10 பிப்ரவரி 2018

ஞான சம்பந்தர்     கீழ் பவானி திட்டம்.

      சத்தியமங்கலம், பவானி, கோபி செட்டிப் பாளையம், ஈரோடு, பெருந்துறை, மற்றும் காங்கேயம் பகுதிகளின் விவசாய முன்னேற்றத்திற்காக, தண்ணீர் பற்றாக் குறையினைப் போக்குவதற்காக, உருவாக்கப்பட்ட திட்டம்தான் கீழ் பவானி திட்டம்.

     1834 ஆம் ஆண்டிலேயே, புகழ் பெற்ற ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தூர் காட்டன் அவர்களின் உள்ளத்தில் உதித்த திட்டம்தான் இந்த, கீழ் பவானி திட்டம்.


     1834 ஆம் ஆண்டிலேயே திட்டம் தீட்டப் பெற்றாலும்,, பல்வேறு தடைகளைத் தாண்டி, இத்திட்டம் நிறைவேறுவதற்கு நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.

     ஆம். இத்திட்டம் முழுமை பெற்ற ஆண்டு 1953.

     நண்பர்களே, எதற்காக இவன், திடீரென்று கீழ் பவானி திட்டத்தைப் பற்றிப் பேசுகிறான் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.

     காரணம் இருக்கிறது.

     1953 ஆம் ஆண்டு நிறைவுற்ற, இந்த கீழ் பவானி திட்டத்தில் பணியாற்றிய அலுவலர் ஒருவரை, அண்மையில் சந்தித்தேன்.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     ஆனால் உண்மை.

     கீழ் பவானி திட்டம் என்றவுடன், பொறியாளர் என்று எண்ணி விடாதீர்கள்.

      இவர் பொறியாளர் அல்ல.

      ஆங்கிலேயர் காலத்திலேயே பி.ஏ., பட்டம் பெற்றவர்.

      பொறியியல் படித்திராத இளைஞருக்கு, கீழ் பவானி திட்டத்தில் என்ன வேலை.

       இதே கேள்வியைத்தான், நான் அந்த மனிதரிடம் கேட்டேன்.

       அவர் சொன்ன பதிலால் வியந்துதான் போனேன்.

      Social Educational Organaiser (SEO)  என்றார்.

      கீழ் பவானி திட்டத்தில் சமூகக் கல்வி அமைப்பாளர் என்ற ஒரு பதவி இருந்திருக்கிறது.

      அதாவது, கீழ் பவானி திட்டத்தால் பயன் பெற இருக்கின்ற மக்களிடையே, இத்திட்டம் குறித்து விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதும், சுத்தம், சுகாதாரம் முதலியவற்றைப் பேணிக் காப்பது குறித்துப் பயிற்சி அளிப்பதுமே சமூகக் கல்வி அமைப்பாளரின் பணிகளாகும்.

      ஒரு திட்டத்தை நிறைவேற்றும் பொழுதே, அத்திட்டம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த, தனியாக அலுவலர்களை நியமித்து முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியே வியப்பாகத்தான் இருக்கிறது.

       இவரை, நான் எப்படிச் சந்தித்தேன்  தெரியுமா?

       இவர் கரந்தையைச் சார்ந்தவர்.

       ஆம், நான் பிறந்த, தவழ்ந்த, பயின்ற, பணியாற்றுகின்ற கரந்தையைச் சார்ந்தவர்.

       கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர், 1941 ஆம் ஆண்டிலேயே, இயற்கையோடு இணைந்துவிட்ட, தமிழவேள் உமாமகேசுவரனாரை நேரில் கண்டவர், கண்டதோடு அவரோடு பலமுறை உரையாடியும் மகிழ்ந்தவர் இவர்.

        இது போதாதா என் ஆர்வத்தைத் தூண்ட?

        நண்பர் ராஜன் அவர்கள்தான் இவரிடம், என்னை அறிமுகப் படுத்தினார்.

        கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் முப்பதாண்டு கால வரலாற்றைத் தொகுத்து, நானும், நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும், எழுதிய உமாமகேசுவரம் என்னும் நூலுக்கு, நிதியளித்து வெளியிட்டவர்தான் இந்த ராஜன்.

        கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் மாணவர்.

        நண்பர் ராஜன் அவர்கள், உமாமகேசுவரம் நூலினை, இந்தப் பெரியவருக்குக் கொடுக்க, நூல் முழுவதையும் படித்து முடித்துவிட்டு, நெகிழ்ந்து போயிருக்கிறார்.

        கடந்த 6.2.2018 செவ்வாய் கிழமை மாலை, நண்பர் ராஜனுடன் சென்று, இப்பெரியவரைச் சந்தித்தேன்.


ஞானசம்பந்தர்
வயது 91

      ஆனாலும் இருபது வயது இளைஞரைப் போன்ற சுறுசுறுப்பு

      நாள்தோறும் காலையும், மாலையும் நடைப் பயிற்சி மேற்கொள்கிறார்.

      மற்ற நேரங்களில் இவரது பொழுதுபோக்கு வாசிப்பது.

     புத்தகங்களை வாசிப்பது

     நாள்தோறும் புத்தகங்களோடு உறவாடுவது, தன்னை இளமையாகவே வைத்திருக்கிறது என்று பெருமைப்படுகிறார்.

      தெளிவான பேச்சு

      இவர் படித்த காலத்தில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருந்திருக்கிறது.

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கைத் தொழிற் கலாசாலை

      ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கரந்தையிலேயே படித்திருக்கிறார்.

     
உமாமகேசுவரனார்

      பூப்போன்ற வெண்ணிற வேட்டி அணிந்து, மேல் ஆடையாய், ஒரு வெண்ணிறத் துண்டினைத் தோளில் போட்டுக் கொண்டு, சிங்கம் போல் நெஞ்சம் நிமிர்த்தி அமர்ந்திருப்பார்.

        மாணவர்கள் அருகில் செல்லவே அஞ்சுவார்கள்

        என்னைப் போன்ற சிறுவர்களைப் பார்த்தால், அருகில் அழைப்பார்.

        ஒரு திருக்குறள் சொல்லு பார்க்கலாம் என்பார்.

        தவறில்லாமல் கூறிவிட்டால், உடனே ஒரு இனிப்பு மிட்டாயினை வழங்கிப் பாராட்டுவார்.

        இந்த இனிப்பு மிட்டாயினை வாங்குவதற்காகவே, அடிக்கடி அவர் முன்னால் செல்வேன் என்று கூறி புளங்காகிதமடைந்தார்.

       அக்காலத்தில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மின் ‘வசதியோ, மின் விசிறியோ கிடையாது.

        கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குப் பெரும் பெரும்  தமிழிறிஞர்கள் வருவார்கள்.

        இவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளுக்குப் பின்னால் நின்று, பனை விசிறிகளைக் கொண்டு, விசிறி விடுவேன் என்று கூறி, அந்நாட்களை நினைத்து, அகம் மகிழ்ந்தார்.

       எத்துணையோ தமிழறிஞர்களுக்கு விசிறி விட்டிருக்கிறேன். குறிப்பாக இலங்கையினைச் சார்ந்த நடேசனாருக்கு விசிறி விட்டது, இன்னும் நினைவில இருக்கிறது என்றார்.


உமாமகேசுவரனாரின் மைத்துனர் சாம்பசிவனார்.

       இவர் ஆங்கிலேயர் காலத்திலேயே பொறியியல் படித்து, பொதுப் பணித் துறையில், பொறியாளராகப் பணியாற்றியவர்.

        கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பெருமன்றத்தையும், கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுக்கும், விளையாட்டுத் திடலுக்கும் இடையே உள்ள, வடவாற்றில். மகா இலக்குமி பாலம் என்னும் பெயருடைய,, தொங்கு பாலம் ஒன்றினையும் அமைத்தவர் இவர்.

         மகாத்மா காந்தி அவர்களின் அழைப்பினை ஏற்று, பொறியாளர் பணியினைத் துறந்து, சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

         இதனாலேயே கரந்தை காந்தி என்று அனைவராலும், அன்போடு போற்றப்பட்டவர்.

       இத்தகு பெருமை வாய்ந்த, கரந்தை காந்தி என்று போற்றப்பட்ட, சாம்பசிவனார், தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டபோது, கரந்தையில், காவலர்களால் கைது செய்யப்பட்டதை, என் இரு கண்களால் கண்டேன் என்று கூறி மெய்சிலிர்த்தார்.

        சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல், நேரம் போவது தெரியாமல், இவரது பேச்சினைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

        பேசப் பேச இவருக்கு, இளமை திரும்புவதைப் போன்று தோன்றிது.

       நாங்கள் உமாமகேசுவரனாரைக் கண்டதில்லை.

       ஆனால் இன்று உமாமகேசுவரனாரைக் கண்டவரைக் கண்டதில் ஒரு நிறைவு.

      உமாமகேசுவரனாரையே நேரில் கண்டதைப் போன்ற ஒரு உணர்வு.

 


      

20 கருத்துகள்:

 1. இவரை தாங்கள் சந்தித்து உரையாடியதே பெருமையான விடயமே.

  அதை எங்களிடமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 2. மிக அருமை! அரிய, பெரிய மனிதர்களுடனான உங்கள் சந்திப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அறியாத பலவற்றை அறியத் தருகிறீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பெருமைக்குரிய விஷயம். வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. மகிழ்ச்சிக்குரிய விஷயம்...
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 5. பல அறியாத பெயர்களின் வரலாறைக் கூறு கிறீர்கள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 6. பல மாமனிதர்களை சந்திக்கிறீர்கள்.
  உங்களுக்கே உரித்தான தனித்துவ முறையில்
  அவர்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறீர்கள்.
  நன்றி நண்பரே.தொடரட்டும் தங்கள் பணி

  பதிலளிநீக்கு
 7. //மகாத்மா காந்தி அவர்களின் அழைப்பினை ஏற்று, பொறியாளர் பணியினைத் துறந்து, சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்//
  சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட மாமனிதரை சந்தித்து உரையாடியது பெருமையான் விஷயம்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இத்தகு பெருமை வாய்ந்த, கரந்தை காந்தி என்று போற்றப்பட்ட, சாம்பசிவனார், தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டபோது, கரந்தையில், காவலர்களால் கைது செய்யப்பட்டதை, என் இரு கண்களால் கண்டேன் என்று கூறி மெய்சிலிர்த்தார்.//

  கரந்தை காந்தி அவர்களைப் பற்றி திரு.ஞானசம்பந்தர் அவர்கள் பேசியதை கேட்டு எங்க்களுடன் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
  முதல் பின்னூட்டம் தவறாக சாம்பசிவனார் அவர்களை சந்திதீர்கள் என்று நினைத்து கருத்து சொல்லி விட்டேன் மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 9. அருமையான பகிர்வு. தமிழ்ச் சான்றோர் தொடர்பு
  கிட்டுகின்ற காலத்தில் நாம் இல்லை எனினும், அச் சான்றோரைக் கண்ட பெரியோரைக் கண்டு மகிழ்ந்த உங்கள் அனுபவம் சிறப்பு.
  மறைமலை அடிகளாரின் சீடரான கோவை ப.சு.மணியம் அவர்களிடம் 1965-ஆம் ஆண்டில் பாடம் பயின்றது என் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 10. எத்தனை அரிய தகவல்கள்!! எத்தனை நல்ல பெரிய மனிதர்களைச் சந்தித்து எங்களுக்கும் அரியத் தருகின்றீர்கள். காலத்திற்கும் நிற்கும் நல்ல பதிவுகள். மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 11. நானும் வியந்துதான் போனேன் ...நண்பரே...!!!!

  பதிலளிநீக்கு
 12. பெரியவரை சந்தித்தது தங்களின் பெரும் பேறு. இப்படியான அனுபவத்தை எம்மோடு பகிர்ந்து இனனும் மகிழ்ச்சி அளிக்கிறது .

  பதிலளிநீக்கு
 13. பெரும் பெரு பெற்றவர் ஐயா நீங்கள்.

  பதிலளிநீக்கு
 14. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். ஓர் அரிய மனிதரைச் சந்திப்பது, அவரைப் பற்றிப் பகிர்வது, அவருடைய புகழை தமிழுலகிற்கு வெளிப்படுத்துவது என்ற உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. அந்த வரிசையில் ஐயாவைப் பற்றிய உங்களின் அறிமுகம் மிகவும் அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 15. மீண்டும் ஒரு வரலாறு கூறும் நல் மனதை எங்களுக்கு அறிமுகம் படுத்தினீர்...

  அரிய தகவல்கள்...

  பதிலளிநீக்கு
 16. பெரியவர்களைப் போற்றும் சிறப்பான பதிவு.

  பதிலளிநீக்கு
 17. போற்றப்பட வேண்டியவர்,,,/

  பதிலளிநீக்கு
 18. அவர் பாதம் பணிகிறேன்.
  மலரும் நினைவுகளில் பெருமிதம் அடைகிறேன்

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு