தமிழை நேசிப்பவர் பலருண்டு. 
     இவரோ தமிழை சுவாசித்தவர். 
    அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராய், ஆம் கணித
ஆசிரியராய்,  தன் வாழ்வினைத் தொடங்கி, தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், செம்மொழி எண்பேராயக் குழு உறுப்பினர் எனத் தமிழோடு இணைந்த, இரண்டறக் கலந்த வாழ்வினை வாழ்ந்தவர்.
  எண்ணற்ற இலக்கிய நூல்களையும், கணக்கற்ற இலக்கியக் கட்டுரைகளையும், மூன்று உலகத் தமிழ் மாநாட்டு மலர்களையும், தமிழன்ணைக்கு அணிவித்து அழகு பார்த்தவர்.
   இவர் ஆய்வு நூல்களுக்கு வழங்கிய அணிந்துரைகள் மட்டுமே, 
தனித்
தனி நூல்களாய் ஆறு தொகுதிகள், இதுவரை வந்துள்ளன 
     சிலப்பதிகாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, சிலப்பதிகாரத்தை தன் உதிரத்தோடு ஒன்றெனக் கலந்தவர். சிலப்பதிகாரத்தைத் தமிழகத்தின் பட்டி, தொட்டி எங்கும், கடந்த 65 ஆண்டுகளாகப் பரப்பி வந்தவர். 
     இவர் சிலப்பதிகாரம் பற்றி வாய்
திறந்தால், கேட்போர் தம்மையே மறப்பர். 
     இதுவரைத் தாங்கள் அறிந்திராத ஆனந்தப் பெரு வெளியில் மிதப்பர். 
     பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., முத்தமிழ் அறிஞர் கலைஞர் என மூன்று முன்னாள் தமிழக முதல்வர்களின் பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரியவர்.
           
              பொன்னை நாடார்
           
              பொருளை நாடார்
           
              தீயன நாடார் என்றும்
           
              சிறுமைகள் நாடார்
           
              வாழ்வில் மாயங்கள் நாடார்
           
              வெற்று மந்திரம் நாடார்
           
              நீண்ட வாய்கொண்டு
           
              மேடை சாய்க்கும்
           
              வறட்டு வார்த்தைகள் நாடார்
என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் கர்ம வீரர் காமராசருக்கு மட்டுமல்ல,  இவருக்கும் கச்சிதமாய்ப் பொருந்தும்.
     ஆம், சென்னையில் 45
ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தும், இதுவரை ஒரு வீடோ, ஒரு காரோ இவர் சம்பாதித்தது இல்லை. 
     பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வீட்டிலும், தமிழைத் தனது உதிரத்திலும், ஏராளமான தமிழன்பர்களின் அன்பையும்தான், இவர் இதுவரை சேர்த்து வைத்துள்ளார்.
      இவர் பணத்தினை என்றுமே நாடியவரல்ல. பணத்தினை வெறும் வண்ணக் காகிதமாகவே பார்த்துப் பழகியவர் இவர். 
     இவர், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராய் அமர்ந்து சீர்மிகு பணியினை ஆற்றிய கால கட்டத்தில்,
1984 இல் தமிழக அரசானது,    
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து, முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய செந்தமிழ்ப் புரவலர், 
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை, அரசு விழாவாக நடத்திட முடிவு செய்தது.
     இவரிடமே, நூற்றாண்டு விழாவினை நடத்தும் பொறுப்பினை தமிழக அரசு வழங்கியது. தேவையான நிதியினையும் ஒதுக்கீடு செய்தது.
     கரந்தைத் தமிழ்ச் சங்க வரலாற்றில், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விழாவாக, உமாமகேசுவரனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப் பெற்றது.
     கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திலேயே, தமிழவேளின் நூற்றாண்டு விழாவினை அரங்கேற்றிய இம்மாமனிதர், விழாவின் நிறைவில், இந்நூற்றாண்டு விழாவிற்கென தமிழக அரசு குறிப்பிட்ட நிதியினை ஒதுக்கியது. விழா முடிந்து, விழாவிற்குரிய அனைத்துச் செலவினங்களுக்கும் உரிய தொகைகள் வழங்கப்பட்டு விட்டன. ஆயினும் ரூ.20,000
மீதமிருக்கின்றது. இத்தொகையினை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காக வழங்குகின்றேன் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி ரூ.20,000 ஐ கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கியவர் இவர்.
      தோன்றிய நாள் தொடங்கி, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினை எள்ளளவும் விட்டு விலகாமல், இணைபிரியாத் தோழமையாய், இணைந்தே வளர்ந்தது நிதிப் பற்றாக்குறை என்னும் கொடு நோயாகும்.
     இப்பெருமகனார் வழங்கிய தொகை, நிதிப் பற்றாக்குறை என்னும் கொடு நோய்க்குப், பெரு மருந்தாய் அமைந்தது.
     ஆம். இப் பெரு மகனார்  வழங்கிய தொகையினைக் கொண்டுதான், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், ஆசிரியர் பயிற்சி வகுப்பு தொடங்கப் பெற்றது.
     ஆசிரியர் பயிற்சி வகுப்பினால்தான், நிதி என்னும் நல்லாள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், தன் திருவடிகளைப் பதித்தாள்.
     இன்று, காணும் இடமெல்லாம் கட்டடங்கள், புதுப் புதுக் கல்வி நிறுவனங்கள், புதுப் புது ஆய்வகங்கள், கலைக் கல்லூரியில் புதுப் புது பிரிவுகள் என, கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆல விருட்சமாய், கிளைகள் பல பரப்பி, தழைத்திருந்தாலும், இவ் வளர்ச்சிக்கு விதை விதைத்தப் பெருமைக்கு உரியவர் ,இவரே ஆவார்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதால், பலமுறை, இத்தமிழறிஞரோடு பழகும் நல் வாய்ப்பினைப் பெற்றதை இன்று பெருமையோடு
நினைத்துப் பார்க்கிறேன்,
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் விழாக்களுக்காகப் பல தமிழறிஞர்களைத் தொடர்பு கொண்டு அழைத்தல், தங்க வைத்தல், விழாவில் பங்கேற்கச் செய்தல், வழியனுப்புதல் என பல பணிகளை, நானும், எனது நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளித்
தலைமையாசிரியருமான  திரு வெ.சரவணனும் மேற்கொள்வோம்.
     பலமுறை இவரை அழைத்திருக்கின்றோம். 
      நான் தற்சமயம் நாமக்கல்லில் இருக்கின்றேன். விழாவிற்கு உரிய நேரத்தில் வந்து விடுகிறேன் என்பார். 
      சொல்லிய வண்ணமே வந்து, விழாவினைச் சிறப்பிப்பார். 
      நாமக்கல்லில் இருந்து வாடகை மகிழ்வுந்தில் வருவார்.
     விழா முடிந்து விடைபெறும் வேளையில், தமிழே உருவான இவர், வாடகைக் மகிழ்வுந்தில் அமர்ந்ததும், அவர் அருகில் சென்று, ஒரு சிறு தொகை அடங்கிய உறையினை அவரிடம் நீட்டுவேன். 
       ஐயா, நாமக்கல்லில் இருந்து வாடகை வண்டியில் வந்திருக்கிறீர்கள், பயணச் செலவிற்காக இச்சிறு தொகையினைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுவேன்.
     அப்பொழுது சிரிப்பார் பாருங்கள் ஒரு சிரிப்பு, அந்தச் சிரிப்பிலே சிலம்பின் ஒலியினை, பலமுறை கேட்டிருக்கின்றேன்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பேசுவதற்குப் பணமா? வேண்டாம் ஐயா, மிக்க நன்றி, வருகிறேன் என இருகரம் கூப்புவார்.
    இம்மாமனிதர் இன்று இல்லை
என்பதை எண்ணும்போது நெஞ்சம் கலங்குகிறது,
சிலம்பொலி செல்லப்பனார்
கடந்த 6.4.4019 அன்று காற்றோடு கலந்து விட்டார்
சிலம்பின் ஓசை ஓய்ந்து விட்டது,
தமிழுலகம் தன் தலைமகனை இழந்துவிட்டது.
சிலம்பின் ஓசை செவிகளில் இருந்து மறைந்தாலும்,
என்றென்றும் தமிழுள்ளங்களில் ஒலித்துக் கொண்டே
இருக்கும்.


