03 மார்ச் 2018

வெட்டிக்காடு
      ஆண்டு 2017.

      அக்டோபர் மாதம் 25 ஆம் நாள்.

      மாலை நேரம்.

      ஆற்றின் கரைதனில் நின்றுகொண்டிருக்கிறோம்.

       நானும், நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களும்.

       புது ஆறு என்றழைக்கப்படும், கல்லணைக் கால்வாயின் கரையில் நின்று கொண்டிருக்கிறோம்.


        தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி வெகுவேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.

       கண் கொள்ளாக் காட்சி.

        இக்காட்சியைக் காண வேண்டும் என்பதற்காகவே, இரு சக்கர வாகனத்தில், சுமார் 25 கிலோ மீட்டர் பயணித்து, இவ்விடத்திற்கு வந்திருக்கிறோம்.

        பல ஆண்டுகளாகவே இவ்விடத்தைக் காண வேண்டும் என்ற ஆவல் இருந்த போதிலும்., இன்றுதான் எண்ணம் ஈடேறியிருக்கிறது.

       ஆற்றங்கரையில் நின்று, ஆற்று நீர் ஓடிவருவதைக் காண எதற்காக, 25 கி.மீ பயணிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

       நியாயமான கேள்விதான்.

       நண்பர்களே, ஆற்றைக் கடப்பதற்காகக் கட்டப்பெற்ற, எண்ணற்றப் பாலங்களைத் தாங்கள் பார்த்திருப்பீர்கள்.

       தினமும் இதுபோன்றப் பாலங்களைக் கடந்தும் சென்று கொண்டிருப்பீர்கள்.

       ஆனால் நாங்கள் நின்று கொண்டிருக்கும் பாலம் வித்தியாசமானது.

       இங்கு கல்லணைக் கால்வாய் என்று அழைக்கப்படும் புது ஆறே, ஒரு பாலத்தின் மேல்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

        ஆற்றைக் கடப்பதற்குத்தானே பாலம்.

        ஆனால், இங்கு ஆறே ஒரு பாலத்தின் மேல்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

         என்ன ஆறு பாலத்தின் மேல் பயணிக்கிறதா?

        அப்படியானால் அந்தப் பாலத்திற்குக் கீழ் என்னதான் இருக்கிறது.

        வேறு ஒரு ஆறு பாலத்திற்குக் கீழ் ஓடிக் கொண்டிருக்கிறது.

        என்ன கீழே ஒரு ஆறு, மேலே ஒரு ஆறா-

        வி‘யப்பாக இருக்கிறது அல்லவா?

        உண்மை.

        நால்ரோடு சந்திப்பு என்று சொல்வார்கள் அல்லவா?

        கிழக்கு மேற்காகச் செல்லும் சாலையும், தெற்கு வடக்காகச் செல்லும் சாலையும், ஒன்றை ஒன்று, சந்திக்கும் இடத்தை, நால் ரோடு சந்திப்பு என்பார்கள்.

        அதனைப் போலத்தான், தெற்கு வடக்காகப் பயணிக்கும் காட்டாறும், கிழக்கு மேற்காகப் பயணிக்கும் புது ஆறும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளும் இடம் இது.

         வெட்டிக்காடு

         நண்பர்களே, இன்று நாம் காணுகின்ற, கடக்கின்ற ஆறுகள், ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னர் இயற்கையாய் உருவானவை.

         ஆனால் இந்தப் புது ஆறோ, 85 வருடங்களுக்கு முன் செயற்கையாய் வெட்டப்பட்டது.

         புதிதாக ஒரு ஆறு உருவாக்கப்படும் பொழுது, குறுக்கே செல்லும் ஆறுகளைக் கடந்தாக வேண்டும் அல்லவா?

          இதோ வெட்டிக் காட்டில், காட்டாறு ஒன்றினை, புது ஆறு  கடக்கின்ற அற்புதக் காட்சி.

        

காட்டாறினைக் கடந்து செல்வதற்காக, ஒரு இருபது கண் பாலம், 1933 இல் கட்டப் பெற்றுள்ளது. சுமார் 200 அடி அகலம்.

         இந்தப் பாலத்தின் கீழ் காட்டாறு தங்கு தடையின்றி ஓடுகிறது.

         பாலத்தின் மேல் புது ஆறு, வெகு வேகமாய் பாய்கிறது.

        பாலத்தின் மேல் இடதுபுறம், போக்குவரத்திற்கான பாதை, கைப் பிடிச் சுவருடன் எழுப்பப் பெற்றுள்ளது.

         பாலத்தின் வலது புறம் ஒரு அகல மேடை.

         பாலத்தின் இரு புறங்களையும் இணைக்க, ஒரு சிறு  நடைப் பாலம்.

         நடைப் பாலத்தில் நின்று பார்க்கிறேன்.

        கால்களுக்கும் கீழே புது ஆறு, வெகு வேகமாய் நழுவிச் செல்கிறது. ஆற்று நீர் வேகமாய் ஓட ஓட, பாலமே நகர்வது போன்ற ஒரு உணர்வு.

        ஆற்று நீரின் வேகத்தோடு, போட்டிப் போட்டுக் கொண்டு, நேரமும் விரைவாய் நகரவே, தஞ்சை நோக்கியப் பயணத்தைத் தொடங்கினோம்.

        சுமார் 15 கிலோ மீட்டர்களுக்கும் மேல், புது ஆற்றின் கரையிலேயே பயணம்.

       அந்தி சாயும் நேரம்.

       தென்றல் காற்று, ஆற்று நீரின் குளிர்ச்சியை, அள்ளி எடுத்து, முகத்தில் வீச, வீச, உடலும் உள்ளமும் குளிர்ந்து, தஞ்சைக்குத் திரும்பினோம்.


கண்டிதம்பட்டு

        புது ஆற்றின் கரையிலேயே தொடர்ந்து பயணிப்போமானால், தஞ்சைக்கு அருகில், கண்டிதம்பட்டு என்னும் சிற்றூரில், இதே புது ஆறு.. ஒரு காட்டாற்றிக்குத் தலை வணங்கி, வழி விட்டு, பூமிக்குள் புகுந்து, காட்டாற்றிற்கும்  கீழே பயணித்து, காட்டாற்றினைக் கடந்ததும், மீண்டும் மேல் எழுந்து பயணிக்கும் காட்சியைக் காணலாம்.


27 கருத்துகள்:

 1. நல்ல தகவல்கள். அருமையான காட்சி. இனிமையான அனுபவமாயிருந்திருக்கும். ஏற்கெனவே ஒருமுறை இந்தத்தகவல் பதிவிடப்பட்டுள்ளதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை நண்பரே இந்தப் பதிவு புதிது.
   ஆனால் இதே போன்று கரந்தையில் இருக்கும் வடவாறு என்னும் ஆறானது, காட்டாற்றிற்கும் கீழே பயணிக்கும் பதிவு ஒன்றினை எழுதியிருக்கிறேன்.
   நன்றி நண்பரே

   நீக்கு
 2. மிக அரிய தகவல். அருமையான காட்சி. இதைக் குறித்துக் கேள்விப் பட்டதே இல்லை. போய்ப் பார்க்கும் ஆவல் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 3. அரிய விடயம் நண்பரே... இதில் சில விடயங்கள் ஏற்கனவே தங்களால் படித்தது போன்று இருக்கிறது.

  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. பாலத்தின் மேலே ஆறு - புதிய விஷயம். பிரமிப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. தலைப்பைப் பார்த்ததும் முன்னர் நீங்கள் பதிவிட்ட வடவாறு பற்றிய செய்தி நினைவிற்கு வந்தது. பார்க்கவேண்டிய இடம். நம்மவர்களின் அறிவியல் பார்வை போற்றத்தக்கது.இயற்கையான ஆறுகளின் ஊடே செயற்கையான ஆறு. அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நம்ம ஊர்ப் பெருமைகளை அழகான படங்களுடன் பதிவினில் தந்தமைக்கு மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவு. பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
 8. இதே புது ஆறு.. ஒரு காட்டாற்றிக்குத் தலை வணங்கி, வழி விட்டு, பூமிக்குள் புகுந்து, காட்டாற்றிற்கும் கீழே பயணித்து, காட்டாற்றினைக் கடந்ததும், மீண்டும் மேல் எழுந்து பயணிக்கும் காட்சியைக் காணலாம்./பூமிக்குள் புகுந்து என்றால் ஏதேனும் குழாய் மூலமா

  பதிலளிநீக்கு
 9. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அருமையான செய்தி, உடன் பார்க்கத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 10. அருமையான இடம்...காட்சி!! நீங்கள் விவரிப்பதிலிருந்து இதை நேரில் பார்க்க ஆவலாய் உள்ளது.

  எங்கள் ஊரான கன்னியாகுமரியில் வில்லுகுறி எனுமிடத்தில் இப்படி மேலே பாலத்தில் கால்வாய் ஓடும்...அது போன்று மாத்தூர் தொட்டிப்பாலம் இரு மலைகளை இணைத்து தண்ணீர் ஓடும் பாலம் கீழே இயற்கையான ஆறு...சுற்றிலும் ரப்பர் தோட்டங்கள்ம் மலைகள் என்று அருமயான இடம்..

  வெட்டிக்காடு பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் நல்லதொரு அனுபவம் இல்லையா சகோ

  கீதா

  பதிலளிநீக்கு
 11. அரிய முயற்சி! அறிய மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
 12. வெட்டிக்காடு அழகிய இடம். பாலத்தை விட்டுக் கீழே இறங்கி நடக்கோணும் போல வருது..

  பதிலளிநீக்கு
 13. ஜெர்மனியில் பார்த்திருக்கேன் இங்கே லண்டனிலும் சிறிய ப்ரிட்ஜ் செல்லும் அதில் boat போகும் ஓரத்தில் நாம் நடக்கலாம் ..ஆனா இந்த மாதிரி நம்ம நாட்டில் இருப்பது தெரியாதே .புதிய அருமையான தகவல்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 14. என்ன ஒரு அற்புதம். கல்லணை போயிருக்கிறோம். இந்த நதி போகும் பாலம் பார்த்ததில்லை ஜெயக்குமார். அரிய தகவல்கள். மிக நன்றி குழந்தைகளிடம் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லா04 மார்ச், 2018

  புதினமான தகவல் தான்.
  மிக்க நன்றி சகோதரா.
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 16. "கால்களுக்கும் கீழே புது ஆறு, வெகு வேகமாய் நழுவிச் செல்கிறது. ஆற்று நீர் வேகமாய் ஓட ஓட, பாலமே நகர்வது போன்ற ஒரு உணர்வு."
  நானும் உணர்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 17. வியப்பான தகவல்களும்...

  அரிய படங்களும்...மிக நன்று


  பதிலளிநீக்கு
 18. வெட்டிக்காடு - அரிய தகவல். புகைப்படங்கள் கூடுதலான Visual Treat.

  பதிலளிநீக்கு
 19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 20. நம்ம ஊரை உலகுக்கு எடுத்து காட்டியதற்கு நன்றி அய்யா | ஈச்சன்விடுதி பாலமும் இதை போல தான் கீழே காட்டாறு மேலே அக்னீ ஆறு | அதில் வண்டிகள் செல்ல தனி பாதையும் ஆற்றுக்கு தனி பாதையும் வைத்திருக்கிறார்கள் | இங்கு செல்ல வழி (கறம்பக்குடி- இடையத்தி - ஈச்சன்விடுதி பாலம் (இருசக்கர வாகனம் செல்லும் ) மற்ற வழி (செருவாவிடுதி - முக்கண்ணு பலம் - ஈச்சன்விடுதி)
  கூகிள் படம்
  https://www.google.com/maps/place/Neyveli+Vadapathy,+Tamil+Nadu/@10.3969599,79.1535445,539m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3baaa77fc6bf8381:0xffe4a9c6f8ef4cd!8m2!3d10.4368552!4d79.1520312

  பதிலளிநீக்கு
 21. அருமை ஐயா
  அதன் வழியாக பலமுறை சென்றுள்ளேன்
  ஆனால் இதை அறியவில்லை. உங்கள் பதிவின் மூலமாக அறியும் வாய்ப்பை பெற்றமைக்கு நன்றி.நிச்சயம் வந்து பார்ப்பேன்.

  பதிலளிநீக்கு
 22. பெயரில்லா29 செப்டம்பர், 2023

  வாழ்த்துகள் ஐயா 🙏.
  நீர்நிலைகளைப் பேணிநாம் பாதுகாப்போம். தங்களின் பதிவு சிறப்பு 👌 நன்றி.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு