26 மார்ச் 2020

ஜகன் மோகினி
     ஆண்டு 1907

     அந்தப்  பெண் குழந்தைக்கு வயது ஐந்து அரை.

     அன்று காலை முதலே வீடு அமர்க்களப்பட்டது

     அந்தக் குழந்தையை குளிக்க வைத்து, புதிய பட்டுப் பாவாடை அணிவித்தார்கள்.


     தலையில் இருந்த கொஞ்ச முடியினையும் கொண்டையாய் மாற்றினார்கள், பூச்சசூடி அலங்கரித்தார்கள்.

     உடல் முழுவதும் விதவிதமாய் நகைகளை அணிவித்தார்கள்

     குழந்தைக்கு மகிழ்ச்சி தாளவில்லை

     வெளியில் இருக்கும் தன் தோழிகளிடம், புதுப் பாவாடையினையும், அலங்காரத்தையும் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை

     வெளியே ஓடினார்

     சித்தியோ தடுத்தார்

     இப்படியெல்லாம் வெளியில் ஓடக்கூடாது. மனைக்கு கூப்பிடும்வரை, அந்த அறையிலேயே, நல்ல பிள்ளையாய் அமர்ந்திருக்க வேண்டும். புரிந்ததா?

     போங்கோ சித்தி, எவ்வளவு நேரம்தான் உள்ளேயே இருப்பது எனச் சிணுங்கினாள் அந்தச் சிறுமி.

     அன்று அந்தக் குழந்தைக்குத் திருமணம்.

---
     ஆண்டு 1925

     அது ஒரு தொடர் வண்டி நிலையம்

     கூட்டம் நிரம்பி வழிந்தது

     தொடர் வண்டியில் ஏறிப் பயணிக்க வந்தவர்கள் அல்ல, இவர்கள்.

     ஜகன் மோகினிக்காகத்தான் இவ்வளவு கூட்டமும்

     ஜகன் மோகினி யார்?

     நடிகையா?

     நடிகையைப் பார்க்கவா இவ்வளவு கூட்டம்?

     இல்லை

     ஜகன்மோகினி நடிகையே அல்ல

     பின் யார்?

     யார் என்ற கேள்வியே தவறு

     யார்? அல்ல எது?

     ஜகன்மோகினி என்பது அக்காலகட்டத்தில் வெளியான, மாதாந்திர இதழ்

     ஆம்

     ஜகன்மோகினியின் அம் மாதத்திற்கு உரிய இதழ், தொடர் வண்டி மூலம் இவ்வூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

     

ஜகன்மோகினியில் வெளியாகிக் கொண்டிருந்த ஒரு தொடர் கதையைப் படிப்பதற்காக, அந்த இதழினை வாங்கத்தான் இந்தக் கூட்டம்.

      தமிழகத்தின் ஒவ்வொரு தொடர் வண்டி  நிலையத்திலும், அன்று இதுதான் நிலை.

     ஒவ்வொரு மாதமும் இதுதான் நிலைமை.

     வைதேகி

     துப்பறியும் தொடர்

     அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற ஆவலைத் தூண்டும் தொடர்

     போன மாதம் படித்தது, வைதேகிக்கு என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ என்பதை அறிய, பதைபதைப்புடன் இக்கூட்டம் காத்திருக்கிறது

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

     மக்கள் மனதில் இப்படி ஒரு ஆர்வத்தை, கிளர்ச்சியை கிளறிவிடும் வல்லமை ஒரு தொடருக்கு இருக்குமா எனும் கேள்வி எழுகிறதல்லவா?

     அக்காலத்தில், இந்தத் தொடருக்கு அந்த வல்லமை இருந்திருக்கிறது

     கதை அப்படி

    கதையினை நகர்த்திச் செல்லும் எழுத்து அப்படி

     சரி, யார் இதன் ஆசிரியர்?

     ஆசிரியர் அல்ல ஆசிரியை

     பெண் எழுத்தாளர்

     என்ன? 1925 ஆம் ஆண்டில் பெண் எழுத்தாளரா?

     ஆம், இப்படி ஒருவர் இருந்திருக்கிறார்

     ஐந்தரை வயதில் திருமணமாகி, புகுந்த வீடு புகுந்த, இந்தப் பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே, பிறருக்குக் கதை சொல்லுவதில் ஓர் ஆர்வம்.

     தான் புகுந்த வீட்டில் இருந்த சிறுவர்களுக்கும், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும், தன் கற்பனையில் தோன்றிய கதைகளை, அருகில் இருந்து பார்த்தது போல் சுவைபட எடுத்துரைப்பார்.

     சிறுவர்கள் வாயைப் பிளந்தவாறு கதையை ரசிப்பார்கள்

     ஆண்டுகள் செல்லச் செல்ல, இந்தப் பெண்ணுக்கு ஓர் ஆசை

     நாமே ஒரு கதையை எழுதினால் என்ன?

     கதையை மனதிலேயே, ஒவ்வொரு காட்சியாக, தொடக்கம் முதல், முடிவு வரை தயார் செய்தார்.

     ஆனால் எழுதத்தான் வழியில்லை

     ஏன்?

     இந்தப் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியாது

     தெரியவே தெரியாது

     பக்கத்து வீட்டுப் பெண்ணாணப் பட்டம்மாளை உதவிக்கு அழைத்தார்

     இவர் சொல்லச் சொல்ல, பட்டம்மாள் எழுதினார்

     இந்திர மோகனா

     1924 ஆம் ஆண்டு நாடகக் கதையான இந்திர மோகனா அச்சு வாகனம் ஏறியது

     படித்தவர்கள் அனைவரும் பாராட்டினர்

     அருமை, அற்புதம்

     இரண்டாவது நாவல் மனதிலேயே தயாரானது

     வைதேகி

     ஆனாலும் உடனே எழுதிடவில்லை

     இப்பெண்ணின் மனதில் ஒரு வைராக்கியம்

     எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு, தன் கைபடவே, தன் நாவலை எழுத வேண்டும் என்ற ஓர் உந்துதல்

     மிகவும் குறுகிய காலத்திலேயே எழுதப் படிக்கக் கற்றார்.

     தன் கைபடவே, இரண்டாவது நாவலை எழுதினார்

     வைதேகி

     தொடராய் வெளிவந்து, மக்களின் மனங்களைக் கொள்ளை அடிக்கத் தொடங்கியது

     அதுநாள் வரை, அச்சிட்டும் விற்பனையாகாமல், தேங்கிக் கிடந்த, ஜகன் மோகினி பத்திரிக்கையினை இவரே விலைக்கு வாங்கினார்.

     அந்தப் பத்திரிக்கையினை மாத இதழாக மாற்றினார்.

      தன் தொடர்கதையோடு அந்த இதழினை வெளியிட்டு, நிலைமையினை தலைகீழாய் புரட்டிப் போட்டது

    அச்சிட அச்சிட இதழ்கள் பறந்து கொண்டே இருந்தன

     வியப்பினும் வியப்பாக இருக்கிறது அல்லவா?

     ஆனாலும் உண்மை

     இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

     சற்று மூச்சை இழுத்து விட்டுக் கொள்ளுங்கள்

     117 நூல்கள்

     இவர் யார் தெரியுமா?

     தமிழின் முதல் பெண் நாவலாசிரியர். துப்பறியும் கதைகளை எழுதிய முதல் பெண் எழுத்தாளர். சுதந்திரப் போராட்ட வீரர். சிறை பல கண்டவர். சிறந்த மேடைப் பேச்சாளர்.

     வெண்பா, விருத்தப்பா, குறட்பா யாப்பில் பாடல் புனைவதில் வல்லவர்.

     இவரது பெயரின் முன்னெழுத்து என்ன தெரியுமா?

     வை.மு

     நாமெல்லாம், தந்தைப் பெயரின் முதல் எழுத்தைத்தானே, முன்னெழுத்தாய் எழுதுகிறோம்.

     ஆனால் இவரோ, தான் புகுந்த வீட்டின் பெருமையைப் பறைசாற்ற, தன்னை படிக்கவும், எழுதவும், மேடையேறிப் பேசவும், சிறைசெல்லவும் உற்சாகப் படுத்திய, வைத்தமாநிதி முடும்பை குடும்பம் என்று போற்றப் பெற்ற, தன் புகுந்த வீட்டின் பெயரையே, தன் முன்னெழுத்தாக வைத்துக் கொண்டார்.

     வை என்றால் வைத்தமாநிதி

     வைத்தமாநிதி என்பது இவரது புகுந்த வீட்டின் குலதெய்வம்

     மு என்றால் முடும்பை

     முடும்பை இவர்களது குல தெய்வம் வசிக்கும் தலம்.


இவர்தான்
வை.மு.கோதைநாயகி

     நண்பர்களே, வை.மு.கோதைநாயகி பற்றியச் செய்திகளை, ஒரு பெரு நூலின், ஒரு கட்டுரையில் கண்டெடுத்தேன்.

     சங்ககாலம், காப்பிய காலம் தொடங்கி, இஸ்லாமியர் தமிழ், கிறித்துவத் தமிழ் எனத் தொடர்ந்து, இன்றைய கவிதை இலக்கியம்,, நாவல் இலக்கியம், நாடக இலக்கியம், பயண இலக்கியம், சிற்றிதழ்கள், ஊடகத் தமிழ் வரை சுவைபட அலசுகிறது இந்தக் கட்டுரை.

என்றுமுள தென்தமிழ்

     கட்டுரையின் பெயரே, கவித்துவமாக இருக்கிறதல்லவா. இதனை எழுதியவர் காவல் சீருடை அணிந்தத் தமிழறிஞர்.

முனைவர் த.செந்தில்குமார் அவர்கள்
காவல் கண்காணிப்பாளர்

இவரது அற்புத நூல்
பெரிதினும் பெரிது கேள்.