20 ஏப்ரல் 2019

நாயகனின்றி பாராட்டு விழா
     தமிழின் மீதும், தமிழன் மீதும், தமிழ்க் கலாசாரத்தின் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் போர் தொடுக்கப்பட்டிருக்கும் காலம் இது.

     இரத்தம் சிந்தாமல், தமிழையும், தமிழரையும் அழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் களம் இறங்கியோர், களமாடிக் கொண்டிருக்கிற கால கட்டம் இது.


     எத்தனைத் தடைகள் வந்தாலும், அத்தனைத் தடைகளையும், தகர்த்தெறிந்து வெற்றி பெறுவோம், முன்னேறுவோம் என்பதற்கு அடையாளம்தான் இந்த விழா.

     திருநாவுக்கரசு போன்ற தமிழன் இருக்கும் வரை, இந்தத் தமிழினத்தை எவனாலும் அழித்துவிட முடியாது என்பதன் சாட்சிதான் இந்த விழா.

                                … பேராசிரியர் முனைவர் சேமுமு.முகமதலி

---

     தஞ்சாவூர்

     தமிழக அரசின், தமிழ்நாடு விடுதியின், சிறு குளிரூட்டப்பட்ட விழா அரங்கு.

     கடந்த 30.3.2019 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு விழா தொடங்க இருந்தது..

     நான்கு மணியளவில், தேர்தல் பணி அலுவலர்கள் சிலர் வருகை தந்து, விழா நடத்த அனுமதி வாங்கினீர்களா? என்றனர்.

      விழா நடத்த அனுமதியா?

     ஒன்றும் புரியவில்லை.

      அரசியல் விழா அல்லவே பாராட்டு விழா அல்லவா நடத்தப் போகிறோம் என்றோம்.

     எந்த விழாவாகினும் அனுமதி தேவை

     அனுமதி பெறாமையால் விழா நடத்தத் தடை விதிக்கிறோம்.

----


கண்ணியமிக்கப் பெரியோரே,

     அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

     வணக்கம்.

     முதலில் என்னைத் தயைகூர்ந்து மன்னியுங்கள்.

     உங்களனைவரையும் சந்தித்து மகிழ, உங்களனைவரினதும் அன்பையும், வாழ்த்துக்களையும் பெற ஆவலாய் இருந்தேன்.

     ஆயினும் எந்தவித தக்க காரணமும் இன்றி, எனது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக, எனது பயணம் தடைபட்டுப் போனது.

     விழாவில் கலந்து கொள்ள இயலா நிலை.

     தமிழால் ஒன்றுபட்ட நாம், கடல் கடந்தும், நெஞ்சத்தால் ஒன்றுபட்டவர்கள் என்பதை நிச்சயம் செய்யும் ஒரு உன்னத நிகழ்வாக இதனை எண்ணுகிறேன்.

     சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் என்ற, நம் தலைமைக் கவி பாரதியின் கனவு, இம் முயல்வாலும் தொடருகிறது.

     இன, மத, தேசங்கடந்து நமது உறவு நிலைக்கப் பாடுபடுவோம்.

     மீண்டும் உங்கள் அனைவருக்கும், எனது நெஞ்சார்ந்த நன்றிகள் உருத்தாகட்டும்.

நன்றியுடன்,
ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

----

     வானூர்தியில் ஏற வழியின்றிக் காப்பியக்கோ இலங்கையில் தவிக்க, தஞ்சையிலோ, விழா நடத்தக் கூடாது என்னும் தடை இடியாய் இறங்கியது.

     விழா ஏற்பாட்டாளர் புலவர் பா.திருநாவுக்கரசு அவர்கள் பம்பரமாய்ச் சுழன்றார்.

     உரிய அலுவலர்களைச் சந்தித்தார்.

     அழைப்பிதழைச் சமர்ப்பித்தார்

     எழுத்து மூலமான வேண்டுகோளை முன்வைத்தார்.

     இது இலக்கிய விழா

     அரசியல் துளியும் கலவாத பாராட்டு விழா

     அனுமதி தாருங்கள் என்றார்

     தேர்தல் துறையினர் வெகுவேகமாய் செயல்பட்டனர்

    தேர்தல் துறையினரைப் பாராட்டியே ஆகவேண்டும்.

    விழாவினை நிறுத்திய அதே வேகத்தில், நடத்திடவும் எழுத்து வடிவில் அனுமதி தந்தனர்.

     ஆயினும் அதற்குள், இரண்டு மணி நேரத்திற்கும் மேல், வெகுவேகமாய் ஓடித்தான் போய்விட்டது.

     மாலை 4.30 மணிக்கு விழா தொடங்குவதாக எற்பாடு.

     எனவே நான்கு மணி முதலே பார்வையாளர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.

     சுமார் ஐம்பது பேர்

     அத்துணை பேரும் இலங்கைத் தமிழ்க் கவிஞர் மீதும், தஞ்சைப் புலவர் மீதும் வற்றாத பாசம் உடையவர்கள்.

    

விழா 7.00 மணியளவில் தொடங்கியது.

     விழா மூன்று மணி நேரம் தாமதமாய் தொடங்கிய போதும், நான்கு மணிக்கு வந்தவர்கள் அனைவரும் பொறுமையாய் காத்திருந்தனர்.

     விழா தொடங்கியது.

     நாயகன் இல்லாமலேயே ஒரு பாராட்டு விழா

---

    

தமிழுக்கு எல்லா சமயத்தினரும், தங்களது பங்கினை ஆற்றியுள்ளனர்.

     அதேபோல், யாருக்கும் சளைத்தவர்களாக இல்லாமல், இளைத்தவர்களாக இல்லாமல், குறைந்தவர்களாக இல்லாமல், இசுலாமியர்களும் தங்கள் பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்..

     எந்த இசுலாமியரும் தமிழை விட்டுக் கொடுத்து, இந்த மண்ணில் வாழ்ந்தது இல்லை.

     ஏன் தெரியுமா?

     இசுலாமியர்களின் தாய் மொழி தமிழ்

     இலமூரியக் கண்டத்தில் தோன்றிய ஆதம் பேசிய மொழி தமிழ்.

     இசுலாமியர்களின் தந்தை மொழி தமிழ்

     அரபு அகத்தில் இறங்கிய ஏவாள் பேசிய மொழி அரபு.

         இசுலாமியர்களின் தாய்மொழி அரபு.                                                                     

     தாய்மொழி எது என்று கேட்டால், தந்தை பேசிய மொழியைத்தானே கூறுகிறோம்.

     இசுலாமியர்களின் தந்தை பேசிய மொழியே எங்களின் தாய் மொழி.

     எனவே இசுலாமியர்களின் தாய் மொழி தமிழே.

     எங்களின் தாய்மொழி தமிழே

     வாழ்த்துரை வழங்க வருகை தந்திருந்த, இசுலாமியத் தமிழறிஞர் பேசப் பேச அரங்கே அமைதியில் உறைந்துதான் போனது.

     இவர் ஒரு தமிழ்க் காதலர்

     தமிழ்க் கவிதை நாடகம் பற்றி ஆராய்ந்த முதல் ஆராய்ச்சியாளர்

     சென்னைப் பல்லைக் கழகத்தில், தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற, முதல் இசுலாமியர்.

     இசுலாமிய இலக்கியக் கழகத் தலைவர்

     பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி.

     மேலும் பேசினார்.

     இசுலாமியர்கள் தமிழுக்குச் செய்தத் தொண்டைப் பற்றி, கிஞ்சித்தும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

     காப்பியக்காலம் முடிவுற்றுவிட்டதோ?

     இன்னொரு காப்பியம் வாராதோ? என ஏங்கிய காலத்தில்,

     ஏக்கத்தைப் போக்க, வாட்டத்தை நீக்கத் தோன்றியதுதான்

     சீறாப்புராணம்.

     உமறுப்புலவரைத் தொடர்ந்து, 3 அல்லது 4 காப்பியங்களைப் பாடிய இசுலாமியர்கள் இருந்திருக்கிறார்கள்.

ஆயினும்,
11 காப்பியங்களைப் பாடிய ஒரே மனிதர்
ஒரே கவிஞர்
காப்பியக்கோ
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள்தான்
எனப் புகழ்ந்தார்.
---

பாவலர் தஞ்சை தர்மராசன் அவர்களும்
புலவர் மா.கந்தசாமி அவர்களும்
முன்னிலையுரையாற்றினர்.


தஞ்சாவூர், சரசுவதிமகால் தமிழ்ப் பண்டிதர்
ஏடகம் அமைப்பின் நிறுவுநர்
திரு மணி.மாறன் அவர்கள்
வாழ்த்துரை வழங்கினார்.

---மறுநாள் பொழுது புலர்ந்தால்,
தன் செல்வ மகளுக்கு
தன் அன்பு மகளுக்குத் திருமணம்,

உறவும் நட்பும் திருமண மண்டபத்தில் குவிந்திருக்க,
தமிழ் மேல் உள்ளப் பாசத்தால்,
காப்பியக்கோ மீது உள்ள நேசத்தால்

பாராட்டு விழாவில் பலமணி நேரம்
அமைதியாய் அமர்ந்திருந்து சிறப்பித்தார்
கொடை வள்ளல்
வெள்ளம்ஜி அல்ஹாஜ்
எம்.ஜெ.முகமது இக்பால் அவர்கள்.

மலையென செல்வம்தனைக் குவித்து வைத்திருந்த போதும்,
பணிவோடு இவர் பேசிய பேச்சும்,
இவர் பேச்சில் குழைந்த தமிழ் மூச்சும்
வந்திருந்தோரை வியக்க வைத்தது.


சமுதாயப் புரவலர்
வெள்ளம்ஜி ஹாஜி
எம்.ஜெ.அப்துல் ரவூப் அவர்களோ,
தன் சகோதரர் அமர்ந்திருக்கும் மேடையில்
இணையாய் அமராது
பார்வையாளர் வரிசையில் முன் வரிசையில் அமர்ந்து
தன் சகோதரரின் பெருமையினைப் போற்றிய பாங்கு
அனைவர்ரையும் நெகிழ வைத்தது.


---

அடுத்ததாக,
வாழ்த்துரை வழங்க எழுந்தார்
தமிழ்க் கடல்
புலவர் முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள்

குற்றால அருவி,
குறுகிய விழா அரங்கிற்குள் புகுந்துவிட்டதோ
என அரங்கில் குழுமியிருந்தோரை
வியக்க வைத்தப் பொழிவு.

சங்க இலக்கியங்கள்
இவர் நாவினின்று
தெறித்து விழுந்ததைக் கண்டு
அவையோர் தம்மை மறந்துதான் அமர்ந்திருந்தனர்.

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
     சயங்கொண்டான் விருத்தமென்னும்
ஒண்பாயிற் குயர்கம்பன் கோவையுலா
     அந்தாதிக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
     வசைபாடக் காள மேகம்
பண்பாகப் பகர்சந்தம் படிக்காச
     லாலொருவர் பகரொ ணாதே
எனப்பாடுவார் பலபட்டைச் சொக்கநாதப் புலவர்.

      விருத்தத்தைக் கம்பனுக்குப் பிறகு கெட்டியாய் பிடித்து, இனிமையாய் நற்பாக்களை வழங்குவதில், வித்தகர் இந்தக் காப்பியக்கோ.

     நாள் ஒன்றுக்கு எழுபது விருத்தங்களை எழுதியுள்ளார் இந்தக் காப்பியக்கோ.

     வியப்பாக இருக்கிறதல்லவா.

அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்

காப்பியக்கோ
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின்
பதினொன்றாவது காப்பியம்.

நான்கு காண்டங்கள்
பதினேழு படலங்கள்
1250 பாடல்கள்.

ரமலான் மாதத்தின் முதல் நாளில் தொடங்கி
நோன்பையும் தலைமேல் வைத்துக் கொண்டு
இக்காப்பியத்தைப் படைத்திருக்கிறார்.

     இக்காப்பியத்தைத் பெருமானார் என்று தொடங்குகிறார்.

      முடிக்கும்போது 1250 வது பாடலில் காப்பு என்று முடிக்கிறார்.

     முதல் வார்த்தையையும், கடைசி வார்த்தையையும் சேருங்கள்

     பெருமானார் காப்பு

     இது மனிதன் திட்டம்போட்டு எழுதியதல்ல

     யாரோ மேலிருந்து திட்டம் போட்டு இவரை எழுத வைத்திருக்கிறார்கள்,

காப்பியக்கோ
இலங்கை மண்ணில்
காப்பியக்கோவிற்கு விழாவோ
தமிழ் மண்ணில்
தஞ்சை மண்ணில்.

நாயகன் இல்லாமலேயே ஒரு பாராட்டு விழா

அன்று ஔவை உரைத்தது இன்று மெய்யாகி இருக்கிறது.

நேசனைக் காணாவிடதே நெஞ்சாரவே புகழ்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே – வாச
மனையாளை பஞ்சனையில், மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிஇல்

நேசனைக் காணாவிடத்தில் புகழும் விழா, இவ்விழா

இதுவே உண்மையான பாராட்டு விழாவாகும்

காப்யிக்கோ அவர்களைப் பாராட்டுவோம், போற்றுவோம்

இன்னும் பலப் பல காப்பியங்கள் படைக்க வாழ்த்துவோம்.

     தமிழ்க் கடல் புலவர் முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள் உரையாற்றி அமர்ந்த பிறகும் கூட, பார்வையாளர்கள் பொழிவின் தாக்கத்தில் இருந்து வெளிவர இயலாமல் தவித்துத்தான் போனார்கள்.

     திரு கென்னடி அவர்கள் விழா நிகழ்வுகளைத் திறம்பட, சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

      நிறைவில் நான், ஆம் நானேதான், நன்றி கூட விழா இனிது நிறைவுற்றது.

விருத்தங்களால் ஆன கம்பராமாயணம்
எங்கனம் இன்றளவும் நிலைத்து நிற்கிறதோ
அதுபோல இவர் நூலும் நிற்கும்
இதனைக் காலம் தின்னாது
கறையான் அரிக்காது
                  கவிஞர் வாலி.