25 நவம்பர் 2017

வடகால்




     வடவாறு.

     நண்பர்களே, நான் பயின்ற, பணியாற்றுகின்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை, ஒட்டி, உரசி, உறவாடிச் செல்கின்ற ஆறுதான் வடலாறு.

     சிறு வயதில், பள்ளிப் பருவத்தில், ஆற்றில் தண்ணீர் நிறைந்து ஒடும் காலங்களில், வடவாற்றில் நீந்தி மகிழ்வதுதான் எனக்கும், என் நண்பர்களுக்கும் முக்கியமான பொழுதுபோக்கு ஆகும்.


     நீச்சல் கற்றுக் கொண்டு, புதிதாய் நீந்தத் தொடங்கிய காலகட்டத்தில், இதே வடவாற்றின் பாலத்தில் இருந்து குதித்து, நீரில் மூழ்கி, மூச்சுத் திணறி, நண்பன் இராசேந்திரன் என்பவரால் காப்பாற்றப் பெற்ற அனுபவமும் உண்டு.

      இன்று நினைத்துப் பார்க்கிறேன். இந்த வடவாற்றில் இறங்கி குளித்து, முப்பது வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.

     ஆனால், இந்த முப்பது வருடமும், தினமும், இந்த வடவாற்றினைப் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன்.

      இருப்பினும், குளிக்க இயலவில்லையே, ஆற்றின் பாலத்தில் இருந்து, குதிக்க இயலவில்லையே எனும் ஏக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

      சில நாட்களுக்கு முன்னர், இந்த வடவாற்றின் கரையில் ஒரு பயணம் சென்றேன்.

      நானும், நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியருமான, திரு அ.சதாசிவம் அவர்களும், ஆற்றங்கரையிலேயே, ஒரு மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு, ஒரு சிறு பயணம் சென்றோம்.

     எதற்குத் தெரியுமா?

     கரந்தையிலேயே பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த போதும், இத்துனை வருடங்களாய் காணாத, ஒரு காட்சியைக் காண்பதற்காகச் சென்றோம்.

     ஆற்றங்கரையினை ஒட்டியே, நீண்டு செல்லும், மணற் பாதையில், தூய்மையானக் காற்றைச் சுவாசித்தபடி, அமைதியானச் சூழலில் ஒரு பயணம்.

     வடகால்.

     கரந்தையை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு கிராமம்.

     வடகாலை நெருங்கி விட்டோம்.

     இதோ, இங்கே பாருங்கள், வடவாறு, காணாமல் போய்விட்டது.

     ஆமாம் நண்பர்களே, வடவாற்றின் கரையிலேயேதான் வந்தோம், வடகால் என்னும் சிற்றூரை அடைந்தவுடன், வடவாறு காணாமல் போய்விட்டது.

     வடவாற்றின் குறுக்கே ஒரு பெரும் சுவர்.

     சுவற்றிற்குப் பின் வெற்றுத் தரை.

     வடவாறு காணாமல்தான் போய்விட்டது.

     பெருஞ் சுவரைப் பார்க்கிறோம்.

     






பெருஞ்சுவரின் கீழிருந்து, தண்ணீர் கொப்பளித்து வெளி வருகிறது.

      சுவற்றின் கீழிருக்கும் குழாய்களின் வழியே ஆறு வெளிவருகிறது.

      வியந்து போய் நிற்கிறோம்.

      வடவாறும், முதலை முத்து வாரி எனப்படும் பேய்வாரியும், ஒன்றை ஒன்று குறுக்கிட்டு, வெட்டிக் கடந்து செல்லும் இடம் இந்த வடகால்.

     மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் வடவாறும், தெற்கிலிருந்து வடக்காகப் பாயும் பேய்வாரியும், ஒன்றை ஒன்று சந்திக்கும் இடம், இந்த வடகால்.

     இரண்டு ஆறுகளும் பூமி மட்டத்திலேயே, ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்கின்றன.

     முதலை முத்துவாரி எனப்படும் பேய்வாரியானது, மழைக்காலங்களில் மட்டுமே, நீரைச் சுமந்து செல்லும், ஒரு வடிகாலாகும்.

     வடவாறோ, விவசாய நிலங்களுக்காக, கல்லணையில் இருந்து, நீரைக் கைப்பிடித்து அழைத்து வரும் ஆறாகும்.

     வடவாற்றில் நீர் வரத்து இருக்கும் பொழுதெல்லாம், இந்த வடவாற்று நீரின் ஒரு பகுதி, இந்தப் பேய்வாரியின் வழி திரும்பி, விவசாய நிலங்களை மூழ்கடித்து விடுவது வாடிக்கையாய் இருந்து வந்துள்ளது.

      இதனைத் தடுப்பதற்காகவும், வடவாற்று நீரினை, வடவாற்றின் திசையிலேயே, ஓட விடுவதற்காகவும், ஒரு புதிய கட்டுமானத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

      பேய்வாரியானது, வடவாற்றைக் கடக்கும் இடத்தில், இருபுறமும், பெருஞ்சுவர் எடுத்து, வடவாற்றைத் தடுத்து, பேய்வாரி, தடங்கல் இன்றிப் பயணிக்க வழி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

     வடவாற்றின் குறுக்கே, இரு சுவர்களை எழுப்பி, பேய்வாரிக்கு வழிவிட்டால், வடவாறு எப்படி ஓடும், என்ற கேள்வி எழுகிறதல்லவா?

    


வடவாற்றின் குறுக்கே இரு சுவர்கள் எழுப்பி, வடவாற்றைத் தடுத்தாலும், அவ்விடத்தில் பூமியை அகழ்ந்து எடுத்து, மூன்று பெரிய குழாய்களைப் பதித்து, அதாவது பேய்வாரிக்கும் கீழே பதித்து, மேல் தளத்தை சிமெண்ட் கலவையால், சாலைபோல் அமைத்திருக்கிறார்கள்.

       வேக வேகமாய் ஓடி வரும் வடவாற்று நீர், இதன் முதல் சுவற்றில் மோதி, பின் கீழ் இருக்கும் குழாய்களில் புகுந்து, இருட்டில் பயணித்து, அடுத்தத் தடுப்புச் சுவற்றினைக் கடந்தவுடன், பூமிக்கு மேலே வந்து, சுதந்திரம் பெற்று விட்ட உணர்வோடு, புத்துணர்ச்சியோடு, வெகுவேகமாய் தன் பயணத்தைத் தொடருகிறது.

      தடுப்புச் சுவருக்கு முன், ஒரு தடுப்பணையினையும் அமைத்திருக்கிறார்கள்.

     




வேகமாய் ஓடி வரும் வடவாற்று நீர், சுவற்றில் பெருவேகத்தோடு மோதி, மோதி, சுவற்றைப் பலவீனப் படுத்தலாம் என்பதால், அதற்கு முன், ஒரு சிறு தடுப்பணையினைக் கட்டி, நீரின் வேகத்தைக் குறைத்திருக்கிறார்கள்.

       தடுப்புச் சுவற்றின் ஒரு ஓரத்தில் ஒரு கல்வெட்டு.

       தன் பொலிவினையும், உருவினையும், உண்மை நிறத்தினையும் இழந்த கல்வெட்டு, இக்கட்டுமானம் எழுப்பப்பெற்ற வருடத்தைப் பறை சாற்றுகிறது.

        1906 ஆம் ஆண்டு.

        இன்றைக்கு நூற்றுப் பத்து வருடங்களுக்கு முன், நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள், நமக்காக கட்டுவித்த கட்டுமானம் இது.

        தண்ணீரின் அருமையினையும், பெருமையினையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

        நாம்தான் இன்று வரை உணரவில்லை.

        ஒவ்வொரு குளமாக, ஒவ்வொரு ஏரியாக, தூர்த்துத் தூர்த்துக் கட்டிடங்களைக் கட்டி எழுப்பிவிட்டு, தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை, எனக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம்.


24 கருத்துகள்:

  1. //கல்லணையிலிருந்து நீரைக் கைப்பிடித்து அழைத்து வரும் ஆறு// அருமை.

    சுயநலத்தில் மூழ்கி, பொதுநலத்தை மறந்த ஆட்சியாளர்கள்.

    தம +1

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான பதிவு.கல்லூரி படிப்பு முடிந்து பணி தேடும் நிலையில் சிறப்பான தேர்வின் காரணமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளிலிருந்து பணி உத்திரவு வந்தபொழுது நான் பொதுப்பணித்துறையைத் தேர்ந்தெடுத்தேன்.
    ஆற்றின் கரையினில் பிறந்து வளர்ந்த எனக்கு அதுபோல் ஆற்றின் சீரமைப்புகளில் பணியாற்றியது ஒரு சுகமான அனுபவம் .
    தஞ்சாவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் கச்சமங்கலம் என்ற ஒருக்கருகில் வெண்ணாற்றில் ஒரு மிகப்பெரும் நீர்தேக்கும் கண்மாய் (Regulator )இருக்கிறது.இங்குதான் வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு,வடவாறு பிரிகிறது.
    எங்கும் நீர்பெருக்கு நிறைந்து காணப்படும் இப்பொழுது மிக அருமையான காட்சியாக இருக்கும்
    சென்று பார்த்து வாருங்கள்.
    நீர் வழித்தடங்களை மாற்றி அமைப்பதும் திசை திருப்பி விடுவதும் ஒரு நல்ல அனுபவம்.

    பதிலளிநீக்கு
  3. அருமையாக சொன்னீர்கள் நண்பரே

    ஆங்கிலேயர்களின் ஆட்சியில் உருவான பலவாறான விசயங்கள் இன்னும் நமக்கு பலனளிக்கிறது.

    இயக்கையை அழித்து விட்டு இறைவனிடம் முறையிட்டு பயன் என்ன ?

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு..
    பிறகு வருகின்றேன்...

    பதிலளிநீக்கு
  5. ஆஹா...
    அறியாத தகவல் ஐயா....
    படங்களுடன் விபரமாய்...
    ஆம்... ஏரி குளங்கள், வாய்க்கால், குளக்கால் எல்லாத்தையும் வீடாக்கிட்டோம்...
    விளைநிலங்களும் வீடுகள் ஆகின்றன.
    பின் தண்ணீர் எப்படித் தங்கும்... அது வீடு புகத்தான் செய்யும்.
    நாம் தண்ணீரின் தேவையை உணரவில்லை...
    போட்ட போரெல்லாம் இன்னும் பைப்புக்கள் இறக்கினால்தான் நீர் தருவேன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டன...
    இனி வரும் காலங்களில் நாம் செய்த வினைகளின் பயனை அனுபவிக்க ஆரம்பிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலைப் படாதீர்கள். அனுபவிக்கப்போக்வது நாமல்ல. நம் சந்ததிகள்தான்.

      நீக்கு
    2. சந்ததிகள் அனுபவிக்கலாம்.
      எப்பவும் ஆழ்குழாய்த் தண்ணீரை அள்ளி இறைக்கும் தேவகோட்டை, காரைக்குடிப் பகுதியில் இப்போ தண்ணீர் கீழே போய்விட்டது. சென்ற ஆண்டு எங்கள் வீட்டில் மூன்று குழாய் கூடுதலாக இறக்கினோம். இந்தா இப்போது டேங்க் நிறைய ஒரு மணி நேரமாகிறது... முன்பு 20 நிமிடத்தில் நிறையும்.
      இந்த வருடம் மழை பொய்த்தால் மிகப்பெரிய செலவு இருக்கிறது... :)
      நம்ம வாழ்க்கையிலேயெ அனுபவிக்க ஆரம்பிச்சாச்சு ஐயா...

      நீக்கு
  6. தொடர்ந்து தவறுகளைச் செய்துகொண்டே வருகிறோம் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. இதற்கான விளைவுகளை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. தஞ்சைக்கு அருகிருக்கும் இந்த நீர்த் தேக்க கடவுப் பாலத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லையே என வருத்தமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  8. புதிய செய்திப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வடவாறு பற்றிய அறியாத தகவல்ப்பகிர்வு அருமை ஐயா! ஆங்கிலேயர்கள் கட்டிய அணைகள் தான் இன்னும் எங்கும் நிரந்தரமாக சேவை புரிகின்றது நம்மவர்கள் ஆட்சியில் திட்டங்கள் எல்லாம் கிடப்பில் மட்டுமே!

    பதிலளிநீக்கு
  10. மிக நல்ல பகிர்வு. தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு. அடுத்து வரும் தலைமுறைக்கு கடத்த வேண்டிய பகிர்வு மிகவும் நன்றி

    பதிலளிநீக்கு
  11. பல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. சின்ன வயதில், நடந்து ஓடி விளையாடிய இடங்கள் உருமாறி இருக்கும்போது பார்க்க மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். இருப்பினும் நீங்கள் கொடுத்து வைத்தனீங்கள்.. இப்பவும் அதே இடத்தில் இருப்பதால் இழப்பின் வேதனை இல்லை.

    ஆறு எனில் ஓடிக்கொண்டே இருக்குமே... அப்படி ஓடும் ஆற்றை எப்படி இப்படித்திருப்பினார்களோ...

    ஒருநாளைக்குப் பூமியையும் மற்றம் பக்கம் திருப்பிச் சுழல வைக்கச் சொல்லோணும் இவர்களிடம்.

    பதிலளிநீக்கு
  13. வடவாறு வரலாறு அருமை. காலத்தில் இடப்பட்ட மிக நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  14. வடவாறு - ஆற்றைப் பற்றி தெரிந்திருந்தாலும் பதிவில் சொன்ன விஷயம் தெரியாது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. need karanthai long form, I came to know it is in Thanjavur, still many dont know exactly where is karanthai? where it is located....karanthai denotes which place name...pl.write about it.

    பதிலளிநீக்கு
  16. /கல்லணையிலிருந்து நீரைக் கைப்பிடித்து அழைத்து வரும் ஆறு// மிக மிக ரசித்தோம் இந்த வரிகளை!!! (கீதா: வடவாறு பற்றிக் கொஞ்சம் தெரியும் என்றாலும் ) புதியதாய் பேய்வாரி பற்றி அறிந்து கொண்டோம். படங்கள் மிக அழகு! பதிவு அருமை!

    பதிலளிநீக்கு
  17. ஆறு சொல்லிச்செல்கிற கதை
    அரிதானதாய்!

    பதிலளிநீக்கு
  18. நல்ல பதிவு..
    Tamil manam - 8
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  19. மணல் கொள்ளையர்கள்...இன்னுமா அந்த ஆற்றை விட்டு வைத்து இருக்கிறார்கள்....சந்தேகமாய் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  20. அருமையான தகவல்கள்...

    பதிலளிநீக்கு
  21. புதிய தகவல் பரிமாற்றத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    காசு சுருட்டும் சிந்தை கொண்ட அரசியலமைப்பு இல்லாத வெள்ளைக்காரர்களின் அரும்பணியும் சமூகம் பொதுநல சிந்தனையும் செயல்பாடும் போற்றுதற்குரியன.

    கோ

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு