13 மே 2020

கண்ணீர்த் தமிழ்
     பயணம்.

     மனித வாழ்க்கையே ஒரு பயணம்தான்.

     நாகரிகம் என்பதே நதிக்கரைகளைத் நோக்கியப் பயணத்தில்தான் தொடங்கியது.

     நிலத்தில பயணிப்பதற்கும், கடலில் பயணிப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.


     கடலில் பயணிப்பதற்குக் கடல் பற்றிய அறிவு வேண்டும்.

     கடல், மேலே காற்றால் சூழப்பட்டிருக்கிறது.

     கீழே தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது.

     அடி ஆழத்திலோ, எரிமலைகளாலும், பள்ளத்தாக்குகளாலும், மிகப்பெரிய அதிசயங்களாலும் சூழப்பட்டிருக்கிறது.

     இந்த மூன்று கூறுகளையும் நன்கு அறிந்திருந்தால் மட்டுமே கடலில் பயணிக்க முடியும்.

     உலக இனங்களிலேயே இரண்டே, இரண்டு இனங்கள்தான், இந்தக் கடலியற் கூறுகளை நன்கு அறிந்த, சிறந்த கடலோடிகளாக இருந்திருக்கின்றன.

     ஓர் இனம், பழங்காலத்திலே, மத்தியதரைக் கடல் பகுதியில் வாழ்ந்த பினிஷியர்கள்.

     மற்றொரு இனம், தமிழினம்.

     காற்று வீசும் திசையை அறிந்து, அந்தத் திசையில் கலத்தினைச் செலுத்தும் அறிவு பெற்றவர்களாக, ஆற்றல்  பெற்றவர்களாகத் தமிழர்கள் இருந்தனர்.

     கடலில் வீசும் காற்று, மேல்திசைக் காற்றா?, கீழ்த் திசைக் காற்றா?, தென்திசைக் காற்றா?, வடதிசைக் காற்றா?, என்பதை அறிந்து, பாய்மரத்தை விரித்து, அந்தந்த  நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

     கடல் ஆமைகள் எந்த திசையில் செல்கின்றன என்பதை அறிந்து, அதன் திசையிலே சென்று, நாடுகளுக்கான வழியினைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள்.

     தமிழர்களின் கடற்பயண வரலாற்றை மூன்றாகப் பிரிக்கலாம்.

     ஒன்று வரலாற்றுக் காலம். அதாவது சங்க காலமும், அதற்கு முன்பும் உள்ள காலம்.

     இரண்டாவது, கடற்புரத்தையேக் கட்டியாண்ட சோழர்கள் காலம்.

     மூன்றாவது, தமிழர்கள் கூலிகளாய் கடல் கடந்து சென்ற காலம்.

     வரலாற்று கால கட்டத்தில், தமிழர்கள், வணிகர்களாய் பல நாடுகளுக்குக் கடல் கடந்து சென்ற செய்திகளை பட்டினப்பாலை, புறநானூறு மற்றும் பெரும்பாணாற்றுப்படை விரிவாய் எடுத்துரைக்கிறது.

     அரபு நாடுகளில் இருந்து குதிரைகள் வந்தன.

     இங்கிருந்து நறுமணப் பொருட்கள் சென்றன.

     ரோமாபுரி, கிரேக்கம் முதலிய நாடுகளுக்குக் கருப்புத் தங்கத்தை எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு, உண்மைத் தங்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் தமிழர்கள்.

     மிளகு கருப்புத் தங்கம்.

     மிளகு, நறுமணப் பொருட்கள் மற்றும் மயில் தோகைகளைக் கொடுத்துவிட்டு, பதிலுக்கு, பண்டமாற்று முறையில் தங்கத்தைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்கள்.

     தமிழினத்தின் தங்க நுகர்வு கண்டு பதறிப்போன ரோமாபுரியும், கிரேக்கமும், ஒரு கட்டத்தில், தங்கத்தை விற்கத் தடையே போட்டது.

     இதன் பிறகு, தமிழினத்தின் பார்வை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பக்கம் திரும்பியது.

     குறிப்பாக பர்மா, மலேயா.

     இந்நாடுகளுக்கு சொர்ண தீபம் என்றே பெயர்.

     சொர்ணம் என்றால் தங்கம்.

     தீபம் என்றால் தீவு

     சொர்ண தீபத்தில் புதைந்து கிடந்த தங்கத்தை, கப்பலேற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

     இக்காலகட்டத்தில் வணிகர்களோடு தமிழும் சென்றது.

     நம் தமிழர்கள், தாங்கள் சென்ற ஊர்களுக்கு எல்லாம் தமிழ்ப் பெயர்களை வைத்தனர்.

     காளகம் என்று பெயர் வைத்தனர்.

     ஈழம் என்று பெயர் வைத்தனர்.

     கடாரம் என்று பெயர் வைத்தனர்.

     பதிலுக்கு அங்கிருந்த பல சொற்கள், தமிழகத்தில் தஞ்சம் அடைந்தன.

     தரைக்கும் கீழே இருக்கின்ற பகுதிக்கு, இன்றும் நாம் வைத்திருக்கும் பெயர் சுரங்கம்.

     இதன் மூலப் பெயர் சுருங்கை.

      கிரேக்கச் சொல்.

     இதேபோல் முருங்கை.

     வியப்பாக இருக்கிறதல்லவா, ஆம், முருங்கை மரம், முருங்கைக் காய், முருங்கை இலை, இவையெல்லாம் கடல் கடந்து வந்ததுதான்.

     இது முதலாவது காலகட்டம்.

     அடுத்தது சோழர்களின் காலம்.

     ராஜராஜனுடைய படைகள் ஈழம் நோக்கிச் சென்றன.

    முந்நீறு பழந்தீவு பன்னீராயிரத்தை வென்றன.

     இது இன்றைய மாலத் தீவாகும்.

     அன்று மாலத் தீவைச் சுற்றிலும், எண்ணற்ற சிறு சிறு தீவுகள் இருந்தன.

     இவையெல்லாம் காலப்போக்கில், கடலுக்குள் சென்று ஓய்வெடுக்கத் தொடங்கிவிட்டன.

     இந்தத் தீவுக் கூட்டத்தை, வானிலிருந்து பார்த்தால், ஒரு பருந்துப் பார்வையில் பார்த்தால், பல தீவுகள் ஒன்றிணைந்து, மாலை போலவே, மலர் மாலை போலவே காட்சி அளிக்குமாம்.

     எனவே இதற்கு மாலைத் தீவு என்று பெயர் வைத்தார்கள்.

     இதுவே இன்று மாலத் தீவு என்று ஆகிவிட்டது.

     முதலாம் இராஜேந்திரனின் படைகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஏறக்குறைய பத்து நாடுகளை வென்றன.

     இந்நாடுகளில் தங்கள் வீரத்தை, தங்கள் ஆளுமையை நிருபித்தார்களே தவிர, ஆட்சியை நிலைநிறுத்த நினைக்கவில்லை.

     தங்களுடைய வணிகத்திற்கு எதிராய் செயல்பட்டவர்களை, ஓங்கி மிதித்து நசுக்கவே சென்றார்கள்.

      இன்றும் மலேசியாவின் முக்கிய வீதியின் பெயர் ராஜா சுலான்.

     ராஜராஜ சோழன்தான் ராஜா சுலான்.

     இந்தோநேசியாவில் விஜய புரா, சாந்தி புரா

     சிங்கப்பூரின் பெயரே சோழர்கள் கொடுத்ததுதான்.

     சிங்க புரம்

     இதுவே சிங்கப்பூர் ஆயிற்று.

     பல தமிழ்ச் சொற்களை இன்றும் மலாய் மொழியில் கேட்கலாம்.

     அம்மாவை யம்மா என்பார்கள்.

     அப்பாவை பாபா என்பார்கள்.

     மாமா, அப்பம், மாம்பழம் ஆகியவற்றிற்கு இன்றும் இதே பெயர்கள்தான்.

     இக்கால கட்டத்தில் தமிழ் மட்டுமல்ல, தமிழர் பண்பாடும் பரவியது.

     மூன்றவது கால கட்டம் கூலி காலகட்டம்.

     ஆம், கூலி காலகட்டம்.

     எந்தக் கடற்புரத்திலே வணிகர்களாய் சென்றார்களோ, எந்தக் கடற்புரத்திலே, வீரர்களாய், வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டு, வேல்களையும் , வாள்களையும் ஏந்தி, கம்பீரமாய் பல நாடுகளைக் கைப்பற்றித் திரும்பினார்களோ, அதே கடற்புரத்திலே, அதே நாடுகளுக்கு, ஐயோ, என அழுது  கொண்டும், கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டும், சென்றதுதான் மூன்றாவது காலகட்டம்.

     கி.பி.17 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி முதல், கி.பி.20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில், பல இலட்சக் கணக்கானத் தமிழர்கள், பெரும் பஞ்சங்களில் இருந்துத் தப்பிக்க, கடல் கடந்து, ஏறத்தாழ 35 நாடுகளுக்கும், தீவுகளுக்கும் தொழிலாளர்களாய் சென்று குடியேறினர்.

     தமிழகத்தில் பஞ்சம் பெருகப் பெருக, மக்கள் சாகச் சாக, உணவின்றித் தவித்த மக்களையெல்லாம், கப்பலில் ஏற்றி, உலகெங்கும் கொண்டு சென்று கொட்டினார்கள்.

     அப்பொழுது தமிழர்களின் பெயர் கூலிகள்.

     தமிழர்களை ஏற்றிச் சென்ற கப்பலின் பெயர் கூலிக் கப்பல்.

     தமிழர்கள் குடியிருந்த பகுதி கூலிக் குடியிருப்பு.

     தமிழர்களுக்காக, அன்றைய ஐரோப்பிய முதலாளிகள் ஒரு புத்தகம் வைத்திருந்தார்கள். தமிழர்களோடு பேசுவதற்கான, தமிழ்ச் சொற்கள் அந்தப் புத்தகத்தில் இருந்தன.

     அந்தப் புத்தகத்தின் பெயர் கூலித் தமிழ்.

     இக்காலகட்டத்திலும், சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்கள், வணிகர்களாய், பல நாடுகளுக்குச் சென்ற போதிலும், பெரும்பாலும் கூலிகளின் வரலாறாகவே மாறிப்போனது இந்த மூன்றாவது காலகட்டம்.

     இதற்கு முந்தைய இரு காலகட்டங்களிலும் தமிழ்ச் சொற்கள் மட்டுமே சென்றன.

     இந்த மூன்றாவது காலகட்டத்தில், தமிழே சென்றது.

     இந்த காலகட்டத் தமிழர்களால்தான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களால்தான், இன்றும் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

     தேன் தமிழாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

     தமிழர்களை, வரலாற்றைப் பதிவு செய்யாதவர்கள் என்று சொல்வார்கள்.

     ஆனால் தமிழனின் சிறப்பே, வரலாற்றைப் பதிவு செய்ததுதான்.

     கூலிகளாய் சென்ற இத்தமிழர்கள், தங்கள் வாழ்வின், அனைத்து இன்னல்களையும், தங்கள் வாழ்வின் ஒவ்வொறு நாளையும், ஒவ்வொரு பொழுதையும், பாடல்களாய், நாட்டுப்புறப் பாடல்களாய்ப் பாடி பதிவு செய்திருக்கிறார்கள்.

     250 ஆண்டுகளைக் கடந்தும், இப்பாடல்கள், அன்றைய நிலையை, பஞ்சம் பிழைக்கச் சென்று, கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த, சோக வரலாற்றை, சோக கீதத்தை, இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

     காபி, தேயிலை, செம்பனை, கரும்பு எனப்படும் பணப்பயிர்கள் பெருகிய காலம்.

     இப்பயிர்களை விளைவிக்க, ஆங்கிலேயர்கள் கண்டெடுத்த கூலிகள்தான் நம் தமிழர்கள்.

ஊரான ஊரிருக்க
ஒத்த பனைத் தோப்பிருக்க
ஏண்டி வந்தோம்
கண்டிச் சீமை.

ஊரான ஊரிழந்தோம்
ஒத்தப் பனைத் தோப்பிழந்தோம்
பேரான கண்டியில
பெத்தத் தாயை நான் மறந்தேன்.

பாதையிலே வீடிருக்க
பழனிச்சம்பா சோறிருக்க
எருமைத் தயிரிருக்க
ஏண்டி வந்தோம்
கண்டிச் சீமை.

     தமிழர்களைக் கூலிகளாய், கப்பலில் இலங்கைக்கு அழைத்துச் சென்று, திருகோணமலையில் இறக்கி, அங்கிருந்து மன்னார் வரை, கண்டி வரை என நடக்க வைத்தே அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

     பஞ்சம் பிழைத்து வாழ்வாங்கு வாழப்போகிறோம் என்ற எண்ணத்துடன், பெரும் எதிர்பார்ப்புடன் சென்றவர்களுக்குக் கிடைத்ததென்னவோ,  பெரும் பஞ்சம்தான்.

     ஒவ்வொன்றையும் தமிழர்கள் பாடி வைத்திருக்கிறார்கள்.

     எந்தக் கப்பலில் சென்றார்கள்.

     எவ்வளவு பேர் சென்றார்கள்.

     அனைத்தும் பாடல்களில் இருக்கின்றன.

     தமிழர்கள், தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் பெயர் வைத்தார்கள்.

     தனித் தமிழில் பெயர் வைத்தார்கள்.

     இவர்கள் சென்ற பகுதி மேட்டுப் பகுதி.

     எனவே மலையகம் எனப் பெயர் வைத்தார்கள்.

     தேயிலைக்குத் தமிழர்கள் வைத்த பெயர் கொழுந்து இலை.

     கொழுந்து பறிக்கப் போகிறோம் என்பார்கள்.

     காவாத்து வெட்டப் போகிறோம் என்பார்கள்.

கூனி அடிச்ச மலை
கோப்பி கன்னு போட்ட மலை
அண்ணன் தோத்த மலை
அந்தாத் தெரியுது.

     இரு சிறுமிகள் விளையாடப் போகிறார்கள். காப்பிப் பயிரிட்ட ஒரு சிறுமியின் அண்ணன் அந்த மலையில் இறந்துபோய் விடுகிறான். இந்தச் செய்தியினை, விளையாடச் சென்ற சிறுமி, தன் தோழியிடம் கூறும் சோக கீதம்தான் இந்தப் பாடல்.

     விளையாடச் சென்ற சிறுமிகளிடம் கூடத் தமிழ் விளையாடி இருக்கிறது.

     சோகத்தின் சிகரங்களைத் தொடுபவை, இலங்கையின் மலையகப் பாடலகள்.

     மலேயாவிற்குச் சென்றவர்களின் சோகம், இதனையும் மிஞ்சும்.

வந்த கதை
வாழ்ந்த கதை
நம்ம வயிறு எரிஞ்சு போன கதை.

சுட்ட கருவாட்டுல
கஞ்சிய குடிச்சிக்கினு
காசு பணம் சேர்க்கலான்னு
கையிலடிச்சுக் கொண்டாந்தாங்க.

காசு பணம் சேரலங்க
கொய்னா தண்ணிய குடிக்கவும் வச்சாங்க
சஞ்சிக் கூலிகளுக்கு சொர்க்கம் காட்டத்தான்
புற மலையில் தள்ளினாங்க.

சொர்க்கமும் காணலைங்க
சொகுசும் காணலைங்க
கொசுவால குடிச்ச மிச்சம்
கொள்ளையிலும் போனாங்க.

     கொய்னா தண்ணீர் என்றால் மலேரியாவைக் கொண்டுவந்து உடலுக்குள் சேர்க்கும் அசுத்தத் தண்ணீர். கொசு குடித்தது போக இருந்த மீதி இரத்தத்தையும் கொள்ளை நோய் கொண்டு போனதாம். படிக்கும்போதே நெஞ்சு படபடக்கிறதல்லவா.

     நாகைப்பட்டினத்தில் இருந்து ஒரு நேர்க்கோடு போட்டால், மலேயாவில் சென்று நிற்கும்.

     நாகைப்ட்டினத்தில் இருந்து கப்பலேறிய நொடி முதல், மலேயா சென்று குடியேறி, தொழில் செய்து, உறவுகளை இழந்து, உயிரை இழந்து, பல இழப்புகளைச் சந்தித்தபோதும், தங்களுக்கு நேர்ந்த அத்துணை இழப்புகளையும், அத்துணை அவலங்களையும் பாடல்களாக, நாட்டுப்புறப் பாடல்களாகப் பாடி வைத்தனர்.

நாகப்பட்டினம் வந்தேண்டி
நம்மவரப் பார்த்தேண்டி
டெப்போவில் அடச்சி வச்சி
சரிபாதி புதைச்சாண்டி
பொலப்பெல்லாம் சிரிச்சதடி
பொல்லாப்பும் நிக்கலடி
அண்ட ஊட்டுக் கூழுக்கு
அஞ்சடி பத்தலடி.

     கடல் கடக்க, நாகை வந்து, டெப்போவில் அடைக்கப்பட்டு, பாதிபேர் காலரா நோக்குப் பலியாகிப் புதைக்கப் பட்டக் கொடுமையை கூடப் பாட்டாக்கி எழுதி வைத்திருக்கிறார்கள்.

பொய்சொல்லிக் கப்பலேத்தி
பொலப்பெல்லாம் போச்சுதுங்க
கருங்கடல் தாண்டி வந்து
கை கட்டி நின்னோமுங்க
கல்ப்பமும் உண்டென்று
கையேந்தி ஊமையானோம்.

     காலராவிற்குத் தப்பிக் கப்பலேறி, கடல் கடந்து வந்த தமிழர்கள் பட்ட சோகம், பெருஞ்சோகம்.

பவளக்கொடி தெருக்கூத்தில்
பபூன் வேஷம் போட்டவண்டி
பாண்டிச்சேரி கப்பலேறி
பினாங்கு சீமை பார்த்தவண்டி
எம்டன் குண்டு விழும் முன்னே
மெட்ராஸ விட்டவண்டி.

சோளத் தொட்டி பஞ்சத்துல
சோழபுரம் பூந்தவண்டி
வாந்தி பேதி காச்ச வந்து
வயிறு எரியச் செத்தாண்டி.

கப்ப மேல கப்ப விட்டு
கதறக் கதற ஏத்துணாண்டி

      வயிற்றுப் பிழைப்பிற்காக, அயல்நாடு புகுந்த தமிழர்கள், ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு பயிர் வைத்தார்கள்.

     காப்பி, தேயிலை, செம்பனை, ரப்பர் எனப் பயிரிட்டார்கள்.

அன்னை வளர்த்தது கொப்பரை
அப்பன் வளர்த்தது செம்பனை
அண்ணன் வளர்த்தது ரப்பரை
எங்கள் ஆயிரம் சகோதரிமார்கள்
குருதியில் ஆனதுதானடா தேயிலை.

     காப்பித் தேட்டத்தில் வேலைபார்த்தப் பெண்கள் வாங்கிய அடிக்கும், உதைக்கும் பஞ்சமேயில்லை.

     காப்பிப் பழம் ஒவ்வொன்றும் முக்கியம்.

     உடையாமல் பறித்து, இடுப்பில் தொங்கும் பையில் பத்திரமாய் பாதுகாக்க வேண்டும்.

      பறிக்கும் பொழுது, ஒரு பழம் கைதவறி கீழே விழுந்தாலும் உதைதான்.

கோணக் கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
பழம் ஒன்று தப்பிச்சின்னு
உதைச்சாய்யா சின்னதுரை
பூட்சு காலால உதைச்சாய்யா சின்னதுரை.

     ரப்பர் மரத்தை வளரவைத்து, ரப்பர் கொண்டுவர பால் எடுப்பது என்பது சாதாரண விசயமல்ல, கடினமாக காரியம்.

பாழுக்கு மரமெதற்கு
பார்க்கலாம் இங்கு வந்தால்
பாலுக்கு மரமிருக்கும்
பாங்கானக் காட்சியல்ல.

பால் என்றா சொன்னேன்
இல்லை இல்லை
மரத்தின் பட்டையினை வெட்டிவிட்டால் – கொட்டுவது
தமிழ்க் குருதி

     வேதனையாக இருக்கிறதல்லவா. இத்தகு கடினமாக வேலையினைப் பார்த்த தமிழர்களுக்குக் கூலி என்ன தெரியுமா?

பாலு மரம் வெட்டலான்னு
பழைய கப்பல் ஏறி வந்தேன்
35 காசப் போட்டு
மூட்டெலும்ப முறிக்கிறானே
45 காசப் போட்டு
நட்டெலும்ப முறிக்கிறானே.

     நாள் முழுவதும் பணியாற்றினால் கூலி, பெண்களுக்கு 35 பைசா, ஆண்களுக்கு 45 பைசா. ஆனால் இருவருக்கும் வேலை ஒன்றுதான்.

     நாடு விட்டு நாடு சென்று, நலமாக இருக்கலாம், வளமாக வாழலாம் என்று நம்பிச் சென்ற இவர்களுக்குக் கிடைத்ததோ அரை வயிற்றிற்குக் கூடப் போதவில்லை.

     பணி முடித்து வீடு செல்கிறார் ஒரு தாய். பிள்ளை அழுகிறது. தாயிடம் பாலில்லை. காரணம் வயிற்றில் உணவில்லை. உலையில் அரிசி பொங்கிச் சாப்பிட்டால்தான், தாய்க்குக் கொஞ்சமாவது பால் ஊறும். பிள்ளையின் பசி தீரும். பிள்ளையோ அழுகிறது. என்ன செய்வாள் தாய்? இத்துயரிலும் ஒரு பாடல் பாடுகிறார்.

ஆராரோ கண்ணே ஆராரோ
கண்ணே நீ உறங்கம்மா
மை கொண்டு வாராயோ
பொன்னே நீ அழுதா
பூ கொண்டு வருவாயோ.

பாலுந்தான் அடுப்பினிலே
பாலகன்தான் தொட்டிலிலே
பாலை இறக்குவனா
பாலகனை ஏந்துவனா

சோறுந்தான் அடுப்பினிலே
நான் பெத்த சுந்தரமோ தொட்டிலிலே
சோற்றை இறக்குவனா
என் சுந்தரத்தை ஏந்துவனா.

     அடிமேல் அடியாய், இடிமேல் இடியாய் வாழ்ந்த மலேயத் தமிழர்களின் வாழ்வில், மேலும் ஓர் இடி பேரிடியாய் வந்திறங்கியது.

     இரண்டாம் உலகப்போர்.

     மலேயா, ஜப்பானின் பிடிக்குள் சுருண்டு போனது.

     மூன்றே முக்கால் வருடம், நரகத்தினும் நரக வாழ்க்கை தமிழருக்கு.

     மலேயா, தாய்லாந்து, பர்மா வரையிலான ரயில்பாதை அமைக்கும் பணி தமிழர்களின் தலைமேல் வந்து விழுந்தது.

     தமிழர் அனுபவித்தத் துயரங்கள், கொடுமையின் உச்சத்தைத் தொட்டன.

வாராண்டி வாராண்டி
ஜப்பான் துரை

வரகரிசிக்கும் கூழுக்கும்
பரதேசியா மாத்துணாண்டி

சியாமுக்கு ஏத்திப்போய்
சீரழிய வச்சாண்டி
வாழத்தாரு நோட்டெல்லாம்
வதவழிய வச்சாண்டி

சுண்ணாம்பு சோறப்போட்டு
புண்ணாக்கி வச்சாண்டி

மூனே முக்கால் வருசத்துல
முக்காடும் போட்டாண்டி
தலைவெட்டி வச்சாண்டி
தறுதலயா ஆடுணாண்டி

ஏழைங்க வயிறெரிய
எவனுமே உருப்புடாண்டி.

     ஏழைகள் வயிறு எரிந்தால் எவனுமே உருப்பட மாட்டான் என்று சாபமிட்டபோதும், தமிழர்களின் வேதனை, நீடிக்கத்தான் செய்தது.

     கடல் கடந்து சென்றவர்களை, வாழ்வில் வசந்தம் வீசும் என்று நம்பிச் சென்றவர்களை, பஞ்சமெல்லாம் இனிப் பஞ்சாய் பறந்து போகும் என்ற எதிர்பார்ப்புடன், கடல் நீரில் மிதந்து சென்றவர்களை, கடவுள் கூட, கை விட்டபோதும், தமிழர்களோ, தங்கள் தாய்த் தமிழை ஒருபோதும் கை விடவேயில்லை.

     அடி, உதை கொடுமைகள், பாலியல் வன்முறைகள் என அனைத்தையும் பாட்டாய் பாடி வைத்தார்கள்.

     காற்றினிலே இவர்கள் எழுதிவைத்து விட்டுப் போனப் பாடல்கள் எல்லாம், 250 ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்துத்தான் நிற்கின்றன.

     உண்மைகளை உரத்து முழங்குகின்றன.

     அலை கடலைத் தாண்டிச் சென்ற தமிழர்களின் தமிழ், கன்னித் தமிழாக மட்டுமல்ல, கண்ணீர்த் தமிழாகவும், நம் இதயங்களை நனைக்கிறது.

---

     நண்பர்களே, கடந்த 31 திங்களாக, ஏடகப் பொழிவினைக் கேட்ட பொழுதில் எல்லாம், மனதில் ஓர் மகிழ்ச்சி எட்டிப் பார்க்கும்.

     தமிழர் குறித்த ஓர் எழுச்சி, ஒரு பெருமிதம், மணற்கேணியாய் உள்ளத்தில் ஊறும்.

     ஆனால், இப்பொழிவோ இனம் புரியாத வேதனையை, இதயத்தின் அடி ஆழத்தில் இறக்கி, கண்களைக் கடலாக்கி விட்டது.

ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவு.

     கடந்த 10.5.2020 ஞாயிறன்று, இணைய வழி, காணொலிப் பொழிவு, வீட்டிற்கே, காற்றின் வழி தவழ்ந்து வந்தது.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக,
அயல் நாட்டுத் தமிழ் கல்வித் துறைப்
பேராசிரியர், தலைவர்


முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் அவர்களின்,

திரை கடந்தும் தேன்தமிழ்
என்னும் தலைப்பிலானப் பொழிவு
உள்ளத்தில் பெரும் சோகத்தைக் கொண்டு வந்து கொட்டியது.

பொய் சொல்லிக் கப்பலேற்றி
பிழைப்பெல்லாம் போனபோதும்
கருங்கடல் தாண்டி வந்து
கைகட்டி நின்றபோதும்
கொசுவால் குடிச்ச மிச்சம்
கொள்ளை நோயால் போனபோதும்.

அடிபட்டு, உதைபட்டு, மிதிபட்டு
வன்புணர்வு செய்யப்பட்டு
வாழ்க்கையே இருண்டபோதும்
இறைவனே ஏளனமாய் பார்த்தபோதும்

பாடிக்காத பாமரராய் இருந்தபோதும்
வாழ்வியல் துன்பங்களைப் பாடலாய் வடித்து
நாட்டுப்புறப் பாடலாய் தொகுத்து
தமிழைக் காத்து வளர்த்த

இன்றும் தமிழைத் தமிழாய்ப் போற்றிவரும்
அயலகத் தமிழர்களை அறியவைத்த

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களுக்கு
என் வணக்கங்கள்.


46 கருத்துகள்:

 1. // தமிழனின் சிறப்பே வரலாற்றைப் பதிவு செய்ததுதான்... //

  இல்லையெனில் எப்போதோ அழிக்கப் பட்டு இருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 2. தமிழனின் வரலாறு கண்ணீராய், ஆறாய் பெருகி ஓடி இருக்கிறது.

  வரலாற்றை பதிவு செய்வதே தமிழனின் சிறப்பு உண்மையான வார்த்தை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழனின் துயரம் சொல்லி மாளாது
   வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 3. வாழ்வில் அடிமைஅள் ஆனவர்கள் மனதிலு அடிமைகளகவே இருந்தனரோ அடிமைப்பாட்டுகள்கேட்பது முதல் முறை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிப்பறிவில்லாத காரணத்தால், எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணி வாழ்ந்தவர்கள், ஏன் எதற்கு என்று யோசிக்க இயலாதவர்களாக இருப்பது இய்ல்பு தானே
   நன்றி ஐயா

   நீக்கு
 4. மிகவும் ரசித்துப் படித்தேன்.தேனூறும் தமிழ் என்றாலும்
  கண்ணீரும் கூடவே வருவதை
  தவிர்க்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 5. தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் கண்ணீரை வரவழைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 6. ///// தமிழனின் சிறப்பே வரலாற்றைப் பதிவு செய்ததுதான்... //

  இந்த வரிகள் உண்மைதான் ஆனால் இன்றைய தமிழனின் வரலாற்றை அதுவும் தமிழகத்தின் வரலாற்றை யாரும் பதிவு செய்திட வேண்டாம்


  அன்றைய தமிழகத்தில் அடிமைகளாக இருந்து உழைத்தார்கள்... ஆனால் இன்று உழைக்காமல் அடிமையாக இருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்
   உழைப்பினை மறந்து மதுவே கதியென்று கிடப்பது வேதனைதான்
   வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 7. மற்றவர்களின் வலைத்தளம் பார்க்கும் போது சில பதிவுகள் அருமையாக சில பதிவுகள் ஒகே என்றும் சில பதிவுகளை பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்று கடந்து செல்வோம் ஆனால் உங்கள் பதிவுகளை அருமை என்ற ஒரு வார்த்தையைய தவிர வேறு ஏதும் சொல்ல முடியாமல் மிக தரமாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்து மனதில் மகிழ்வினை ஏற்படுத்துகின்றது
   நன்றி நண்பரே

   நீக்கு
 8. மிகவும் அருமையான கருத்துரை, மிகச்சிறந்த பணி தங்களுடைய பணி மகிழ்ச்சி, நன்றி சார்

  பதிலளிநீக்கு
 9. தமிழர்கள் பட்ட கஷ்டங்கள். கடின உழைப்பு... எத்தனை விஷயங்கள் இந்தப் பதிவில்.

  வழமை போல மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழர் பட்டத் துயரங்கள் மனதை கனக்கத்தான் செய்கின்றன ஐயா
   நன்றி

   நீக்கு
 10. விரிவும் விளக்கமுமாக அழகிய தொகுப்பு. ஜெ குமாரின் நடை வைக்க மனம்வராமல் கடைசிவரிக்குக் கொண்டுவிட்டுவிடும். ஏடகநிழ்வை தொடர்ந்து தொகுக்கும் பணிக்காக மிக வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. அருமையாக பல தகவல்கள் அழகான பாடல்களுடன் பதிவு செய்யப் பட்டு்ளளன. தென்னிந்தியாவிலிருந்து தமிழர்கள் பொய்யாகச் சொல்லப் பட்ட வாக்குறுதிகளை நம்பி தலைமன்னனாருக்கு கடல் வழியாக வந்து அங்கிருந்து மலையகப்பகுதிகளுக்கு கால்நடையாகச் சென்று, தேயிலை இறப்பர் தோட்டங்களில் கூலிதொழிலாளார்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டதும் வரலாறு. அவர்களும் அனுபவித்த வேதனைகளை பாடலாகப் பாடியுள்ளார்கள்.
  உடுவை.எஸ்.தில்லைநடராசா-இலங்கை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்துணை துன்பம் பட்டாலும், அத்துணை துன்பங்களிலும் தமிழை மட்டுமே ஆதரவாகப் பிடித்துக் கொண்டு, தமிழை இன்றளவும் காத்து வரும், இலங்கைத் தமிழர்கள், மற்றும் அயலகங்களில் குடியேறியத் தமிழர்களைக் கையெடுத்து வணங்கிடத் தோன்றுகின்றது ஐயா
   நன்றி

   நீக்கு
 12. அருமையான நிறையத் தகவல்கள்.. பாதியை அடுத்த போஸ்ட்டில் போட்டிருக்கலாம், முருங்கை வெளிநாட்டு மரமோ அவ்வ்வ்வ்:))

  பதிலளிநீக்கு
 13. உள்ளக் கொதிப்பை ஓய்ந்தபோதும், தன்னிலை எண்ணி வருந்தும்போது பாடிய பாடல்கள் தமிழனின் அவலமா ஆவணமா

  ஆனால் ஈழத்தின் தேயிலை தோட்டத்தில் தோன்றிய அடிமைத்தனம் இன்னும் நீங்கவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடிமை உணர்வு நீங்காதது வேதனைதான் நண்பரே
   நன்றி

   நீக்கு
 14. உள்ளத்தை உருக்கும் பதிவு. முனைவர் குறிஞ்சி வேந்தனின் உழைப்பு பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
 15. ஒரு சிறந்த இயக்குனர் திரையில் எப்படி கதையை நகர்த்தி செல்ல வேண்டும் என்று தங்கள் எழுத்திலிருந்து பாடம் கற்க வேண்டும் நண்பரே.

  பதிலளிநீக்கு
 16. ஒன்று வரலாற்றுக் காலம். அதாவது சங்க காலமும், அதற்கு முன்பும் உள்ள காலம்.

  இரண்டாவது, கடற்புரத்தையேக் கட்டியாண்ட சோழர்கள் காலம்.

  மூன்றாவது, தமிழர்கள் கூலிகளாய் கடல் கடந்து சென்ற காலம்.

  மூன்று வருடங்கள் வேறு எந்த வேலையையும் எடுத்துக் கொள்ளாமல் அடிப்படை வருமானத்திற்கு குறைவு இல்லாமல், குடும்பம் நம்மை சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தால் போதும்.

  இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழின வரலாற்றை முழுமையாக கொண்டு வந்து விட முடியும். இந்தப் பதிவு மனதளவில் மிகப் பெரிய தாக்கத்தை சோகத்தை உருவாக்கியது. இதில் நீங்க குறிப்பிட்ட பல தகவல்களை நான் ஏற்கனவே விரிவாக என் பதிவில் எழுதி உள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா
   முனைவர் குறிஞ்சி வேந்தன் அவர்களின் பேச்சைக் கேட்டக் கேட்க மனதில் இனம் புரியா சோகம் வந்து அமர்ந்தது ஐயா.
   ஏற்கனவே ஈழம் குறித்து எழுதியுள்ளத் தங்களைப் போன்றவர்கள் களத்தில் இறங்கினால், தமிழினத்தின் முழு வரலாற்றையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிட முடியும் ஐயா
   நன்றி

   நீக்கு
 17. அகிலனின் 'பால்மரக் காட்டினிலே' என்ற நாவலை அண்மையில் மறுவாசிப்பு செய்தேன். கண்ணீர்த் தமிழையே அங்கு கண்டேன். மலேசியப் பின்னணி. இங்கு நீங்கள் பதிப்பித்திருக்கும் சொற்பொழிவு உலகம் முழுவதிலுமே கண்ணீர்த் தமிழ்தான் உப்புக்கடலாய்ப் பரவி இருக்கிறது என்னும் மெய்ப்பாட்டை மீட்டுரை செய்கிறது. வயிற்றுப் பிழைப்பிற்காகக் கடல்கடந்து செல்லும் படிப்பறிவில்லாதோர் எண்ணிக்கையைக் குறைத்தால் மட்டுமே தமிழுக்கு மீண்டும் கௌரவத்தைக் கொண்டுவரமுடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகம் முழுவதிலுமே கண்ணீர்த் தமிழ்தான் உப்புக்கடலாய்ப் பரவி இருக்கிறது

   உண்மை ஐயா
   தாங்கள் சொல்வதுபோல் இதனை மாற்றுவதற்கான காரணி படிப்பு மட்டுமே
   நன்றி ஐயா

   நீக்கு
 18. அன்புள்ள ஜெயக்குமார்
  வணக்கம். உள்ளத்தை உருக்கிவிட்டது பேரா.குறிஞ்சிவேந்தனின் பேச்சுச்சுருக்கம். உங்களின் ஆற்றல்மிகு எழுதுமுறையால் மனதெங்கும் ஓங்கி அறைகிறது. தமிழின் பெருமையும் வண்மையும் தமிழனின் செயல்திறனும் நெஞ்சில் வேதனை நெருப்பாய்ப் பதிகிறது. ஒரு வரலாற்றை எங்ஙனம் உரைக்கவேண்டும என்பதைப் பேரா.குறிஞ்சிவேந்தனின் தமிழ்த்திறப்பாங்கு எடுத்தோதுகிறது மனவெளியில். தமிழாய்வுகள் இன்றைக்குக் கேவலமாக சிறுபிள்ளைத்தனமாக நான்கு பாடல் வரிகள் அதற்குக் கன்னாபின்னவென சொற்கள் என அமைவது கட்டுரை என்கிற பெயரில் அரங்கேறும் அவலங்கள் நிகழ்கின்றன. இதற்கிடையில் ஏடகம் அளப்பரியத் தமிழ்ப்பணியைத் தேர்ந்து செய்வது எதிர்கால வரலாற்றில் சிறந்த கல்வி நிறுவனமாக ஏடகம் திகழப்போவதை இன்றைக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாகக் காட்சிப்படுத்துகிறது. பேரா. மணமாறன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழும் உணர்வும் தமிழனும் உலக மானுட இன வரலாற்றில் பொன்னேடுகள். திருக்குறளைப் பல முறை வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் வள்ளுவர் என்னை பிரமிக்க வைப்பதோடு மிரட்டுகிறார் மிரள வைக்கிறார். இந்த ஊரடங்கில் வாசிக்கிற தமிழ் இலக்கியங்கள் என்னை மீண்டும் மீண்டும் வேறு சிந்தனைக் களத்தில் ஆய்வு எனும ஆயுதத்தை ஏந்த வைக்கிறது. போதாது என் ஆயுள் அவற்றை எழுதுவதற்கு என்றாலும் எழுதித் தீர்ப்பேன் உயிர்த் துறப்பு வரை. பேரா.குறிஞ்சிவேந்தன் போன்றோரின் பேச்சைக் கேட்கையில் என் மனத்திண்மை இன்னும் சூடேறுகிறது. பேரா.மணிமாறனும் ஏடகமும் முன்னோடிகளாக இன்றைக்கான ஆய்வுச்சூழலில் இயங்குகின்றன. புதிதாக ஆற்றில் தண்ணீர்வரத்து வருகிறபோது பல்வேறு கசடுகளும் வரும். அவை நினைக்கும் ஆற்றையே நாம் மூடிவிட்டோம் என்று. அல்ல. கசடுகள் நீரோட்டத்தில் காணாமல்போய் ஆறு தெளிந்துவிடும். அப்படித்தான் கசடுகளாக ஆய்வுகள் இன்று பல்கிப்பெருகினாலும் தெளிந்த தமிழ் ஆறு செழிக்கும். அதற்கு ஏடகம் மிகச்சிறந்த சான்று. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா
   ஏடகத்தின் பணி மகத்தானப் பணி
   பேரா.மணிமாறனும் ஏடகமும் முன்னோடிகளாக இன்றைக்கான ஆய்வுச்சூழலில் இயங்குகின்றன என்பதும் உண்மைதான் ஐயா
   தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி ஐயா

   நீக்கு
 19. இன்று தான் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய நூல்கள் தேடும்பொழுது மலையகம் பற்றி தமிழ் இணையக் கழகத்தில் வாசித்தேன்.
  திசையெங்கும் வென்ற தமிழினம் அடிமைகளாக்கப்பட்டது கண்ணீரை வரவழைக்கிறது.
  ஏடக அமைப்பிற்கும் உங்களுக்கும் நன்றிகள் அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிழைப்புத் தேடி அயலகம் சென்றத் தமிழர்களின் வரலாறு கண்ணீரால் எழுதப்பட்டதுதான்
   நன்றி சகோதரி

   நீக்கு
 20. வியப்பான் ஸ்வாரஸ்யமான தகவல்கள். மிகச்சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்.

  வாழ்த்துகள்.

  துளசிதரன்
  கீதா

  பதிலளிநீக்கு
 21. உங்கள் எழுத்தில் வரலாறு கண்முன் விரிகிறது.

  நன்றி

  என்னைத் தேடி...
  https://vazhkai-oru-porkkalam.blogspot.com/2020/05/ennaith-thedi.html

  பதிலளிநீக்கு
 22. கடலின் உப்பு நீர் கண்ணீர் தான்

  பதிலளிநீக்கு
 23. "காற்றினிலே இவர்கள் எழுதிவைத்து விட்டுப் போனப் பாடல்கள் எல்லாம், 250 ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்துத்தான் நிற்கின்றன." என்றால் சிறந்த இலக்கியம் அவை தான்.
  அருமையான உரைத் தொகுப்பு

  பதிலளிநீக்கு
 24. அருமை...அருமை..சகோதரா

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு