02 டிசம்பர் 2017

பதிவர் திருவிழா





அறிவியக்கம் கண்ட தமிழ்நாடே
ஈதேகாண் யாம்கண்ட பாதைக்கு ஏறுநீ
ஏறுநீ, ஏறுநீமேலே
                  . பாவேந்தர்

அடுத்தப் பதிவர் திருவிழாவை, அடுத்த வருடம் மே இறுதியில் அல்லது ஜுன் துவக்கத்தில், புதுகையிலேயே நடத்தி விடுவோம்.

     கேட்கும்போதே வார்த்தைகள் இன்பத் தேனாய் செவிகளில் பாய்ந்தன.

     சொல்லியவர் யார் தெரியுமா?


     வேறு யாராய் இருக்க முடியும்.

     கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா அவர்கள்தான்.

---

   

  26.11.2017 ஞாயிற்றுக் கிழமை.

     பிற்பகல் 3.00 மணி

     முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்களும், நானும், புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழா நடைபெறும், நகர் மன்றத்துள் நுழைந்தோம்.

      புத்தகத் திருவிழா களை கட்டியிருந்தது

       வளாகத்திற்குள் நுழைந்ததுமே, எதிர்வந்து வரவேற்றவர் திரு தி.தமிழ் இளங்கோ அவர்களாவார்.

       திருச்சியில் இருந்தபோதும், புதுகையின் மேல் உள்ளப் பாசத்தால், புதுக்கோட்டையராகவே மாறிப் போனவர்.

       நேற்றும் வந்திருக்கிறார்.

        இதோ இன்றும் வந்திருக்கிறார்.
       

மூவரும் ஒன்று சேர்ந்து மகிழ்வாய், அளவாவிக் கொண்டிருந்த போதே, கவிஞரும் வந்தார்.

நொடிப்பொழுதும் சுமந்தே திரிந்து
நொந்து போன பெண்களுக்கு
ஒலிம்பிக்கில் எடை பெரிதல்ல ….

துன்பங்களை சிறகுகளாக்கி
பறக்கத் துடிக்கின்றவர்களுக்கு
சிறகு பந்து எட்டாக்கனியல்ல ….

விட்டு விடுங்கள்
அவர்கள் சாதனையாளர்கள்.

பெண்குலத்திற்குப் பெருமை சேர்த்த
சாக்ஷி, சிந்துவை
ஆராதிக்கும்
தோழமைகளை வணங்குகிறோம்.

என முழங்கும் சகோதரி தேவதா தமிழ் கவிஞர் மு.கீதா அவர்கள், வங்கண்ணா, அன்னி எப்படி இருக்காங்க என அன்பொழுக வரவேற்றார்.

       இவருடன் இணைந்தே வந்த, சகோதரி திருமதி மாலதி அவர்களும் மகிழ்வோடு வரவேற்றார்.

       சிறிது நேரத்திலேயே, நண்பர் திரு மது கஸ்தூரிரங்கன் அவர்கள் மலர்ந்த முகத்துடன் கரம் பற்றி மகிழ்ந்தார்.

      கவிமதி சோலச்சி, தன் மகனை ஓடி, ஆடி விளையாட விட்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

      கவிஞர் காரைக்குடி தென்றல் அவர்களைச் சந்தித்தேன்.

       மெல்ல நண்பர் கஸ்தூரிரங்கன் அவர்களோடு, புத்தக மலைகளுக்குள் புகுந்தோம்.

      

இப்புத்தகத் திருவிழாவினை நடத்தும், தமிழ்நாடு அறிவியல் இயக்க, மாநிலச் செயலாளர் திருமிகு எஸ்.டி.பாலகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தோம்.

      கடந்த ஆண்டே, கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களால், இவரது அறிமுகத்தைப் பெற்றிருந்தேன். இவ்வாண்டு மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு.

     அறிவியல் இயக்கத்தில், தமிழ் உள்ளம் படைத்த அற்புத மனிதர். பழகுதற்கு என்றென்றும் இனியவர்.

     

காட்சிக்கு எளியரான, புன்னகை ததும்பும் முகத்திற்குச் சொந்தக்காரரான, பாசாங்கு இல்லா பண்பினரான புதுகை பூவண்ணன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும், அறிமுகப்படுத்திக் கொள்வதற்கானத் தருணமும் கிடைத்தது.

ஆடை கிழிந்து
ஆலய வாசலில்
அவலமாய் ஒருத்தி.

அவளைத் தாண்டி
வரிசையில் நின்று
அம்மனுக்குச்
சாத்துகிறார்கள் திருப்பட்டு.

       பொதிந்து கிடக்கும் புன்னகை முகத்தோடு, தனது கவி நூல் ஒன்றினை அன்போடு வழங்கினார்.


பொதிந்து கிடந்த புன்னகை

        தனது குணத்தையே நூலுக்கும் வைத்துவிட்டாரோ என எண்ணி மகிழ்ந்தேன்.

       நூலினைப் பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு அரங்கமாகப் பார்த்துக் கொண்டு சென்ற பொழுது, ஒரு குரல்,

சார், நல்லா இருக்கீங்களா

       குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தேன்.

       சிறு பெண். பள்ளி மாணவியாகத்தான் இருக்க வேண்டும்.

       முதலில் யாரென்று தெரியவில்லை. பிறகு அவரே சொன்னார்.

 சார், நான்தான் எழில் ஓவியா.

       சட்டென்று மூளையில் ஒரு பல்ப் எரிந்தது.

      அவரா இவர்.



எழில்ஓவியா என்னும் வலைப் பூவிற்குச் சொந்தக்காரர்.

      2015 இல், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பொழுதே, வலைப் பூ தொடங்கியவர்.

      தற்பொழுது மேல்நிலை வகுப்பில் இருப்பார்.

     பள்ளிப் பருவத்திலேயே, தொலைக் காட்சிப் பெட்டிக்குள் அடைக்கலம் ஆகாமல், எழுத்து வலைக்குள் நுழைந்தவர்.

     பாராட்டியே ஆக வேண்டும்.

     வாழ்த்துக்கள் எழில் ஓவியா.

     சிறிது நேரத்தில், தமிழாசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளரும், முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கின்ற சத்திச் சரவண போன்ற கடினமான பாடல்களை, போகிற போக்கில், லாகவமாய் பாடக்கூடிய திரு மகா. சுந்தர் அவர்கள் வந்துவிடவே, அந்த இடம் கலகலப்பானது.

 எல்லாப் பிரச்சினைகளைத் தாண்டியும்
எது என்னை மூச்சுவிடச் செய்து கொண்டிருக்கிறது
எந்த சந்தேகமும் வேண்டாம்
வாசிப்பு மட்டுமே என்னை வசிக்க வைத்திருக்கிறது

என வியப்பில் ஆழ்த்தும் கடிதங்கள் கவிதைகள்.

    அன்பு மகள்களுக்கு ஒரு பாசக்காரத் தந்தையின் கடிதம். என உள்ளத்து உணர்வுகளை, எழுத்தாய் வடிக்கத் தெரிந்த வித்தகர் கவிஞர் மீரா.செல்வக்குமார் அவர்களையும் சந்தித்தேன்.

  கவிஞர் ஐயா வந்துவிட்டார் என்ற குரல் வரவே, அரங்கைவிட்டு வெளியே வந்தோம்.

செல்லவந்த தூரமென்ன? சேர்ந்த தடைகளென்ன
நில்லாமல் முத்துநிலவனிவர் – எல்லைப்படி
கண்டுவந்தார் பாட்டுக் களமேற்றி நூல்தந்தார்
அண்ணாந்து பார்த்தோம் அழகு

       கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் மகிழ்வொழுக வரவேற்று, நாணயவியல் கண்காட்சி அரங்கிற்கு அழைத்துச் சென்றார்.
      

புதுக்கோட்டை நாணயவில் கழகத் தலைவர் திரு எஸ்.டி.பஷீர் அலி அவர்கள் அன்போடு வரவேற்றார்.

       புதுகைப் புத்தகத் திருவிழா அரங்குகளிலேயே, பொருளாதார கண்ணோட்டத்தில், அதிக மதிப்பு வாய்ந்த அரங்கு இதுவாகத்தான் இருக்க வேண்டும்..

        ஒன்றல்ல, இரண்டல்ல, 92 நாடுகளின் அஞ்சல் தலைகள், 42 நாடுகளின் காசுகள், மற்றும் 76 நாடுகளின் மதிப்பு மிக்கப் பணத் தாட்கள், அரங்கு எங்கும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.

      





நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொர்க்கம் படத்தில், பொன் மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள் என்று ஒரு பாடல் வருமல்லவா, அந்தப் பாடல் அரங்கிற்குள் நுழைந்த ஒரு உணர்வு.       

       அரங்கில் எங்கு பார்த்தாலும்,
       காசு, பணம், துட்டு, மணி, மணி

      அரங்கில் அமர்ந்த சில நொடிகளிலேயே, சுடச் சுட தேநீர் வந்தது.

     



நாணயவில் கழக அரங்கிற்கு வந்தால், எப்பொழுதும் தேநீர் கிடைக்கும், அவர் வீட்டிக்குச் சென்றால், எப்போதும் சுடச்சுட பிரியாணி கிடைக்கும் என்றார் கவிஞர் ஐயா.

       அடுத்த முறை புதுகைக்குச் செல்லும் பொழுது, திரு பஷீர் ஐயா அவர்கள் வீட்டிற்குத்தான் முதலில் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, முகவரியையும் குறித்துக் கொண்டேன்.

       கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள், வீட்டிலிருந்து வரும் பொழுதே, ஒரு கோப்பினையும் எடுத்து வந்திருந்தார், பதிவர் திருவிழா பற்றிய ஆலோசனை நடத்துவதற்காக.

        பேசப்பட வேண்டிய பொருள்கள், மற்றும் கலந்து கொண்டோரிடம் கையொப்பம் பெறுவதற்காக, கோடு போட்டு, தயாராகவே வந்திருந்தார்.

        வெறும் பேச்சோடு கலைந்து சென்று விடக் கூடாது, ஒவ்வொன்றையும், ஒவ்வொருவர் கருத்தையும், பதிவு செய்தாக வேண்டும் என்பதில், ஐயா அவர்கள் காட்டிய முனைப்பு வியக்க வைத்தது,

        அடுத்தப் பதிவர் திருவிழாவினையும், புதுகையிலேயே மீண்டும் நடத்தலாம் என்று கவிஞர் ஐயா அவர்கள் அறிவிக்க, கை தட்டி வரவேற்றோம்.

         விரைவில் கவிஞரின் வலையில் முழு விவரங்கள் வெளிவரும்.

எதிரிகளும்
எதிரிகள் போலவும்
நண்பர்களும்
நண்பர்கள் போலவும்
நிறைய பேர்
எனக்கு

        வாழ்வியலை முழுமையாய்ப் புரிந்து வைத்திருக்கும், புதுகையின் மாசற்ற தங்கம், கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வந்துவிட்டார் என்பதை அறிந்ததும், அவரைச் சந்திக்க விரும்பி அரங்குகள் ஒவ்வொன்றாக மீண்டும் சுற்றி  வந்தோம்.

       தேவதைகளால் தேடப்படுபவர் அல்லவா, அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியுமா.

        நீண்ட தேடலுக்குப்பின் கண்டுபிடித்தோம்.

       




தனக்கே உரித்தான புன்னகையோடு, கவி மொழியில் பேசி மகிழ்ந்தார்.

        சற்றேரக்குறைய மூன்று மணி நேரம், கடந்ததே  தெரியவில்லை.

        கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களிடம், ஐயா கிளம்புகிறோம் என்றோம்.

       


உடன் வாருங்கள் என அழைத்துச் சென்று, மீண்டும் ஒருமுறை, சமோசாவும், தேநீரும் வாங்கிக் கொடுத்து, விடை கொடுத்தார்.

       திரு தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் திருச்சிக்குப் புறப்பட, விழா அரங்க வாயிலிலேயே, தஞ்சைப் பேரூந்தில் ஏறினோம்.

புதுகைப் புத்தகத் திருவிழா
நிறைவு பெற்றவுடன்
வலைப் பதிவர் திருவிழா
பணிகள் தொடங்க இருக்கின்றன.

வலை உலகத் தோழமைகளே, விரைவில் சந்திப்போம்.




30 கருத்துகள்:

  1. அருமை நண்பரே சந்தோஷமான நிகழ்வுகள் நான் கலந்து கொள்ள இயலாத சூழலுக்கு வருந்துகிறேன் சந்திப்போம் நண்பரே...

    வாழ்க தமிழர் ஒற்றுமை.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமை.அற்புதமான பதிவு நானும் புதுகை புத்தக திருவிழாவிற்கு சென்று வந்த மனமகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சார்.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்... என் பெயர் ஸ்ரீநாத். ஒரு சாமான்ய வலைபதிவு எழுத்தாளன்.இந்த முறை புதுவை விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.தகவல் இல்லை.அடுத்த முறை கலந்துகொள்ள என்ன செய்வது.? அன்புள்ள ஸ்ரீநாத்.

    பதிலளிநீக்கு
  4. மகிழ்வூட்டும் செய்தி
    நிகழ்வினை நேரில் பார்ப்பது போலப்
    படங்களுடன் பகிர்ந்தவிதம் அருமை
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  5. தங்களுடைய எழுத்து நடை, நல்ல அழகாகவும் எளிமையாகவும் இருக்கிறது செய்திகளை அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சொல்வது ஒரு சிலருக்கு மட்டுமே அமையும் தங்களுக்கு அத்தகைய சிறப்பு இயற்கையாக அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள், தொடர்க தங்கள் பணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா, தாங்கள் வலைப் பூவில் இருப்பது இன்றுவரை தெரியாமல் போய்விட்டது ஐயா
      இன்றுதான் அறிந்து கொண்டேன்
      மகிழ்ந்தேன்
      இனி தொடர்வேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  6. நம்முடைய புதுக்கோட்டைப் பயணத்தை அற்புதமாகப் பகிர்ந்துள்ளீர்கள். சந்தித்த அனைவரையும் குறிப்பிட்டு, நினைவுகூர்ந்த விதம் சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு தொகுப்பு. புத்தகத் திருவிழா மற்றும் வரப்போகும் பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு அண்ணா.... நன்றி

    பதிலளிநீக்கு
  9. இயல்பான நடையில் சுவாரஸ்யமான ஒரு பதிவு. மீண்டும் உங்கள் அனைவருடனும் புத்தக அரங்குகளில் வலம் வந்தது போன்ற உணர்வு. மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  10. ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடல் தொடங்கி விட்டதே.இரண்டாவது விழாவின் இமாலய வெற்றி உறுதி.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. சென்னையில் மதுரையில் புதுகையில் பதிவர் சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது அடுத்து தஞ்சையில் கரந்தையில் நடந்தால்பெரு மகிழ்ச்சி அடைவேன்

    பதிலளிநீக்கு
  12. அன்பு நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. அருமையா நடந்த விவரங்களை கோர்த்து, கவிதைகள் இடையில் ,படிப்பவர் மனம் கவரும்படி இருந்தது மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  14. மிக அருமையான சந்திப்பு வாழ்த்துக்கள். புத்தகம் அழகு.. ஹைக்கூ கவிதை மனதைக் கனக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. எழில் ஓவியா போன்ற இளம் பதிவர்கள் தான் அடுத்த தலைமுறைக்கு வலைவழியே அதிகம் அறிவைப் பகிரும் பணி காத்திருக்கிறது. அவரைப் பாராட்டுவோம்.
    வலைப்பதிவர் சந்திப்புத் தொடரவேண்டும். அப்பணியில் இறங்கியுள்ள எல்லோருக்கும் எனது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  16. நல்லதொரு தொகுப்பு புத்தகத் திருவிழா குறித்து மற்றும் பதிவர் விழா வரப் போவது குறித்த அறிவிப்பும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. மகிழ்ச்சி தரும் சந்திப்பு. வரவிருக்கும் திருவிழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. புதுகையில்இரண்டாவது பதிவர் விழா வரப் போவது குறித்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது ! வரவிருக்கும் திருவிழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்!

    சிவக்குமார், மதுரை.

    பதிலளிநீக்கு
  19. உற்சாகம் தரும் பதிவு. மீண்டும் சந்திப்போம் வலைப்பதிவர் திருவிழாவில். நான் மார்ச் திங்களில் இந்தியா திரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. வலைப் பதிவர் திருநாள் நன்றாக நடக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துகள்.
    https://kovaikkothai.wordpress.com/
    tamil manam - 14

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு