23 டிசம்பர் 2017

கவி ஆயிரம்



பாவத்தைத்
தனித்தனியே செய்துவிட்டு
மொத்தமாகத் தீர்த்துக் கொள்ளப்
போதுமான அளவு
புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால்

எங்கள்
பாரத புத்திரர்கள்
தூசு படாமல்
தூய்மையாகவே இருக்கிறார்கள்

     1983 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசினர் கல்லூரியில், இளங்கலை பயின்ற பொழுது, எங்களுக்குத் துணைப் பாடமாக இருந்தது, கவிஞர் மு.மேத்தா அவர்களின் கண்ணீர்ப் பூக்கள் என்னும் கவிதை நூலாகும்.

     புதுக் கவிதை

     புதுக் கவிதை என்னும் இந்த வார்த்தையே என்னைச் சுண்டி இழுத்தது. துணைப் பாடம் என்னும் நிலையினைக் கடந்து, ஒருவித ஈர்ப்பு, இந்த நூலின் மீது ஏற்பட்டது.

     விழுந்து, விழுந்து படித்தேன்

     படித்துப் படித்து ரசித்தேன்

     ஏடெடுத்து ஐந்து வரிகளை, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி, கவிதையினை, புதுக் கவிதையினைப் படைத்துவிட்ட மகிழ்ச்சியில் திளைத்தேன்.

      இன்று நினைத்தாலும், மனதில் ஒருவித மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. அந்நாட்களும், அந்நாளைய நினைவுகளும், மனதில் உடனே வந்து ஒட்டிக் கொள்கின்றன.

     கல்லூரிப் பருவம்

     கவலைகள் ஏதுமற்ற உன்னதப் பருவம்.

     இக்கால கட்டத்தில், கவிதை சார்ந்த விழிப்புணர்வை, அறிமுகத்தை, கவிதையின் எளிமையை, வலிமையாய் உணர்வுகளைக் கடத்துகின்ற அதன் தன்மையை, மாணவ, மாணவியரின் உள்ளத்தில், விதையாய் விதைத்துவிட்டால், தமிழுணர்வு  செழிக்குமல்லவா, கவியுணர்வு தழைக்குமல்லவா.

      இதனை மிகச் சரியாகச் செய்து வருகிறார் இவர்.

      மாணவ, மாணவிகளை கவிதை வாசிக்க வைக்கிறார்.

     படிக்கும் காலத்திலேயே, மேடையேறி, கவி வாசிக்கத் தளம் போட்டுத் தருகிறார் இவர்.


திரு தி.அமிர்த கணேசன்
அகன்

புதுச்சேரி, ஒரு துளிக் கவிதை
அமைப்பின் நிறுவுநர்

      நண்பர்களே, திருமணம் ஆகி பல்லாண்டுகள் ஆகியும், மக்கட்பேறு இல்லாதவர்கள், ஒரு குழந்தையினைத் தத்தெடுத்து, தங்கள் மழலையால் சீராட்டி, தாலாட்டி மகிழ்வதை நாம் அறிவோம்.

       ஆனால் இவரோ, குழந்தையாய் மாறி, கவி மழலையாய் மாறி, தந்தையாய், ஒரு மகாகவியைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஏழு வயதில்
நான் இழந்த தாயைப்
பதினெட்டு வயதில்
கரந்தையில் பெற்றேன்

எனக் கரந்தையைத், தன் தாயாய் போற்றிவரும், கவிஞரைத், தன் தந்தையாய் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.

      நொடிக்கு நூறு முறை, அப்பா, அப்பா எனத் தமிழொழுக இவர் அழைப்பதைக் காணும்போதே, நம் மனதில், மகிழ்ச்சி வெள்ளம் ஊற்றெடுத்து ஓடுகிறது.


கவிஞர் ஈரோடு தமிழன்பன்
அவர்களைத்தான்
இவர், தன் தந்தையாய் வரித்துக் கொண்டிருக்கிறார்.

     தன் தந்தையின் கவிதைகளை, பள்ளி, கல்லூரி மாணவர்களை மேடையேற்றி, வாசிக்க வைத்து, அவர்களுக்குள் கவி உணர்வை ஊட்டி வருகிறார்.

     கடந்த 11.12.2017 திங்கட் கிழமை காலை, 10.00 மணியளவில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், தமிழ்ப்பெரு மன்றத்தில்,

ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி
ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம், அமெரிக்கா
இணைந்து நடத்திய

மகாகவி ஈரோடு தமிழன்பன் – 1000
மகாகவியின் 1000 கவிதைகள்
தொடர் வாசிப்பு
நிகழ்வு நடைபெற்றது.

      இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்த, திரு தி.அமிர்த கணேசன் அவர்கள், தன் தந்தை, பயின்ற கல்லூரி என்பதால், கவிஞரையும் உடன் அழைத்து வந்திருந்தார்.

      சற்றேரக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன், மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள், சென்னிமலை செகதீசனாய் தமிழ்ப் பயின்ற கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திரு இரா.சுந்தர வதனம் அவர்கள் நிகழ்விற்குத் தலைமையேற்க, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராசாமணி அவர்களும், கரந்தையின் முன்னாள் மாணவர்களான புலவர் இரா.கலியபெருமாள் அவர்களும், புலவர் ம.கந்தசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

       கல்லூரிப் பேராசிரியர் கவிக்கோ ஆறு.காளிதாசு அவர்கள் மேடை நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

       கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பளர், ஆங்கிலத் துறைப் பேராசிரியர், முனைவர் கோ.சண்முகம் அவர்கள், விழாவிற்குரிய ஏற்பாடுகளைச் சிறப்புற செய்திருந்தார்.


விழாவிற்கு வந்திருந்தோரை, மேடையேறி வரவேற்கும் வாய்ப்பும், மகாகவி அவர்கள், தன் கரந்தை கால நினைவுகள் குறித்து, எழுதிய கவிதைகளில் ஒன்றிரண்டை, வாசித்துக் காட்டும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.










ஒன்று, இரண்டல்ல, முழுதாய் நூறு கல்லூரி மாணவ, மாணவியர், பல்வேறு துறை சார்ந்த மாணவ, மாணவியர், மேடையேறி, ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதைகளை, ஆளுக்குப் பத்து கவிதைகள் வீதம், கவிஞரின முன்னிலையில் வாசித்து மகிழ்ந்தனர்.

       நூறு மாணவ. மாணவியர், ஆளுக்குப் பத்துக் கவிதைகள், ஆயிரம் கவிதைகள் மேடையில் அரங்கேறின.

       மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும், ஏற்ற, இறக்கத்துடன், உணர்வுப் பூர்வமாய் கவிதைகளை வாசித்து நிகழ்விற்கு மெருகூட்டினர்.

        இடையிடையே திரு தி.அமிர்த கணேசன் அவர்கள் குறுக்கிட்டு, வாசிக்கப்படும் கவிதை, உருப் பெற்ற வரலாற்றை, உணர்வுடன் எடுத்துரைக்க, கவிதை வாசிப்பு விழா களை கட்டியது.

        மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாய், வாசிப்புத் திருவிழா நடைபெற்றது. ஆயினும் மூன்றே நிமிடங்களில் விழா நிறைவுற்ற உணர்வு.

    கல்லூரி மாணவ, மாணவியரிடையே இவ்விழா, ஒரு மாற்றத்தை, ஒரு எழுச்சியை உண்டாக்கி இருப்பதை உணர முடிந்தது.


ஒரு துளிக் கவிதை
அமைப்பின் நிறுவுநர்
திரு தி.அமிர்த கணேசன்
அவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

     தமிழகமெங்கும் மாணவ, மாணவியரை மேடையேற்றி, கவிபாட வைக்கும், இவரின் முயற்சி வெல்ல வாழ்த்துவோம், போற்றுவோம்.

புத்தரும் பெரியாரும்
என்
அறிவு நரம்புகளில்
மகாவீரரும் இராமாநுசரும்
என்
இரத்த அணுக்களில்.

என்னைக்
கோடி அலைகளாக்கிக்
கங்கைக்கும் காவிரிக்கும்
பங்கிட்டுக் கொடுப்பேன்.

உறிஞ்சப்படுபவன்
ஒரிசாவில் இருந்தாலும்
உள்ளூரில் இருந்தாலும் அவன் என்
தோழன்.

அபகரிக்கப்பட்ட வைகறைக்காக
ஆர்த் தெழுபவன்
ஆப்பிரிக்காவில் இருந்தால் என்ன?
ஈழத்தில் இருந்தால் என்ன?
அவன் என் வர்க்கம்.


-    ஈரோடு தமிழன்பன்

21 கருத்துகள்:

  1. மு மேத்தாவின் பல கவிதைகள் எனக்குப் பிடிக்கும். விழிகள் நட்சத்திரங்களை வருந்தினாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான், வாசிக்காத தெரிந்த கரங்களுக்குத்தான் ராகம் தெரிகிறது; நேசிக்காத தெரிந்த இதயங்களுக்குத்தான் பாசம் புரிகிறது; உனக்கெங்கே தெரியப்போகிறது' போன்ற கவிதைகள் இன்னும் மனதில்.

    பதிலளிநீக்கு
  2. // எனத் தமிழொழுக இவர் அழைப்பதைக் காணும்போதே, //

    ஆஹா... பாசமே தமிழானதோ... தமிழன்பன் ஸாருக்குத்தான் எவ்வளவு வயதாகி விட்டது! செய்தி வாசிப்பிலும், கவியரங்கத்தில் கண்டா முகம் நினைவுக்கு வருகிறது.

    தம +1

    பதிலளிநீக்கு
  3. இவரைப்போன்ற நல்உள்ளங்களால் தமிழ் வாழ்கிறது வாழ்த்துவோம் நாமும்...

    அழகிய படங்களுடன் பகிர்ந்த தங்களுக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. அடடே! வாசிப்புத் திருவிழாவா? தந்தையைத் தத்தெடுத்த தனயனா?
    எல்லாம் புதுமை! புதுமை! பதிவும் படமும் அருமை! அருமை!

    பதிலளிநீக்கு
  5. சொல்லவே இல்லை...வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  6. அருமையான பகிர்வு அண்ணா .பல வருடங்கள் முன் நேரில் டான்பாஸ்க்கோ பள்ளி விழாvil ஐயா தமிழன்பனை பார்த்திருக்கிறேன் பிறகு செய்தி வாசிப்பாளராக ..கம்பீரக்குரலோன் வாழ்க நலமுடன்

    பதிலளிநீக்கு
  7. அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. எனக்கும் மு.மேத்தாவின் கவிதைகள் மீது ஈர்ப்பு உண்டு. கனவுகள் +கற்பனைகள் =காகிதங்கள் நிறைய முறை படித்திருக்கிறேன் .ஐயா தமிழன்பனின் எழுத்துக்களும் வாசித்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு சுவாரஷ்யத்தோடு தருகிறீங்கள்.. மிக அருமை.

    பதிலளிநீக்கு
  10. 100 மாணவ, மாணவியர் சேர்ந்து 1000 கவிதைகள் வாசிப்பு. படிக்கும் போதே அங்கே நானும் இல்லையே எனத் தோன்றியது.

    உங்கள் மூலம் நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்களது சிறப்பான பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  11. மனதுக்கு இனியது நொடியில் முடிந்து போல்தான் தோற்றமளிக்கும் அதற்க்குள் முடிந்துவிட்டதா.... என்ற ஏக்கத்தை நிரப்பும்
    அருமையான விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள், கவிதை பகிர்விற்கும் நன்றி, வாழ்க தமிழ், வளர்க தமிழ் வாழ்த்துக்கள் தங்களுக்கு

    பதிலளிநீக்கு
  12. நல்ல பகிர்வு. நன்றி.
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  13. ஒரு சிலரே சொல்லப்பட்ட கருத்துகளில் மனம் செலுத்துகிறார்கள்

    பதிலளிநீக்கு
  14. ஒரு கவியோவிய நிகழ்வின் கவித்துவ பதிவு. திரு.அமிர்த கணேசன் அவர்களின் பணி தமிழகத்தில் புதிய பல கவிஞர்கள் பட்டாளத்தை உருவாக்கும். கவிதைகளைப் போற்றுவோம்; கவிஞர்களை போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  15. ஈரோடு என்றாலே என் நினைவிற்கு வருபர் தமிழன்பன் தான் மேத்தாவோடு மாநிலம்கல்லூரியில் ஒரள்வு பழகியிரிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  16. மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன் - ஆகியோரது கவிதைகள் படிக்கப் படிக்க புத்துணர்ச்சி தருவன. ஒரு காலத்தில் தூர்தர்ஷன் தமிழ் டீவியில் அடிக்கடி பார்த்த தமிழன்பன் அவர்கள் இப்போது மூப்பின் காரணமாக உருமாறியே இருந்தாலும், இன்னும் அந்த தமிழ் எழுச்சியோடு இருப்பதை மேடையில் காண முடிகிறது.

    நிகழ்ச்சிக்கு வித்திட்ட, ஒரு துளிக் கவிதை அமைப்பின் நிறுவுநர் திரு தி.அமிர்த கணேசன் அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. மிக நல்ல பகிர்வு! மிக்க நன்றி! எடுத்தாளப்பட்ட வரிகளை ரசித்தோம்..

    பதிலளிநீக்கு
  18. பகிர்வுக்கு நன்றி அய்யா, வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. கவிஞர்களுக்கு அருமையான சமர்ப்பணம்!!ந‌ல்லதொரு பகிவுக்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு