23 பிப்ரவரி 2018

வாசிக்கப் பிறந்தவர்




நதி ஓடிக் கொண்டேயிருக்கும்
யாமத்து நிலா பனி பொழியும்
வைகறை விடியும்
இளம் கதிர்கள் கதகதப்பாக்கும்
கோடி மகரந்தப் பூக்களில்
தெள்ளிய தேன் குவியல் உண்டு.
தேவையும், தேடலும் இருந்தால்
யாவையும் சாத்தியமாகும்.

     தேடல்.

      வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவர், உள்ளத்திலும், பெருங் கனலாய், கனன்று கொண்டிருக்க வேண்டிய உணர்வு, தேடல்.

     இவரைப் பொறுத்தவரைத் தேடலே, இவரது வாழ்வாகிப் போனது.


     வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், தமிழைத் தேடி, தமிழறிஞரை நாடித் தமிழமுதம் பருகி மகிழ்கிறார் இவர்.

       தமிழுலகே தொலைக் காட்சிப் பெட்டிக்குள் மூழ்கிக் கிடக்கும், இக்காலத்தில், நாள்தோறும் தவறாமல், புதுப்புது நூல்களின் பக்கங்களில் மூழ்கி, முத்தெடுக்கிறார் இவர்.

       கடந்த 12.2.2018 திங்கட் கிழமையன்று, இம்மாமனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

       காலை 10.00 மணியளவில், இவரது வாகனம், கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திற்குள் நுழைந்தது.

        நிமிர்ந்த நெஞ்சம், நேர்கொண்ட பார்வை, முறுக்கிய மீசை, முகத்தைப் பார்க்கும் பொழுதே, அகத்தை ஊடுறுவும் கண்கள். தமிழ் ததும்பும் முகம்.

      கரந்தைத் தமிழ்ச் சங்கம் பற்றி அறிந்து கொள்ளவே வந்தேன்.

      நானும், நண்பர் திரு சக்திவேல் அவர்களும், வாருங்கள் என வரவேற்று, பள்ளித் தலைமையாசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றோம். நண்பரும், பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்கள் வரவேற்று அமரச் செய்தார். உடற் கல்வி ஆசிரியர் புலவர் துரை.நடராசன் அவர்களும் இணைந்து கொண்டார்.

      சுமார் ஒரு மணி நேரம், கரந்தைத் தமிழ்ச் சங்க வரலாற்றை,, சங்கம் நிறைவேற்றிய தீர்மானங்களை, தமிழ்த் தழைக்க சங்கம் முன்னெடுத்தப் போராட்டங்களை, மழலையின் ஆர்வத்தோடு வியந்து கேட்டார்.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் முப்பதாண்டு கால வரலாற்றைத் தொகுத்து, நானும், நண்பர் திரு வெ.சரவணன் அவர்களும் இணைந்து எழுதிய, உமாமகேசுவரம் நூலினைக் கொடுத்தபோது, மகிழ்வோடு பெற்றுக் கொண்டார்.
      

சிலப்பதிகாரத்தில் மாதவி நடனமாடிய மேடையின் அளவினை, அடியொற்றிக் கட்டப் பெற்ற, சங்கத் தமிழ்ப் பெருமன்ற மேடையில் ஏறி நின்று பரவசப்பட்டார்.

       கரந்தைக் கலைக் கல்லூரியின் முதல்வர் திருமதி முனைவர் இரா.இராசாமணி அவர்களும், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சண்முகம் அவர்களும் வந்து வரவேற்க, நூலகத்தைப் பார்க்க வேண்டுமே என்றார்.

      



நூலகத்துள் நுழைந்தபோது, தனது காலணிகளை வெளியிலேயே விட்டுவிட்டு, கோயிலின் கருவறைக்குள் நுழையும் உணர்வோடுதான்  நுழைந்தார்.

      சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்னர், வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கென, பத்துக்கும் மேற்பட்ட மர அலமாரிகளுடன்  வழங்கிய, ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட, பழங்கால நூல்களைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார்.

      





சற்றேறக்குறைய மூன்று மணி நேரம், சங்க வளாகத்தினுள், உமாமகேசுவரனாரும், மாபெரும் தமிழறிஞர்களும் உலாவிய மண்ணில் நடந்து மகிழ்ந்தார்.
----

      மறுநாள் காலை என் அலைபேசி குரலெலுப்பியபோது, திரையில் தோன்றியப் பெயரைப் பார்த்து வியந்து, வணக்கம் ஐயா என்றேன்.

       உமாமகேசுவரம் நூலினைப் படித்துவிட்டேன். அருமையாகத் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள் என வாழ்த்தினார்.

       நெகிழ்ந்து போய்விட்டேன்.

       நேற்றுதான் புத்தகத்தை வாங்கிப் போனார். உடனே  படித்துவிட்டேன் என்கிறாரே.

        இவருக்கு மட்டும் படிக்க நேரம் எப்படி வசப்படுகிறது என வியந்து போனேன்.

        ஏனென்றால் இவரது பணி அப்படிப் பட்டது.

        இருபத்து நான்கு மணி நேரப் பணி.

        மிகப் பெரும் பொறுப்பில் இருப்பவர்.

        தூக்கத்தைக் கூடத் தொலைத்துவிட்டுப் பணியாற்ற வேண்டியவர்.

        இப்படிப்பட்டவர், நேற்றுக் கொடுத்த நூலைப் படித்துவிட்டேன் என்கிறார்.

        வியப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.

        உமாமகேசுவரம் நூலில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து  வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ப் பொழில் இதழைப் பற்றி எழுதி, என்னை உசுப்பேற்றி விட்டு விட்டீர்கள். அவ்விதழின் ஐம்பது ஆண்டுகால நூல்களை, மின்னூலாக்கம் செய்து வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதனை எடுத்து வாருங்கள் என்றார்.

         அடுத்த நாளே, நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியருமான புலவர் துரை.நடராசனார் அவர்களுடன் சென்றேன்.

         தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்துள்ளப் பெரும் கட்டிடம் இவரது அலுவலகம்.

         சற்றுத் தயங்கித்தான் உள்ளே நுழைந்தோம்.
        

நேர்முக உதவியாளர் மூலம், எங்களின் வருகையைத் தெரிவித்த போது, உடனே அழைத்தார்.

         விசாலமான பெரிய அறை.

         சிங்கம்போல் கம்பீரமாய் அமர்ந்திருந்தார்.

         எனது மற்ற நூல்களைக் கொடுத்தேன்.

        தொடர்ந்து எழுதுங்கள் என உற்சாகப் படுத்தினார், ஊக்கமூட்டினார்.

        நண்பர்களே இவர் யார் தெரியுமா?

---

        இவர் கடலூர் மாவட்டம், போத்திரமங்களம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். அவ்வூரிலேயே உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, தமிழ் வழியில் பயின்றவர்.


அண்மையில், தான் பயின்ற பள்ளிக்குச் சென்று பார்த்தபோது, அப்பள்ளி, அன்று இருந்த அதே நிலையிலேயே தொடர்வதைக் கண்டு, வேதனையுற்றார்.

நன்று கருது
நாளெல்லாம் வினை செய்
நினைப்பது முடியும்
தேவை, செயல் மட்டுமே

என்னும் கொள்கையினை உடைய இவர், தனது நண்பர்களை ஒன்று திரட்டி, தான் பயின்ற பள்ளிக்குப் புத்தம் புதிதாய் ஒரு நூலகம், உள் விளையாட்டு அரங்கம், போதுமான கழிவறை வசதிகளை ஏற்படுத்தும் பெருஞ் செயலில் இறங்கியுள்ளார்.

      இவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியரிடத்து உரையாடுவதில் பெருமகிழ்வு கொள்பவர்.

      இன்று வேலை வாய்ப்பிற்கு மட்டுமல்ல, மேற்படிப்பிற்குக் கூடப் போட்டித் தேர்வு எழுதும்  நிலை வந்து விட்டது.

      போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிப்பதில், தேர்விற்குத் தயார் படுத்த வழி காட்டுவதில் வித்தகர் இவர்.

       இவரே போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற்று உயர் நிலையினை அடைந்தவர்தான்.

       கணினியால், உலகம் சிறு உருண்டையாய்ச் சுருங்கி, கைக்குள் வருவதற்கு முன்பே, போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர் இவர்.

       வெறும் 74 கலிப் பணியிடங்களுக்கானத் தேர்வை இவர் எழுதியபோது, இவருடன் போட்டிப் போட்டுத் தேர்வு எழுதியவர்கள் எத்துணை பேர் தெரியுமா?

       ஒரு இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் பேர்.

       போட்டித் தேர்வில், இரு நூறு கேள்விகளுக்கு விடையளிக்க, இருபத்து ஒன்பதாயிரம் கேள்விகளைத் தயார் செய்து, தன் கை நோக நோக, விடையெழுதித், தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவர் இவர்.

       போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்ட, மிகவும் சரியானவர் இவர்தானே?

      இவர் ஒரு சிறந்த படிப்பாளி, புத்தகக் காதலர்.

      மேலும், இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர்.
     

இவர் மேடையில் வாய் திறந்தால், சங்க இலக்கியங்கள் அருவியாய் கொட்டும்.

       இவர் மாணவர்களுக்குக் கூறும் முதல் அறிவுரை.

       நோக்கத் தெளிவு.

       இரண்டாவது படித்தல், படித்தல், படித்தல்.

       படி

       படி என்கிறார் தன் சிம்மக் குரலில்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

     ஒரு தாய் தன் பிள்ளைகளிடத்துச் சமமானப் பாசமே காட்டுபவர்தான். ஆனால் அவர்கூட தன் இயல்பில் திரிந்து, தன்  பிள்ளைகளுள், மெத்தப் படித்த தன் மகனிடத்துக் கூடுதல் பாசம் வைக்கவே செய்வார்.

      இதேபோல்தான் அரசனும்., வயதில் மூத்தவரை வருக, வருக என்று அழைக்காமல், அவர்களுள் அறிவுடையவன் சொல்லும் வழியிலேயே தன் அரசியலை நடத்துவார்.

      கீழ்க் குலத்துள் பிறந்த ஒருவன், கல்வியில் சிறந்து விளங்குவானாயின், மேற்குலத்தாரும் அவனை வணங்குவர்.

      இப்பாடலை எழுதியவர் யார் தெரியுமா?

      எதிரில் அமர்ந்திருக்கும் இளைஞர்களை,  எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களைப் பார்த்துக் கேட்கிறார். பின் இவரே பதிலும் கூறுகிறார்.

       இப்பாடலை எழுதியவர் புலவர் அல்ல,. ஆசிரியர் அல்ல, தமிழறிஞரும் அல்ல, ஒரு அரசன்.

        ஆம் ஒரு அரசர் எழுதிய பாடல் இது.

        பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எழுதிய பாடல் இது.

        ஒரு அரசனே கூறுகிறான்.

        படித்தவனுக்குத்தான் வேலை.

        படிக்காவிட்டால் வேலை இல்லை என்கிறான்.

        எனவே படி

       படி என இவர் பெருங்குரல் எடுத்து முழங்குகையில், அரங்கில் அமர்ந்திருக்கும், மாணவ, மாணவியரின் நாடி நரம்புகள் முறுக்கேறுகின்றன.

       அவர்தம் உடலில் மட்டுமல்ல, உள்ளத்திலும் புது ரத்தம் பாய்கிறது.

       எழுச்சி உருவாகிறது

       தெளிவு பிறக்கிறது.

       படி

       படி

       அதற்குமுன் படிப்பதற்கு உன்னைத் தயார் படுத்திக் கொள் என்கிறார்.

தொடங்குகையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி
நூலைப் படி
என்பார் பாவேந்தர் பாரதிதாசன். தொடக்கத்தில் படிப்பதற்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனாலும் படி, தொடர்ந்து படி, படிக்கப் படிக்க அடங்கா இன்பம் ஊறும், படி என்றவர் மேலும் கூறுகிறார்.

தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடங்கொன்று அறிவகற்றும் கல்வி – நெடுங்காமம்
முற்பயக்கும் சின்னீர இன்பத்தின் முறிழையாய்
பிற்பயக்கும் பீழ பெரிது.

என்று கூறுவார் குமரகுருபரர். கல்வி தொடங்கும் பொழுது துன்பம் அளித்தாலும், அதன்பின் தொடர்ந்து இன்பத்தைதத் தரும். ஆனால் படிக்கும் காலத்தில், துய்க்கும் இன்பமானது, கூடா ஒழுக்கமானது, சிறிது காலத்திற்கு இன்பம் தருவதுபோல் தோன்றினாலும், வாழ்வு முழுக்க துன்பத்தைத்தான் தரும்.

      எனவே படி
      படி
      ஊன்றிப் படி
      நோக்கத் தெளிவோடு படி
      முன்னேறு
      வாழ்வில் முன்னேறு

என உரைக்கும் இவர், ஒரு காக்கி சட்டைக்குச் சொந்தக்காரர் என்று சொன்னால் நம்புவீர்களா?

       நம்பித்தான் ஆக வேண்டும்.

       இவர் தன் வாழ்வில் செல்வத்தை சேர்க்கவில்லை.

       நீடித்தப் புகழையும், மாணவ, மாணவியரின் மாறா அன்பையும், நூல்களையும்தான் சேர்த்துள்ளார்.

        இவர், தன் வீட்டில் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கும், நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

        ஒரு நூறு
        இரு நூறு அல்ல.

        ஓராயிரம்
        ஈராயிரம் அல்ல.

        முழுதாய் இருபத்து ஐந்தாயிரம் நூல்களைச் சேர்த்துள்ளார்.

        அத்துணையும் இவர் ஊன்றிப் படித்துப், படித்து இவர் மனதில், ஆழமாய் பதிந்துபோன நூல்கள்.

         உண்மையிலேயே இவர் வாசிக்கப் பிறந்தவர்.

         தமிழை நேசிக்கப் பிறந்தவர்.

         தமிழியே சுவாசிக்கப் பிறந்தவர்.


திருவாசகம்,  செம்மொழி பாரதி

திருவாசகம், இவரது அன்பு மகன்

செம்மொழி பாரதி, இவரது பாச மகள்

         திருவாசகத்தையும், பாரதியையும், தன் குழந்தைகளாக்கிக் கொஞ்சி மகிழும் கொடுப்பினை யாருக்குக் கிட்டும்.

         இவருக்குக் கிட்டியிருக்கிறது.

         திருவாசகம் ஒருபுறமும்,. பாரதி மறுபுறமும் இவர்தம் கரம் பற்றி, நடந்து செல்லும் காட்சியைக் காணும்போது, தமிழன்னையே, இவர்தம் கரம் பற்றி, அரவணைத்து, மகிழும் காட்சி, நம் மனக் கண்ணில் தோன்றி நம்மை நெகிழச் செய்கிறது.

           இவர் தமிழ் மட்டுமல்ல,
              சட்டமும் பயின்றவர்




இவர்தான்,
தமிழ்த்திரு டி.செந்தில் குமார், எம்.ஏ., எம்.எல்., இ.கா.ப.,
காவல் துறை கண்காணிப்பாளர்,
தஞ்சாவூர்



     
                                                                                

     


          

22 கருத்துகள்:

  1. மிக மிக அருமை. தமிழ்ப் பற்றுமிக்கக் காவல்துதுறை அதிகாரியால் தமிழ் வளம் பெறும் மேன்மேலும்.தஞ்சைக்குக் கொடுப்பினை ° வாழ்த்துகள் ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு
  2. இவரது செயல்பாட்டை காணும்பொழுது காவல்துறைமீது மதிப்பு உயர்கிறது.

    வாழ்க நீ எம்மான்
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. எனது இல்ல நூலகத்தில் 5000 நூல்கள் இருப்பதைச் சொல்லித் திரிந்தேன். இனி மூச்சு விடமாட்டேன். சமூகத்தின்பால் அக்கறையுள்ள ஒருவரின் அறிமுகம் அருமை. மெழுகுவர்த்தி மனிதர்கள் என்னும் தலைப்பில் நீங்கள் விரைவில் ஒரு நூலை வெளியிடலாம்.

    பதிலளிநீக்கு
  4. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அருமையான மனிதரும் தஞ்சாவூர் காவல் துறைக் கண்காணிப்பாளருமான திரு. த.செந்தில்குமார் அவர்களுடான சந்திப்பு, அவருடைய ஆற்றல்மிகு செயல்பாடுகள், அவருடைய ஆழ்ந்த தமிழ்ப் பற்று, பாராட்டும் குணம் ஆகியவற்றை மிகவும் அழகாக பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று அவ்வையார் சொன்னது போல் இருக்கிறது.
    நீங்களும் நல்ல படிப்பாளி, அது போல் காவல்துறை அதிகாரி அவர்கள் நல்ல படிப்பாளியாக இருக்கிறார்.
    மாணவர்களுக்கு கூறிய அறிவுரை அருமை.
    அவர் வீட்டு நூலகத்தின் எண்ணிக்கை வியக்க வைக்கிறது.

    நல்ல மனிதர் அறிமுகத்திற்கு நன்றி.

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மிக நன்றாய் எழுதியுள்ளீர்கள் . காவல் துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு . அவர்களை பற்றி வலை பூவில் எழுத வேண்டும் என்ற என் ஆசை தீயில் நீங்கள் மேலும் எண்ணையை ஊற்றியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. மிகச் சிறப்பு அய்யா
    அய்யா உயர்திரு. T.செந்தில்குமார் அவர்களை அனைவரும் எளிதில் அணுகக்கூடியவர் இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எளிதில் அணுகலாம் என்பது அய்யாவின் சிறப்பு

    பதிலளிநீக்கு
  8. நதி ஓடிக் கொண்டேயிருக்கும்
    யாமத்து நிலா பனி பொழியும்
    வைகறை விடியும்
    இளம் கதிர்கள் கதகதப்பாக்கும்
    கோடி மகரந்தப் பூக்களில்
    தெள்ளிய தேன் குவியல் உண்டு.
    தேவையும், தேடலும் இருந்தால்
    யாவையும் சாத்தியமாகும்.


    மிகவும் ரசித்தேன் நண்பரே
    இந்த வரிகளை...!

    பதிலளிநீக்கு
  9. மா மனிதர் உயர்திரு T.செந்தில்குமார் அவர்களை அறிமுகம் செய்த தங்களுடைய பதிவு இனிது..

    வழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. ///தேவையும், தேடலும் இருந்தால்
    யாவையும் சாத்தியமாகும்.///

    உண்மை... ஆனா சிலது தேடிக்கொண்டிருக்கும்போதே மரணம் தழுவிவிடுவதும் உண்டு ஹா ஹா ஹா.. அழகிய பதிவு.. கரந்தை என்பது டிஸ்ட்ரிக் ஆ? நான் ஒரு ஊர் என நினைச்சேன்...

    பதிலளிநீக்கு
  11. ஒரு உண்மை சொல்லட்டோ? திரு செந்தில்குமார் அவர்களின் முகத்துக்கும் அந்த மீசைக்கும் கொஞ்சம்கூடப் பொருத்தமே இல்லை:) ஹா ஹா ஹா இப்படி மீசை இருந்தால் முகத்தில கொஞ்சமாவது கடுகடுப்பு இருக்கோணும்.. இது முகம் என்னவோ தங்கமான சொஃப்ட்டானவர்போல இருக்கு மீசை மட்டும் புறிம்பா இருக்குது ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  12. படிக்கும்போதே மனதில் மதிப்பு உயர்கிறது. போற்றத்தகுந்த மனிதர். நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
  13. உங்களது பதிவுகளில் அறிமுகப்படுத்துகின்ற பல நபர்களில் இவர் முற்றிலும் வித்தியாசமானவராக இருப்பவராக உணர்ந்தேன். இத்தகைய ஒரு பணியில் இருந்துகொண்டு ஆர்வமாக வாசிப்பில் ஈடுபட்டுவரும் அன்னாரின் பெருமைகளைப் பகிர்ந்த விதம் அருமையாக உள்ளது. இவருடைய ஆர்வம் பலருக்கு முன்னுதாரணமாக அமையும் என்று நம்புகிறேன். அரிய மாமனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அவருக்கு என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள். வாய்ப்பு கிடைக்கும்போது அவரைச் சந்திக்க் ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான மனிதரைப்பற்றிய அற்புதமான பகிர்வு .
    அர்னால்ட் அவர்களுடன் ஒரு காவல்துறை சேர்ந்தவர் படம் முகப்புத்தகத்தில் பார்த்தேன் இவர்தானா அவர் .மிக்க நன்றி அண்ணா பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
  15. ஒரு நல்ல மனிதரைப்பற்றிய அருமையான அறிமுகம்.

    பதிலளிநீக்கு
  16. திறமையாளர்கள் எத்துறையிலும் பளிச்சிடுகிறார்கள்!^

    பதிலளிநீக்கு
  17. வழக்கம்போல இன்னொரு அருமையான அறிமுகக் கட்டுரை. இம்முறை திரு.செந்தில்குமார், காவல் துறை கண்காணிப்பாளர், தஞ்சாவூர். சிறப்பான அறிமுகம். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா05 மார்ச், 2018

    அருமையான அறிமுகம்.
    நன்றி.
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு