ஏப்ரல் 23 ஆம் நாள்
ஞாயிற்றுக் கிழமை
பகல் 1.30 மணி
பசி வயிற்றைக் கிள்ள, உணவுப் பொட்டலங்களைப் பிரித்து,
உண்ணத் தொடங்கினோம்.
நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான
திரு வெ.சரவணன், நண்பர் திரு கா.பால்ராஜ், திருவையாறு, அரசர் கல்லூரியில் கண்காணிப்பாளராகப்
பணியாற்றும் நண்பர் திரு கே.ரமேஷ், நண்பரும் மகிழ்வுந்து ஓட்டுநருமான திரு ரகுபதி ஆகியோருடன்
இணைந்து நானும், மதிய உணவினைச் சாப்பிடத் தொடங்கினேன்.
நாள்தோறும் சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்,
இதிலென்ன செய்தி இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
சாப்பிடுவது புதிதல்ல.
சாப்பிடும் இடம் புதிது.
நாங்கள் சாப்பிடும் இடம், மெல்ல மெல்ல இடதும்
வலதுமாய் அசைந்து, அசைந்து ஆடிக்கொண்டே இருக்கிறது.
வித்தியாசமான அனுபவம்தான்.
கடல் நீரில் அசைந்தாடியவாரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
படகில் அமர்ந்தவாரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
அலையின் தாளத்திற்கு ஏற்ப படகு நடனமாடிக் கொண்டே
இருக்கிறது.
லகூன்
முத்துப் பேட்டை லகூன்
வங்கக் கடலுக்கு முன், தனியொரு கடலாய், லகூன்
பரந்து விரிந்து காட்சியளிக்கிறது.
படகிற்கும் கீழே நான்கு அல்லது ஐந்தே அடிகளில்
தரைப் பகுதி.
ஆனாலும் இறங்கி நடக்க இயலாது.
காரணம் சேற்றுத் தரை.
அவ்வளவும் மண்ணும், நீரும், சேறும் சகதியும் நிறைந்த பகுதி.
---
ஆனாலும் எண்ணம் நிறைவேறாமால் தள்ளிப் போய்க்
கொண்டே இருந்தது.
இதோ இன்று லகூனில், சின்னஞ்சிறு படகில் பயணித்துக்
கொண்டிருக்கிறோம்.
கண்ணுக்கு எட்டும் தொலைவில், சிறு சிறு தீவுகள்,
வாருங்கள் வாருங்கள் என நம்மை அழைக்கின்றன.
அமைதியான சூழல்.
வெளி உலகின், ஒலியலைகள் ஏதுமின்றி, மாசில்லா
காற்றினைச் சுவாசித்தபடி எங்களின் படகுப் பயணம்.
நீங்கள் கை காட்டும் தீவு ஒன்றில், உங்களை இறக்கி
விடுகிறேன். இரண்டு அல்லது மூன்று மணிநேரம், அந்தத் தீவில் தங்கியிருங்கள். நான் காத்திருந்து
அழைததுச் செல்கிறேன் என்றார் படகோட்டி.
வெகு தொலைவில் இருந்த ஒரு தீவினைக்
காட்டினோம்.
எப்படியும்
அந்தத் தீவிற்குச் செல்ல நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் ஆகும், மதிய உணவைச் சாப்பிடுவதானால்,
படகிலேயே சாப்பிடுங்களேன் என்றார்.
அசைந்தாடும் படகில் மதிய உணவு.
படகின் தளத்தில் உட்கார்ந்த போதுதான் கவனித்தேன்.
படகின் முன் புறமும, பின்புறமும் என இரு இடங்களில்,
துளைகள் இருந்தன.
பெரிய உண்டியலின் வாய்ப் பகுதி
போல் இரு துளைகள்.
இரு துளைகளும் வெள்ளை சாக்கினால் அடைக்கப்பட்டு
இருந்தன.
படகோட்டியினைப் பார்த்து, இந்த துளைகள் எதற்கு
என்று கேட்டேன்.
சாக்கினை
எடுத்துவிட்டுப் பாருங்கள் என்றார்.
சாக்கினை எடுத்த அடுத்த நொடி, கடல் நீர் படகிற்குள்
வெகுவேகமாய் நுழையத் தொடங்கியது.
படகோட்டியோ சிரித்தார்.
படகின் ஒரு மூலையில் இருந்த, இரு பலகைகளை எடுத்துக்
காட்டினார்.
பலகையின் முனையில் குறுக்கே சட்டம் ஒன்று ஆணி
வைத்து அடித்துப் பொருத்தப் பட்டிருந்தது.
கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் பொழுது,
இரு ஓட்டைகளிலும், அடைத்திருக்கும் துணியினை எடுத்துவிட்டு, இந்த பலகைகளை, அந்த ஓட்டைகள்
வழியே சொருகி விடுவோம்.
இந்தப் பலகைகள், படகிற்கும் கீழே சென்று, கடலலைகளின்
வேகத்திற்குக் குறுக்கே நின்று, படகு சாய்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் என்றார்.
எளிய முறையில், படகு கவிழாமல் இருப்பதற்காக,
நம் முன்னோர்கள் செய்திருக்கும் முன்னேற்பாடு, வியப்படைய வைத்தது.
தீவில் கால் வைத்து இறங்க இயலாத நிலைமை.
காரணம் தீவு முழுக்க, மரங்களின் வேர்கள்,
ஈட்டி போல் நீட்டிக் கொண்டிருந்தன.
தீவு முழுவதும் வேர்கள், வேர்கள்.
காரணம் அறிந்த போது வியந்துதான் போனோம்.
இந்த அலையாத்திக் காடுகள், வலிமைமிகு சுனாமியினைக்கூட,
நேருக்கு நேர் நின்று, நெஞ்சம் நிமிர்த்தி, தடுக்கும் ஆற்றல் வாய்ந்தவை.
இதுபோன்ற அலையாத்திக் காடுகளில், சில வகை தாவரங்களால்
மட்டுமே வாழ்க்கையை ஓட்ட முடியும்.
கழுதை முள்ளி, நரிக் கண்டல், வெண்
கண்டல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், சிறு கண்டல், காகண்டல், சுரபுன்னை போன்ற தாவரங்களால்
நிரம்பிய பகுதி இது.
நமக்குத் தெரிந்து, சிறு செடியாகட்டும், பெரு
மரமாகட்டும், இவற்றின் வேர்கள், மண்ணில் கீழே, ஆழமாய் இறங்கி, படர்ந்து பரவி மரத்தைக்
காக்கும்.
ஆனால் இப்பகுதியில் வளரும் தாவரங்களின் வேர்களோ,
பூமிக்குள்ளே சென்று, கொண்டை ஊசி வலையில் திரும்புவதுபோல், திரும்பி, மீண்டும் மண்ணைப்
பிளந்து கொண்டு மேலே வந்து,, தலை நிமிர்ந்து நிற்கும் தன்மை வாய்ந்தவை.
இதுபோன்ற வேர்கள், இங்கு அனைத்து தீவுகளிலும்
நிரம்பி இருப்பதால், இங்கு நடந்து செல்வது என்பது கடினமாக செயலாகும்.
இத்தீவில் நடக்க ஆசைப் பட்டு, நடக்கும்போது,
தப்பித் தவறி கீழே விழுந்து விடுவோமேயானால், இந்த வேர்கள், ஈட்டிபோல், நமது உடம்பை
பதம் பார்த்துவிடும்.
தண்ணீரின் மேலேதான், நாம் இதுவரை,
பாலத்தில் நடந்திருப்போம்.
ஆனால் இங்கே தரைமீது நடப்பதற்கே பாலம் தேவைப்படுகிறது.
இரண்டு அடி உயரத்தில், மூன்று அடி அகலமே உள்ள
சிறு பாலம்.
நடந்து சென்றோம்.
நடக்க நடக்க, பாலங்கள் , மரத்தில் கிளைகளைப்
போல், பிரிந்து பிரிந்து செல்கின்றன.
மெல்ல நடந்தோம்.
பாலத்தின் நிறைவில், கடற்கரை ஓரத்தில், அமைக்கப்
பட்டிருந்த, ஒரு மரக் குடிலுக்கு, நடைப் பாலம் எங்களை அழைத்துச் சென்றது.
மரக் குடிலின் முப்புறமும், உட்காருவதற்கு
வசதியாய் நீண்ட இருக்கைகள்.
புத்தம் புது சூழல்.
கடலலைகளின் சிறு ஓசை கூட, தெள்ளத் தெளிவாய் கேட்கும்
வகையில், ஒரு ஆழ்ந்த அமைதி.
பறவைகளின் கிறீச் ஒலிகள்.
இளம் தென்றல் காற்று.
நேரம் கடந்ததே தெரியவில்லை.
மாலை மணி நான்கு ஆகிவிட்டது.
புறப்பட்டாக வேண்டும்.
கரைக்குத் திரும்பியாக வேண்டும்.
எங்களுக்காக, தீவின் மறுபுறம் காத்திருக்கும்
படகைத் தேடி, தரைப் பாலத்தில் மெல்ல நடக்கத் தொடங்கினோம்..
--------
அருமை.. பட்டுக்கோட்டையில் இருந்த போது அலையாத்திக் காடுகளுக்குள் சிறிது தூரம் நடந்திருக்கின்றேன்.. வரலாற்று சிறப்புடையவை..
பதிலளிநீக்குநண்பரே ! உங்களுக்கு உற்ற தோழர்கள் அருமையானவர்கள்!என்னால் நேரில் காண இயலாதே!
பதிலளிநீக்குத ம 2
நேரில் சென்றால்கூட இந்த அளவிற்குப் பார்க்கமுடியுமா என்று கூறுமளவிற்கு மிக அழகாகச் சென்று பகிர்ந்துள்ளீர்கள். இதுவரை சென்றதில்லை. உங்கள் பதிவு அங்கு செல்லும் ஆவலைத் தூண்டிவிட்டது. நன்றி.
பதிலளிநீக்குஅருமையான சுற்றுலாப்பதிவோடு நில்லாமல்....புவியியல் சார்ந்தும்,மரங்கள் பற்றிய உயிரியலையும் எழுதியிருக்கும் நீங்கள் நல்லாசிரியர்...
பதிலளிநீக்குபடங்களில் அத்தனை பசுமை...
படங்களும் அருமையான அரிய தகவல்களும் நன்றாக இருந்தன. இவை எல்லாம் அறிந்ததில்லை. வாய்ப்புக் கிடைத்தால் போகணும் என்னும் ஆவலைத் தூண்டி விட்டது.
பதிலளிநீக்குநண்பர் VNS யை தொடர்ந்து, லகூனுக்கு நீங்களும் சென்று வந்து எழுதியிருப்பதைப் பார்த்தால், எனக்கும் விரைவில் சென்று ரசிக்க வேண்டுமென்ற ஆவல் கூடுகிறது :)
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குமகிழ்ச்சியான லகூன் காட்சி அனுபவங்களை படங்களோடு பதிவினில் எழுதியமைக்கு நன்றி. மூத்த வலைப்பதிவர் V.நடனசபாபதி அய்யா அவர்களும் இதே லகூன் - காயல் பயணம் பற்றி எழுதி இருந்தார்.
பதிலளிநீக்குபடகுப்பயணம் அரிய தகவல்களுடனும் அழகிய புகைப்படங்களுடனும் இனிமையாகக் கழிந்ததை அழகாக எழுதியிருக்கிறீர்கள்!!
பதிலளிநீக்குமிகவும் அருமையாக சூழல் நண்பரே வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு செல்லவேண்டும் புகைப்படங்கள் மிகவும் தெளிவு பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஅருமையான சூழல்.. அட்டகாசமான பயணம்.. எல்லாம் சரி, இந்த பொண்டாட்டி புள்ளைகளோடு பயணம் போற பழக்கமில்லையோ!
பதிலளிநீக்குமிக அருமை! ஆழிப் பேரலை வந்தபொழுது அலையாத்திக் காடுகள் இருந்த பகுதிகள் தப்பித்தன என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்கள். ஆனால், இன்னும் இவற்றின் அருமை புரியாமல் கடலோரங்களில் சுவர் கட்டலாமா மணல் மூட்டை அடுக்கலாமா எனச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன... இல்லை இல்லை சிந்தித்துக் கொண்டு மட்டுமே இருக்கின்றன நம் அரசுகள்!
பதிலளிநீக்குஅலையாத்திக் காடுகள் உள்ளுக்குள் இவ்வளவு ஆபத்தானவை என்பது இதுவரை கேள்விப்படாத செய்தி! சுவையான தகவல்! படங்களும் நேர்த்தியாக இருக்கின்றன. படகு கவிழாமல் தடுப்பதற்கான அந்தத் தொழில்நுட்பத்தைப் பொன்னியின் செல்வனில் படித்தது. அத்தோடு இன்று உங்கள் பதிவு மூலம் கேள்விப்படுகிறேன். இரண்டும் ஒன்றுதான் என நினைக்கிறேன்.
மேலே ராஜி அவர்கள் நல்ல கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு நீங்கள் அளிக்கப் போகும் மறுமொழியை எதிர்பார்க்கிறேன்.
நல்லதொரு பயணக் கட்டுரைக்கு நன்றி!
அருமை
பதிலளிநீக்குஅறியாத இடம் பற்றிய அரிய தகவல்...
பதிலளிநீக்குபடங்களுடன் பகிர்வு அருமை ஐயா...
அலையாத்திக் காடுகளைக் காணும் ஆவல்.
செய்தியும் படங்களும் அருமை.............!!!
பதிலளிநீக்குசெய்தியும் படங்களும் அருமை.............!!!
பதிலளிநீக்குஅழகான தீவு.
பதிலளிநீக்குஅருமையான விவரங்கள். பார்க்க ஆவலாக இருக்கிறது.நிறைய பேராக போனால்தான் பயண்ம இனிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
படங்கள் எல்லாம் அருமை.
மிக அருமையான பதிவு.நேரில் பார்ப்பதை காட்டிலும் தெளிவான பயனம் கட்டுரை.நன்றி.
பதிலளிநீக்குபடகு கவிழாமல் இருக்கக் கையாளும் முறை பாராட்டுக்குரியது. பகிர்வு அருமை.
பதிலளிநீக்குஅருமையான ஓர் இடம் படங்களும் அழகு...
பதிலளிநீக்குகீதா: இந்த லகூனைப் பற்றி அறிவேன் சகோ...அது போல பிச்சாவரமும் அலையாத்திக் காடுகள் நிறைந்தவை...அதுவும் மிக மிகஅழகான இடம்..இந்த இரு இடங்களும் போக வேண்டும் என்று நினைத்து இன்னும் போக முடியவில்லை...போக வேண்டும்..அருமையான படங்கள் தகவல்கள்..
அருமையான அனுபவப் பதிவு
பதிலளிநீக்குகுறித்த இடத்திற்கு எங்களையும் அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.
மிக அருமையான பகிர்வு ஐயா...
பதிலளிநீக்குஇடமும்..தகவல்களும் மிக சிறப்பு..
அனைவரையும் செல்ல தூண்டுகிறது...படங்கள்
அலையாத்திக் காடுகள் பற்றியும்...
படகின் பலகை முறை பற்றிய செய்திகளும் சுவையானவை..
அருமையான சுற்றுலாத் தலமாக இருக்கும் போல்! அழகான படங்கள்! அருமையான வர்ணிப்பு! வாழ்த்துக்கள் சார்!
பதிலளிநீக்குகைபிடித்து அழைத்துச்சென்ற அழகான எழுத்து,
பதிலளிநீக்குசுற்றுலா போய்வந்த திருப்தி/
நடனசபாபதி ஐயா அவர்களும் இது பற்றி எழுதிய நினைவு
பதிலளிநீக்குமிகவும் அழகான அமைதியான இடம் .நான் பழவேற்காடு பார்த்திருக்கேன்..இது அதற்கு பலமடங்கு பெரிசா மிக அழகா இருக்கும்போலிருக்கே !! பகிர்வுக்கு நன்றிகள்
பதிலளிநீக்குgood adventure
பதிலளிநீக்குநானும் உங்களுடன் படகில் பயணித்து காட்டில் நுழைந்தது போன்ற அனுபவத்தைத் தந்தது உங்கள் கட்டுரை..படங்களும் அருமை. சில தகவல்களைப் படிக்கிறபோது அந்த நாட்களில் வாழ்ந்தவர்களின் மதிநுட்பம் எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது....
பதிலளிநீக்கு