31 மார்ச் 2018

பஞ்சும் பசியும்





     ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, பலகையை, அதன் கைப் பிடிகளில் வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டே இருப்பார்.

     எழுதுவதற்கானக் குறிப்புகளைத் தயாரித்துவிட்டார் எனில், அனைத்துக் குறிப்புகளையும் ஒருமுறை படித்து, உள் வாங்கிக் கொண்டு எழுதத் தொடங்கி விடுவார்.

      எழுத, எழுத பக்கத்திற்குப் பக்கம், எண்கள் கொடுத்து எழுதுவார்.

      எழுதி முடிக்க முடிக்க காகிதங்கள் கீழே விழுந்து கொண்டே இருக்கும்.

       பதிப்பகத்தார் வந்து, அறை முழுவதும், பரவிக் கிடக்கும், தாட்களை எடுத்து,  வரிசைப் படுத்தி, அச்சிட எடுத்துக் கொண்டு போய்விட வேண்டியதுதான்.

       எழுதியதை மீண்டும் சரிபார்க்கும் பழக்கமோ, அடித்து அடித்துத் திருத்தம் செய்யும் வழக்கமோ இவரிடம் கிடையவே கிடையாது.

       அப்பேர்ப்பட்ட எழுத்தாளர்.

       கடந்த மூன்று நாட்களாய் பேனாவைத் தொட்டுக்கூடப் பார்க்காமல், சாய்ந்த வண்ணம் அமர்ந்தே இருக்கிறார்.


       வீட்டில் யாரிடமும் எதுவும் பேசாமல், மூன்று நாட்களாய் அமைதியாய் அமர்ந்தே இருக்கிறார்.

        கண்களில் இருந்து நீர், அவ்வப்போது எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறது.

         மனம் முழுவதும் சோகம் நிரம்பி வழிகிறது.

        இந்நிலையில் இருந்து மீண்டு வர, எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்.

        ஆனாலும் மனதில் சோகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

        காரணம் ஒரு மரணம்.

        துர் மரணம்.

        கைலாச முதலியாரின் மறைவு.

---

       முருகா, என் அப்பனே, எனக்கு ஏனப்பா இந்தச் சோதனை? என்னை ஏன் இப்படி சந்தி சிரிக்க வைக்கிறாய்? உனக்கு நான் என்ன குறையப்பா வைத்தேன்?

       கோயில் சொத்தைத் திருடித் தின்றவர்களெல்லாம் நல்ல முறையில் வாழும் போது, தெய்வத் திருப்பணியில் ஒரு குறையும் வைக்காத எனக்கா இந்த நிலைமை? எனக்கா இந்த அவமானம்?

       பதில் சொல் …

       சொல்ல மாட்டாயா?

       சிரித்துக் கொண்டா நிற்கிறாய்?

       நான் படும் அல்லல்களைக் கண்டு, உனக்குச் சிரிப்பா வருகிறது?

      என் மீது உன் சித்தம் இறங்கவில்லை?

      கள்ள மார்க்கெட்காரனுக்குத்தானா உன் கருணா கடாட்சம்?

      அடே, கல் நெஞ்சக்காரா, என் வீடு வாசல், நிலம் புலம் எல்லாவற்றையும் சூறையாடி வாரியிறைக்க வைத்ததும் காணாதென்று, என் குழந்தையையுமா பலி கேட்டுச் சிரிக்கிறாய்?

       பெற்றெடுத்த பிள்ளைக்கு ஒரு வேளை மருந்து வாங்கிக் கொடுக்கக் கூட விதியற்றுச் செய்து விட்டாயே.

        நீ தெய்வம்தானா?

        நீயா தெய்வம்? இல்லை

        நீ ஈரநெஞ்சமற்ற வெறுஞ் சித்திரம்தானா?

        பணக்காரர்கள் எங்களை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதற்காக, பிடித்து வைத்த பொம்மைதானா?

       நீ உண்மையிலேயே தெய்வமானால், நல்லவனை ஏன் துன்புறுத்துகிறாய்?

       ஏமாற்றுகிறவனை ஏன் வாழ வைக்கிறாய்?

       சீ, நீ ஏழைகளுக்குத் தெய்வமல்ல.

       பணக்காரனுக்குத் தெய்வம். பணக்காரனுக்குப் பங்காளி.

       இனி உன்னை நம்பி என்ன பலன்?

       நீ என்னை, இனியா, கௌரவம் கொடுத்து வாழ வைக்கப் போகிறாய்?

       கடன்காரர்கள் முன்னால் நானும், என் மனைவி மக்களும், கதி கலங்கி நிற்பதைத் தடுத்து ஆட்கொள்ளப் போகிறாயா?

       இல்லை, இல்லை . …………

---

       டாக்டரையா, என் பிள்ளையைப் பார்த்து ஒரு நல்ல வார்த்தை சொல்லுங்கையா என்று குழறினாள் தங்கம்.

         பிறகு மணியிடம் திரும்பி, மணி, அப்பாவைக் கூப்பிடு என வேண்டிக் கொண்டாள்.

         மணி எழுந்து அவசர அவசரமாக மாடிப்படி ஏறினான்.

         டாக்டர் மௌனமாகச் சென்று ஆறுமுகத்தின் கையைப் பிடித்துப் பார்த்தார். மூக்கின் முன்னால் விரலை வைத்துப் பார்த்தார்.

         ஆறுமுகத்தின் கை கொளக் கென்று விழுந்தது.

         தங்கத்திற்கு விசயம் புரிந்து விட்டது.

        போயிட்டியாடா மகனே என்று அலற்றினாள்.

        திடீரென்று தங்கம்மாளின் பிரலாப ஓலத்தையும் மிஞ்சிக் கொண்டு, அப்பா என்ற கோடையிடி அலறல் மாடிப்புறத்தில் இருந்து அதிர்ந்து ஒலித்தது.

        தொடர்ந்து இடி விழுவதுபோல் திடுமென்ற பேரோசையும் கேட்டது.

       வெளியே நின்று கொண்டிருந்த டாக்டரும், இருளப்பக் கோணாரும் விழுந்தடித்துக் கொண்டு மாடிக்கு ஓடினார்கள்.

         மாடியில், பூசை அறையை ஒட்டியிருந்த வெளி வராந்தாவில், மணி அலங்கோலமாக விழுந்து கால் பரப்பிக் கிடந்தான்.

        மண்டையிலிருந்து குங்குமச் சேறு போன்ற ரத்தம் கொழகொழுத்துப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

        டாக்டர் சிறிது கூடத் தாமதிக்கவில்லை.

        இருளப்பாக் கோணார் போட்டிருந்த மேல் துண்டை இழுத்துப் பிடுங்கி, மணியின் தலையில் மடித்து வைத்துக் கட்டினார்.

         முதலாளி, முதலாளி

         இருளப்பாக் கோணார், சத்தம் போட்டு அழைத்தவாறு, பூசை அறைக் கதவை இடி இடியென்று இடித்தார்.

         பதில் இல்லை.

        கதவு உட்புறம் தாளிடப்பட்டு இருந்தது.

        பிறகு இன்னது  செய்வதென்று தெரியாமல், மொட்டை மாடிக்கு ஓடி, பூசையறை  வெளிச் சுவருக்கு மேலாக இருந்த, உயரமான சன்னலின் மீது தொத்தி நின்று, பூசை அறைக்குள்ளே பார்வையைச் செலுத்தினார்.

         பூசையறைக்குள்ளே, கிழக்கே பார்த்திருக்கும் பூசை மாடத்திற்கு எதிரே, முகட்டின் உத்திரக் கட்டையில் இருந்து, ஒரு முழக் கயிற்றில், கைலாச முதலியாரின் உயிரற்ற சடலம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

---

       நண்பர்களே, இந்த கைலாச முதலியார், யார் தெரியுமா?

       மூன்று நாட்கள் மீள முடியாமல், துக்கத்தின் பிடியில் சிக்குண்டு தவித்தார் அல்லவா, ஒரு எழுத்தாளர், அந்த எழுத்தாளர் எழுதிய, நாவலின், முக்கியமான பாத்திரம்தான் இந்தக் கைலாச முதலியார்.

        தான் எழுதிய கதையில், ஒரு முக்கியமான மனிதர், தற்கொலைச் செய்து கொண்டபோதுதான், இந்த எழுத்தாளர், அம் மனிதரின் இழப்பினின்று மீண்டு வர வழி அறியாமல் தவித்தார்,

நான் நினைத்திருந்தாலும் கூட அவரைச் சாவினின்றும் காப்பாற்றி இருக்க முடியாது. எத்தனையோ கைலாச முதலியார்கள், தற்கொலையைச் சரண் புகுந்த காலச் சூழல் அது.

அதை நான் ஒருவனாக எப்படித் தடுத்தி நிறுத்த முடியும்?

அன்று அவர் சாக நேர்ந்ததுதான் யார்த்த விதி என்றாலும், அந்த  சாவு என் உள்ளத்தைத் தொட்டது, சுட்டது.

பஞ்சும் பசியும்

1951 ஆம் ஆண்டு  வெளியான நாவல்.

      அக்கால கட்டத்தில், இந்திய அரசாங்கம் பின் பற்றிய, ஜவுளிக் கொள்கை, நாசகரமான விளைவுகளை நாடு முழுவதிலும் ஏற்படுத்தியது.

       கைத்தறி, மில் துணிகளின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப் பட்டது.

       நூல் விலை கடுமையாக உயர்ந்தது.

       இந்திய நாட்டின் கைத்தறித் துணியில் கிட்டத் தட்ட, பேர்பாதி அளவு, அக்கறைச் சீமைகளுக்கு ஏற்றுமதியாகி வந்தது.

       ஆனால் அரசு விதித்த தடையால்,  வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அட்டமத்துச சனி  பிடித்தது.

       கொஞ்சம் நஞ்சம் ஏற்றுமதியாகும் துணிக்கும், சிறப்பு வரி விதிக்கப் பட்டது.

        உள் நாட்டிலோ, நாளுக்கு நாள் மக்களுடைய வரும்படி சுருங்கியது.

        ஆனால் பொருள்களின் விலைவாசிகள் மட்டும், கொம்பேறி மூக்கனைப் போல், உச்சிக் கொம்பை விட்டு இறங்கவே யில்லை ………

      அன்றைய அரசாங்கத்தின் ஜவுளிக் கொள்கை, கைத்தறி நெசவுத் தொழிலை, எந்த அளவிற்குச் சீரழித்தது. அதிலிருந்து விடுபட அந்த மக்கள் நடத்தியப் போராட்டங்கள், தனி மனிதர்களின் வாழ்க்கையில், இந்த அவலச் சூழலில் ஏற்பட்ட சூறாவளிகள் ஆகியவற்றை  விவரிக்கும் நாவல் இது.

       படித்துத்தான் பாருங்களேன்.


பஞ்சும் பசியும்

கைலாச முதலியாருக்காக,
தன் கதாபாத்திரத்திற்காக
மூன்று நாள் துக்கம்
கடைபிடித்த அந்த எழுத்தாளர்,


தொ.மு.சி.ரகுநாதன்







22 கருத்துகள்:

  1. வியப்பான தகவல். கலைஞர்களே உணர்ச்ச்சிவசப்படக் கூடியவர்கள்.

    பதிலளிநீக்கு
  2. எழுத்தாளர்கள் பலர் தாங்கள் எழுதும் கதாபாத்திரங்களின் உணர்வுகளில் மூழ்கிவிடுவதுண்டு சிலசமயங்களில் என்று கேள்விப்பட்டதுண்டு. அந்த அளவிற்கு அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களோடு உணர்வுபூர்வமாய் ஒன்றி விடுவதால்....

    கேள்விப்பட்டது இப்போது உங்கள் பதிவின் மூலம் அது உண்மையென்றும் அறிய முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இப்படியும் சூழ்நிலை இருந்தது என்பதை தனது கதாபாத்திரத்தின் மூலம் வெளிகாட்டிய தொமுசி ஐயா அவர்களின் நினைவாக தங்களால் வெளிப்படுத்தப்பட்ட இந்த பஞ்சும் பசியும் கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. உணர்ச்சி பூர்வமான எழுத்தாளர். புதிய தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. நானும் இம்மாதிரியான ஒரு அனுபவம் பெற்றிருக்கிறேன் என் நாவல் 1966 ல் எழுதப்பட்டது அதன்கதாநாயகன் ஏதோ ஒரு உணர்வு உந்த தான் சாகப் போவதாக அறிகிறான் அவன் சாகப் போகும் தருணத்தை எழுதும் போது நானும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் கதைகளுக்கு நிஜ வாழ்வில் பங்கு இருக்கிறட்க்ஹு நாவம் நிஐவில் நீ வலையிலும் பகிர்ந்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. நாவல் நினைவில் நீ என்று மேலே வந்திருக்க வேண்டும் பிழைகளுக்கு மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  7. //மூன்று நாட்கள் மீள முடியாமல், துக்கத்தின் பிடியில் சிக்குண்டு தவித்தார் அல்லவா, ஒரு எழுத்தாளர், அந்த எழுத்தாளர் எழுதிய, நாவலின், முக்கியமான பாத்திரம்தான் இந்தக் கைலாச முதலியார்.//

    எழுத்தாளர் அறிமுகம் அருமை.

    படித்து மனது நெகிழ்ந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  8. எழுத்தாளர் அறிமுகம் அருமை அய்யா.
    புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர் தொ.மு.சி. அவரது புதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் மற்றும் புதுமைப் பித்தன் வரலாறு இரண்டுமே அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்.

    பதிலளிநீக்கு
  9. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அருமையானப் பதிவு. எழுத்தாளர்கள உணர்ச்சிபூர்வமானவர்கள்.

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு அறிமுகம் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. கதையை நிஜத்தோடு ஒருங்கிணைப்பது சிலரால் மட்டுமே இயலும்.

    பதிலளிநீக்கு
  12. படைப்பாளி தான் படைக்கும் பாத்திரத்தோடு ஒன்றும் போதுதான் அப்பாத்திரமும் படைப்பும் உயிர்ப்புடையதாகும். அந்த நிரல் தொடரில் தொ.மு.சி.ர வும் ஒரு சிறந்த உணர்ச்சி மாந்தப் படைப்பாளி.

    பதிலளிநீக்கு
  13. மிக மிக உணர்ச்சி பூர்வமான பதிவு.
    இத்தனை அருமையான எழுத்தாள அறிமுகம் நான் படித்ததில்லை.
    மிக நன்றி ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு

  14. அன்றைய நிலையைப் போலவே இன்றும்... பொருள்களின் விலைவாசிகள் மட்டும், கொம்பேறி மூக்கனைப் போல், உச்சிக் கொம்பை விட்டு இறங்கவே யில்லை...இதைத்தான் ஆட்சிக்கு வந்த வள்ளல்கள் வளர்ச்சி என்கிறரார்கள்.......

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு அறிமுகம் புதிய தகவலுக்கு நன்றி
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  16. எழுத்தாளரின் அறிமுகமும், அவர் எழுதிய கதையும் நன்று...

    பதிலளிநீக்கு
  17. ஒரு நாவலின் பின்னே இவ்வளவு வரலாறு. இதுவரை படிக்கவில்லை. படிக்காமல் இருந்துவிட்டோமே என்ற குறை எழுந்தது. விரைவில் வாசிப்பேன். பதிவிற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  18. பள்ளி நாட்களில் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். நினைவிற்கு வருகிறது. பதிவில் வழக்கம்போல இந்த மாபெரும் எழுத்தாளரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  19. வியப்பான தகவல்... ஆச்சர்யப்படுத்திய எழுத்தாளர்.
    வாசிக்கணும் என்ற ஆசையைக் ஏற்படுத்திய பகிர்வு.

    பதிலளிநீக்கு

  20. "முருகா, என் அப்பனே, எனக்கு ஏனப்பா இந்தச் சோதனை? என்னை ஏன் இப்படி சந்தி சிரிக்க வைக்கிறாய்? உனக்கு நான் என்ன குறையப்பா வைத்தேன்?" என அடியார்கள் வேண்டுவது யாழ்பாணக் கோவில்களிலும் கண்டுள்ளேன்.
    இது தங்கள் எழுத்தின் பலம்!
    அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு