ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு சுயம்பு
மாதிரி, அவனாகவே உருவாகனும். அவனாகவே தன்னை வளர்த்துக்கனும்.
ஒருத்தன், தான் சிறந்த பாடகனாய் வரனும்ன்னு
நினைச்சா, ஒரு பாட்டு வாத்தியாரை வச்சி பாட்டு கத்துக்கலாம். சிறந்த ஓவியனாய் வர நினைச்சா,
ஆர்ட் செண்டர்க்குப் போய் பயிற்சி எடுத்துக்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டானாலும் சரி, வேறு எந்த
வெளையாட்டானாலும் சரி, ஒருத்தன் சிறந்த விளையாட்டு வீரனாய் வரணும்ன்னு நினைச்சா, ஒரு நல்ல கோச் இருந்தா போதும்
ஆனா, ஓர் எழுத்தாளனை யாரும் பயிற்சி கொடுத்து
உருவாக்க முடியாது.
எழுதுறது ஒரு வரம்.
அது உங்களுக்குக் கிடைச்சிருக்கு. அதை நல்ல
முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.
எனக்குத் தெரிஞ்ச திறமையான சில எழுத்தாளர்கள்,
தங்களுக்குக் கிடைத்த எழுத்து வரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்காம, வீணா போயிருக்காங்க
…. காரணம் அலட்சியம், சோம்பல்.
கதை எழுதுறதுங்கிறது ஒரு வெள்ளை பேப்பரை, எழுத்துககளால்
நிரப்பற விசயம் மட்டும் கிடையாது.
ஒரு வாசகனோட மனசை நிரப்பற விசயம்.
நான் இப்போ என்ன சொல்ல வர்ரேன்னு உங்களுக்குப்
புரியுதா?
பேசியவர்,
லேசுபட்ட மனிதரல்ல.
பத்திரிக்கை உலகப் பிதாமகர்.
ஆனந்த விகடன், தினமணி கதிர், குங்குமம் முதலான
இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். பின் தனது பெயரிலேயே இதழ் ஒன்றினைத் தொடங்கியவர்.
விடாக் கண்டர் என்னும் பெயரில் தொடக்கத்தில்
எழுதியவர்.
சா.விசுவநாதன்
சாவி
சாவி இதழின் நிறுவுநர்
எழுத்தாளர் சாவி
எழுத்தாளர் சாவி அவர்கள் பேசப் பேச, அவரது வார்த்தைகளில்
இருந்த உண்மைகள், இவரது உள்ளத்தை ஊடுருவி அடிவரை சென்று இடம் பிடித்துக் கொண்டன.
ஒரு எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை,
எழுத்தாளர் சாவியைச் சந்தித்த, முதல் சந்திப்பிலேயே, தெரிந்து கொண்ட, புரிந்து கொண்ட
இந்த எழுத்தாளர் யார் தெரியுமா?
---
பெருத்த உருவத்தோடு படியேறிக்
கொண்டிருக்கும், இம் மனிதர், உலகம் சுற்றிய வாலிபர்,
இவரது வீட்டின் குறுகலான மாடிப் படிகளில் ஏறி
வந்ததில், மூச்சிறைத்தது, வியர்த்துக் கொட்டியது.
சா … ர், சார் நீங்களா? வாங்க
சார்… உள்ளே வாங்க சார்
திகைத்துத்தான் போய்விட்டார், அந்த இளம் எழுத்தாளர்.
சார், உலகம் முழுவதும் உள்ள தமிழ்
மக்களால் அறியப்பட்ட மிகப் பெரிய எழுத்தாளர் நீங்க. ஆனா வளர்ந்துக்கிட்டிருக்கிற, ஒரு
அறிமுக எழுத்தாளனைத் தேடி வந்து பேசியது எவ்வளவு பெரிய விசயம்.
அவர் வாய்விட்டுச் சிரித்தார்.
திறமையைத் தேடிப்போய் பாராட்டறதுதான் உண்மையான
படைப்பாளியின் கடமை. அந்தக் கடமையைத்தான் நான் இப்போ பண்ணிக்கிட்டிருக்கேன்.
அறிமுக எழுத்தாளரைத் தேடிப்போய்
பாராட்டிய, இப்பெரும் எழுத்தாளர் யார் தெரியுமா?
உலகைச் சுற்றி வந்தவர்
பயணக் கட்டுரைகளின் நாயகர்
இதயம்
பேசுகிறது
மணியன்
எழுத்தாளர் மணியன் பாராட்டிய,
வீடு தேடிப்போய் பாராட்டிய
எழுத்தாளர் யார் தெரியுமா?
--
கடந்த வருடம், ஒரு மதிய நேரத்தில் இந்த எழுத்தாளருக்கு,
ஒரு அழைப்பு, அலைபேசி வழி வந்தது.
ஒரு புது எண்.
எழுத்தாளரா?
ஆமாம், எழுத்தாளர்தான் பேசுகிறேன்.
சார், நான் டெப்டி போலிஸ் கமிஷனர் பேசுகிறேன்.
ஒரு சில விநாடிகள், ஆடித்தான்
போய்விட்டார் இந்த எழுத்தாளர். மறுமுனையில் டெப்டி போலிஸ் கமிஷனர். ஏதாவது பிரச்சினையோ
என யோசித்தபடியே, சொல்லுங்கள் சார், என்றார்.
நானும்
என்னோட அண்ணனும், ஸ்கூல் ஃபைனல் படிச்சிக்கிட்டிருக்கும்போதே, உங்க நாவல்களைப் படிக்க
ஆரம்பிச்சுட்டோம்.
உங்களோட ஒவ்வொரு கதையும், படிக்க த்ரில்லிங்கா
இருக்கும். அதுமட்டுமல்லாமல், போலிஸ் துறை சம்பந்தப்பட்ட விவரங்கள், ஒரு கொலையாளியைக்
கண்டுபிடிக்க போலிஸார் எடுத்துக் கொள்கிற முயற்சிகள், ஃபாரன்ஸிக் துறை சம்பந்தப்பட்ட
வியப்பான உண்மைகள், இதெல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் பிரமிப்பாய் இருக்கும்.
உங்க நாவல்களில் வர்ற க்ரைம் பிராஞ்ச் போலிஸ்
ஆபிஸர் விவேக் சாதுர்யமாய் துப்பறிந்து, கொலையாளியைக்
கண்டுபிடிக்கும் பாணி என்னுள் ஒரு ஆர்வத்தை வளர்த்ததால், நான் காவல் துறையில் பணியாற்ற
விரும்பி, அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டேன்.
அதன் காரணமாகத்தான், நான் இன்று, டெப்டி கமிஷனர்
என்ற டெஸிக்னேஷனில், ஒரு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய அண்ணன் இப்போது ஒரு பிரபல வழக்கறிஞராக
இருக்கிறார்.
இதற்கெல்லாம் காரணம், நாங்கள் படித்த உங்கள்
நாவல்களின் பாதிப்புதான்.
--
படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறதல்லவாஈ?
உண்மை
எழுத்தின் வலிமை என்பது இதுதானே.
நண்பர்களே, இவரது கதைகளால் உந்தப்பட்டு, காவல்
துறைக்குள் நுழைந்த, இந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், மேலும் உயர்ந்து, இன்று
காவல் துறை கண்காணிப்பாளராய் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
எங்கு தெரியுமா?
தஞ்சையில்.
நான் இருக்கும் தஞ்சையில்.
ஆம். இவர்தான்
தஞ்சாவூர்
மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்
தமிழ்த்திரு தி.செந்தில் குமார்.
---
பத்திரிக்கை உலகப் பிதாமகரும்
உலகம் சுற்றிய நாயகர்
இதயம் பேசுகிறது மணியனும்
காவல் துறைக் கண்காணிப்பாளர்
தமிழ்த்திரு தி.செந்தில் குமார் அவர்களும்
பாராட்டிய, போற்றிய
எழுத்தாளர் யார் தெரியுமா?
இவர் கடந்த 41 ஆண்டுகளாக
எழுதிக் கொண்டே இருக்கிறார்.
இடைவெளி சிறிதும் இன்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு கணக்கின்படி, 1500 நாவல்கள், 2000 சிறுகதைகள்
என்று
கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது வேகத்தில்
எழுதிக் கொண்டே இருப்பவர் இவர்.
என்னை நான் சந்தித்தேன்
எழுத்துலகில் தனக்கு நேர்ந்த அவமானங்களையும்,
கிடைத்த வெகுமானங்களையும்
தனக்கே உரித்த
விறுவிறுப்பான, பரபரப்பான நடையில்
500க்கும் அதிகமான பக்கங்களில்
இந்த புத்தகத்தில் இறக்கி வைத்துள்ளார்.
இந்த நூலினைப் பற்றி
காவல் துறைக் கண்காணிப்பாளர் அவர்களின்
முகநூல் பதிவு வழியாகத்தான் அறிந்தேன்.
எந்தத்
துறையில் யார் பணி புரிந்தாலும் சரி, வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் அவசியம்
படிக்க வேண்டிய புத்தகம்
என்று இந்த
காவல்
துறைக் கண்காணிப்பாளர்
கூறியதை,
தன் எழுத்துக்குக்
கிடைத்த விருதாக நினைத்து பெருமிதம் அடைகிறேன் என இந்த மாபெரும் எழுத்தாளர் மகிழ்ந்த செய்தியையும், முக நூலில் கண்டு நெகிழ்ந்தேன்.
என்னை நான் சந்தித்தேன்
இவர்தான்
க்ரைம்
நாவல் மன்னர்
ராஜேஷ் குமார்.
தற்போது 40 வயதைத் தொட்டவர்கள் தாண்டியவர்கள் எவரும் இவர் ஒரு கதையைக் கூட படிக்காமல் இருந்துருக்கவே முடியாது. இவர் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்திருக்கவே முடியாது.
பதிலளிநீக்குபாராட்டப்பட வேண்டிய எழுத்தாளர். சமீபத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். நானும் இவற்றை முக நூலில் படித்தேன்.
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே நானும் இன்று ஏதோ எழுதிக்கொண்டு இருப்பதற்கு காரணம் சிறுவயது முதலே என்னை ஈர்த்த திரு. ராஜேஸ்குமார் அவர்கள்தான்.
பதிலளிநீக்குஉண்மை எழுத்தாளனுக்கு ஆசான் கிடையாது அவனவனே ஆசான்.
கதைகளின் நாயகன்.... இவருக்கு இணன இவரேதான்...
பதிலளிநீக்குஅருமை. எழுத்தாளருக்கு ஊக்கம் தரும் கட்டுரை.
பதிலளிநீக்குதலைப்பும் சரி கட்டரையைக் கோர்த்து மாலையாக்கிய விதமும் சரி, பிரமாதம் கரந்தை!
பதிலளிநீக்குகாவல்துறை அதிகாரி செந்தில்குமார் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர்.எனது தென் துருவ அனுபவ நூலான "வெண் பனிப் பரப்பிலும் சில வியர்வைத்துளிகள் "சென்னை புத்தகத்திருவிழாவில் வாங்கிப் படித்துவிட்டு நேரடியாக என் வீட்டுக்கு வந்து பாராட்டியவர்.சமீபத்தில் தஞ்சாவூரில் காவல்துறை பயிற்சியாளர்களிடையே பேச என்னை அழைத்திருந்தார்.
பதிலளிநீக்குஅப்படிப்பட்டவர் திரு ராஜேஷ்குமார் அவர்களை பாராட்டியது வியப்பில்லை.
பதிவிற்கு வாழ்த்துகள் நண்பரே.
சமூகச் சிந்தனையுள்ள படைப்பாளர்கள் தலைமுறைகள் கடந்தும் காலாகாலத்துக்கும் இலக்கிய உலகில் பேசப்படுவார்கள்.
பதிலளிநீக்குராஜேஷ்குமாரின் நாவல்கள் மிகவும் பிடிக்கும்!! அருமையான எழுத்தாளர். க்ரைம் கதைகள் எழுதுவதில் மன்னர்! நல்ல பதிவு சகோ!
பதிலளிநீக்குகீதா
ஒரே பதிவினில் பல சுவையான தகவல்கள். தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குஅற்புதமான பதிவு.எழுத்தாளர் திரு ராஜேஷ்குமார் அவர்களைப்பற்றி அனைவரும் அறிந்திருப்பர். அவரைப்பற்றிய தங்களின் பதிவு நாவல் படிக்காதவர்களையும் படிக்கத்தூண்டும் வகையில் அமைந்துள்ளது.மிக்க நன்றி.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅருமையான பதிவு, எழுத்தாளர் பற்றிய விளக்கம் அருமை.
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்களை படித்திருப்பதால் அவருடைய எழுத்து நடை எத்துணை விறுவிறுப்பாக இருக்கும் என்பதை அறிவேன். அவரை அறிமுகப்படுத்திய விதமும் எழுத்தாளர்கள். திரு.சாவி மற்றும் திரு.மணியன் ஆகியோரைப் பற்றிய தகவல்களும் மிக அருமை.
பதிலளிநீக்குஎழுத்தாளர் ராஜேஷ்குமார் பற்றிய விபரங்களுக்கு நன்றி. அருமையான எழுத்தாளர். ரூபலாவும், விவேக்கும் மறக்க முடியுமா? பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள்...
பதிலளிநீக்குஅன்பு ஜெயக்குமார், அற்புதமான எழுத்தாளரைக் கட்டி நிறுத்திவிட்டீர்கள் உங்கள்
பதிலளிநீக்குபதிவில். இனி சாவி போல் ,வாசன் போல், சேவற்கொடியோன் போல், மணியன் போலப் பார்க்க முடியுமா.
ராஜேஷ் குமார் போலப் படைப்பாளர்கள்
இன்னும் காவியங்கள் படைக்க வேண்டும். நாம் ரசிக்க வேண்டும் மிக நன்றி மா.
'க்ரைம் கதை மன்னன்' என்று பெயர் பெற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு தலைமுறைகளைக் கடந்து இன்றும் எழுத்துலகில் முன்னணியில் உள்ள கதாசிரியர் ஆவார். அதிக நாவலை எழுதியவர் என்று கின்னஸ் சாதனை புரிய இருப்பதாகவும் தகவல். அதிக அளவில் விற்பனையாகும் புத்தகங்கள் இவருடையவையாகும். இவர் வளர்ந்த காலத்தில் இவரை ஊக்கப்படுத்த திருவாளர்கள். சாவி, இதயம் பேசுகிறது மணியன் போன்றோர் இவரைப் பாராட்டியது பற்றிய சுவையான செய்திகள் தங்கள் பதிவில் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல சுவையான அறிமுகம், அதுவும் உச்சத்தில் கொலுவீற்றிருக்கும் ஒரு நாவலாசிரியர் பற்றி. அருமை.
பதிலளிநீக்குவாவ் !! எந்நாளும் மறக்கமுடியாத எழுத்துக்கள் ராஜேஷ் குமார் அவர்களுடைய பாக்கெட் நாவல்கள் நிறைய வாசித்திருக்கிறேன்
பதிலளிநீக்குவிவேக் ரூபலா இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் மறக்க முடியாதவர்களாச்சே ..
அருமையான பதிவு
1993ல் ப்ளஸ்டூ முடித்த சமயம் ராஜேஷ்குமார் சாரின் க்ரைம் நாவல் முதன் முதலாக படிக்க ஆரம்பித்தேன்! அதற்கு முன் விகடனில் அவரது தொடர்கதை படித்திருக்கிறேன்! அவரது தீவிர வாசகன். அவரது இந்த நூலையும் வாங்கி வாசிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குஅவரது சில கதைகள் படித்ததுண்டு. புத்தகம் பற்றிய உங்கள் பாணி அறிமுகம் மிகச்.சிறப்பு. வாய்ப்பு கிடைத்தால் படிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅருமையான எழுத்தாளர்கள் பற்றிய செய்திகள்.
பதிலளிநீக்குராஜேஷ்குமார் நாவல்கள் நிறைய படித்து இருக்கிறேன்.
சொன்ன விதம் மிக அருமை.
பாக்கெட் நாவல் என்று சொல்வார்கள்இவரின் கதையை... எனக்கு இதுவரை இவருடைய எழுத்துக்களை படிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை.. அறிமுகம்..அருமை.......
பதிலளிநீக்குஅற்புத எழுத்தாளர்...
பதிலளிநீக்குஅருமை . நன்றி
பதிலளிநீக்குஎங்கெல்லாமோ தேடிப்பிடித்து அறிமுகம் செய்கிறீர்கள் அறியாத பலரும் அறியும் வண்ணம் வாழ்த்துகள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவரதுஎழுத்துகளையும்வாசித்துஇருக்கிறேன்
பதிலளிநீக்குஇராஜேஷ்குமார் அவர்கள் எழுத்துக்களைப் படிக்காதவர்கள் இன்று யாருமில்லை. சிறு வயதில் நானும் நிறையப் படித்திருக்கிறேன். ஆனால், பின்னர் பட்டுக்கோட்டை பிரபாகர் கதைகளைப் படிக்கத் தொடங்கிய பிறகு இவருடைய புதினங்கள் அவ்வளவு சுவையாயில்லை. சுஜாதா புதினங்கள் அறிமுகமான பிறகு வேறு எந்த எழுத்தாளரின் திகில் / துப்பறியும் புதினமும் சுவையாயில்லை. எனவே, பின்னர் இராஜேஷ்குமார் புதினங்களை நான் அவ்வளவாக நாடவில்லை. ஆனால், பின்னாளில் ‘நிலாச்சாரல்’ இதழில் பணியாற்றுகையில் இராஜேஷ்குமார் அவர்களின் ‘நீல நிற நிழல்கள்’ புதினத்தைத் தொடராக வெளியிட்டபொழுது அதற்குப் பிழை திருத்தம் செய்யும் வாய்ப்பு எனக்கே கிடைத்தது. சிறு வயதில் நான் மிகவும் விரும்பிய எழுத்தாளரின் எழுத்துக்களை நானே பிழை திருத்தம் செய்யும் அரிய வாய்ப்பு! இப்படியும் என் வாழ்க்கையில் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இஃது ஒன்றுமேயில்லை எனும் அளவுக்கு இன்னொன்றும் நடந்தது.
பதிலளிநீக்குபொதுவாக நம் தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே ஆங்கிலச் சொல்லைத் தமிழில் எழுதும்பொழுது ஔகார எழுத்துக்கள் வரும் இடங்களை அவுகாரமாகத்தான் எழுதுவது வழக்கம். எடுத்துக்காட்டாக, ounce = அவுன்ஸ் என்பதாக. எனக்கு இதில் சிறு வயதிலிருந்தே ஓர் ஐயம். தமிழில் ஔ எனத் தனியே ஓர் எழுத்து இருக்கையில் இப்படி ஏன் எழுத வேண்டும் என்று. உடனே, இது பெரியார் செய்த மாற்றம் என்று சிலர் அவரைக் குறை கூறுவார்கள். பெரியார் ஐகார, ஔகார எழுத்துக்கள் அனைத்துக்குமே அய், அவ் என எழுதச் சொன்னார். ஆனால், நாம் யாரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. அப்படியிருக்க, சில சொற்களில் மட்டும் இப்படி ஒரு மாற்றத்தை ஏன் கொண்டு வர வேண்டும் எனும் கேள்வி எனக்கு.
இராஜேஷ்குமார் அவர்களும் அந்தப் புதினத்தில் ’காம்பவுண்டு’ என்றே தொடக்கத்தில் எழுதத் தொடங்கினார். நான் அதைக் ‘காம்பௌண்டு’ எனத் திருத்தி வெளியிடச் செய்தேன். இரண்டு வாரங்கள் இப்படியே போயிற்று. அடுத்த வாரம், அவரே ‘காம்பௌண்டு’ என்று எழுதி அனுப்பத் தொடங்கினாரே பார்க்கலாம்! எனக்கு வியப்புத் தாளவில்லை!
இராஜேஷ்குமார் அவரே தொடரைத் தன் கையால் எழுதி அனுப்புகிறாரா அல்லது ஆள் வைத்திருக்கிறாரா என்பது ஒன்றும் எனக்குத் தெரியாது. ஆனால், அவர் ஆள் வைத்தே எழுதினாலும் இந்த மாற்றத்தை அவரைக் கேட்காமல் அவர் உதவியாளர் செய்து அனுப்பியிருக்க இடமில்லை.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்! இந்தச் சிறுவன் செய்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டதுமில்லாமல் அதற்காகத் தன் எழுத்துமுறையையே மாற்றிக் கொள்ள முன்வந்த அவர் பெருந்தன்மையை என்னென்பது! அவர் நினைத்திருந்தால் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு என் ஆசிரியரிடம் சொல்லி இவ்வாறு தன் எழுத்தைத் தேவையில்லாமல் திருத்த வேண்டா என்று சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால் "காம்பௌண்டோ காம்பவுண்டோ - இரண்டும் ஒன்றுதானே? இதற்காகவெல்லாமா பெரிய எழுத்தாளர் ஒருவரின் எழுத்தில் கை வைப்பார்கள்?" என்று எனக்குத்தான் திட்டு விழுந்திருக்கும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. மாறாக, தன் புதினத்தை என் திருத்தத்துக்கேற்ப மாற்றிக் கொள்ள முன்வந்தார்! எப்பேர்ப்பட்ட மனம்!
அவருடைய எழுத்துக்களை விட அவருடைய இந்தப் பெருந்தன்மையான குணம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது!
எழுத்தின் வீச்சினை கணக்கிடுவது சாத்தியமல்ல. அதுவும் சாதனையாளர்களிடமிருந்து என்றால் அதற்கு இன்னும் மதிப்பு கூடுகிறது. அருமையாக நுணுகி எழுதியுள்ளீர்கள். போற்றத்தக்க பெருமக்களைப் பற்றியும், வளர்ந்து வருவோரைப் பற்றியும் பதிகின்ற உங்களுடைய பதிவுகள் காலங்கடந்து நிற்கும்.
பதிலளிநீக்குகிரைம் எழுத்து அவரின் பலம்,படித்தது நம் பாக்கியம்,இவரை ஒட்டி வந்த ராஜேந்திரக்குமார் ,பட்டுக்கோட்டை பிரபாகரில் இவர் மட்டுமே கிரைமை கைக்கொண்டு நின்று விட்டார்,
பதிலளிநீக்குஅசாதாரண வேகம் கொண்ட எழுத்தாளர். இப்போதும் அசராமல் எழுதுவது வியப்பு. இவரது கதைகளில் ஆபாசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மறைமுகமாகக் கூட கவர்ச்சி வார்த்தைகளை பயன்படுத்தாமல் வெற்றி பெற்றவர். ஆனால் ஞானப் பிரகாசம் அவர்கள் சொன்னது போல நகைச்சுவை, கேலி கிண்டல் உரையாடல்கள் அற்று சற்று வறட்சியாக இருப்பது போல் தோன்றும். இருப்பினும் இவருக்கு என்று தனி இடம் உண்டு. நல்ல கட்டுரை
பதிலளிநீக்கு"ஓர் எழுத்தாளனை யாரும் பயிற்சி கொடுத்து உருவாக்க முடியாது.
பதிலளிநீக்குஎழுதுறது ஒரு வரம்.
அது உங்களுக்குக் கிடைச்சிருக்கு. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு."
சாவி சொன்ன இந்த மூன்று கருத்துகளிலும் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
இது ஒரு நட்சத்திரப் பதிவு.
தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் சிகரம் ராஜேஷ் குமார் பற்றிய பதிவு எக்ஸலண்ட்
பதிலளிநீக்குநல்ல பதிவு. அருமை . நன்றி
பதிலளிநீக்குhttps://kovaikkothai.wordpress.com/