இளங்கோ
அடிகள் புகழும் காவேரிநாடு
டாக்டர்
நா. கணேசன், ஹ்யூஸ்டன், அமெரிக்கா
காவேரி
பாயும் கொங்குநாடும், சோழநாடும்:
காவேரி ஆறு பற்றிய சிறப்பை இளங்கோ
அடிகள் விரிவாகவும் மிக அழகாகவும் பாடியவர். காவேரி கொங்குநாட்டில் தோன்றிப் பாய்ந்து சோழநாட்டிலே வளம் பெருக்குகிறது. நீண்ட காலமாக ஒரு
சொலவடை வழக்கத்தில் உண்டு. கொங்குநாட்டில் மலைகள் சூழ்வது அகல்விளக்கின் விளிம்பு போல
உள்ளது, அந்த அகல்விளக்கில் மூன்று இழைகள் கொண்ட திரி என்பர். நொய்யல், அமராவதி, பவானி
சேர்ந்து அகண்ட காவிரி ஆகிக் கொங்கிலிருந்து சோழநாட்டை வளமாக்கச் செல்கிறாள் பொன்னிப்பாவை.
இதனால் அகல்நாடு என்று கொங்குநாட்டைக் கூறுவர். அகல் விளக்குத் திரியின் முகம் வழியாய்
பெரிய காவேரி திருச்சி-தண்செய் சமவெளிக்கு விரிந்து பாய்ந்து ஒளிமயமான வாழ்க்கையைத்
தமிழர்களுக்கு காவிரி ஆறு அளிக்கிறது.
சங்கச் சேரர்களின் தலைநகர் வஞ்சி
எனப்படும் கரூர். இதனைச் சங்க இலக்கியங்களும், கரூரின் காவேரிக்கரையில் கிடைக்கும்
அக்காலத்து நாணயங்களும், புகழூரில் கிடைத்துள்ள சேரர்களின் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களும்
உறுதி செய்துவிட்டன. ரா. ராகவையங்கார், தினமலர் இரா. கிருஷ்ணமூர்த்தி போன்றோர் ஆய்வு
நூல்களின் முடிவால் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் தம் இளமைக்கால வாழ்வில் பெரும்பகுதியைக்
கரூர் (வஞ்சி) அரண்மனையில் வளர்ந்திருப்பார் எனலாம். பாலக்காட்டுக் கணவாய் வழியாக,
கொச்சி அருகே உள்ள முசிறிப்பட்டினத்திலும் அயல்நாட்டு வாணிகத்தைக் கண்காணிக்கச் சில
காலங்கள் சென்று தங்கியிருப்பார். கொங்கு வஞ்சியில் இருந்து ஸ்ரீரங்க பட்டினமும், அதன்
மேற்கே, குடகின் தலைக்காவேரியும் சில நாட்களில் பயணிக்க முடியும். காவேரி தோன்றிப்
பாயும் இந்த மேற்குத்தொடர்ச்சி மலைவளம் மிக்க பகுதிகள் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக
இளங்கோ அடிகள் காலத்தில் இருந்துள்ளன. உ. வே. சாமிநாதையர் விளக்குகிறார்: “கொங்குநாட்டில்
தலைக்காடு என்ற இடத்தில் கங்கர்கள் என்ற ஒருவகையரசர்கள் இருந்தார்கள். அவர்கள் புலவர்களை
ஆதரித்து வந்தார்கள். தளக்காடு என்பது பிற்காலத்தில் தலைக்காடு என்று வழங்கப்படுகிறது.
நன்னூல் இயற்றிய பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கன் அந்தக் கங்கர்களில் ஒருவனே. அவர்கள்
சைனர்கள். நன்னூல், அதற்குரிய மயிலைநாதர் உரை, நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை,
நம்பியகப்பொருள், இவற்றின் உரைகள், பெருங்கதை, வச்சணந்திமாலை முதலியன அவர்கள் இயற்றுவித்த
நூல்களாகும். சீவக சிந்தாமணியும், சூளாமணியும் சில உபகாரிகள் வேண்டுகோளால் சைன பண்டிதர்கள்
இயற்றிய காப்பியங்களே.”(உவேசா, சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்). காங்கயம் காளைகளை
இன்றும் கர்நாடகாவில் கங்கமாடுகள் என்றுதான் அழைக்கின்றனர். பொலி வடக்கே பலி என்றாவது
போல, ஸ்ரீரங்கபட்டினத்தை ஆண்ட கொங்க மன்னர்கள் கங்க மன்னர்கள் என்று கன்னட மொழியில்
அழைக்கின்றனர். பௌத்தம் இந்தியாவில் அழிந்துவிட்டது. ஆனால் சமணம் இந்தியாவில் இருப்பதற்குக்
காரணம் கர்நாடகாவில் கங்க வம்சாவளி மன்னர்கள் அளித்த பாதுகாப்புத்தான் முக்கியக் காரணம்
ஆகும்.
சிலம்பின் நாடுகாண் காதைக்கு முன்னோடி:
பௌத்த மதம் ஹீனயானம், மகாயானம் என்று பிரிந்தபோது, தமிழர்கள் பலரும் மகாயானத்தை ஆதரிக்கலாயினர்.
தமிழ், மற்ற பிராகிருதங்களில் வழங்கிவந்த கதைகள் மஹாயான சூத்திரங்கள் என வடமொழியில்
மொழிபெயர்க்கப்பட்டன. அவ்வகையில் முக்கியமானது கண்டவியூக சூத்திரம் ஆகும். கி.பி. முதல்
நூற்றாண்டிலேயே சீன மொழிக்கு கண்டவியூகம் மொழிபெயர்க்கப்படுகிறது. இந்தோனேசியாவில்
மிகப் பெரிய மண்டலஸ்தூபியாக போரோபுதூர் உள்ளது. அதில் வலம்புரியாக பௌத்தர்கள் மலை ஏறுவர்.
அப்போது காட்டப்படுவது கண்டவியூகக் காட்சிகள் தாம். ஐந்தாம் நூற்றாண்டில் காளிதாசர்
ரகுவம்சம் எழுத கண்டவியூகம் தான் மாதிரி. கண்டவியூகத்தில் சுதனன் என்னும் தனவைசிய இளைஞன்
ஒருவன் 54 இடங்களுக்கு பாரதநாடு முழுதும் பிரதட்சிணமாகச் சென்று குருமார்களைச் சந்தித்து
ஞானம் பெறுகிறான். அதில் தமிழ்நாட்டிலே பல இடங்கள் விவரிக்கப்படுகின்றன. இலக்கண ஆசானைக்
காவேரிப் பூம்பட்டினத்திலும், சில குருமாரை மைசூர்க் காடுகளிலும், மதுரையிலும், சந்தித்து
தென்கோடியில் பொதிய மலையில் அவலோகித ஈசுவரரைத் தொழுது வணங்கி வட இந்தியா சுதனன் திரும்புவதாக
அமைந்தது. கொல்லிமலையில் வசீகரிக்கும் கொல்லிப்பாவை பற்றி பழைய நூல்கள் சொல்கின்றன.
கொல்லிப்பாவையை வசுமித்திரா என்ற பெயரில் அவள் அரண்மனையில் சுதனன் சந்திக்கிறான். போரோபுதூரில்
அச் சிற்பம்:
நாடுகாண்
காதையும், கவுந்தி அடிகளும்:
காளிதாசரின் ரகுவம்சம் என்னும்
இந்திய சுற்றுலா இலக்கியம் பாட, பௌத்தர்களின் கண்டவியூகம் அமைந்தாற் போல, காவேரி பிறந்து
பாய்ந்து வளமாக்கும் நாடுகளைப் பாட இளங்கோ அடிகள் அந்த யுத்தியைப் பயன்படுத்துகிறார்.
சீன மொழியில் Journey to the West போலவும், ஜப்பானிய மொழியில் Tale of the Genji போல,
செம்மொழி தமிழில் உள்ள முதல் தேசிய நாவல் சிலப்பதிகாரம். காவிரி பாயும் கங்கர்களின்
நாட்டை ஆளுமைக்குள் வைத்திருப்பதைச் சோழர்கள் எப்பொழுதும் விரும்பினர். கங்கர்கள் அணைகளைக்
கட்டிவிட்டால் நீர்வரத்து திருச்சி-தஞ்சை டெல்ட்டா பாசனத்துக்கு குறையுமே. கி.பி. இரண்டாம்
நூற்றாண்டில் கல்லணை கட்டியதால், காவேரியை கரிகாலச் சோழப் பேராறு எனக் கல்வெட்டுகள்
குறிப்பிடுகின்றன. சோழன் ஒருவனின் இறையாண்மைக்குக் கட்டுப்பட்டே காவிரிநதி பாயும் எல்லா
இடங்களும் இருந்தன என்று காட்ட நாடுகாண் காதை இயற்றியுள்ளார்.இப்போதைய மாகாண எல்லைகள்
இல்லாத காலம் சிலம்பின் காலம். வஞ்சியில் இருந்து கன்னட நாடு சென்று சமண சமய குரவர்களிடம்
இளங்கோ அடிகள் அதன் தத்துவங்களைக் கற்றிருக்கலாம்
திரைப்படங்களில் இடங்கள் காட்சிக்குக்
காட்சி மாறுவதுபோல, கண்டவியூகத்தில் கலியாண மித்திரர் என்னும் போதகர்கள் வாழும் இடம்
இருக்கும். அதேபோல, சிலப்பதிகார நாடுகாண் காதை அமைக்கப்பட்டுள்ளது. காவிரியின் கடைமுகம்
பூம்புகாரில் கோவலன் கண்ணகி தம்பதியர் தம் பயணத்தைத் தொடங்குகின்றனர். ஆனால் சோழநாட்டின்
வளமைக்குக் காரணமான காவேரிநாடு முழுமையும் பாட விரும்பிய இளங்கோ அடிகள், வடகொங்குப்
பகுதியாகிய காவேரி பிறக்குமிடத்தில் கவுந்தி அடிகள் தவப்பள்ளியை அமைக்கிறார். இதனைப்
பல குறிப்புகளால் அறிவிக்கிறார். ‘குடதிசைக்கொண்டு, கொழும்புனல்காவிரிவடபெரும்கோட்டுமலர்ப்பொழில்நுழைந்து’ ‘வட பெருங்கோடு’ வடக்கே உள்ள பெருமலை ஆகிய சையமலை.
சையமலையிலே காவிரி பிறப்பது என்பதை சேக்கிழாரும் பிறரும் பாடியுள்ளனர். ஐம்பொழில்
(ஐஹொளெ), பொழில்நரசபுரம் (ஹொளெநர்ஸிபுர), என பொழில்மண்டிலம் என சையமலைப் பகுதிகளை ’மலர்ப்பொழில்’
என்றார்.வளமனையிலே இருந்து வாழ்ந்த கண்ணகி வந்த களைப்பில் ’இங்கே இருந்து மதுரை செல்ல
எத்தனை தூரம்’ என்கிறாள். மெதுவாக நகைத்து ’முப்பது காதம்’ என்கிறான். ஒரு காதம் என்பது
12 மைல் என விரிவாகப் பார்ப்போம். சஹ்யாத்திரி என்னும் காவேரிப் பிறப்பிடம் தான் இத்
தொலைவுக்குப் பொருந்தும். கவுந்தி அடிகள் தானும் மதுரை வருகிறேன் என்று கிளம்புகிறார்.
மூவரும் வரும் வழியில் மேற்குத் தொடர்ச்சி மலைவளம், அங்கே உள்ள பறவைகள், வேளாண்மை எல்லாம்
பார்க்கின்றனர். அந்த மலைகளில் கரும்பாலைப் புகை, மேகங்கள் போலச் சூழும் வேளாண் வளமும்
குறிப்பிடுகிறார். அங்கிருந்துதான் கரும்பு அதியமான் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து
பயிரிடச் செய்கிறான் என்பது சங்க இலக்கியம்.
பின்னர்ஸ்ரீரங்கபட்டினம் வந்தடைகின்றனர். ஜைன ஆகமங்கள் இப்போது ஸ்ரீரங்க பட்டினம்
என்பதை ஸ்ரீரங்கம் என்றே குறிக்கும். அக்காலத்தில் திருச்சி அருகே உள்ள அரங்கத்திற்குத்
திருவரங்கம் என்றே பெயர். ஆழ்வார் பாடல்களில் திருவரங்கம் என்று மட்டும் உள்ளது. ஸ்ரீரங்கம்,
திருவரங்கம் இடங்களுக்கான வேறுபாடு அடியார்க்கு நல்லார் காட்டியுள்ளார். கங்க நாட்டினரின் ஸ்ரீரங்கத்தில்
சமண இறைவர்கள் ஆகிய அந்தசரணர் தோன்றுகின்றனர். அவர்களைத் தொழுது, சமண சமய வழிபாடுகளைக்
கவுந்தி அடிகள் கோவலன் – கண்ணகிக்குக் கற்பிக்கிறார். சிலம்பின் ஆசிரியர் சமணர் என்று
காட்டுவதே நாடுகாண் காதை தான். சமண சமய போதனைக்காகவே, கவுந்தி அடிகள் என்ற கதாபாத்திரத்தைத்
தம் காப்பியத்தில் படைத்துள்ளார். ‘ஆற்றுவீஅரங்கத்து, வீற்றுவீற்றுஆகி,குரங்குஅமைஉடுத்தமரம்பயில்அடுக்கத்து’
என்று நாடுகாண்காதை சீரங்க பட்டினத்தை வர்ணிக்கிறது. அடுக்கம் என்பது அடுக்கிய மலைகள்.
மரங்கள் நிறைந்த மலை அடுக்கங்கள் கொண்ட காவேரியின் அரங்கம் ஸ்ரீரங்கபட்டினம் தான்.
திருவரங்கத்திலே மலை அடுக்கங்கள் இல்லை.
பின்னர், திருவரங்கம் நோக்கி மூவரும்
புறப்படுகின்றனர். இடையிலே, துறவிப் பெண்ணுக்குக் குழந்தைகளா என்று கேலி பேசிய வம்பப்
பரத்தை, வறுமொழியாளனை (harlot and trifler) நரியாகச் சபிக்கிறார் கவுந்தி அடிகள். பின்னர்
கண்ணகி கோவலன் வேண்டியதற்காக சாப விமோசனம் அளித்து திருவரங்கம் என்னும் துருத்தியை
(land projection) அடைகின்றனர். சிலப்பதிகாரக் காலத்தில் சோழ அரசர்கள் ஆழப்படுத்தி
ஆண்டில் எல்லா மாதங்களிலும் ஒரு தீவாகத் திருவரங்கம் ஆகவில்லை போலும். மழை இல்லா வறட்சிக்
காலங்களில் திருவரங்கம் நிலத்தில் இருந்து பிரியாமல் துருத்திக்கொண்டிருந்திருக்கிறது.“விரிதிரைக்காவிரிவியன்பெரும்துருத்தி,
திருஅமர்மார்பன்கிடந்தவண்ணமும்". பின் அங்கிருந்து மதுரை சென்று ஊரை வலம்வந்து,
கண்ணகியை வெளியே விட்டுவிட்டு நகருள் நுழைகிறான். நாடுகாண் காதை எனும் தலைப்புகோவலன்,
கண்ணகி வளநாட்டில் வாழ்ந்ததும், பின்னர் காடுகாண் காதை எனும் பெயர் சுடுகாட்டுக்குக்
கோவலன் செல்லும் துயர நிகழ்வின் தொடக்கம் என்பதைத் தற்குறிப்பு ஏற்றமாய்க் காட்டுவன.
கோவலன் திரும்பி வந்து கவுந்தியிடம் ஊருள் கண்டவற்றை விவரிக்கிறான். கண்ணகியைப் பார்த்துக்கொள்ள
மாதரி என்னும் இடைச்சி வந்து சேர்கிறாள்.
காதம் என்னும் தூர அளவை 10 மைல்கள் என்றெடுத்துப் பாரதியார்
சூரிய ஒளியின் வேகத்தைக் கணித்ததை 2016-ஆம் ஆண்டு ‘ஓம்சக்தி’ தீபாவளி மலரில் பார்த்தோம்.
ஐரோப்பிய விஞ்ஞானப் பரிசோதனை முடிபுகள் வடமொழியிலும், தமிழிலும் எவ்வாறு மொழிபெயர்க்கப்படுகிறது
என்பதற்குப் பாரதியின் ’திசைகள்’ கவிதை ஒரு நல்ல உதாரணம். யோசனை என்னும் தூர அளவு இந்தியாவில்
ஒரே அளவாக (9.1 மைல்) சிந்து சமவெளிக் காலத்தில் இருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை
இருந்துள்ளது.ஒரு அங்குலம் 11/16 இஞ்ச் என்பது சிந்து சமவெளிக் கட்டிடங்கள், அசோகர்
கால குகைகள், டில்லி இரும்புத்தூண், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்என்று பலரும் கொடுக்கும்
அளவை. அதில் தொடங்கிக் கணித்தால் யோசனை தூரம் 9.1 மைல் ஆகிறது. காத அளவு பற்றிய செய்திகள்
கர்நாடகாவில்தான் முதலில் கிடைக்கின்றன. எருதுகள் பூட்டி,ஒரு நாளில் வண்டி ஓட்டும்
தூரம் காவதம். அது குறுகிக் காதம் எனவும் ஆகும். ”நாகைக்கும் காரைக்கும்
காதம், காரைக்கும் கடையூருக்கும்
காதம் கடையூருக்கும் காழிக்கும் காதம், காழிக்கும் தில்லைக்கும் காதம்”என்பது பழமொழி
நாகப்பட்டினம், காரைக்கால், திருக்கடையூர்,
சீர்காழி, சிதம்பரம் ஊர்களுக்கிடையே சுமார் 12 மைல் (20 கிமீ) தூரம் உள்ளது. இதுவே,
காதத்தின் தூரம். காதம் என்ற சொல்லை இளங்கோ அடிகள் தான் தமிழில் முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறார்.
காவேரியின் தோற்றம் முதல் பூம்புகாரில் கடலில் கலக்கும் வரை காவிரி பாயும் புனல் வள
நாட்டின் பெருமையை புகார்க் காண்டத்தின் இறுதியில் விளக்கமாகப் பேசுகிறார். கவுந்தி
அடிகளின் தவச்சாலை காவேரி பிறக்கும் இடத்தின் அருகே இருந்தது என்பதற்கு காதத்தின் அளவு
(~12 மைல்) மிக முக்கிய ஆதாரம் ஆகும்.
வணிகத்தால் விநாயகர் வழிபாடு,
சமண, பௌத்த சமயங்கள், பிராமி எழுத்து போன்றவை கர்நாடகம் வழியாக தமிழகத்துக்கு வந்தன.
வணிகப் பெருவழிகள் பற்றி மூன்று கல்வெட்டுகள் தமிழ்நாட்டிலே உண்டு. அனைத்தும் கொங்குநாட்டிலே
கிடைத்தவை. ஆறகழூரில் ’மகதேசன் பெருவழி’ என்று ஆறைக்கும் காஞ்சிக்கும் உள்ள தொலைவைப்
பதினாறு காதம் என்று 16 குழிகள் வெட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஒரு காதம் என்பது நான்கு
குரோசம். ஒரு குரோசம் ஏழரை நாழிகை தூரம் என்று கொண்டால் காதம் 10 மைல், அதாவது யோஜனை
தூரம் ஆகும். ஒரு குரோசம் 10 நாழிகை தூரம் என்றால் காதம் 12 மைல் ஆகும். இச் செய்தியை
ராட்லர் அகராதியில் காணலாம். அருணகிரிநாதர், காளையார்கோயிற் புராணம், துறைமங்கலம் சிவப்பிரகாசர்
என எண்ணற்ற நூல்களில் காதம் சுமார் 10 -12 மைல் கணக்கு வருகிறது.
பெருந்தொகை என்னும் நூலில் சில
வெண்பாக்கள் சேர, சோழ, பாண்டி நாடுகளின் சுற்றளவைக் குறிப்பிடுகின்றன. சேரநாடு (கொங்கு
உள்ளிட்டது) 80 காதம், பாண்டிநாடு 56 காதம், சோழம் 24 காதம், தொண்டை 20 காதம். காதம்
12 மைல் என்று கொண்டால் இந்த நாடுகளின் வட்டகைக்கு ஓரளவுக்கு ஒத்துவருகிறது.
நாலடியார் வெண்பா ஒன்றில் சமணர்கள்
தங்கள் காதக் கணிப்பைத் தந்துள்ளனர். இதனை ஒலியியல் விஞ்ஞானம் கொண்டு கணிக்கலாம். இவ்வெண்பா
நம் மரியாதைக்குரிய அருட்செல்வர் ஐயாவை நினைவூட்டும்.
கடிப்பிடு கண்முரசம் காதத்தோர்
கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர்
கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்
சமண சமயங்களில் தீர்த்தங்கரர்கள்,
போதிசத்துவர் உயரங்கள், வான லோகங்களின் அளவுகள்மிகைப்படுத்தி இருக்கும். ஒலியியல் விஞ்ஞானம்
(Acoustic Science) கொண்டு ஆராய்ந்தால் இடியோசை, முரசொலி கேட்கும் தூரம் தெரியும்.
பழந்தமிழரின் ஒலியறிவியல் அவதானிப்பு இப்பாடல். அதனால், ஒரு காதம் 10 மைல், நான்கு
காதம் நாற்பது மைல் சுற்றளவு கொண்ட வட்டத்தை நாலடியார் பேசுகிறது.நான்கு காதம் சதுக்கபூதம்
புடைத்துண்ணும் என சிலம்பில் வரும். அதாவது, ஒரு யோசனை வட்டகை (circumference) சதுக்கபூதம்
புடைத்துண்பது 40 மைல் சுற்றளவு கொண்ட வட்டாரத்துக்குக் கேட்கும் என்கிறார் இளங்கோ
அடிகள்.
இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.
சிலம்பும்,நாலடியாரும் தோன்றிப் பல நூற்றாண்டுகள் சென்றபின் சமணரின் பழைய யோசனை தூரம்
(~40 மைல்) என்பதறியாமல், யோசனை 10 மைல் என எடுத்துக் காத அளவு இரண்டரை மைல்கள் எனக்கொள்ளும்
வெண்பாக்கள் யாப்பருங்கலம் நூலில் உள்ளன. இந்த அளவைகளை நாலடியார் வெண்பாவில் பொருத்திப்
பார்த்தால் ஒலியறிவியலுக்கு (Acoustic Science) ஒவ்வாமல் முரண்படுகிறது. இடி முழக்கம்
எவ்வளவு தூரம் கேட்கும் என்னும் ’அக்கௌஸ்டிக் ஸயன்ஸுக்கும்’ பொருந்தாக் கூற்றாகிவிடும்.
மேலும் எண்ணற்ற நூல்கள் தரும் 10 – 12 மைல் என்பது ஒரு காதம் என்பதற்கும் பொருந்துவதில்லை.
எனவே, இந்தக் காதம் இரண்டரை மைல் எனக் காட்டும் வெண்பாக்களை யாப்பருங்கலப் பதிப்பில்
இடைச்செருகல் என்று கொள்ள வேண்டியுள்ளது.
கண்டவியூகப் பாதையில் நாடுகாண்
காதை:இளங்கோ வாழ்ந்த காலத்தில் (~கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) தலைக்காவேரி உள்ளிட்ட பகுதிகள்
தமிழகம் தான். இவை வட கொங்கு தேசம். இருபதாம் நூற்றாண்டு சிலப்பதிகார உரைகள், நாடுகாண்
காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ஆனால், கண்டவியூக
சூத்திரம் படித்தாலும், காதம்/காவதம் கணக்கீட்டாலும், பொழில்மண்டிலம், வடபெருங்கோடு,
... என்பவைமரபுச் சொற்கள் காவிரி தோன்றும் பகுதியைச் சார்ந்தனவாதலாலும் கவுந்தி அடிகள் ஊர் காவேரி நதி தோன்றும் பிரதேசம்
எனத் தெளிவடைய முடிகிறது. சையமலையும், தலைக்காவேரி, சீரங்கம் என்பதும் கர்நாடகம், மலை
அடுக்கங்கள் கொண்ட சீரங்கம் அருகே தான் கங்கர்களின் தலைக்காடு. சீரங்க பட்டினம் கங்கர்
ராஜ்யத்தைச் சேர்ந்தது.ஆனால், திருவரங்கம் என்பது திருச்சி அருகே இருந்த துருத்தி எனவும்
கணக்கில் எடுத்தால் நாடுகாண்காதையின் பொருள் தெளிவாக விளங்கும். சோழனின் இறையாண்மைக்குக்
கீழிருந்த பகுதிகள் இவை என்பதால் காவேரி பாயும் நாடு முழுமையும் பாட கவுந்தி அடிகளைச்
சையமலையில் சந்தித்து, சுமார் 360 மைல் தூரம் கொண்ட மார்க்கத்தில் திருவரங்கம் வந்து
பின் மதுரை செல்வதாகப் பாடியுள்ளார். பூம்புகாரில் இருந்து நேராக மதுரை சென்றால் தூரம்
குறைவு என்பது உண்மையே. கர்நாடகாவில் என்றுமே சிறப்பாக இருப்பது சமண சமயம். சீரங்க
பட்டின மன்னர்கள் கங்க ராஜாக்கள், அந்த ஊரிலே சமணத்தைக் கவுந்தி வாயிலாகக் கோவலன் – கண்ணகி கற்கின்றனர்.
பௌத்த சமயக் கோட்பாடுகள் கண்டவியூகத்தில் வருகின்றன.கண்டவியூக உத்தியில் சோழ ராஜ்ஜியத்தின்
வளமைக்குக் காரணமான காவிரியின் தோற்றம் முதல் பாடி, கவுந்தி அடிகள் என்னும் கதாபாத்திரத்தைப்
படைத்து,அவர் வழியாக சமண சமயத்தின் முக்கியக் கோட்பாடுகளை விரிவாக நாடுகாண் காதையில்
விளக்குகிறார். பௌத்தத்துக்கு கண்டவியூகம் பாரதம் முழுதும் காட்டுவது போல, சோழர்களின்
காவேரியின் பெருமை முழுவதையும் புகழ்ந்து நாடுகாண் காதையை முத்தமிழ்க் காப்பியமாகிய
சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டத்திலே அமைத்திருப்பது மிகச் சிறப்பு. மகாகவி பாரதியார் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று போற்றியது பொருள்பொதிந்த
வாக்கு!
.-----
அமெரிக்காவின் நாசா வின்வெளி ஆய்வு
மையத்தில் பணியாற்றும் அறிவியல் அறிஞரும், தமிழறிஞருமான பொறியாளர் திரு நா.கணேசன் அவர்களின் ஆய்வுக் கட்டுரையினை, தங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
நண்பர்களே, இக்கட்டுரையினைப் பற்றிய,
தங்களின் மேலான கருத்துக்களுக்காக, ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
பிறகு...
பதிலளிநீக்குகட்டுரை நீண்டதொரு சரித்திர நாவலை படித்தது போன்று இருக்கிறது பகிர்வுக்கு நன்றி நண்பரே
நீக்குஓர் ஆய்வு நூலைப் படித்த உணர்வு ஏற்பட்டது. கட்டுரையாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்ண்ணா.
பதிலளிநீக்குபண்டிகைலாம் முடியட்டும்.. பொறுமையா படிக்கேன்
எளிமை விளக்கம் ஆய்வு வரைந்தவர் தந்தவர் இருவருக்கும் நன்றி!வாழ்த்து
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குதம +1
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநிறைந்த விஷயங்கள்.. புதிதானவை..
பதிலளிநீக்குஅன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
வாழ்க நலம்..
அருமை
பதிலளிநீக்குஅற்புதமான ஒரு வரலாற்று பதிவு.
பதிலளிநீக்குtha.ma.8
பதிலளிநீக்குநன்றி, கரந்தையாரே.
பதிலளிநீக்குகோவையில் இருந்து வெளிவரும் ஓம்சக்தி தீபாவளி மலரில் (2017) இன்று ஒரு கட்டுரை. சிலப்பதிகாரத்தின் நாடுகாண்காதை எவ்வாறு காவேரிபாயும் முழுநாட்டையும் பாடியுள்ளது எனச் சுருக்கமாக எழுதியுள்ளேன். விரிவாக, மின்தமிழ் குழுவில் விளக்கியுள்ளேன். இந்தோனேசியாவில் போய்ப் பார்த்தீர்களானால், கட்டுமலையாக போரோபுதூர் என்ற புத்த ஸ்தூபி பல ஏக்கரா பரப்பளவில் காணுவீர்கள். பௌத்தத்தின் பக்தர்கள் வலம்புரியாக வலம்வந்து அந்தக் கட்டுமலையின் மேல் ஏறிப் புத்தரை வணங்குவர். புத்தருக்கு இருபுறமும் கவராண்டி (வஜ்ரபாணி), கொத்தாண்டி (அவலோகிதேசுவரன்) இருப்பர். போரோபுதூரில் வலம்வரும்போது கண்டவியூக சூத்திரத்தை, மாமல்லபுரம் ‘அர்ஜுனன்தவசு’ சிற்பம்போல புடைச்சிற்பங்களாக, படைத்துள்ளனர். சுதனன் என்னும் தனவைசியச் செட்டி இளைஞன் 54 கலியாணமித்திரர் என்னும் பல தொழில்களில் ஈடுபடும் குருமார்களிடம் ஞானம் பெற்ற சரித்திரம் தான் கண்டவியூகம். கி.பி. முதல் நூறாண்டிலேயே சீன மொழியாக்கம் இப் பௌத்த நூல் சென்றுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே காளிதாச மகாகவி ஸ்ரீரமனின் திக்விஜயத்தை ரகுவம்சம் என்ற காவியம் ஆக்கினார். இரண்டையும் படித்தறிந்த இளங்கோ அடிகள் கண்டவியூக யுக்தியை மேற்கொண்டு, தன் சமண ஆச்சாரியரான கவுந்தி அடிகள் என்னும் பாத்திரத்தை, தமிழ்த் தேசிய முதல்நாவல் ஆகிய சிலம்பில், சோழநாட்டின் வளமைக்குக் காரணமான காவேரி நதி பாயும் பிரதேசம் எல்லாம் பாடி வாழ்த்தியது நாடுகாண் காதை. இதனை உறுதிப்படுத்த, காதம் என்ற அளவையை கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு முதலில் அறிமுகப்படுத்துகிறார். காதம் என்ற அளவை 10 மைல் என்கிறார் பாரதியார் (திசைகள் கவிதையில்), மற்ற நூல்களில் ~12 மைல் கணக்கு வருகிறது. அவ்வாறு பார்த்தாலும், சீரங்கம் என்று ஜைந ஆகமங்கள் குறிப்பிடும் மலை அடுக்கங்கள் சூழ்ந்த ஸ்ரீரங்கம் கங்க ராஜ்ஜியத்திலே உள்ளதை வர்ணித்து, கங்க மன்னர்கள் பேராதரவு அளித்த ஜைந சமய போதனையை அங்கே நடைபெறுவதாக வைப்பதாலும் தெளிவாகிறது. சேரர்கள் தலைநகர் வஞ்சி என்பது இன்றைய கரூர் என தொல்லியற் சான்றுகள் நிரூபித்துவிட்டன. அங்கே காவேரிக்கரையில் சேரர்களின் அரண்மனையில் இளங்கோ அடிகள் வளர்ந்திருக்க வேண்டும். சற்று வடக்கே சையமலைக்குச் சென்று, கங்கர்கள் நாட்டில் சமணம் கற்றிருக்கக்கூடும். அல்லது, சமண ஆச்சார்யர் வஞ்சி மாநகர் அரண்மனைக்கு வந்து அரசிளஞ் சிறார்களுக்குப் பள்ளிக்கல்வி தந்திருக்கவும் கூடும். இன்றும், கரூர் அருகே உள்ள விஜயமங்கலம் - கங்கக் குரிசில் சீயகங்கன் புரந்த நன்னூல் ஆசிரியர் பவணந்தி அரங்கேற்றிய சமணக் கோவிலுக்குப் பூசாரிகள் கர்நாடகத்தில் இருந்து வருவது நடைபெறுகிறது. அவர்களை வாத்தியார்கள் என்போம்.
இன்னொரு விஷயமும் குறிப்பிட்டுள்ளேன். காதம் அளவை மறந்துவிட்ட காலத்தில் சமண ஆசிரியர்களின் நிகண்டுகள் அச்சாகத் தொடங்கின. அதில், இடைச்செருகல்களாக, சைவம் பற்றிப் பல பாடல்கள் புகுந்துள்ளன. சமணர்களின் யோஜனை என்னும் அளவை நான்கு காதம் என நாலடியார் வெண்பாவை ’அக்கௌஸ்டிக் ஸயன்ஸ்’ கொண்டு கணிக்கலாம். அதனை மறந்து, யோஜனை = 10 மைல் என்று சுருக்கி, காத அளவை பற்றிச் சில பாக்கள் யாப்பருங்கலம் நூலுக்கு உரையில் 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் சேர்த்துள்ளனர். நிகண்டுகளில் உள்ள இடைச்செருகல்கள் போலவே, சமணர்களின் காதம், யோஜனை பற்றி மறந்துவிட்ட காலகட்டத்தில் அச்சான போது சேர்ந்த இடைச்செருகல்கள் ஆகும் என இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். சைவ முறையில் மதுரைப் பாரத்துவாசி, கற்றோர்கள் உச்சிமேல்கொள் நச்சினார்க்கினியர் சீவக சிந்தாமணிக்கு உரை எழுதிப் பின்னர் சமணர்களிடம் கற்று இரண்டாம் முறையாக சிந்தாமணிக்கு உரை செய்தார். அதில், நான்கு காதம் = ஒரு யோசனை என்பதும் காணலாகும். இதே போல, ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்களும் யசோதர காவியத்துக்கு இரண்டு முறை உரை எழுத நேர்ந்தது.
இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு:
http://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html
நா. கணேசன்
உசாத்துணை:
(1) நாலடியாரும் ஒலியியல் விஞ்ஞானமும் (Yojana distance of Jains as determined from the Science of Acoustics)
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/2xsfP--xPSY/OiHlXOdLHAAJ
(2) பாரதியார் பாடலில் ஒளியின் வேகம் - சாயணர் ரிக்வேத பாஷ்யத்தில் ஓர் ஆய்வு
http://nganesan.blogspot.com/2016/11/speed-of-light-in-bharatiyar-poem.html
நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குதீபாவளி நல்வாழ்த்துகள்!
ஆய்வுக்கட்டுரையை படித்தேன் அறிந்தேன்.. நன்றி!
பதிலளிநீக்குஉடனே பின்னூட்டம் எழுதிவிடமுடியாத அளவுக்குக் கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரை இது. ஆழ்ந்து படிக்கவேண்டும். கொஞ்சம் அவகாசம் தேவை. அனுமதிப்பீர்களா நண்பரே?
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா சென்னையில் இருந்து.
என்னவோ தெரியலை எழுத்துகளும் நடையும் மிகவும் மாறுபட்டு இருப்பதுபோல் தோன்று கிறது கோவையும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக் கொங்கு நாடு என்பது என் புரிதலாக இருக்கிறது அதனால்தான் கேரள மக்கள் பொதுவாக தமிழரை கொங்கர்கள் என்றோ பாண்டிகள் என்றோ கூறு வார்கள் இந்தக் கொங்குநாட்டில் காவிரி உற்பத்தி என்பது என்புரிதலையே சந்தேகிக்க வைக்கிறது
பதிலளிநீக்குஅற்புதமான கட்டுரை! ஆனால், சில இடங்கள் என் சிற்றறிவுக்குப் புரியவில்லை. ஆனால், பொதுவாக எல்லாம் புரிந்தன. இவ்வளவு ஆழமான கட்டுரைக்காக நன்றி!
பதிலளிநீக்குஅருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுக்கு நன்றி.
இலக்கியப்பதிவு.நாசா விஞ்ஞானி அவர்களின் தமிழார்வம் பாராட்டுதலுக்குரியது.
பதிலளிநீக்குஅழகான தமிழில் அருமையான ஆக்கம்.....வாழ்த்தி மகிழ்கின்றேன்....................
பதிலளிநீக்குWonderful research article
பதிலளிநீக்கு