17 பிப்ரவரி 2018

சிரிப்போம் சிந்திப்போம்

ஓசிப் பொடி வாங்கி
நாசியிலே ஏற்றினால்
காசிக்குப் போனாலும் – உன்
கருமம் தொலையாது.

     பெரியவர் ஒருவர், தன் வேட்டி மடிப்பில் பத்திரமாய் வைத்திருந்த, பொடி மட்டையினைப் பிரித்துப் பார்க்கிறார். மட்டையினுள் பொடி இல்லை.

     உடனே பொடி போட்டாக வேண்டுமே.

     மூக்கு மட்டுமல்ல, மனமும் பரபரத்தது.


      அப்பொழுது எதிரில் வந்த தன் நண்பரைப் பார்த்துக் கேட்கிறார்.

      கொஞ்சம் பொடி கொடு

      எதிரில் வந்தவர், பொடி மட்டையினை எடுக்க, தன் வேட்டி மடிப்பில் கை வைக்கிறார். அப்பொழுதுதான் அவருக்கு  நிறைவிற்கு வருகிறது.

     நம்மிடம் பொடி கொஞ்சம்தானே இருக்கிறது. அதையும் இவருக்குக் கொடுத்துவிட்டால், இன்றைய பொழுதை எப்படி ஓட்டுவது.

ஓசிப் பொடி வாங்கி
நாசியிலே ஏற்றினால்
காசிக்குப் போனாலும் – உன்
கருமம் தொலையாது

     ஒரு பாடலாகவே, நையாண்டியாய், கடன் கேட்காதே என்கிறார்.

      என்னிடமே, பாட்டு பாடுகிறாயா, என்று பொடி கேட்டவரும், தன் பங்கிற்கு, ஒரு பாடலைப் பாடினார்.

பொடி போடும் பழக்கமுடையோர்
போடுவதற்கு இல்லையென்றால்
மடியிலே வைத்த மட்டை
மாயமாய் மறைந்து விடும்

      பார்த்தீர்களா, அக்கால மக்களின் எள்ளலை.

      எதையுமே வேடிக்கையாய், நகைச்சுவை உணர்வோடு பகிர்ந்து கொள்வதில், நம் முன்னோர் வல்லவர்களாய் இருந்தனர். அன்று சாதாரண மக்கள் கூட புலமை மிக்கவர்களாய் இருந்தனர்.

      பாக்கு வெட்டி

      பாக்கு வெட்டி பார்த்திருக்கிறீர்களா?

      இன்றைய இளைஞர்களுக்கு, பாக்கு வெட்டி என்றால் என்னவென்றே தெரியாது.

    

தாம்பூலம் தரித்தல் என்பது ஒரு பழக்கமாக, பண்பாடாக, நம் முன்னோரால் கடைபிடிக்கப் பட்டு வந்தது.

      இன்றும் கூட, திருமணத்திற்கோ அல்லது குறிப்பாக கிராமப் புறங்களில் யாரேனும் இறந்து விட்டால், துக்கம் விசாரிக்க வருவோருக்கு, பிரம்புத் தட்டில், வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு கொடுப்பதை பார்த்திருப்பீர்கள்.
      
     இன்று சீவல் வந்து விட்டது.

     அன்று, வெற்றிலையோடு, பாக்கு சேர்த்துதான் மெல்லுவார்கள்.

     பாக்கினை வெட்டுவதற்கான கருவிதான் பாக்கு வெட்டி.

      குறடு போன்று தோற்றமளிக்கும், இரு கை பிடிகள், முனையில், இரு கூர் முனைகள். இரு கூர்மையான முனைகளுக்கு இடையில், பாக்கினை வைத்து வெட்டி, சிறு சிறு துண்டுகளாக்கி மெல்லுவார்கள்.

      இந்த பாக்கு வெட்டிக்குப் பல பயன்கள் உண்டு.

      ஒரு பெரியவர், தன் பாக்கு வெட்டி காணாமல் போய்விட்டதை அறிந்து தேடுகிறார். கிடைக்கவில்லை. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புலம்புகிறார்.

       என் மனைவி சமையல் செய்யும் பொழுது, அடுப்பு எரிக்க, இந்த பாக்கு வெட்டியால்தான், சுள்ளிகளை நறுக்கித் தருவேன். காய்களையும் நறுக்கித் தருவேன்.

       என் மனைவி, உப்பு தீர்ந்து போய்விட்டது, அடுத்த வீட்டில் கொஞ்சம் உப்பு வாங்கி வா, என்றால், இந்த பாக்கு வெட்டியை அடமானமாகக் கொடுத்துதான் உப்பு வாங்குவேன்.

       என் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில், முதுகு புறத்தில், அரிக்குமானால், இந்த பாக்கு வெட்டியை, விரித்து,, பெரிய குச்சு போல் நீட்டி, முதுகும் சொறிவேன்.

       அந்தப் பாக்கு வெட்டியைக் காணோமே, யாராவது எடுத்திருந்தால் கொடுத்துவிடுங்கள்.

வெற்றிலை தரிக்க
காய் நறுக்க
வெண்கல் உப்புக்கு
அடகு வைக்க
பறகு பறகு என்று
முதுகு சொறிய
பயனாக இருந்த பாக்கு வெட்டி
தொலைந்து போயிற்றே
எடுத்தீராயின் கொடுப்பீரே.

         கடன் கேட்கவும் பாட்டு, கடன் மறுக்கவும் பாட்டு, காணாமல் போனதைத் தேடவும் பாட்டு, என பாட்டாய் பாடி செம்மாந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்.

       வாழ்வை ரசித்து ரசித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்.

       நாமோ ரசிக்க மறந்து, உணவைக் ருசிக்கக் கூட மறந்து, பற பறவென பறந்து கொண்டே இருக்கிறோம்.

       காலையில் பணிக்குச் செல்வதற்காக, வீட்டில் இருந்துப் புறப்பட்டுச் சாலையில் பயணிக்கும் பொழுது, நாம் காணும் காட்சியை நினைத்துப் பாருங்கள்.

      இரு சக்கர வாகனத்தில் மக்கள் வெகுவேகமாய் பறந்து செல்வதைக் காணுகிறோமல்லவா?

       ஆண்கள், பெண்கள், மாணவர்கள், மாணவிகள் அனைவரும் இரு சக்கர வாகனத்தில், ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, ஏதோ உயிர் போகிற வேலை காத்திருப்பதைப் போல, பயணிக்கிறார்களே, ஏன் இந்த வேகம்? எதற்காக இந்த அவசரம்?

       வேகமே வாழ்ககையாகிப் போய்விட்டதல்லவா?

       காலையில் கண் விழித்ததுமே இந்த பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது.

நேரமாயிடுச்சி வேகமா சாப்பிடு
ஆட்டோ வந்திடும் வேகமா சாப்பிடு
பள்ளி வேன் வந்திடும் வேகமா சாப்பிடு
கல்லூரிப் பேருந்து வந்திடும் வேகமா சாப்பிடு
என்று நம் பிள்ளைகளை விரட்டுகிறோமா, என்றாவது பசி வந்தபின் சாப்பிடு என்று சொல்லிக் கொடுத்திருக்கிறோமா?

      பசித்தபின் புசி என்பர் நம் முன்னோர்.

      நம் முன்னோரின் ஆரோக்கியத்தின் ரகசியமும் இதுதான்.

      பசித்தபின் புசித்தனர்.

       நாமோ நேரமாகிவிட்டதே என்பதற்காகச் சாப்பிடுகிறோம்

       ஏன் இந்த அவசரம்?

       இன்று நாம், நம் வாழ்வியல் முறைகளை முற்றாய் மாற்றிக் கொண்டுவிட்டோம்.

       வாழ்வியலை மட்டுமல்ல, பேசும் மொழியினைக் கூட, வேகமாய் மாற்றிக் கொண்டே வருகிறோம்.

       தாய் மொழியை, நம் தமிழ் மொழியை மெல்லப் புறக்கணித்து, ஆங்கிலமே அறிவுக்கு உகந்தது, ஆக்கத்திற்கு உரியது என்று, தவறாய் எண்ணி, நம் பிள்ளைகளையும் ஆங்கிலத்திற்குள் தள்ளுகிறோம்.

       ஆங்கிலம் படிப்பது என்பது வேறு.

       ஆங்கிலத்திலேயே படிப்பது என்பது வேறு

ஆங்கிலத்தில் பேசினால்
குருவாகப் பார்க்கிறார்கள்
தமிழில் பேசினால்
குறு குறுவென்று பார்க்கிறார்கள்

மம்மி, டாடி என்றால்
கண்ணியமாகப் பார்க்கிறார்கள்
அம்மா, அப்பா என்றால்
அண்ணியமாகப் பார்க்கிறார்கள்

     என்று ஒரு புலவர் பாடியதைப் போல, நம் நிலை இன்று இப்படித்தான் ஆகிவிட்டது.

      தாய் மொழியில் மட்டுமே, நம்மால் முழுமையாய் சிந்திக்க முடியும்.

       தாய் மொழியைப் போற்ற வேண்டும்

       தமிழ் மட்டுமதான் வாழ்க்கை என்றால் என்ன என்று கற்றுக் கொடுக்கும். எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுக்கும்.

----

        நண்பர்களே, ஒரு சொற்பொழிவில் நான் கேட்ட செய்திகளுள், ஒன்றிரண்டை மட்டும், தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

        ஆனால், இம்மனிதர் பேசிய பேச்சும், பேசிய விதமும், அனைவரையும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்துவிட்டது.

       கசப்பான மருந்தை, தேனில் கலந்து தரும் மருத்துவரைப் போல, கசப்பான உண்மைகளை, கசப்பான இன்றைய வாழ்வில் நடைமுறைகளை, சிரிப்போடு கலந்து கொடுத்து, சிந்திக்க வைத்திருக்கிறார் இம்மனிதர்.

        அருமையான சொற்பொழிவினைக் காது கொடுத்துக் கேட்ட, மன நிறைவோடு, வீடு திரும்பிய பிறகுதான், நினைத்துப் பார்த்தேன்.

      கடைசியாக எப்போது வாய்விட்டு சிரித்தேன் என்று யோசித்துப் பார்த்தேன்.

       சத்தியமாக நினைவிற்கு  வரவேயில்லை.

       சிரிக்க மறந்தது மட்டுமல்ல, சிரிப்பு என்று ஒன்று இருப்பதையே மறந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இது நியாயமா? எனும் கேள்வி என் முன் எழுந்து நின்றது.

        மனிதனுக்கு மட்டுமே  உரித்தான குணத்தை, புறந்தள்ளிவிட்டு, வாழ்கிறோமே, அலையாய் அலைகிறோமா, கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பறக்கிறோமே எதற்காக?

        இனி சிரிக்க வேண்டும்.

        சிரிக்க வைத்தே சிந்தனையை விதைத்திருக்கிறார் இவர்.

நகைச்சுவையோடு சிந்திப்போம்


தொலைக் காட்சிப் புகழ்,. நகைச்சுவைத் தென்றல்
திரு ஜெக.மகேசன்
உதவிப் பேராசிரியர், பிரிஸ்ட் பல்கலைக் கழகம்.

----

ஏடகம்
நடத்திய
ஞாயிறு முற்றம் சொற்பொழிவு

     கடந்த 11.2.2018 ஞாயிறு மாலை நடைபெற்ற, ஞாயிறு முற்றம் சொற்பொழிவில்தான், இந்த அருமையான, சிரிக்க வைத்த, சிந்திக்க வைத்தப் பொழிவினைக் கேட்டேன்.
     

பான் செக்கர்ஸ் கல்லூரி, தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.ஜெயஸ்ரீ அவர்கள் விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார்.


அரசர் மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர், புலவர் முனைவர் அய்யாறு ச.புகழேந்தி அவர்கள், தனக்கே உரிய நகைச்சுவையோடு, தலைமையுரை ஆற்றினார்.

     

இந்த சமய அறநிலையத் துறை, திரு இரா.கு.பிரகாஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


பான்செக்கர்ஸ் கல்லூரி, தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு.சத்தியா அவர்கள், விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

அற்புதமான விழாக்களை, சொற்பொழிவுகளை,
திங்கள் தோறும் ஏற்பாடு செய்து, அரங்கேற்றி வரும்,
ஏடகம்
அமைப்பின் நிறுவுநர்


திரு மணி.மாறன் அவர்களின்
முயற்சி போற்றுதலுக்கு உரியது.

போற்றுவோம், வாழ்த்துவோம்.