09 டிசம்பர் 2017

பொதிந்து கிடந்த புன்னகை



ஆங்கிலப் பள்ளியில்
அடிவாங்கும் குழந்தை அழுகிறது….
அம்மாவென்று

     தாய்மொழியின் பெருமையை, வலிமையை இதைவிட எளிமையாய், இனிமையாய், உண்மையாய் சொல்ல யாரால் முடியும்.

என் இல்லத்தில்
எவரெவருக்கோ
இலைபோட்டு
உணவளித்து மகிழ்ந்த
இந்த கை . . .

கை நீட்டுகிறது
ஆதரவற்றவளாய்
முதியோர் இல்லத்தில் . . .

     கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாய் சிதைந்து, உறவின் மேன்மைகள் உருக்குலைந்து, பெற்றவளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு, தான் மட்டும் சுகமாய் வாழ நினைக்கும் சமூகத்தின் அவலத்தை, இதைவிட அதிகமாய் வெளிச்சம் போட்டுக் காட்ட யாரால் முடியும்.

வீடடுக்கொரு
மரம் வளர்க்க ….

வீடுதோறும்
மழைநீர் சேகரிக்க ….

வீட்டுக்கொரு
கழிப்பறை
கட்ட சொன்னீர்….

எல்லாம் சரி
வீடு … ?

      நமது தேசத்தின் நிலையினை, சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகியும், குடியிருக்க ஒரு குச்சு வீடு கூட, இல்லாமல், பரிதவிக்கும் ஏராளமான மக்களின் நிலையினை, இதைவிட யாரால் கை நீட்டிச் சுட்டிக்காட்ட முடியும்.

இந்தியா கேட்
திறந்தே கிடக்கிறது
யார் யாரோ
உள்ளே ….

நம் வீட்டுக் கதவு
மூடிக்கிடக்கிறது
நாமெல்லாம்
வெளியே ….

      வீட்டின் நிலையினை மட்டுமல்ல, நாட்டின் நிலையினையும், வெட்ட வெளியில், இதைவிட உரத்து முழங்க யாரால் முடியும்.

நீட் வந்தது
நிம்மதி போனது ….

தேர்வு எழுதப்
போன நாங்கள்
திகைத்து நின்றோம் …

தேர்வு மையமா?
பரிசோதனைக் கூடமா?

ஆடையை கழற்றி
அலங்கோலப் படுத்தினீர்…

என்ன குற்றம் கண்டீர் …

நடுத்தெருவில் நிறுத்தி
பரிசோதித்துப் பதட்டப் படுத்தினீர்

     படிக்கப் படிக்கப் பதட்டம், நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஏன் இந்த நிலைமை நமக்கு. எதனால் இந்த இழிநிலை. இதைவிட யாரால் கவிகொண்டு பொங்கி எழ முடியும்

வறண்ட மார்பினை
வருடுகிறது
பச்சிளம் குழந்தை
ரணமானது …
மனசும் மார்பும்

     நம் மனமும் காயப்பட்டுத்தான் போகிறது. வறுமையை இதைவிட வலிமையாய்க் கூற யாரால் முடியும்.

ஆடை கிழிந்து
ஆலய வாசலில்
அவலமாய் ஒருத்தி.

அவளைத் தாண்டி
வரிசையில் நின்று
அம்மனுக்கு
சாத்துகிறார்கள் திருப்பட்டு

     ஆன்மீகம் என்ற பெயரில் மனிதம் மறந்து, தெய்வம் போற்றும், மக்களை இதைவிட வன்மையாய்ச் சாட, யாரால் முடியும்.

சாகுபடி செய்த
விவசாயியை
சாகும் படி செய்தது
சாகுபடி

    நெஞ்சுக்குள் சிக்கிக் கொண்ட முள்போல் நிற்கும், நிதர்சனத்தை, இதைவிட உண்மையாய் உரைக்க வேறு யாரால் முடியும்.

உனக்கென்ன
அரசாங்க உத்யோகம் ….
நண்பன் சொல்லி
நகர்ந்தான் …

அரசு ஊழியனின்
அவலம்
அவனுக்கென்ன
தெரியும்?

……………….
…………………

பிள்ளைகள் படிப்பு
மருத்துவம்
உற்றார் உறவினர்
வைபோகங்கள்
இப்படி
ஒட்டிக் கிடக்கிறது
ஊதியத்திலிருக்கும்
ஒவ்வொரு
ரூபாய் நோட்டுக்கும்
ஒரு செலவு.

குடி நீர் துவங்கி
குளியல் நீர் வரை ….
வீட்டிலிருந்து வெளியேறி
வீட்டுக்குள் நுழையும் வரை
காசு .

…………………

இதுதான்
எங்கள் வாழ்க்கை
என்று எவருக்கிங்குப் புரியும்… ?

      படிக்கப் படிக்க, கவிஞரின் கரம் பற்றிக் குழுக்கி மகிழ விளைகிறது மனம்.

      இவர் எந்தச் சூழலையும் தனதாக்கிக் கொண்டு வளர்வதில், அனைவரையும் வசப்படுத்துவதில் வல்லவர்.

     பூ மனசுக்குச் சொந்தக்காரர். எதிலும் சட்டென நெகிழ்ந்துவிடும் குணம் கொண்டவர்.

     இவரது நகலகத்தில், நாற்காலிகள் நிரம்பி வழியும். கவிஞர்கள் சங்கமிக்கும் அசலகம், இவர் நகலகம்தான்.

     எளிய மொழியும், கனிந்த குரலும்தான் இவரது கவிதையின் குணங்கள்.

     இவர் வதனத்தில் எப்போதும் ஒரு புன்னகை பொதிந்து கிடக்கும்.


பொதிந்து கிடந்த புன்னகை

தனது குணத்தையே, தனது நூலுக்கும் தலைப்பாக்கியவர் இவர்.

தீயவை பார் …..
தீயவை கேள் …..
தீயவை பேசு ….

அப்போதுதான்
நல்லவை புரியும் ….


இவர்தான்
புதுகை பூவண்ணன்

புதுகைப் புத்தகத் திருவிழாவில்,
கவிஞரின் அறிமுகமும்.
பரிசாய் ஒரு புன்னகையும்,
அன்பளிப்பாய் ஒரு புத்தகமும்
கிடைத்தமையை எண்ணி மகிழ்கின்றேன்.

-------

மேன்மை வெளியீடு.,
5/2, பெர்தோ தெரு,
இராயப் பேட்டை  வி.எம் தெரு,
சென்னை 14
விலை ரூ.80





25 கருத்துகள்:

  1. புத்தகத் திருவிழாவில் நாம் சென்றபோது அவரைக் கண்டது நினைவிற்கு வந்தது. அருமையான மதிப்பீடு. நூலாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கவிதை வரிகள் படிக்கும்போது சிலிர்க்க வைக்கிறது வார்த்தையின் உண்மைகள்.

    நூலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள் பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. கவிதை வரிகள் அருமை. ரசித்தேன்.

    தம +1

    பதிலளிநீக்கு
  4. நூல் அறிமுகத்திற்கு நன்றி. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. கவிதைகள் அருமை...ரசித்தோம்...

    //இந்தியா கேட்
    திறந்தே கிடக்கிறது
    யார் யாரோ
    உள்ளே ….

    நம் வீட்டுக் கதவு
    மூடிக்கிடக்கிறது
    நாமெல்லாம்
    வெளியே ….//

    அட போட வைத்தது

    நல்ல அறிமுகம்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஆ்ங்கி்ல பள்ளியில் பயிலும் பிள்ளை மம்மின்னு அழாமல் அம்மான்னு அழுகிறதே..அதுவரைக்கும் ஆறுதலாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதைகள். கவிதைத்துறையில் அவர் சாதிப்பார் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அவலங்கள் எப்போதும் மனம்கனக்கச் செய்யும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூலின் உள்ளேயே போய் படித்துப் பார்த்து அனுபவ பூர்வமாய் எழுதிய, நல்ல விமர்சனம். அரசு ஊழியர் பற்றிய கவிதை என்னை மிகவும் கவர்ந்தது

      நீக்கு
  10. கரந்தையாரே!

    \சாகுபடி செய்த
    விவசாயியை
    சாகும் படி செய்தது
    சாகுபடி/

    ‘பொதிந்து கிடந்த புன்னகை’மட்டுமல்ல...
    இன்னும்... இன்னும்...

    நச்சென்று நல்ல கவிதைகள் தந்த

    புதுகை பூவண்ணனின் கைவண்ணம் கண்டு வியந்தேன்.

    அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

    நன்றி.

    த.ம. 8

    பதிலளிநீக்கு
  11. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, ஒரு புதிய அன்புள்ளம் கொண்ட நண்பரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அவருடைய ஒவ்வொரு கவிதையும் உண்மையை முகத்தில் அடிப்பது போல் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  12. அத்தனை குட்டிக் கவிதைகளும் அருமை... படிக்கப் படிக்க சுவாரஷ்யம்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு.உங்களின் கட்டுரை வரிகள் அற்புதம். படிக்க படிக்க படிக்கதூண்டும் நடை.நன்றி.

    பதிலளிநீக்கு
  14. எடுத்துக் காட்டிய கவிதை வரிகள் வெகு சிறப்பு.

    நூல் அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதை நூல் அறிமுகம். கவிஞருக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. சிறப்பு ஒவ்வொரு கவிதையும் உண்மையின் தாக்கத்துடன் நன்றி கவிஞ்சருக்கும் உங்களுக்கும்

    பதிலளிநீக்கு
  17. எளிய வரியில்...

    அழகிய கவிதைகள்...

    பதிலளிநீக்கு
  18. நூலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள் பகிர்வுக்கு நன்றி
    https://kovaikkothai.wordpress.com/
    tamil manam- 13

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு