19 ஜூலை 2020

காட்டி மோகம்
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், செம் பொன் கை வளை
பரியகம், வால் வளை, பவழப் பல் வளை
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து

இந்நான்கு வரிகள் பாடலின் தொடக்கம்தான். சூடகம், செம்பொன் வளையல்கள், நவமணி வளையல்கள், சங்கு வளையல்கள், பவழ வளையல்கள், வீரச் சங்கிலி, தொடர் சங்கிலி, இந்திர நீலத்துடன் இடையிடையே வயிரங்கள் பதித்துக் கட்டபெற்ற தோடுகள் என, கோவலனின் வரவிற்காகக் காத்திருந்த மாதவி தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பயன்படுத்திய தங்க, வைர நகைகளின் பட்டியல், இப்பாடலின் வழி, நீண்டு கொண்டே போகிறது.


     இதுதான் காட்டி மோகம்.

     அலங்காரத்தின் மூலமாகவும், ஒப்பனைகளின் மூலமாகவும், மதக் குறியீடுகளின் வழியாகவும், ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, பிறரின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க, மேற்கொள்ளும் முயற்சிகள் காட்டி மோகமாகும்.

செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்
நங்கை இவர் என நெருதல் நடந்தவரோ நாம்? என்ன

சிவந்த கயல் மீன் போன்ற, கரிய நீண்ட கண்களைக் கொண்டவள். தேன் ஊறும் தாமரை வாசம் செய்யும், திருமகள் இலட்சுமி இவளே என, மாறுவேடத்தில் வந்த, சூர்ப்பனகையை, இராமன் காண்பதாக ஒரு பாடல்.

     இதுதான் பார்வை மோகம்.

ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்து கொண்டு
ஏடுகோ டாக எழுதுகோ – நீடு
புன வட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி
கனவட்டங் கால் குடைந்த நீறு

என்றுரைக்கிறது முத்தொள்ளாயிரப் பாடல். பாண்டிய மன்னன் வழுதி மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி, பாண்டியன் அமர்ந்திருந்த, கனவட்டம் என்கிற குதிரை, தரையில் தன் கால்களைப் பதித்த இடத்தில் இருந்த மண்ணை  மகிழ்வோடு எடுத்து, நீரில் கலந்து, உடல் முழுவதும் பூசி, ஆடட்டுமா, பூவிதழ் நுனியை எழுத்தாணியாக்கி, கண்ணில் மை தீட்டி மகிழட்டுமா எனக் கேட்கிறாள்.

     இது சார்பொருள் மோகம்.

     காதலன் அல்லது காதலி பயன்படுத்திய, ஏதேனும் ஒரு பொருளை, அவன் நினைவாகவோ, அவள் நினைவாகவோ, எடுத்து வைத்துக் கொண்டு, அதனோடு பேசி மகிழ்தல் சார்பொருள் மோகம்.

     காலையும் பகலும் கையறு மாலையும் என்னும் குறுந்தொகையின் 32 வது பாடலில், உண்மையான, என் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால், மடலேறுவேன் என மிரட்டுகிறான் காதலன்.

     இது சுய அழிப்பு மோகம்

     தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளுதல்

     தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளுதல்.

     தன்னைத்தானே, துன்புறுத்திக் கொள்ளுதல் ஒரு வகை என்றால், அடுத்தவரை வதைத்து, சித்திரவதை செய்து மகிழுதல் பிறிதொரு வகை.

     இது வதைத்துரு மோகம்.

     இவையெல்லாம் மோகத் திரிபுகள்.

     மோகம் என்பதே காமத்தால் தோன்றுவது.

     இந்த மோகம் திரிந்துவிட்டால், காட்டி மோகம், பார்வை மோகம், வதைத்துரு மோகம், வதைந்தொரு மோகம், சார்பொருள் மோகம், தன் மோகம் என மோகத் திரிபுகள் நிகழ்கின்றன.

     மோகத் திரிபுகளுக்கானக் காரணம் மனம்.

     மனித மனத்தின் மற்றொரு  வெளிப்பாடு கனவு.

     கனவு நிலை உரைத்தல் எனத் தனியொரு அதிகாரத்தையே ஒதுக்கி, அதற்குள் பத்து குறள்களை அடங்கியுள்ளார் திருவள்ளுவர்.

     கோவலன் கண்ட கனவு

     கண்ணகி கண்ட கனவு

     பாண்டிமாதேவி கண்ட கனவு என சிலப்பதிகாரத்தில், ஒரு காதையினையே ஒதுக்கி, கனா திறம் உரைத்த காதையினைப் படைத்துள்ளார் இளங்கோ அடிகள்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்

எனத் திருமணக் கனவு கண்டவர்தானே, நம் ஆண்டாள் நாச்சியார்.

     கனவின் பயனாய் கண்டுபிடிப்புகள் சிலவும் நடந்துள்ளன என்று சொன்னால் நம்புவீர்களா?

     ஆம், தையல் ஊசி கண்டுபிடிக்கப் பட்டதும், முள் வேலிகள் அமைக்கப் பட்டதும் கனவின் பயனாகத்தான் எனப் பல பதிவுகள் கூறுகின்றன.

அணங்கே விலங்கே கள்வர்தம் பிறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.

     மனித மனத்தின் மற்றொரு உணர்வான அச்சம் நான்கு வகைப்படும்.

     அவை அணங்கு, விலங்கு, கள்வர், அரசர் என உரைக்கிறது தொல்காப்பியம்.

     அணங்கு என்றால் நோய்.

     மனிதனின் கூடப் பிறந்த, மற்றோர் உணர்வு சந்தேகம்.

கானல் வரியான் பாட, தான் ஒன்றின் மேல் மனம் வைத்து
மாயப் பொய் கூட்டும் மாயத்தாள்

     ஒரு பாடல், ஒரே ஒரு பாடல், என்னைப் பாடாமல், வேறொன்றை வைத்துப் பாடுகிறாளே என்று கோவலனின் உள்ளத்தே புகுந்த சந்தேகமே, கோவலன் மாதவியைப் பிரிய, அச்சாரம் போட்டது.

     இவை அனைத்திற்கும் காரணம் மனம்.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே.

     உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும் அறியும் ஆற்றலைப் பெற்றது ஐந்தறிவு உயிரே.

     மனத்தினாலும் அறியும் ஆற்றலைப் பெற்றதே ஆறறிவு உயிர் எனப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

     தொல்காப்பியரைத் தொடர்ந்து, சங்க இலக்கியங்கள், மனதைப் பேசுகின்றன, இன்னும் சொல்லப்போனால் மனதை வகை வகையாய் அலசுகின்றன.

     உடையயும் என் உள்ளம்
     செயல்படு மனம்
     துணிகுறு மனம் என்கிறது நற்றினை.

     விழுவதுபோலும் என் நெஞ்சம் என்கிறது திருக்குறள்.

     மகிழும் மனம் என்கிறது  பரிபாடல்.

     திரியும் மனம் என்கிறது புறநானூறு

     செற்றம் நீங்கிய மனம் என்கிறது திருமுருகாற்றுப் படை.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

     என்றும்

மனநலம் மன்னுயிர்க் காக்கும் இனநலம்
எல்லாப் புகழும் தரும்

      என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, மன நலம் பேசியவர்தான் திருவள்ளுவர்.

     சங்க இலக்கியம் முழுமையும், மனம் சார்ந்த, உளவியல் கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன.

     சங்க இலக்கியத்திற்கு வேறொரு பெயர் சூட்டுங்கள் என்று சொன்னால், தயங்காமல் சொல்லுவேன், அது உளவியல் களஞ்சியம் என்று சொல்லுவேன் என்று பெருமிதத்தோடு முழங்குவார் தமிழண்ணல்.

     சங்க இலக்கியம், ஓர் உளவியல் களஞ்சியம்.

     சங்க இலக்கியம் மட்டுமல்ல, சித்தர்களின் பாடல்களும், மனம் சார்ந்த, பற்று அறுத்தல் என்னும் நிலையினையேப் பேசுகின்றன.

     காமம், குரோதம், ரோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடும்பை, வேட்கை, ஈருடை, தர்ப்பம், லாகம், துவேசம், இடம்பம் மற்றும் அகங்காரம் முதலான பதிநான்கு சித்த விருத்திகளுமே, மனம் தொடர்பானவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     மொத்தத்தில், தமிழர் இலக்கியம், ஓர் உளவியல் களஞ்சியம்.

---
கடந்த 15.06.2020 திங்கட் கிழமை,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
ஓர் அங்கமாய் திகழும்,
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின்
தமிழ் உயராய்வு மையம்
நடத்திய
இணைய வழிக் கருத்தரங்கில்,

பூண்டி புட்பம் கல்லூரி,
தமிழ்த் துறைத் தலைவர்,


முனைவர் ந.சிவாஜி கபிலன் அவர்கள்,

தமிழ் இலங்கியங்களில் உளவில் சிந்தனைகள்
என்னும் தலைப்பில் சொற்பெருக்காற்றினார்.

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி
முதல்வர்


முனைவர் திருமதி இரா.இராசாமணி அவர்கள்,
தலைமையில்,

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி
ஒருங்கிணைப்பாளர்,


முனைவர் கோ.சண்முகம் அவர்களின்,
சீரிய வழிகாட்டலில்
நடைபெற்ற இக்கருத்தரங்கினை,

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்


முனைவர் ந.எழிலரசன் அவர்கள்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராய்
செயல்பட்டு சீரிய முறையில் நடத்தினார்.

தமிழ் இலக்கியங்களில் உளவியல் சிந்தனைகள்

உளவில் குறித்த புதிய புரிதலை,
என்னுள்ளத்தில்
ஏற்படுத்திய அற்புதப் பொழிவு