25 மே 2020

சாதனையாளரை வாழ்த்துவோம்




     2014 ஆம் ஆண்டு மே திங்களில், கவிஞர் முத்துநிலவன் அவர்களால், கணினி தமிழ்ச் சங்கம் சார்பில், புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பெற்று நடத்தப்பெற்ற, இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையில், மாணவராய், பங்கேற்பாளராய் கலந்து கொண்டவர் இவர்.

     இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், 2016 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிலும், அதே கணினி தமிழ்ச் சங்கம் நடத்திய, அதே பயிற்சிப் பட்டறையில், ஆசிரியராய் பாடம் நடத்தியவர் இவர்.


     எதைக் கற்றுக் கொண்டார்.

     எதைக் கற்றுக் கொடுத்தார்.

     விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா.

     விக்கிப்பீடியாவில் தமிழில் கட்டுரைகளை எழுதுவது எப்படி? என்று கற்றுக் கொண்டார். பின்னர் கற்றுக் கொடுத்தார்.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்கு முன்னரே, 2013 ஆம் ஆண்டில், விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையினை எழுதிப் பார்த்தார்.

     இவர் எழுதிய வேகத்திலேயே, அக்கட்டுரை நீக்கப் பட்டுவிட்டது.

     கட்டுரை நீக்கப்பட்டுவிட்டதா? எப்படி?

     இன்று நம்மில் பலரும் வலைப்பூவில் எழுதுகிறோம்.

     நான் கடந்த பத்து வருடங்களாக வலைப்பூவில் எழுதி வருகிறேன்.

     என் வலைப்பூவைப் பொறுத்தவரை, நானே ராஜா, நானே மந்திரி.

     என் கட்டுரையினை கூகுள் ஆண்டவராய்ப் பார்த்து நீக்கினால்தான் உண்டு.

     வேறு யாராலும் கை வைக்க முடியாது.

     ஆனால் விக்கிப்பீடியா அப்படியல்ல.

     விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை எல்லாரும் இந்நாட்டு மன்னர்.

     நீங்கள் எழுதினால், நான் உள்ளே புகுந்து, ஒரு குறிப்பிட்டப் பகுதியை நீக்கலாம், திருத்தலாம், எங்கே ஆதாரம், காட்டு, நிரூபி, என்று உங்களைப் பாடாய் படுத்தலாம்.

     தவறான செய்தியினை எவரும் பதிவிட்டுவிடக் கூடாது என்பதற்காக, இந்தக் கட்டற்ற சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

     விக்கிப்பீடியா

     இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுத்திருக்கிறார் இவர்.

     நண்பர்களைப் பற்றி எழுதினார்.

     தான் பயின்றப் பள்ளியை எழுதினார்.

     தான் பயின்ற கல்லூரியை எழுதினார்.

     தான் பணிபுரிந்த நிறுவனத்தை எழுதினார்.

     கும்பகோணத்துக் கோயில்களை எல்லாம், விக்கிப்பீடியாவிற்குள் கொண்டு வந்தார்.

     தஞ்சாவூர் கோயில்களையும் விட்டுவிடாமல் சேர்த்தார்.

     தான் ஆற்றியக் களப்பணி விவரங்களை இணைத்தார்.

     தான் படித்த நூல்களையும், தான் சென்ற நூலகங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டினார்.

     ஒவ்வொன்றையும் தகுந்த ஆதாரங்களோடு, அசைக்கமுடியாத சாட்சிகளோடு பதிவிட்டார்.

     கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், ஊதியம் வாங்கியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், இவருக்கு விக்கிப்பீடியாவே, ஊதியமில்லா முழுநேரப் பணியாய் மாறிப்போனது.

     விக்கிப்பீடியா நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்வது என்பது இவருக்குச் சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிடுவது போல் ஆயிற்று.

     விக்கிக் கோப்பைப் போட்டி

     வேங்கைத் திட்டம்

     ஆசிய மாதம் தொடர் தொகுப்புப் போட்டி

     ஒவ்வொன்றிலும் பரிசுகள் இவரைத் தேடி வந்தன.

     விக்கிக் கோப்பைப்  போட்டிக்காக, ஒரே நாளில், ஒரே ஒரு நாளில் 18 கட்டுரைகளை எழுதி அசத்தியிருக்கிறார் இவர்.

     தமிழ் விக்கிப்பீடியாவில், சென்ற ஏப்ரல் மாதம் வரை, ஆயிரம் பதிவுகளை எழுதிக் குவித்திருக்கிறார்.

     தமிழில் மட்டுமல்ல, ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இருநூற்றிற்கும் அதிகமானக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

     இதுமட்டுமல்லாமல், இரண்டு வலைப் பூக்கள், பௌத்த சிலைகளைத் தேடும் களப்பணி, தேவாரத் தலங்கள், வைப்புத் தலங்கள், மங்களாசாசனம் பெற்றத் தலங்கள் என அயராமல் அலைந்து கொண்டே இருக்கிறார் இவர்.

     தளராமல் எழுதிக் கொண்டே இருக்கிறார்.

விக்கிப்பீடியா 1000:  பதிவு அனுபவங்கள்

     தனது அனுபவங்களை எல்லாம் தொகுத்து, மின்னூலாய், அமேசான் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

     விக்கிப்பீடியாவில் நுழைவது எப்படி, எழுதுவது எப்படி, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என ஒவ்வொன்றையும், சிறு பிள்ளைக்குச் சொல்வதைப் போல் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

இவர்தான்,


முனைவர் பா.ஜம்புலிங்கம்,
மேனாள் உதவிப் பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம்


விக்கிப்பீடியா 1000: பதிவு அனுபவங்கள்.

வாழ்த்துகள் ஐயா
தங்களின் தேடல் தொடரட்டும்!        
எழுத்துகள் மலை மலையாய் குவியட்டும்!!



                                                                                                                                                                                 


ஒலிப்பேழை

37 கருத்துகள்:

  1. அருமை நண்பரே
    முனைவர் அவர்களுக்கு இப்பதிவின் மூலம் மகுடம் சூட்டி இருக்கிறீர்கள்.

    அவரது அயராத உழைப்புக்கு இன்னும் பல சிகரங்களை தொட மனமார்ந்த வாழ்த்துகள்.
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. உங்களைப் போன்றோரின் வாழ்த்துகளே என்னை தொடர்ந்து எழுத வைக்கின்றன. தமிழில் இல்லாததே இல்லை எனக் கூறுமளமவிற்கு முடிந்தவரை இலக்கினை வைத்துப் பயணிக்கிறேன்.தமிழர் அல்லாதோரும், பிறரும் அறியும் வகையில், ஆங்கில விக்கிப்பீடியாவில் நம் பெருமைகளைப் பற்றி எழுத ஆரம்பித்துள்ளேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அயரா உழைப்பு போற்றுதலுக்கு உரியது ஐயா
      நன்றி

      நீக்கு
  3. மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. முனைவர் திருமிகு.ஜம்புலிங்கத்தின் பணிகளால் எல்லோரும் பயன்பெற வாழ்த்துக்கள் !
    உடுவை.எஸ்.தில்லைநடராசா-இலங்கை

    பதிலளிநீக்கு
  5. உத்வேகம் கொடுக்கும் நல்ல கட்டுரை..

    இருவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்!!

    பதிலளிநீக்கு
  6. முனைவரின் தமிழ்ப்பணி குறித்து ஓரளவே அறிந்திருந்தேன்.பெருமளவில் அறியச் செய்த தங்களுக்கு நன்றி.

    முனைவர் பா.ஜம்பலிங்கம் அவர்கள் நீண்ட ஆயுள் பெற்றுத் தொடர்ந்து தமிழ்ப்பணி புரிய என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. "தன்னுடைய சாதனையை தானே முறியடிக்க முடியும்" என்று சிலரை நாம் நினைப்பதுண்டு... அதில் நம் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் வல்லவர்... பல திறமைகளுக்கு சொந்தக்காரர்...

    ஐயாவிற்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  8. ஜம்புலிங்கம் ஐயாவின் தமிழார்வமும், விக்கிப்பீடியாவில் எழுதுவதும் தெரியும். ஆனால் 1000 பதிவு எழுதி இருக்கிறார் என்பது புது செய்தி.

    ஜம்புலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  9. முனைவர் ஐயாவை பாராட்டுவதில், வாழ்த்துவதில் இணைகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. போற்றப் படவேண்டிய சாதனையாளர். இணையத் தமிழில் இவர் ஆற்றிக் கொண்டிருக்கும் பணிக்கு ஈடு இணை ஏதும் இல்லை இவருக்கு அரசு விருது வழங்க வேண்டும் செல்வாக்கு மிக்க யாரேனும் பரிந்ந்துரைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் முரளியின் எண்ணம் மிகவும் கவனிக்கத்தக்கது. அரசியல் செல்வாக்கு உள்ள பதிவர் எவரேனும் மனம் வைத்தால் இது சாத்தியமாகும்.

      நீக்கு
    2. நிச்சயம் அரசு விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் ஐயா

      நீக்கு
    3. உண்மைதான் ஐயா , செல்வாக்கு உடையவர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றால், சாத்தியம்தான்.
      நன்றி ஐயா

      நீக்கு
  11. சிறப்பான பதிவு. முனைவர் ஐயாவின் புத்தக அறிமுகம் மிகவும் சிறப்பு. முனைவர் ஐயாவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  12. ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் இடையறாத உழைப்பு, நமது இளைஞர்களுக்கு ஓர் முன்மாதிரியாக இருக்கவேண்டும். குறிப்பாகக் கல்லூரி ஆசிரியர்கள் இவரைத் தங்கள் மாணவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். சுய நலமின்றி, விளம்பர ஆசையின்றிச் செயல்படும் இந்த வித்தகரைப் போற்றுவத்ற்கு வார்த்தைகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  13. படித்துக் கொண்டு வரும் போதே முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவைதான் சொல்கிறீர்கள் என்று தெரிந்து விட்டது.
    அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. //விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை எல்லாரும் இந்நாட்டு மன்னர்.

    நீங்கள் எழுதினால், நான் உள்ளே புகுந்து, ஒரு குறிப்பிட்டப் பகுதியை நீக்கலாம், திருத்தலாம், எங்கே ஆதாரம், காட்டு, நிரூபி, என்று உங்களைப் பாடாய் படுத்தலாம்.

    தவறான செய்தியினை எவரும் பதிவிட்டுவிடக் கூடாது என்பதற்காக, இந்தக் கட்டற்ற சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.//

    ஓ இது புதுத்தகவல் எனக்கு. ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. இவரின் அயராத உழைப்பு என்றும் போற்றுதலுக்குரியது நண்பரே.

    பதிலளிநீக்கு
  16. ஐயாவை வணங்குகிறோம்

    பதிலளிநீக்கு
  17. சிறப்பு
    தங்கள் நடையில் அருமையான அறிமுக விமர்சனம்

    பதிலளிநீக்கு
  18. மகுடம் சூட்டியவர்க்கும் மகுடம் சூடியவர்க்கும் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  19. முனைவர் பா.ஜம்புலிங்கம்,
    மேனாள் உதவிப் பதிவாளர்,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    என்ற அறிஞரை அவரது ஆற்றலை
    அழகுறத் தொகுத்துத் தந்துள்ளீர்கள்.
    அவர் - எனக்கும்
    நல்ல வழிகாட்டி! - அவர்
    நீடுழீ வாழ்ந்து தமிழில் சிறந்த பதிவுகளைப் பகிர்ந்து
    தமிழுக்குப் பெருமை சேர்ப்பாரென வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு