04 மே 2020

செந்தமிழ் அரிமா

கெடல் எங்கே தமிழின் நலம்? – அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க

என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்குத், தன் வாழ் நாள் முழுவதும் உயிர் கொடுத்தவர் இவர்.

     தமிழுக்குத் தீங்கு எனில், நரம்பெல்லாம் இரும்பாகி, நனவெல்லாம் உணர்வாகக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்தவர் இவர்.


     நாம் அனைவரும் தமிழைத் தாய் என்றுப் போற்றிக் கொண்டாடுகிறோம். ஆனால் இவரோ தமிழைத் தன் குழந்தையாகவே கருதினார்.

     தன் பிள்ளைக்குச் சாலையில் செல்லும் ஊர்திகளாலோ, முரடர்களாலோ, நோய்களாலோ, இனப் பகைவராலோ தீங்கு வந்துவிடக் கூடாதே என்னும் பதைபதைப்புடன், ஒரு தாய், தன் பிள்ளையை அரணிட்டுக் காப்பது போலவே, இவர் எந்நேரமும் தமிழைக் கண்ணும் கருத்துமாய் காக்கும் பொறுப்பை மேற்கொண்டவர்.

     ஆய்வுலகிலோ, ஆட்சியிலோ, மக்கள் மன்றத்திலோ எங்கேனும் தமிழுக்குத் தீங்கு வந்துவிடக் கூடாது என்னும் விழிப்புணர்வுடனும், தீங்குற்ற நேரத்தில் முந்திச் சென்றும், தமிழின் நலனைக் காக்கும் பணியில் ஈடுபடுவதே, தம் பணியெனக் கருதி வாழ்ந்தவர் இவர் என்று உணர்வு பொங்கக் கூறுவார் உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை.

     பள்ளிப் பருவத்திலே, இவருக்குத் தமிழமுதின் சுவை காட்டியப் பெருமகனார், தமிழாசிரியர் சாமி.சிதம்பரனார் அவர்களாவார்.

     இவர் ஊட்டிய தனித் தமிழ் உணர்வும், சுயமரியாதை வீறுணர்ச்சியும், பசுமரத்தாணியாய், இவரது உள்ளத்தைப் பற்றிக் கொண்டன.

     தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்று அரசர் கல்லூரியில், புலவர் வகுப்பு மாணவராய் பயின்ற போது, தன் பேராசிரியரோடு தமிழுரிமைப் போர் நடத்தியவர் இவர்.

     பேராசிரியர் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார்

     இவரது தமிழாசிரியர்

     தமிழாசிரியர் மட்டுமல்ல, கல்லூரியின் முதல்வரும் இவரே.

     இவர் தமிழும், சமஸ்கிருதமும் கற்றுத் தேர்ந்தவர்.

    இருப்பினும், சமஸ்கிருதத்தின் மேல் அதிகப் பற்று கொண்டவர்.

     வகுப்பிற்குத் தொல்காப்பியப் பாடம் நடத்த வந்த சாஸ்திரியார், வடமொழி இலக்கணங்களின் வழி நின்றே, தொல்காப்பியம் இயற்றப் பெற்றது எனக்கூறிய போது, சிங்கமெனச் சிலிர்த்து எழுந்து எதிர்வாதம் புரிந்தார்.

     சாஸ்திரியார் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டிருப்பதையும் அறிந்தார்.

     வடமொழிச் சார்புடையவர், தன் மொழிபெயர்ப்பிலும், வடமொழியைத் தூக்கிப் பிடித்திருப்பதை அறிந்தார்.

     அன்றே, தன் மாணவப் பருவத்திலேயே, ஒரு முடிவெடுத்து, தொல்காப்பியத்தின் தனிச் சிறப்பை உணர்த்தும் வகையில், தொல்காப்பியத்தை  தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அகிலமெங்கும் தமிழின் பெருமையைப் பரப்புவேன் என்று சூளுரைத்தார்.

     அன்றுமுதல் தொல்காப்பியக் கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தொடங்கினார்.

     உரையாசிரியர்களை ஊன்றிப் படித்தார்.

     கால்டுவெல் இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஆங்கில நூலைக் கரைத்துக் குடித்தார்.

Origin and Growth of Tamil Language

தமிழ் மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்

     இதுதான் இவரது எம்.ஓ.எல்., பட்ட மேற்படிப்பிற்கான ஆய்வு நூலாகும்.

     எம்.ஓ.எல்.,

     இன்று பி.ஏ., எம்.ஏ., என தமிழும் ஆங்கிலமும் படிக்கலாம்.

     ஆனால் அன்று தமிழ் படிக்க வேண்டுமானால், பி.ஓ.எல்., மற்றும் எம்.ஓ.எல்., தான் படித்தாக வேண்டும்.

     பி.ஓ.எல்., பட்டப் படிப்பு

     எம்.ஓ.எல்., பட்ட மேற்படிப்பு

     பி.ஓ.எல்., என்றால் Bachelor of Oriental Language

     எம்.ஓ.எல்., என்றால் Master of Oriental Language

     எம்.ஓ.எல்., முடித்தபின், முனைவர் பட்ட ஆய்விற்காக இவர், சமர்ப்பித்த ஆய்வேட்டின் தலைப்பு என்ன தெரியுமா?

Tholkappiam in English with Critical Studies

ஆங்கிலத்தில் தொல்காப்பியம் விமர்சன ஆய்வு

     மாணவப் பருவத்தில் எடுத்த சபதத்தில் வென்று வாகை சூடினார்.

     தொல்காப்பியர் காலம் கி.மு. ஆயிரத்திற்கும், கி.மு., அறுநூற்றுக்கும் இடைப்பட்ட காலமாகும். கி.மு., ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

     தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் சமஸ்கிருதச் சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே.

     தமிழ் எழுத்துமுறை சமஸ்கிருத்தில் இருந்து கடன் வாங்கப்படவில்லை.

     ஆரியர் வருகைக்கு முன்னரே, தமிழ் மொழி, எழுத்து முறையும், இலக்கணச் செப்பமும், இலக்கிய வளமும் பெற்றிருந்தது.

     பிறப்பினால் கூறப்படும் சாதி என்னும் வேறுபாடு, தொல்காப்பியர் காலத்தில் இல்லை.

     தொல்காப்பியர் காலத்துக் கல்விமுறையானது, பொதுக் கல்வி, தொழில் முறைக் கல்வி, ஆராய்ச்சி என்னும் மூன்று நிலைகளில் இருந்தது.

     இவையெல்லாம், இவர் தன் ஆய்வின் வழி நிரூபித்த, முடிவுகளில் ஒரு சிலவேயாகும்.

     அன்றைய தமிழக முதல்வராக இருந்த, அறிஞர் அண்ணாதுரை அவர்கள், ஏல் பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று, அமெரிக்கா செல்லும் வழியில், ரோம் நகரில், அன்றைய போப்பாண்டவரைச் சந்தித்தது சிலருக்கு நினைவிருக்கலாம்.


இச்சந்திப்பின்போது, அறிஞர் அண்ணாதுரை அவர்கள், அருள்மிகு போப்பாண்டவருக்கு, பெருமிதத்துடன், தமிழ் நாகரிகத்தின் பெட்டகமாகத் திகழும் இந்நூலை, வாடிகன் நூலகத்திற்கு , அன்பளிப்பாய் அளிக்கிறேன் என்று தன் கைப்பட எழுதி, போப்பாண்டவரிடம், வழங்கியது, இவரது முனைவர் பட்ட ஆய்வு நூலைத்தான்.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     நண்பர்களே இவர் யார் தெரியுமா?

     எழுதுதற்கு ஏடும், பேசுதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ் பரப்ப, என்று முழங்கியவர்.

     இவர் 1936 ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை, ஆசிரியர், பேராசிரியர், முதல்வர்  எனப் பல நிலைகளில் பணியாற்றியவர்.

     இவர் பணியேற்ற நாள்முதல், ஓய்வு பெற்றதுவரை, எந்த நிறுவனத்திலும், ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்குமேல் பணியாற்றியதே இல்லை.

     காரணம், இவரது தமிழ் வளர்ச்சிக்கானப் போராட்டம்.

     இதனாலேயே  இவர், தன் பணிக்காலம் முழுவதும், அந்த ஊர், இந்த ஊர் என பந்தாடப்பட்டவர்.

     ஆனாலும் ஒருபோதும் அசராதவர்.

     பள்ளிகளில் தமிழ் வகுப்புகளில் மாணவர்கள், Present Sir என ஆங்கிலத்தில் வருகைப் பதிவினை வழங்கிக் கொண்டிருந்த நிலையினை மாற்றி, உளேன் ஐயா என்று தமிழில கூறும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர்.

     திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தபோது, அரசு இலட்சினையில் இருந்த சத்ய மேவ ஜயதே என்னும் தொடரை அகற்றி, வாய்மையே வெல்லும் என்னும் தொடரை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தியவர்.

     தமிழின எழுச்சிக்குத் தந்தை பெரியாரையும், தமிழ் மறுமலர்ச்சிக்கு மறைமலை அடிகளாரையும், தனது இருபெரும் தலைவர்களாய் போற்றிச் செயலாற்றியவர்.

     இருபத்து ஐந்திற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர்.

     தான் பணியாற்றச் சென்ற இடங்களில் எல்லாம், சிற்றிதழ்களை நடத்தியவர்.

     இவரது இயற்பெயர் இலட்சுமணன்.

     இவரது தமிழாசிரியர் சாமி.சிதம்பரனார் அவர்கள் இவர் பெயரை மாற்றினார்.

     இலக்குவன்

இவர்தான்,


இலக்குவனார்
செந்தமிழ் அரிமா, பேராசிரியர் இலக்குவனார்.

     இத்தமிழ்ப் பெருமகனாரைப் பற்றிய எண்ணற்ற அரிய செய்திகளை, ஒரு மின்னூலில் படித்து வியந்தேன்.

தமிழியக்கத் தலைமைப் பேராளி இலக்குவனார்

இந்நூலைத் தொகுத்து வழங்கியிருப்பவர்,
பேராசிரியர் இலக்குவனாரின் திருமகனார்


மறைமலை இலக்குவனார்
    
செந்தமிழ் அரிமா- ஒலிப் பேழை

32 கருத்துகள்:

 1. அறியாதவைகளை நிச்சயம் அறிந்திருக்க வேண்டியவைகளை அழகுறச் சொல்லிச் செல்லும் தங்கள் பாங்கு அருமையிலும் அருமை...வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் எத்தகைய சான்றுகள் தந்தாலும், இன்றைய சமூகம் ஏற்றுக் கொள்ளாது ஐயா...

  பலவற்றை எழுதி நீக்கிய பின், மேல் உள்ள கருத்து மட்டும் இடுகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா
   இன்றைய நிலை இப்படித்தான் இருக்கிறது
   ஆனாலும் நிலைமை ஒரு நாள் நிச்சயம் மாறும் ஐயா

   நீக்கு
 3. தமிழை நேசித்தவருக்கு பிற மொழிகளின் மேல்வெறுப்பு இருந்ததா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை ஐயா
   பிறமொழிக் காழ்ப்புணர்ச்சி இல்லாதவர் ஐயா
   நன்றி

   நீக்கு
 4. மறைமலை இலக்குவனார் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 6. வியப்பாக... இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 7. விந்தை மாமனிதரைக் குறித்த வரலாறு அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 8. சுமார் 90 கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றிற்கு B.A தான் இருந்ததாகவும் B.Sc என்பது பிற்பாடு வந்ததாகவும் எனது பாட்டனார் கூறுவார்.
  இன்று MOL என்ற புதிய செய்தியை தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே
   தமிழ் படிக்க வேண்டுமானால் பி.ஓ.எல்., எம்.ஓ.எல்.,
   மற்ற பாடங்கள் அனைத்திற்கும் பி.ஏ., தான்
   பி.எஸ்ஸி., பின்னர் அறிமுகமானப் பட்டம்
   நன்றி நண்பரே

   நீக்கு
 9. ஐயா, தமிழ்ப் போராளி இலக்குவனார் அவர்கள் பற்றிய உங்கள் கட்டுரை மிகச் சுவை!

  ஐயா அவர்களின் திருமகனார் உயர்திரு.திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களோடு சிறியேனுக்குப் பல ஆண்டுகளாக நல்ல பழக்கம் உண்டு. என் வலைப்பூவிலும் ஒவ்வோர் ஆண்டுப் பிறந்தநாள் பதிவிலும் அவருக்கு நான் நன்றி நவில்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த அளவுக்கு, நான் இணையத்துக்கு வந்த புதிதிலிருந்து என்னைத் தொடர்ந்து ஆதரித்தும் எனக்கு வழிகாட்டியும் வருபவர் அவர்.

  செந்தமிழ் அரிமா இலக்குவனார் அவர்கள் புகழ் பெரியது! அவற்றை நாம் ஒரு கட்டுரைக்குள் முடித்து விட இயலாது. ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் அவர்களின் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு அறிவிக்க இவரே முன்னோடி. அது மட்டுமில்லை, தமிழுக்காகப் போராடிச் சிறை சென்ற ஒரே ஆசிரியர் எனும் பெருமையும் இவருக்கு உண்டு. நீங்கள் பரிந்துரைத்திருக்கும் அவரைப் பற்றிய நூலைப் படித்தால் இவை போல் பல செய்திகளை நம் மக்கள் அறியலாம்.

  ஐயா அவர்களைப் பற்றித் தங்கள் தளத்தில் படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன ஐயா.
   ஐயா அவர்களின் திருமகனாரோடு தங்களின் பழக்கம் குறித்து நான் அறிவேன்.
   மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களைப் பற்றிய ஒரு செய்தினைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா. தாங்கள் தவறாக நினைக்க வேண்டாம்.
   மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களின் பாடலை, தமிழ்த் தாய் வாழ்த்தாக, 1913 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்து, தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரப்பிய பெருமை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையே சாரும் ஐயா.
   நீராருங் கடலுடுத்த என்னும் எனது பதவின் சுட்டியினை கொடுத்துள்ளேன். தங்களுக்கு நேரம் கிட்டும்போது, பார்க்கவும்.
   https://karanthaijayakumar.blogspot.com/2012/07/blog-post_30.html

   நீக்கு
  2. ஐயா! தங்கள் புதிய தகவலுக்கு மிக்க நன்றி என்பதைத் தெரிவிக்கும் முன் சிறியேனிடம் நீங்கள் இவ்வளவு பணிவாகச் சொல்லாடுவது குறித்து என் வருத்தத்தையும் அதை விடப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் மிகவும் எளியவன், படிக்காதவன். ஆசிரியப் பெருமகனாரான தாங்கள் "தவறாக நினைக்க வேண்டா" போன்ற சொல்லாடல்களை என்னிடம் பயன்படுத்தத் தேவையேயில்லை. நீங்கள் சொன்னால் நான் கேட்டுக் கொள்வேன். மிக்க நன்றி!

   நீக்கு
 10. விந்தை மனிதர் பற்றி அறிந்து கொண்டோம்.

  பதிலளிநீக்கு
 11. பேராசிரியர். மறைமலை.இலக்குவனார் பற்றி பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி. அன்று அவர் உள்ளேன் ஐயா, வாய்மையே வெல்லும் என்று தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்திருந்தார். இன்று நம்மவர் சிலர் தமிழ்மொழியிலுள்ள அழகான அருமையான சொற்களை மறந்து மறைத்து பிறமொழிச் சொற்களைப் புகுத்துவதை காண கவலையாக உள்ளது. உடுவை.எஸ்.தில்லைநடராசா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று நம்மவர்கள் தமிழ் மொழியின் இனிமையை செழுமையை மறந்து பிறமொழிச் சொற்களைப் புதுத்துவது வேதனைதான் ஐயா
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

   நீக்கு
 12. உங்கள் தளத்திற்கு தோன்றும் போது மட்டுமே வருவேன். காரணம் உங்கள் தளத்தில் புதிய எழுத்து நடை மற்றும் புதிய வார்த்தைகள் எனக்கு கிட்டும். சோர்வு வரும் போது கிடைக்கும் டானிக் போல. சில விசயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா, தங்களின் வார்த்தைகள் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன
   நன்றி ஐயா

   நீக்கு
 13. சிறப்பு
  தமிழ்ச் சமுகம் அறிய வேண்டிய மறைமலை இலக்குவனாரை உங்கள் வழியில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  தேடல் தொடரட்டும்

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு