07 ஜூலை 2020

கருணாமிர்தம்     அஷ்டாவதானி, தசாவதானி என்பார்கள்.

     அதாவது, ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்யக் கூடியவர் அஷ்டாவதானி, பத்து செயல்களைச் செய்யக் கூடியவர் தசாவதானி .

     சிலரால் மட்டுமே, ஒரே நேரத்தில், தன்னைச் சுற்றி நிகழும் பல நிகழ்வுகளை, கவனத்தில் வைத்திருக்க முடியும். அவற்றைத் திருப்பிச் சொல்லவும் முடியும்.


     உண்மையில் இவ்வாறு செய்வது ஒரு கலை.

     நம் பண்டைத் தமிழரிடம் இருந்த கலை.

     இதைத்தான் கவனகம் என்பார்கள்.

     இந்தக் கலைஞர்களை கவனகர் என்பர்.

     கவனகம் என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில், அவதானம் என்று பெயர். எனவே அஷ்டாவதானி, தசாவதானி என்றாயிற்று.

     நினைவாற்றலின் மிக உயர்ந்த நிலை இது.

     இந்த நினைவாற்றலை, பல துறைகளில் செலுத்தி, பல்துறை கவனகராக விளங்கியவர் இவர்.

     இவர் ஒரு தமிழாசிரியர்.

     இவர் ஒரு சோதிடர்.

     இவர் ஒரு தமிழ் இசை அறிஞர்.

     இவர் ஒரு சித்த மருத்துவச் செம்மல்

     இவர் ஒரு அச்சுக்கலை நிபுணர்.

     இவர் ஒரு வேளாண் விஞ்ஞானி.

     இந்த ஆறுமாய் இருந்தவர் இவர்.

     பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்திற்கு அருகில் உள்ள, சாம்பவர் வடகரையில் பிறந்தவர் இவர்.

     சாம்பவர் வடகரையில் பிறந்த இவரை, திண்டுக்கல் வளர்த்தெடுத்தது.

     திண்டுக்கல்லில் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியரானார்.

     இவர், இசை மீதான ஆர்வத்தின் விளைவால், வயலின் மேதை சடையாண்டிப் பத்தர் என்பவரிடம், அலங்காரம், தாள வரிசை, கீதம், வர்ணம், கீர்த்தனை முதலிய இசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

     சோதிடக் கலையினையும் முழுமூச்சாய் கற்றுத் தேர்ந்தார்.

     திண்டுக்கல்லில் இருந்த அச்சுக் கூடம் ஒன்றிற்குத் தினமும் சென்று, அச்சுக் கோர்ப்பது, அச்சிடுவது என அச்சுக் கலையினையும் கற்றார்.

     இதுபோதாதென்று, சுருளி மலையில் வாழ்ந்த சித்தரான, கருணானந்தர் என்பவரின் சீடராகி, மருத்துவம், மூலிகைகள், மருந்து தயாரிக்கும் முறைகளையும் கற்று வல்லுநர் ஆனார்.

     இதனால் இவர் பண்டுவர் ஆனார்.

     பண்டுவம் என்றார் மருத்துவம்.

     பண்டுவத்தில் தேர்ந்தவர் பண்டுவர்.

     இவர் பண்டுவரானார்.

     நாளடைவில் இப்பெயர் திரிந்து பண்டிதர் ஆயிற்று.

     திண்டுக்கல் இவரை பல்துறை வித்தகராய் உயர்த்தியது.

     சூழல் இவரை தஞ்சைக்கு அழைத்தது.

     தஞ்சை சீமாட்டி நேப்பியார் பாடசாலையில் தமிழாசிரியர் ஆனார்.

     ஆசிரியர் பணியாற்றிக் கொண்டே, தன் சித்த மருத்துவப் பணியினையும் தொடர்ந்தார்.

     அக்காலத்து ஏற்பட்ட அம்மை, பிளேக் போன்ற கொடு நோய்களை, இவரது மருந்து எளிதில் வென்று, வெற்றிக் கொடி நாட்டியது.

     இதனால் இவரது புகழ் பரவியது.

     மருத்துவப் பணிக்கே நேரம் போதாமல் போனது.

     எனவே தமிழாசிரியர் பணியினைத் துறந்து, முழுநேர மருத்துவர் ஆனார்.

     தான் தயாரித்த மருந்துகளுக்குத், தனக்குப் பண்டுவம் உரைத்த, பண்டுவனாரின் பெயரினையேச் சூட்டினார்.

     கருணானந்தர் சித்த மருந்துகள்.

     தஞ்சை இவரால் பயன் பெற்றது.

     தஞ்சையால் இவர் வளம் பெற்றார்.

     புதிதாய் ஒரு வீடு வாங்கினார்.

     விவசாயம் செய்ய வயலும் வாங்கினார்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, நூறு ஏக்கர் நிலம் வாங்கினார்.

     பெரும் பண்ணை நிறுவினார்.

     தனக்குப் பண்டுவம் உரைத்தப் பண்டுவரின் பெயரையே, தன் பண்ணைக்கும் வைத்தார்.

     கருணானந்த புரம்.

     புதிய, புதிய கரும்பு ரகங்களை வளர்த்தார்.

     புதிய, புதிய பயிர்களைப் பயிரிட்டார்.

     புதிய, புதிய நெல் ரகங்களை விளைவித்தார்.

     வேளாண் விஞ்ஞானியாக மாறினார்.

     அன்றைய ஆங்கில ஆளுநர் லாலி என்பவர், இவரது பண்ணையைப் பார்த்து வியந்து போனார்.

     ராவ் சாகிப் என்ற விருது இவரைத் தேடி வந்தது.

     பின் மெல்ல, மெல்ல இவரது கவனம், இசையின் பக்கம், தமிழிசையின் பக்கம் திரும்பியது.

     தஞ்சையில் ஏற்பட்ட இசை அறிஞர்களின் தொடர்பானது, இவரைச் சிந்திக்க வைத்தது.

     இசை என்றாலே தெலுங்கு இசைதான் என்ற நிலையும், வடமொழியை உயர்த்தி பிடித்த இசைக் கலைஞர்களின் பிடிவாதமும், இவரைச் சிந்திக்க வைத்தது.

     தமிழில் பாடினால் என்ன என்று வினவியபோது, தமிழில் கீர்த்தனைகளே இல்லை என்று மறுத்தனர்.

     சிந்தித்தார்.

     மருத்துவத்தில் ஈட்டிய செல்வத்தை, தமிழிசையின் பக்கம் திருப்பி விட்டார்.

     தமிழ் இசைக்கு என்றே ஓர் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்கினார்.

     இசை வல்லுநர்களை அழைத்து, தன் இல்லத்திலேயே தங்க வைத்து, விருந்து வைத்து, தமிழிசை ஆய்வைத் தொடங்கினார்.

     இக்காலகட்டத்தில்தான், தமிழ்த் தாத்தா உ.வே.சா., அவர்களின் சிலப்பதிகார ஆய்வுப் பதிப்பு வெளியானது.

     கோவலன், கண்ணகி, மாதவி என மெத்தப் படித்தவர்களும், மற்றவர்களும் படித்து மகிழ்ந்திருந்தபோது, இவர் சிலப்பதிகாரத்துள் ஒளிந்திருந்த இசை, நாட்டியம், கூத்து முதலியவற்றின் இசை நுட்பங்களை வெளிச்சமிட்டு வெளிப்படுத்தினார்.

     இதன் பின்னர்தான்,
     யாழ் பற்றிய ஆராய்ச்சி,
     ராகம் பற்றிய ஆராய்ச்சி,
     கருவிகள் பற்றிய ஆராய்ச்சி, பல்கிப் பெருகியது.

     அதுநாள்வர, இந்தியாவில், கி.பி.4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, பரதமுனிவருடைய, பரத சாஸ்திரமும், கி.பி.13 ஆம் நூற்றாண்டில், காஷ்மீரில் வாழ்ந்த, சாரங்க தேவரின், சங்கீத ரத்னாகரம் என்னும் நூலுமே, இசை நுட்பங்களை உணர்த்துகின்ற நூல்களாக கோலேச்சிக் கொண்டிருந்தன.

     இந்நிலையினை இவர் மாற்றினார்.

     பரத முனிவரும், சாரங்க தேவரும்தான் இசை முன்னோடிகள் என்று பரவியிருந்தக் கருத்தைத் தகர்த்தெறிந்தார்.

     இவர்களுக்கும் முன்னரே, தொல்காப்பியர் காலத்திலும், சிலப்பதிகாரக் காலத்திலும், காரைக்கால் அம்மையார் காலத்திலும், சங்கப் பனுவல்களிலும், தேவார திருவாசகங்களிலும், நாலாயிரம் திவ்ய பிரபந்தத்திலும், பெரிய புராணத்திலும், கல்லாடத்திலும் தொட்டுத் தொடர்ந்த, தமிழ் இசை வரலாற்றை வெளிப்படுத்தி, தமிழகத்தையே வியப்பில் ஆழ்த்தினார்.

     இதுமட்டுமல்ல, தன் சொந்த செலவில், தமிழிசை ஆய்விற்காக, ஏழு இசை மாநாடுகளை நடத்திக் காட்டினார்.

     1916 ஆம் ஆண்டு, பரோடாவில் நடைபெற்ற, அனைத்து இந்திய இசை மாநாட்டில், சுருதிகள் குறித்து, மூன்று மணிநேரம், அயராமல் உரையாற்றி, அனைவரையும் மயங்க வைத்தார்.

இவை எல்லாவற்றிற்கும் உச்சம்,
இவரது தமிழிசை ஆய்வு நூல்.

தமிழாய்வு நூலிலும்,
தன் பண்டுவரை மறந்தாரில்லை.
தன் பண்டுவரின் பெயரினையே வைத்தார்.


கருணாமிர்த சாகரம்.

இவர்தான்,


ஆபிரகாம் பண்டுவர்
ஆபிரகாம் பண்டிதர்.

---

கருணாமிர்தக் கடலில் மூழ்கி, முத்தெடுத்து, அழகுறக் கோர்த்து, வார்த்தைகளாக்கி, இணையக் கடலில் விருந்துவைத்த இவரின், பொழிவு கேட்டு நெகிழ்ந்து போனேன்.

இவர்
குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது பெற்றவர்,
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரையும்,
இசைத் தமிழ் அறிஞர் விபுலாநந்த அடிகளாரையும்
ஆவணப் படமாக்கி,
உலகெங்கும் உலாவ விட்டவர்.


புதுச்சேரி, அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனப்
பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்.

நண்பர்களே, வாருங்கள்,
நீங்களும், இந்தக் காணொலியினைக் காணுங்கள்.


ஆபிரகாம் பண்டிதரை அறிந்து மகிழுங்கள்.

தமிழிசையின் மகத்துவம் போற்றிய,
கருணாமிர்த சாகரம் கண்ட
ஆபிரகாம் பண்டிதரைப்
போற்றி வணங்குங்கள்.

நண்பர்களே, வணக்கம்.

     எனது ஒன்பதாவது, மின்னூல், அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    

நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும், மனோன்மணீயம் சுந்தரனாரது பாடலானது, தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு அரியணை ஏறிய வரலாற்றினை அறியத் தங்களை அன்போடு அழைக்கின்றேன்.

     இச்சிறு மின்னூலினை, இன்று (7.7.2020)  செவ்வாய்க் கிழமை முதல், வெள்ளிக் கிழமை (9.7.2020) வரை, கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து, வாசித்து மகிழலாம்.

தரவிறக்கம் செய்யச் சொடுக்கவும்

என்றென்றும் பேரன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்33 கருத்துகள்:

 1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சிறந்த மின்னூல்...

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. உண்மை. திண்டுக்கல் உருவாக்கியிருக்கிறது, தஞ்சை பயன் பெற்றிருக்கிறது

   நீக்கு
 3. ஆபிரகாம் பண்டிதரை அறிந்து கொண்டோம்.

  அவர் திருநெல்வேலியில் கிறித்துவ கல்யாணத்தில் அவர் எழுதிய வாழ்த்து பாடல் பாடுவார்களாம்.

  உங்கள் சாதனைகள் தொடரட்டும். மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.

  இளங்கோவன் அவர்களையும் அறிவேன்.
  காணொளியில் அவர் பேசியதையும் கேட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் திருநெல்வேலியில் கிறித்துவ கல்யாணத்தில் அவர் எழுதிய வாழ்த்து பாடல் பாடுவார்களாம்.
   அறியாத செய்தி
   நன்றி சகோதரி

   நீக்கு
 4. இதுவரை அறிந்திராத அறிஞர் பற்றிய தகவல்கள். மின்னூலுக்கு வாழ்த்துகள்.

  துளசிதரன்

  இசைபற்றி அறிய நேர்ந்த போது ஆபிரஹாம் பற்றியும் அறிய நேர்ந்தது. உங்கள் பதிவில் கூடுதல் தகவல்களை அறிந்தேன் மிக்க நன்றி.

  மின்னூலுக்கு வாழ்த்துகள் சகோ.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. தஞ்சையில் ஆப்ரகாம் பண்டிதர்  கேள்விப்பட்டிருக்கிறேன்.  முழு விவரமும் இப்போது தெரிந்து கொண்டேன்.  

  ஒன்பதாவது மின் நூலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. கேள்விப்படாத அரிய வரலாறு தந்தமைக்கு நன்றி.
  மின்நூல் தரவிறக்கம் செய்து கொண்டேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
 7. நமது மாதங்கி மாலியின் தந்தை ஒரு பல்சுவை அவதானி என்று கேள்விபட்டு இருக்கிறேன் தற்சமயம் திருச்சியில் இருப்பவர் கெள்விப்படாத பலசெய்திகளுக்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
 8. நமது வலைப்பூசொந்த்சக்காரர்செல்வி மாதங்கியின் தந்தை டிருமகாலிங்கம் ஒருபல்கலை அவதானி இப்பொது திருச்சி வாசிநான் இவர் அவதாதனத்தை காணும் கேட்கும் பேறு எனக்கு கிடைக்க வில்லை பல தெரியாதசெய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைப் பூ பதிவரின் தந்தை ஒரு அவதானி என்பதை அறியும்போது பெருமையாக இருக்கிறது ஐயா
   நன்றி

   நீக்கு
 9. ஆப்ரஹாம் பண்டிதரின் கதை இதுவா? இது வரை அறியாத மிக உயர்ந்த ஒரு மனிதரைப்பற்றிய தகவல்களை அறியும்போது மெய் சிலிர்க்கிறது! அறிய வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 10. ஆபிரகாம் பண்டிதரின் இசை ஆற்றலையும் அவர்தம் இசை சேவையையும் அறிய தந்தமைக்கு நன்றி திரு கரந்தையார் அவர்களே.

  பதிலளிநீக்கு
 11. நல்லதொரு பகிர்வு.

  ஒன்பதாவது மின்னூல் - மனம் நிறைந்த வாழ்த்துகள்.
  தரவிறக்கம் செய்து கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 12. ஆபிரகாம் பண்டிதரை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி. இவ்வாறான அறிஞர்கள் அரிதாகும் பிறக்கின்றார்கள். அவர்களை இந்த இணைய உலகம் அறிந்து கொள்ள உங்கள் போன்றோரின் சேவை அளப்பரியது. பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
 13. தஞ்சைக்குப் பெருமை சேர்த்த ஆளுமையைப் பற்றி, தற்கால ஆளுமையின் பங்களிப்பினைப் பகிர்ந்தவிதம் அருமை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. நீராருங் கடலுடுத்த...உங்கள் சாதனையில் மற்றுமொரு மைல்கல். மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்களின் உழைப்புக்கு பலருக்கு முன்னுதாரணம்.

  பதிலளிநீக்கு
 15. பண்டுவதிற்கும் பண்டிதருக்கும் உள்ள தொடர்பை அழகாய் அறிந்து கொண்டேன் நண்பரே.
  சாந்தி/கமலா திரை அரங்கு செல்லும் போதெல்லாம் ஆபிரகாம் பண்டிதர் சாலையை இனி கடக்கும் போதெல்லாம் அவரே நினைவுக்கு வருவார். தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. அழகிய பதிவு வழமைபோல.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. ஆபிரஹாம் பண்டிதர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் இவ்வளவு விவரங்கள் எங்களுக்குத் தெரியப் படுத்தியதற்கு நன்றி

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு