ரேகை.
     சில நேரங்களில், அலுவல் காரணமாக, கையெழுத்துப்
போடுங்கள் என்று சொல்லும் பொழுது, சிலர் வெட்கித் தலைகுணிந்து, எனக்கு எழுதப் படிக்கத்  தெரியாதுங்க என்று கூறி, இடது கை கட்டை விரலை
நீட்டுவதைப் பார்த்திருப்போம்.
     ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
     மெத்தப் படித்தவர்களைக் கூட ரேகைதான் வைக்கச்
சொல்லுகிறோம்.
     பத்திரப் பதிவா, ரேகை வையுங்கள்.
     அரசு அலுவலகங்களில், பள்ளிக் கூடங்களில், தொழிற்
சாலைகளில், தொழில் நுட்பப் பூங்காக்களில், காலையிலும், மாலையிலும், ஒரு ஆளறிக் கருவில்,
நம் விரலை அழுத்தி வணக்கம் சொல்லிவிட்டுத்தான், உள்ளே செல்ல வேண்டும், அல்லது வீட்டிற்குத்
திரும்ப வேண்டும்.
     ரேகை.
     விரல் ரேகை என்பது மனித உடலின் அற்புதம்.
     கை விரல், உள்ளங்கை, பாதம் பகுதிகளில் ரேகைகள்
இருக்கும்.
     உலகில் உள்ள, எந்த இரு மனிதருடைய ரேகையும் ஒன்றாக
இருக்கவே, இருக்காது.
     ஒருவர் கையெழுத்தை, மற்றவர் முயன்றால் போட்டு
விடலாம்.
     ஆனால் ரேகையிடம், இந்த பாட்சா பலிக்காது.
     விரல் ரேகைகள் தனித்துவமிக்கவை என்று ஆணித்தரமாக
நிரூபித்தார்.
     இதனால்தான் இவர், விரல் ரேகை அறிவியலின் தந்தை
என்று போற்றப்படுகிறார்.
     1857 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய,
ஹெர்ஷல் என்பவர்தான், கல்கத்தாவில், முதன்
முறையாக, ஓர் ஒப்பந்தக்காரரிடம், கையெழுத்திற்குப் பதிலாக விரல் ரேகைகளைப் பதிவு செய்யச்
சொன்னார்.
     1857 முதல் இந்தியச் சுதந்திரப் போர் எனப்படும்
சிப்பாய் புரட்சி வெடித்த காலம்.
     கொழுப்பு தடவிய தோட்டா, புரட்சியாய் வெடித்த
நேரம்.
     ரேகை வைக்கச் சொன்னால் எது வெடிக்குமோ எனப் பயந்தார்.
     எனவே, இந்தியர்களைக் கொண்டே, இதற்கான மையினைத்
தயாரிக்க முனைந்தார்.
     புகை கரியில், பருத்திக் கொட்டை எண்ணெய் கலந்து,
விரல் ரேகை பதிக்க, கருப்பு மை தயாரித்தாரே தவிர, நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டார்.
     1891 ஆம் ஆண்டு சர் எட்வர்ட் ஹென்றி என்பவர், வங்காளத்தில் ஐ.ஜி யாக இருந்தபோது, ஹெர்ஷல்
முறையைப் பின்பற்றி, தேயிலை, காப்பித் தோட்டத் தொழிலாளர்களின் அடையாளங்களைக் கண்டறிய,
விரல் ரேகைகளைச் சேமிக்கும் முறையைத் தொடங்கினார்.
     இதன் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்
என நம்பினார்.
     முதன் முதலாக அதிகாரப் பூர்வமாக, விரல் ரேகைகளைச்
சேகரித்தல், பாதுகாத்தல், குற்றவாளிகளை அடையாளம் காணப் பயன்படுத்துதல், எங்கு, எப்போது
தொடங்கியது தெரியுமா?
     முதன் முதலாகத் தமிழ் நாட்டில்தான் தொடங்கியது.
     1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12 ஆம் நாள், சென்னையில்,
குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர், திரு சுப்பிரமணிய
ஐயரின் முயற்சியால், குற்றவாளிகளின் விரல் ரேகைகளைப் பதிவு செய்து வகைப்பாடு செய்யும்
முறை அறிமுகப்படுத்தப் பட்டது.
     12.6.1897 இல்தான் கல்கத்தா காவல் துறையில் அறிமுகப்படுத்தப்
பட்டது.
     உலகிலேயே மிகப்  பெரிய சக்தி வாய்ந்த அமைப்பாகக் கருதப்படும், பிரிட்டன்
ஸ்காட்லாண்ட் யார்டில், 1901 ஆம் ஆண்டுதான் ரேகைப் பிரிவே தொடங்கப் பட்டது.
     அமெரிக்காவிலோ 1903 ஆம் ஆண்டுதான் ரேகைப் பிரிவு
நடைமுறைக்கு வந்தது.
     வியப்பாக இருக்கிறதல்லவா?
     விரல் ரேகை பற்றிய அரிய செய்திகளையும், சங்க
இலக்கியங்களில் காவல் துறை தொடர்பாக இடம் பெற்றுள்ள செய்திகளையும், இன்றைய நமது காவல்
துறையின் அமைப்பினையும், காவல் துறையில் நுழைவதற்கான வழி முறைகளையும் தெள்ளத் தெளிவாய்
எடுத்துரைக்கும் கட்டுரை ஒன்றினைப் படித்து மகிழ்ந்தேன்.
காலந்தோறும் காவல்
துறை
இக்கட்டுரையினை எழுதியவர் காக்கிச் சட்டைக்குச் சொந்தக்காரர்
முனைவர் த.செந்தில்குமார்
அவர்கள்,
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர்
இவரது, இக்கட்டுரையினைத் தாங்கிய அற்புத நூல்
பெரிதினும் பெரிது
கேள்.




 
