16 டிசம்பர் 2017

காசு




    சிறு வயதில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா மற்றும் பத்து பைசா நாணயங்களைக் கொடுத்து, மிட்டாய் வாங்கித் தின்று மிகிழ்ந்திருக்கிறேன்.

    இன்று இந்தக் காசுகள் எல்லாம், இல்லாமலேயே போய்விட்டன. ஐம்பது பைசா காசைப் பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது.

    ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் ஏதோ புழக்கத்தில் இருக்கின்றன.

     இபபொழுதெல்லாம், சாலையோரங்களில், உதவி செய்யுங்கள் எனக் கையேந்தி நிற்பவர்கள்மீது, இரக்கப்பட்டு, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காசைக் கொடுத்தால், நம்மை மேலும் கீழும் பார்க்கிறார்கள்.


     இந்தக் காசை வாங்கிக் கொண்டுபோய், என்ன செய்வது என்பதுபோல், ஏளனமாய், ஒரு பார்வையை வீசுகிறார்கள்.

      காசு மதிப்பிழந்து விட்டது.

      நான் கூட காசு என்பதன் உண்மை மதிப்பை அறியாமல்தான், இதுவரை இருந்திருக்கிறேன்.

       தற்பொழுதுதான், காசுகளின் பின்னால், ஒரு வரலாறு மறைந்திருப்பது புரிந்தது.

      காசுகள்

      ஒரு நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள, இலக்கியங்கள் கருவி நூல்களாக அமைகின்றன என்றால், காசுகள் புறச் சான்றுகளாக விளங்குகின்றன.

      பழங்காலக் காசுகளை ஆய்வு செய்யும் பொழுது, காசுகளை வெளியிட்ட மன்னர்களின் சிறப்புப் பெயர்கள், அவர்கள் பின்பற்றிய சமயங்கள், அவர்கள் வணங்கிய தெய்வங்கள், அந்தத் தெய்வங்களின் வடிவமைப்புகள், ஆட்சி மொழிகள், அம்மொழியின் வளர்ச்சிகள், எழுத்துக்கள், வடிவங்கள், உலோகங்கள், அச்சான விதங்கள், உள் நாட்டு வணிக நிலைகள், வெளி நாட்டு வணிக நிலைகள், நாட்டின் தொழில் நுட்பத் திறன், பொருளாதார வளர்ச்சி என அடுக்கடுக்காய் செய்திகளை அறியலாம்.

       ஒரு நாட்டின் நாணயங்கள் மற்றொரு நாட்டின் கடற்கரைப் பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் கிடைப்பது, ஒரு நாடு மற்றொரு நாட்டோடு வாணிபம் செய்ததற்கான ஆதாரமாய் அமைகிறது.

       தொடக்க காலத்தில் பண்டமாற்று முறையில் வாணிபம் செய்து வந்த மனிதன், பொருளாதார வளர்ச்சியின் காரணமாகவும், நடைமுறைகள் சிக்கலான காரணத்தினாலும், பொதுவானதொரு மாற்றுப் பொருளின் தேவையை உணர்ந்ததால், நாயணங்களை உருவாக்கினான்.

       கி.மு 5 ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல், கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உள்ள காலப் போக்கில், வெளியிடப்பெற்ற, வெள்ளிக் காசுகள் எல்லாம், பல்வகை வடிவங்களில், எழுத்துக்கள் இல்லாத நிலையில், சிறு சிறு சின்னங்களோடு காட்சியளிக்கின்றன.

       இவ்வகை காசுகள் புழக்கத்தில் வந்த காலமே, இந்தியாவின் நாணயத்தின் தொடக்க காலமாகும்.

      கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதலே, தமிழகத்தில், காசுகள் நடைமுறைக்கு வந்து விட்டன.

---

    




காசு, காசு, காசு

     சிறு வயதில் இருந்தே, இவருக்குக் காசுகளின் மேல் ஓர் அலாதி காதல்.

      காதல் என்றால் சாதாரணக் காதல் அல்ல. இவரைச் சிறிதும் ஓய்வெடுக்க விடாமல், ஓடவிட்டக் காதல்.

       காசு, காசு, காசு

      தேடலே இவரது வாழ்க்கையாகிப் போனது.

      இவர் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.

      செல்வமோ, செல்வாக்கோ சிறிதும் இல்லாதவர்.

      வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

      படித்து முடித்தபின், வேலைக்குப் போனோமா, நாலு காசு சம்பாரித்தோமா, குடும்பத்தைக் கவனித்தோமா என்று இருக்காமல், தன் கை காசைச் செலவு செய்து, பழங்காலக் காசுகளைத் தேடித் தேடி ஓடியவர்.

      தனது முழு வாழ்க்கையினையும், நாணயவியல் துறைக்காகவே, முழுமையாய் ஒப்படைத்தவர்.

தமிழகக் காசுகள்

      இவரது நூல்.

     இதுவரை தமிழகத்தில் கிடைத்துள்ள 1600க்கும் மேற்பட்டப் பழங் காசுகளை, படங்களோடு, பட்டியல் இட்டு, தெளிவாக, தனியொரு நூலாக வெளியிட்டவர் இவர்.

      இதில் மிகப் பெரிய சாதனை என்னவென்றால், இந்நூலில் இடம் பெற்றுள்ள காசுகளில், 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை, இவரே, தனியொரு மனிதராய், அலைந்து திரிந்து, ஆய்ந்து, முதன் முதலாய் கண்டு பிடித்தவையாகும்.


அளக்குடி ஆறுமுக. சீதாராமன்

---


கடந்த 10.12.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை,
அன்பர் திரு மணி.மாறன் அவர்களால்,
தொடங்கப் பெற்றுள்ள,
ஏடகம்
அமைப்பின் சார்பில் நடைபெற்ற,
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவு நிகழ்வில்,
ஆறுமுக.சீதாராமன் அவர்களை
நேரில் காணவும், ஒளிப்படக் காட்சியுடன் கூடிய, அவர்தம் அரியச் சொற்பொழிவினைக் கேட்கவும், ஒரு பொன்னான வாய்ப்பு கிட்டியது.

      நூற்றிற்கும் மேற்பட்டக் காசுகளை ஒவ்வொன்றாய், திரையிட்டுக் காட்டி, எளிமையாய், இனிமையாய், விளக்கினார்.

       காசுகளைப் பற்றி மட்டுமல்ல, காசுகளின் வரலாற்றையும் தெளிவாய் எடுத்துரைத்தார்.

      

இவரது பொழிவில் இருந்து, ஒன்றிரண்டு செய்திகளை மட்டும், தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

       இவர் திரையிட்டுக் காட்டிய பல்வேறு நாணயங்களில், நாணயத்தின் பின் பக்கத்தில், இரண்டு அல்லது மூன்று மலைகளும், இம் மலைகளில் இருந்து, புறப்பட்டு ஓடும் ஆறும் காட்சியளித்தது.

       

தண்ணீரின் தன்மையை, நீரின் முக்கியத்துவத்தை, நம் முன்னோர் அறிந்திருந்தனர், முழுமையாய் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தக் காசுகளே சாட்சி என்றார்.

      



இதைப் போலவே, பல்வேறு காசுகளின் பின் பக்கத்தில், வேலியிடப் பட்ட மரம் பொறிக்கப் பட்டுள்ளது.

       காரணத்தை கூறியபோது வியந்து போனோம்.

      வேலியிட்ட மரம்

      அக்காலத்தில் மரங்களை வெட்டுவது, தண்டனைக்கு உரிய குற்றமாகக் கருதப் பட்டது. எனவேதான் நாற்புறமும் வேலியிட்டக் காசுகளை வெளியிட்டு, மரங்கள் அரசால் பாதுகாக்கப் பட்டவை, என்பதை மக்களுக்கு உணர்த்தினார் என்று குறிப்பிட்டார்.

      இயற்கையைப் போற்றுவதிலும், நதி நீர் காப்பதிலும் பெரும் முனைப்பு காட்டியுள்ள நம் முன்னோர்களை நினைக்கும் போது, நாமெல்லாம், இன்றைய நமது நிலையை எண்ணி, வெட்கித் தலை குணியத்தான் வேண்டும்.

       இன்று வங்கிகளில் பணம் எண்ணுவதற்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. எனவே நாக்கின் உமிழ் நீரைத் தொட்டுத் தொட்டு, எண்ண வேண்டிய அவசியம் இல்லை.

       இதனை அறிவியலின் வளர்ச்சி எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

      


பணம் எண்ணுவதற்கு இயந்திரம் கண்டு பிடித்த நாம்,. இன்று வரை காசுகளை எண்ணுவதற்கு, ஏதேனும் இயந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறோமா என்று தெரியவில்லை, அப்படியொரு இயந்திரம் இருப்பின், அதனைக் கண்ணால் கண்டதில்லை.

      ஆனால், நம் முன்னோர், நம் தமிழ் முன்னோர், காசுகளை எண்ணுவதற்கு, அன்றே இயந்திரத்தைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியும் இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?

      உண்மை. நம்பித்தான் ஆகவேண்டும்.

      ஒரு சிறு பலகையில், பல்லாங்குழிபோல், காசுகளின் அளவிற்கு, வரிசை வரிசையாய், சிறு சிறு குழிகள்.

     காசுகளை இப்பலகையின் மேல் கொட்டி, கைகளால் அப்படியே, வழித்து விட்டார்களானால், ஒவ்வொரு குழியிலும், ஒரு காசு உட்கார்ந்து கொள்ளும்.

     அவ்வளவுதான்.

     ஒரு நிமிடத்திற்கும் குறைந்த நேரத்தில், இரு நூறு காசுகளை எண்ணிவிடலாம்.

      எத்துனை எளிமையாய், எவ்வளவு திறமையாய் வடிவமைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?

ஆறுமுக. சீதாராமன்

20 நூல்களின் ஆசிரியர். தேடலின் நாயகர்.

தமிழகக் காசுகள்

வரலாறு, தொல்லியல் துறைகளில் படிக்கும் மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள கட்டாயம் பயன்படுத்த வேண்டிய முதன்மைத் தரவு நூல்.

ஆறுமுக.சீதாராமன்

tவாழ்நாள் சாதனையாளர்
இன்று வரை, இவருக்கு, அரசோ, பல்கலைக் கழகங்களோ விருது வழங்கி பாராட்டியதாக தெரியவில்லை

ஆறுமுக.சீதாராமன்
அவர்களை
நாம் போற்றுவோம்

தேடல் தொடர வாழ்த்துவோம்

26 கருத்துகள்:

  1. கொஞ்சம் நீளமான பதிவு. எனினும் அரிதான தகவல் களஞ்சியம்

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமான தகவல்கள். தினமலர் ஆசிரியர் கூட இந்தத் துறையில் ஆர்வம் மிக்கவர்.

    தம +1

    பதிலளிநீக்கு
  3. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அருமையான பதிவு.கடும் உழைப்பினால் நூலினை உருவாக்கிய திரு. ஆறுமுக.சீத்தாராமன் அவர்களை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  4. அரிய தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே திரு. அளக்குடி ஆறுமுக. சீதாராமன் அவர்கள் போற்றப்படக்கூடியவர் இப்படிப்பட்ட உள்ளங்களை அரசு கௌரவப்படுத்த நினைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  5. வியக்கவைக்கும் அரிய தகவல்கள் ..பகிர்வுக்கு நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  6. தங்களுடைய எழுத்து நடை எளிமை, அழகு அத்துடன் பிறரின் சிறப்பினை பெருந்தன்மையுடன் வெளிப்படுத்தும் தங்களுடைய செயல் மிகவும் போற்றுதலுக்குரியது, ஏடகத்தின் பணிகளை மக்கள் அறியும் வண்ணம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்ற தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அங்கு பெரும்பாலும் எல்லோரும் பணம் என்றுதானே பேசுவார்கள்.. நீங்கள் நம்மைப்போல காசு எனப் பேசுவது வியப்பாக இருக்கு..

    உண்மைதான் இப்போ சில்லறைகளுக்கு நம் நாடுகளில் மதிப்பில்லை.. ஆனா இங்கு ஒரு சதம் 2 சதத்துக்கெல்லாம் மதிப்புண்டு.. காரணம்.. ஒரு சுவீட் 10 சதத்துக்கும் வாங்கலாம்...

    பதிலளிநீக்கு
  8. மிக அற்புத பதிவு.காசுக்கு பின்னால் மறைந்திருக்கும் அற்புத தகவல்ள்.காசு கொடுத்தாலும் கிடைக்காதது.நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அரிய தகவல்களுடன் பயனுள்ள பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. காசு சேர சேர வாழ்வில் பலதும் காணாமல் போய்விட்டது. அரிய தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  11. அய்யா பதிவுகள் சிறப்பு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. நாட்டின் வரலாறு
    நாட்டில் புழங்கிய காசு
    எனப் பல
    இப்படி நாளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யாவிட்டால்
    இவற்றை அவர்கள் நினைவூட்ட மாட்டார்களே!
    இப்பணி தொடர வேண்டும்.

    ஆறுமுக.சீதாராமன் அவர்களைப் பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  13. அறிந்து கொண்டேன் முன்னோரின் காசு பெருமையை.....

    பதிலளிநீக்கு
  14. // சிறு வயதில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா மற்றும் பத்து பைசா நாணயங்களைக் கொடுத்து, மிட்டாய் வாங்கித் தின்று மகிழ்ந்திருக்கிறேன் //

    இதைப் படித்ததும், எனக்கும் ஒரு பைசாவிற்கு ஒரு மிட்டாய், 10 பைசாவிற்கு ஒரு டீ மற்றும் 12 பைசாவுக்கு ஒரு தோசை சாப்பிட்ட காலம் நினைவில் வந்தது. இப்போது அந்த டீ 100 மடங்கு ( ரூ 10 ) விலையில் உயர்ந்து விட்டது.

    அளக்குடி ஆறுமுக. சீதாராமன் எழுதிய ‘ தமிழகக் காசுகள்’, நூல் பற்றிய தகவலுக்கு நன்றி. காசுகள் எண்ணுவதற்கான பலகை உண்மையிலேயே வியப்பான விஷயம்தான். ரிசர்வ் வங்கியிலிருந்து வரும் புத்தம் புதிய காசுகளை, (வங்கியில் பணிபுரிந்த போது,) ஒரு மர ட்ரேயில் இருபது இருபதாக அடுக்கி, எண்ணி முடிந்ததும், சிறு சிறு துணிப் பைகளில் இறுக்கி வைத்த காலம் நினைவில் வந்தது.

    சுவாரஸ்யமான பதிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. அரிய தகவல்கள் - அதிலும் காசு எண்ணும் இயந்திரம்.. வியப்பு.

    அளக்குடி ஆறுமுக சீதாராமன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  16. நுமிஸ்மாடிக்ஸ் என்னும் பெயர்கொணட பொழுதுபோக்கும் தேடல் கொண்டவர் திருச்சி குடியிருப்பில் இருந்தார் காசின் மதிப்பு குறைந்து விட்டது முபு ஒரு பாட்டு கேட்டதுண்டு :அஞ்சு ரூபா நோட்டு கொஞ்சம் முன்னே மாதி மிச்சம் இல்லை காசு மிச்சம் இல்லை கதிரிகாய் விலை கூடகட்டவிலை ஆச்சு காலம் கெட்டுப் போச்சு “

    பதிலளிநீக்கு
  17. அரிதான் தகவல்கள்.காசு எண்ணூம் இயந்திரம்
    தேவைப்பட்டால் வடிவமைத்து விடுவார்கள்,
    நம்மவர்கள்,திறமை பேசுபொருளாய்,,,/

    பதிலளிநீக்கு
  18. காசுகள் தொடர்பான அவருடைய பணிகள் ஏராளம். அவருடைய உரையை உங்களுடனும், பிற நண்பர்களுடனும் இணைந்து கேட்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அவருடைய உரையை மிக அருமையாகப் பகிர்ந்துள்ள விதம் பாராட்டத்தக்கது. நன்றி. ஏடகத்திற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. ஆறுமுக சீதாராமன் அவர்களுக்குப் பாராட்டுகள். இவருக்குதான் அரசும் அமைப்புகளும் ஆதரித்து அங்கீகாரம் தர வேண்டும். ஏடகம் மூலமாகவே அரசுக்கு ஒரு பரிந்துரை மடலை அனுப்பலாம். பதிவு மிக அருமை.

    பதிலளிநீக்கு
  20. மிக அருமையான பதிவு! மிகச் சுவையான தகவல்கள்!

    நாணயம் திரட்டுபவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிறியேனும் என்னால் முடிந்த அளவு சில நாணயங்களைத் திரட்டியிருக்கிறேன். ஆனால், இப்படித் தான் திரட்டும் நாணயங்கள் பற்றி இவ்வளவு விரிவான தகவல்களை ஆராய்ந்து கண்டுபிடித்திருப்பவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. பொதுவாக அரிய பொருட்களைத் திரட்டுபவர்கள் யாரும் வரலாறு படித்தவர்களாக இருப்பதில்லை; வரலாறு படித்தவர்கள் எல்லாரும் திரட்டுநர்களாக இருப்பதில்லை. இவர் இரண்டுமாக உள்ளார் என்பதால் இப்படியோர் அரிய வரலாறு வெளிவர ஏதுவாகியிருக்கிறது. இதைப் படித்த பிறகாவது மற்ற வரலாற்று ஆசிரியர்களும் ஊக்கம் பெற்றுத் தங்களுக்குப் பிடித்தமான, தங்களால் இயன்ற அளவில் ஏதேனும் அரிய பொருட்களைத் திரட்ட முன்வர வேண்டும்!

    அந்தக் காசு பிரிக்கும் சல்லடை கண்டேன். இது மிக அண்மைக்காலம் வரை கூடப் புழக்கத்தில் இருந்தது என்றால் நம்புவீர்களா? ஆம், தமிழ்நாட்டில் சிறு கடைகள் வைத்திருப்பவர்கள் தங்களிடம் சேரும் சில்லரைகளைப் போடத் தனி இழுப்பறை வைத்திருப்பார்கள். அதில் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அதே போன்ற வடிவம் இருக்கும். என் தந்தையார் சலவைக்கடை நடத்துபவர். தனது கடை ஒன்றில் இப்படி ஓர் அமைப்பு இருந்ததாக அவர் எப்பொழுதோ சொன்ன நினைவு.

    அளக்குடி ஆறுமுக சீதாராமனாரை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  21. காசுகளைப் பற்றிய அரிய உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். வேலியிட்ட மரம் பற்றிய காசு சுவையான தகவல். காசு எண்ணுவதற்குப் பயன்படுத்திய கருவி வியப்பிலாழ்த்தியது. ஆறுமுக சீதாராமனாருக்குப் பாராட்டுகள்! அவரை அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிகவும் நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  22. அறிய தகவல்கள் நிறைந்த பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  23. காசு இயந்திரம் மிகவும் வியப்பு! அரிதான தகவல்! காசு படங்கள் பழைய நினைவுகளையும் மீட்டது. 2 பைசா, 5 பைசா எல்லாம். அளக்குடி சீதாரமானாரையும் அறிந்து கொண்டோம். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  24. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு