு வருகிறோம்.

என் வரையில், நான் ஒவ்வொரு படி முன்னேறியதும், என்னுடைய சொந்த உழைப்பினால்தான்.

ஆனால், ஜோசியரிடம் போய்க் கேட்டால், என்ன சொல்லுவார் தெரியுமா?

என்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணம், என்னுடைய திறமை, என்னுடைய உழைப்பு என்று ஒப்புக் கொள்வாரா?

மாட்டார். ஏதோ ஒரு செவ்வாய், சுக்கிரன், ஒரு சூரியன்தான் காரணம் என்று சொல்லுவார்.

இதை எப்படிக் கேட்டுக் கொண்டு சகிப்பது என்பதோ, ஒப்புக் கொள்வது என்பதோ முடியவே முடியாத காரியம்?


     உழைப்பைப் போற்றியவர், உழைப்பே உயர்வு தரும் என்று இறுதி மூச்சு உள்ளவரை, உறுதியாய் நம்பியவர், மூட நம்பிக்கைகளை முழு மூச்சாய்ப் புறந்தள்ளியவர், 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள், இவ்வுலக வாழ்வு நீங்கி, இயற்கையோடு இரண்டறக் கலந்த போதுகூட, அந்த வாரத்திற்கான பகுதியை எழுதிக் கொடுத்து விட்டுத்தான் மறைந்தர்.

      நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

     இவர் வாழ்ந்த காலத்தில், தன் முதுமையின் உச்சத்தில், கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த, எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின், பாட்டி, அடிக்கடிப் புலம்புவாராம்.

ஐயா, நான் செத்துப் போவதற்குள் இந்தப் பொன்னியின் செல்வன் முடிந்து விட வேண்டுமே.

மரணப் படுக்கையிலும் தெளிவான சிந்தனை,
தடுமாறாத நெஞ்சம்,
இறுதி மூச்சு உள்ளவரை
எழுத்து,  எழுத்து,  எழுத்து


இவர்தான்
அமரர் கல்கி.       


       

28 கருத்துகள்:


 1. ​அருமையான, சுவையான, சுவாரஸ்யமான தகவல். தம +1

  பதிலளிநீக்கு
 2. தேனீயின் தாரக மந்திரம் மிகவும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
 3. ஸ்வாரஸ்யமான தகவல்கள்.... தேனீ... என்றும் சுறுசுறுப்பு.

  பதிலளிநீக்கு
 4. அழகான நடை...சஸ்பன்ஸ் நிறைந்த வரிகள்...இதைப்போன்று எழுத உங்களால்தான் இயலும்...வாழ்த்துகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 5. வியக்கத்தகு விந்தை மனிதர் திரு.கல்கி அவர்களைப்பற்றி அறியத்தந்த நண்பருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. மிக மிக அருமையான சுவாரஸ்யமான தகவல்....ஜோசியம் பற்றிய அவரது வரிகள் சரிதானே....மிகவும் ரசித்தோம்......அருமையான பதிவு...

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவு! பகிர்வுக்கு நன்றி!👌👍

  பதிலளிநீக்கு
 8. சந்தேகங்கள் ,சர்ச்சைகளுக்கு இடமின்றி
  "கல்கி"ஒரு மகத்தான எழுத்தாளர்.சரித்திர நாயகர்களை
  கண்முன்னே நிறுத்திய "பொன்னியின் செல்வனை"யார்தான்
  மறக்கமுடியும்.

  பதிலளிநீக்கு
 9. பதிவில் உள்ளது உண்மை வரலாறு! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. //என்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணம், என்னுடைய திறமை,
  என்னுடைய உழைப்பு//
  இந்தத் தன்னம்பிக்கை முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் தேவை.
  பாராட்டுகள் ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 11. மிகவும் அரிய தகவல்! பகிர்வுக்கு நன்றி. உண்மை வரலாறு. முதலில் யார்னு புரியாட்டியும் 1954 ஆம் ஆண்டுனு போட்டிருக்கவும் கல்கியா இருக்குமோனு நினைச்சேன். அமரதாரா எழுதும்போது காலமானார் எனக் கேள்விப் பட்டிருக்கேன். :)

  பதிலளிநீக்கு
 12. படித்துக் கொண்டு வரும்போதே கல்கி என்று புரிந்து விட்டதுகல்கியின் எழுத்துகள் என்றும் நிற்கும் சுவையான தகவல்கள் தேனீ என்பட்து சரியே

  பதிலளிநீக்கு
 13. உங்களது எழுத்து மூலமாக எங்களை ஈர்த்துவிட்டீர்கள். சற்றே யோசிக்கவும் வைத்துவிட்டீர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 14. சுவாரஸ்யமான தகவல் பேராசிரியர் கல்வி அவர்கள் மட்டும் வரலாற்று புதினங்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு எழுதாமல் போயிருந்தால் நம்மில் பலபேருக்கு அருள்மொழி தேவன் ராஜராஜன், வந்தியதேவன், குந்தவி, சிவகாமி, மகேந்திரபல்லவர், நரசிம்மபல்லவர், ஆயனர், நாகநந்தி போன்ற வரலாற்று நாயகர்கள் நமக்கு அறிமுகம் ஆகி நம் நெஞ்சில் ஆழ பதியாமல் போயிருப்பர். அவர் நம் நெஞ்சில் எப்போதும் இருக்கிறார். அவரை பதிந்த தங்களுக்கு நன்றி!
  - இரா. சரவணன்
  மும்பை

  பதிலளிநீக்கு
 15. ஆஹா... என்ன அருமையான விவரங்கள் !

  பதிலளிநீக்கு
 16. சுவாரஸ்யமான பகிர்வு......

  கல்கி அவர்களைப் பற்றிய அரிய தகவல்களை அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 17. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவரகளுக்கு, அமரர் கல்கி அவர்கள் சிறந்த ஒரு கதை சொல்லி என்பதை பொன்னியின் செல்வன் புதினம் பல பதிப்புகள் பெற்று விற்பனையில் சாதனைகள் புரிந்து வருவதிலேயே நம்மால் அறிய முடிகிறது. அவரைப் பற்றி
  தாங்கள் எழுதிய இந்த பதிவு மிக அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. அன்புள்ள ஜெயக்குமார்..

  வணக்கம். நான் யாரென்று ஊகித்துவிட்டாலும் நமக்குப் பிடித்தமானவர்கள் எழுதும்போது வாசிப்பது சுகமானது. அப்படித்தான் உங்களின் ஈர்ப்பான எழுத்தைப் படித்தேன். நான் எழுதுவதற்கு அடிப்படையான உந்துதல்களில் கல்கியின் எழுத்தும் ஒன்று. உங்களால் இதுகுறித்து இன்று ஒரு பதிவு எழுத நேரமிருக்கிறது. எழுதுவேன். அருமையான பதிவு. வளரும் எழுத்தாளர்களுக்கு இதுபோன்ற செய்திகள் நலம் பயக்கும்.

  பதிலளிநீக்கு
 19. #இவரது எழுத்தில் நகைச்சுவை வெகு இயல்பாய் பொங்கி வழியும்#
  இதனால்தான் என் மானசீக எழுத்தாளர் அவரே :)

  பதிலளிநீக்கு
 20. அருமையான மலரும் நினைவு...
  கல்கி

  பதிலளிநீக்கு
 21. அடேயப்பா..கல்கியா...கொக்கா?
  அருமை அருமை!

  பதிலளிநீக்கு
 22. அருமையான பதிவு.
  மரியாதைக்குரிய ஐயா,
  வணக்கம்.தமிழ் படிக்கவே பிடிக்காத எனது மகள் எனக்காக நான்கு பக்கங்களாவது படிக்கச்சொன்னதன் விளைவு! இன்றைய நாட்களில் தமிழ் நாவல்களாகவே தேடி பதிவிறக்கம் செய்து படித்து வருகிறாள்.அவ்வளவு அருமையான நாவல்தாங்க, பொன்னியின் செல்வன்...

  பதிலளிநீக்கு
 23. அருமையான பதிவு! நன்றி!
  Thamil manam - 9
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 24. கல்கி என்னும் எழுத்தாளுமையை என்னமாய்ப் படம்பிடித்துக் காட்டிவிட்டீர்! அடேயப்பா!

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு