12 மார்ச் 2020

எழுத்துக்காரன்
நடக்கக் கற்று
நாலடி வைப்பதற்குள்
ஓடு என்றார்கள்
ஓடலானேன் –

கைதட்டல்கள், வாழ்த்துக் கூச்சல்கள்
வேகம், வேகம், இன்னும் வேகம்

அன்னை மடியும்
இளமைக் கூத்தும்
ஓட்டத்தினூடே ஓடி மறைந்தன

ஓடும்போதே கல்யாணம் பண்ணி
கடமைகள் முடித்து
குழந்தைகள் பெற்று
குடும்பம் சுமந்து –
அடைந்தால் சிரித்து
இழந்தால் அழுது

பக்தியில் நனைந்து
பயத்தில் உறைந்து
நரைக்க, நரைக்க
நாட்கள் பறக்க
இறைக்க, இறைக்க
ஓடிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் எனக்கு
உண்மை புரிந்தது –
பந்தயம் என்றோ
முடிந்து போனது

நான் வெறும்
பழக்க தோஷத்தில்
ஓடிக் கொண்டிருக்கிறேன்.

     பழக்கதோஷத்தில் ஓடுகிற பந்தயக் குதிரையாக, இன்றைய வாழ்வு நம்மை மாற்றியிருக்கிறது அல்லது இன்றைய வாழ்விற்காக நாம் மாறியிருக்கிறோம்.

     இது நல்லதல்ல

     வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்வோம்

     இலக்கியத்தோடு இயைந்த வாழ்க்கையாய் வாழ்வோம்

     ஏன், இலக்கியத்தோடு இயைந்து வாழ வேண்டும்?

     இலக்கியம் என்ன செய்யும் ?

     என்னதான் செய்யாது

     இலக்கியம் ஒரு தனி மனிதனையோ, ஒரு நாட்டையோ என்ன வேண்டுமானாலும் செய்யும்.

     இலக்கியம் மனிதனை உயர்த்தும்

     வாழும் நெறிமுறைகளை உணர்த்தும்

     ஏதென்சு நகரில் ஒரு மாபெரும் கண்காட்சி நடைபெற்றது

     விலையுயர்ந்த, கண்கவர் பொருட்கள் எல்லாம் விற்பனைக்கு வைக்கப்பெற்று, காண்போரை சுண்டி இழுத்தன.

     ஒரு சிறு கூட்டம், இளைஞர்களின் கூட்டம், கண்காட்சியைக் காணாமல், கண்காட்சிக்கு வருபவர்களைக் கவனிக்கத் தொடங்கியது.

     யார் இந்த ஊரிலேயே அதிகப் பணக்காரர் என்பதைத் தீர்மானிக்கக் கவனித்தார்கள்.

     யார் விலையுயர்ந்த பொருட்களை, அதிக எண்ணிக்கையில் வாங்குகிறார்களோ, அவரே பெரும் பணக்காரர் என்று முடிவு செய்து, அந்தப் பெரும் பணக்காரரை அடையாளம் காண, அந்தக் குழு காத்திருந்தது, கவனித்துக் கொண்டிருந்தது.

     சாக்ரடீஸ் வந்தார்

     இளைஞர்களைக் கண்டார்

     நோக்கம் அறிந்தார்

     சிரித்தார்

     நான்தான் ஏதென்சிலேயே பெரும் பணக்காரன் என்றார்

     இளைஞர்கள் குழு திகைத்தது

     பரம ஏழையான இவரா பெரும் பணக்காரர்?

     புரியவில்லையே

     எப்படி? என்றது

     எனக்கு இங்கிருக்கும் பொருட்கள் எதுவுமே தேவையில்லை.

     தேவைகள்தான் ஒரு மனிதனை ஏழையாகவோ, பணக்காரனாகவோ மாற்றுகிறது.

     எனவே நான்தான் பணக்காரன் என்றார்.

     இதுதான் இலக்கிய மனம்

     இலக்கிய மனம்தான் பெரும் செல்வம்

     அடக்கமுள்ளவனாக, பணிவுள்ளவனாக ஒருவரை மாற்றுவதுதான் இலக்கியம்.

     இலக்கியம் நம்மை குழந்தையாக்கும்

ஜன்னல் வழியே -  வேடிக்கை பார்
எனக் காட்டினேன்
ஜன்னலைக் கண்டு
சிரித்தது குழந்தை.

     இதுதான் இலக்கிய மனம்.

     மனதில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தால் சிரிப்பு வரும். குழந்தைத் தன்மை வளரும்.

     என் பெயரன் ஒரு யானைப் படம் வரைந்து கொண்டிருந்தான்

     யானைக்கு கருப்பு நிறம் கொடுப்பதற்கு பதில், பல்வேறு வண்ணங்களால், யானைக்கு நிறம் கொடுத்தான்.

     யானை கருப்பாகவல்லவா இருக்கும் என்றேன்

     இது Rainbow Elephant என்றான்

     வானவில் யானை என்று ஒன்று எங்கும் கிடையாதே என்றேன்

     இதோ இருக்கிறதே என்று, தான் வரைந்த படத்தைக் காட்டினான்.

     இதுதான் இலக்கியம்.

     இலக்கியம் என்பது புத்தக வாசிப்போடு மட்டும் சம்பந்தப்பட்டது கிடையாது.

     புத்தகங்களை மட்டும் வாசித்தால் போதாது

     மரம், சொடி, கொடிகளையும் வாசிக்க வேண்டும்

     இந்த உலகை வாசிக்க வேண்டும்

எழுத்துக் கூட்டிப்
புத்தகத்தை வாசிப்பது போல
இலைகளைக் கூட்டி
மரங்களை வாசிக்க வேண்டும்

ஒவ்வொரு கிளையாகப் – பிரித்து
வாசிக்க வேண்டும்

ஒவ்வொரு மரத்தையும் – அதன்
காயங்களுடன் சேர்த்து வாசிக்க வேண்டும்

மரங்களை
கீழிருந்து மேலாகவும்
மேலிருந்து கீழாகவும்
வாசிக்க வேண்டும்

மரங்கள்
பூச்சிகளின் பிரபஞ்சம் – நீ
பூச்சியாய் மாறினால் – இலைகளின்
நுனிவரை செல்லலாம்

இலைகளில் இருப்பவை
நரம்புகள் அல்ல
அவை தாவர லிபி (எழுத்துக்கள்)
அவ்வளவும்
பாட்டு, பாட்டு, பாட்டு

இலைகளின் பாடலை
காற்று இசைக்கும்
பூச்சியாகி உற்று கேள் புரியும்.

பறவைகளின் பாட்டெல்லாம்
இலைகளிடம் கற்றதுதான்

பாட்டு முடிந்தவுடன் – இலையும்
பழுத்து விழுந்து விடும்

மரத்தின் அர்த்தத்தை
நிழலில் தேட வேண்டாம்
அங்கே இளைப்பாறு

மரத்தின் அர்த்தத்தை
இலக்கியமாக்கி
மரத்தை வாசித்தபடி
ஒரு பூச்சிபோல்
நகர்ந்து கொண்டே இரு

வாழ்க்கை மாறிவிடும்
மரப்பிரசாதம்.

     இலக்கியங்களை வாசியுங்கள்

     இலக்கியத்தின் ஏதோ ஒரு சொல், ஒரு வரி, உங்கள் வாழ்க்கையையே முற்றாய் புரட்டிப் போடலாம்.

     எனவே இலக்கியத்தை வாசியுங்கள்

     இலக்கிய வெளிச்சத்தில் வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள், நலமாக்கிக் கொள்ளுங்கள்

தஞ்சாவூர்க்  கவிராயர் அவர்களின்
இலக்கியம் என்ன செய்யும்?
என்னும் தலைப்பிலான
அருமையானப் பொழிவு
ஞாயிற்றுக் கிழமையின்
மாலைப் பொழுதைப்
பயனுள்ளதாக்கியது.

     இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் என்பதை தமிழுலகம் நன்கறியும்.

     ஆனால் இவரது ஆளறி அட்டை அல்லது வருகையாளர் முகவரிச் சீட்டு (Visiting Card) இவரை எழுத்துக்காரன்  என்று அறிமுகம் செய்கிறது.

     எழுத்துக்காரன்

     வித்தியாசமாக இருக்கிறதல்லவா?

     இதற்கும் இவர் ஒரு கதை வைத்திருக்கிறார்

     இவரது முன்னோர், தஞ்சையில், மராட்டிய மன்னர் காலத்தில், தெலுங்குச் சுவடிகளைப் பிரதியெடுக்கும் பணியினைச் செய்துள்ளனர்.

     இவ்வாறு பிரதியெடுக்கும் பணியாளர்களுக்காக, தஞ்சை மாரியம்மன் கோயிலுக்கு அருகில், ஒரு தெருவையே மராட்டிய மன்னர், தானமாக வழங்கி இருக்கிறார்.

    அன்றும் மட்டுமல்ல, இன்றும் இத்தெருவின் பெயர் என்ன தெரியுமா?

     எழுத்துக்காரத் தெரு

     எழுதுபவர்களுக்காக, ஓலையில் எழுதுபவர்களுக்காக வழங்கப்பட்டதால் இது எழுத்துக்காரத் தெரு.

      எனவே இவர் எழுத்துக்காரன் என்னும் சொல்லைத் தன்னோடு இணைத்துக் கொண்டார்.

எழுத்துக்காரன் தஞ்சாவூர்க் கவிராயர்

     இந்த எழுத்துக்காரரோடு, ஒரு ஓவியக்காரரும் வந்திருந்தார்.

     இவர் ஓவியர் மணியன் குடும்பத்தைச் சார்ந்தவர்.

     ஓவியர் மணியம் செல்வனிடம் உதவியாளராகப் பணியாற்றிப் பயிற்சி பெற்றவர்

     அமரர் கல்கியின் அமரத்துவம் பெற்ற படைப்பான, பொன்னியின் செல்வன், மீண்டும் 2004 ஆம் ஆண்டு முதல், கல்கியின் பக்கங்களை நிரப்பத் தொடங்கியபோது, ஏற்கனவே இந்தக் கதைக்குப் பிரமாதமாக ஓவியம் வரைந்திருக்கும் ஓவிய மேதைகளின்  படங்களில் இருந்து மாறுபட்டும், அதே சமயம் கதைக்கும் காட்சி அமைப்பிற்கும் பொருத்தமாகவும், படங்களை வரைந்து அசத்தியவர்.

ஓவியர் வேதா

     காட்சிக்கு எளியராய், அமைதியின் திருஉருவாய் அமர்ந்திருந்தவர், எழுத்துக்காரரிடம், தஞ்சை மக்களைப் பற்றி, இரத்தினச் சுருக்கமாய் ஒரு வரி உரைத்திருக்கிறார்.

தஞ்சையில் மனிதத் தன்மையுள்ள முகங்களைப் பார்க்கிறேன்

     எழுத்துக்காரரின் வாய் வழி உதிர்ந்த, ஓவியக்காரரின் உணர்வு வார்த்தைகளைக் கேட்டு, அரங்கே அகம் மகிழ்ந்துதான் போனது.

---

ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவு.

கடந்த 8.3.2020 ஞாயிற்றுக் கிழமை மாலை.
ஏடகப் பொருப்பாளர்
திரு பி.கணேசன் அவர்களின்
தலைமையில் நடைபெற்ற
ஏடகப் பொழிவினைச்
செவிகொடுத்துக் கேட்க வந்தவர்களை,

தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
இளங்கலை தமிழ் மாணவி
செல்வி சோ.விஜயலட்சுமி அவர்கள்
வரவேற்றார்.


எழுத்துக்காரன் தஞ்சாவூர் கவிராயரின்
அருவியென ஆர்ப்பரித்தப் பொழிவு கேட்டு.
மனம் மகிழ்ந்திருந்த ஏடக அன்பர்களுக்கு

தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
இளங்கலை தமிழ் மாணவி
செல்வி சி.பெரியநாயகி அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்
முனைவர் ப.ரேவதி அவர்கள்
விழா நிகழ்வுகளைச் சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

யாழ் பல்கலைக் கழகத்
தமிழ்ச் சுவடிகளைப் பாதுகாக்க,
வழிமுறைகளை எழுத்தியம்பவும்- உடனிருந்து
செயல்முறையில் செய்துகாட்டவும்,
இரண்டாம் உலகச் சித்த மருத்துவ மாநாட்டினை
மங்கல விளக்கேற்றித் துவக்கி வைத்திடவும்,
ஏடக நிறுவுநர், தலைவர்
விமானம் ஏறி
இலங்கைக்குப் பறந்து சென்றபோதிலும்,


தலைவர் இல்லா குறையே
தெரியா வண்ணம்
நிறைவாய் பொழிவினை நடத்திட
ஏடகப் பொறுப்பாளர்களை
முழுமையாய்ச் செதுக்கி
செப்பம் செய்து வைத்திருக்கும்
முனைவர் மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது.
போற்றுவோம், வாழ்த்துவோம்.


45 கருத்துகள்:

 1. இயற்கையை நேசிப்போம். இலக்கியத்தை வாசிப்போம். அருமை.

  பதிலளிநீக்கு
 2. எழுத்துக்காரன் எடுத்துக்காட்டிய நீரும் எழுத்துக்கார்ரே...
  செல்லினத்தில் எழுத்துப்பிழையாக வார்த்தை வருகின்றது ஐயா நன்றி

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான இருமனிதர்கள் பற்றிய பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 4. இலக்கிய மனம் கொண்ட   செல்வந்தர் சாக்ரடீஸ் வானவில் யானை படைத்த குழந்தை மரத்தின் அர்த்தம் என அனைத்தும் அருமையா சொல்லியிருக்கிறீர்கள் .

  பதிலளிநீக்கு
 5. அரிய மாமேதைகளைப்பற்றிய செய்தியை தந்தமைக்கு நன்றி நண்பரே

  மலையாளத்தில் எழுத்தாளரை எழுத்துக்காரன் என்றே அழைப்பார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்துக்காரன்
   மலையாளத்தில் இன்றும் பயன்பாட்டில் இருப்பது பெருமைதான் நண்பரே
   எழுத்துக்காரன் என்ற வார்த்தை எனக்குப் பிடித்துவிட்டது
   நன்றி நண்பரே

   நீக்கு
 6. அழகிய கவிதைகள் நிறைந்த போஸ்ட்.. மிகவும் ரசித்தேன்..

  //ஒரு நாள் எனக்கு
  உண்மை புரிந்தது –
  பந்தயம் என்றோ
  முடிந்து போனது

  நான் வெறும்
  பழக்க தோஷத்தில்
  ஓடிக் கொண்டிருக்கிறேன்.//

  இதை மிக மிக ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 7. அன்பின் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு 

  அருமையான கவித்துவ பதிவுக்கு மிக்க நன்றி அய்யா...

  இன்றைய காலை, எத்தனை நயமான இலக்கிய வாசிப்பு கிடைக்கச் செய்தது...இந்த நேரம் எத்தனை இதம் வாய்க்கிறது, உள்ளத்திற்கு. உலகை நேசிக்க, உன்னதங்களை வாசிக்க, உயர்வான சிந்தனைகளை புதுப்பித்துக் கொள்ள....

  நன்றி 

  எஸ் வி வேணுகோபாலன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன
   நன்றி ஐயா

   நீக்கு
 8. மிக அருமையான பதிவு. உயர்ந்த மனிதர்களின் அறிமுகம் அற்புதம்.

  பதிலளிநீக்கு
 9. பொழிவாளரை அறிவேன். பல ஆண்டுகள் கழித்துச் சந்திக்கும் வாய்ப்பு. பொழிவினைப் பகிர்ந்த விதம் அருமை. மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 10. இலக்கியத்திற்கு அருமையான விளக்கம் நண்பரே.
  எழுத்துக்காரன் தெரு - இந்த தஞ்சையானுக்கு புதிய செய்தியே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்துக்காரத் தெரு என்று ஒன்று இருப்பதை நானும் இவரால்தான் அறிந்தேன். ஒரு நாள் இந்தத் தெருவினைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது
   நன்றி நண்பரே

   நீக்கு
 11. ஒரு நாள் எனக்கு
  உண்மை புரிந்தது –
  பந்தயம் என்றோ
  முடிந்து போனது

  நான் வெறும்
  பழக்க தோஷத்தில்
  ஓடிக் கொண்டிருக்கிறேன்.//

  நன்றாக சொன்னார்.

  //தேவைகள்தான் ஒரு மனிதனை ஏழையாகவோ, பணக்காரனாகவோ மாற்றுகிறது.//

  உண்மை. இன்னும் இன்னும் என்று தேவைகள் அதிகமாகி நிறைவு என்பதே இல்லாமல் போகிறதே!

  திருநெல்வேலியிலும் எழுதுபவர்களை நல்ல எழுத்துக்காரன் என்று சொல்வார்கள். கற்றுக் கொடுப்பவரை படிப்பிக்கிறவன் என்று சொல்வார்கள்.

  பகிர்ந்த அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல எழுத்துக்காரன்
   படிப்பிக்கிறவன்
   அருமையான வார்த்தைகளை தங்களால் அறிந்தேன்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 12. எழுத்துக்காரனுக்கு ஒரு வலைத்தாம்உண்டு நீண்ட நாட்களாக முடங்கி கிடக்கிறது தளத்தின் பெயர் எழுத்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவரும் வலைதளத்தில் எழுதியிருக்கிறாரா?
   அறியாத செய்தி ஐயா
   நன்றி

   நீக்கு
 13. சிறந்த அறிமுகங்கள்... விளக்கம் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்
  ஐயா

  நல்லவர்களை சந்திப்பது மிகமிக அரிது அதிலும் தாங்கள் சந்தித்த மனிதர்கள் மிகவும் பெறுமதியானது இனிய வாழ்த்துக்கள் ஐயா
  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 15. சிறப்பான நிகழ்வு பற்றியும் தஞ்சாவூர் கவிராயர் பற்றியும் இங்கே சொன்ன விஷயங்கள் நன்று. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 16. நேரில் வந்து செவி மடுத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

  பதிலளிநீக்கு
 17. அண்ணா மிகச் சிறப்பு அண்ணா. இலக்கியம் என்ன செய்யும் என்பதற்குச் சொல்லி இருக்கும் ஒவ்வொரு கருத்தும் கவி அழகுடன் அருமை. இதை மேற்கோள் காட்டி கருதிட வேண்டும் என்று தோன்றியது பலவாக இருப்பதால் முயற்சியைக் கைவிட்டேன். வானவில் யானை மரத்தை படிக்கவேண்டும் ஆஹா மகிழ்ச்சி அண்ணா.
  சிறந்த எழுத்துக்காரரையும் ஓவியரையும் அறிமுகப்படுத்தியப்
  பகிர்விற்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 18. சிறப்பான மனிதர்களைப் பற்றிய சிறப்பானதொரு பகிர்வு ஐயா.

  பதிலளிநீக்கு
 19. கவிராயரையும் ஓவியரையும் அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் பேரனுக்குக் கற்பனை வளமுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்துக்காரரின் பெயரன் ஐயா அவர்
   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

   நீக்கு
 20. வாசிக்க வாசிக்க மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில் இலக்கியம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். சென்ற இடத்தில் உங்கள் மனதில் பதிந்த பதிவை அழகாக எங்களுக்கு தந்திருக்கின்றார்கள். வாசிக்கின்ற போது எழுத்துக்காரன் அவர்கள் கூறிய அத்தனையும் அற்புதமாக இருந்தது நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 21. இலக்கியத்தை விரும்ப வைக்கும் பதிவு
  சிறப்பு
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 22. புத்துணர்வுப் பதிவு.

  பதிலளிநீக்கு
 23. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

  எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

  பதிலளிநீக்கு
 24. இலக்கிய மனமா தத்துவ மனமா
  ஆசிரியர் சொன்னால் சரி என்பதே நல்ல தத்துவம்..

  பதிலளிநீக்கு
 25. நல்ல இலக்கியத் தகவல்கள்.பயன் மிகுந்தவை.

  உடுவை.எஸ்.தில்லைநடராசா..இலங்கை.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு