11 நவம்பர் 2020

நேர்படப் பேசு



     பெண்ணே நீ யார்?

     உன் கணவன் யார்?

     இந்தச் சிறுவன் யார்?

     இவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?

     இவன் பெயர் என்ன?

     இவன் தந்தை யார்?

     எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?

  

   துர்வாச முனிவரின் சாபத்தால், தன் மனைவி, குழந்தையையே முற்றாய் மறந்துவிட்ட துஷ்யந்தன், தன்னைப் பார்க்க வந்த மனைவியிடமே, கேள்விக் கணைகனை அடுக்கினான்.

     சகுந்தலை, தன் மகனை நோக்கித் திரும்பி, துஷ்யந்தன் கேட்ட ஏழு கேள்விகளுக்கும், ஒரே ஒரு வரியில் பதில் அளித்தாள்.

     மகனே பரதா, உன் தந்தையை வணங்கு.

---

     ஒரு பெரும் அரசினை ஆண்டுவந்த மன்னனின் உள்ளத்தில் இனம் புரியாத வேதனை.

     ஜோதிடர் ஒருவரை அழைத்து, தன் ஜாதகத்தைக் கொடுத்தான்.

     மன்னனின் ஜாதகத்தை ஆய்ந்த ஜோதிடர் வாய் திறந்தார்.

     மன்னா, இது வில்லங்கமான ஜாதகம். உங்களுக்கு முன்பே, உங்கள் தம்பி இறப்பார். உங்களுக்கு முன்பே, உங்கள் சிறிய தந்தையும் இறப்பார்.

     மன்னனுக்கு கோபம் கொப்பளித்தது.

     சிறையில் தள்ளுங்கள் இந்த ஜோதிடனை.

     அடுத்த நாள் வேறொரு ஜோதிடரை அழைத்தார்.

     தன் ஜாதகத்தைக் கொடுத்தார்.

     மன்னா, இது ஒரு அற்புதமான ஜாதகம். இலட்சத்தில் ஒருவருக்குத்தான், இதுபோன்ற அபூர்வமான ஜாதகம் அமையும்.

     உங்களது ஆயுள் நீண்டது.

     உங்களது சுற்றத்தாருககுப் பிறகும், தாங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்.

     மன்னன் மகிழ்ந்தான்.

     பொன்னையும், பொருளையும் அள்ளி அள்ளிக் கொடுத்தான்.

     இரு ஜோதிடர்களும் கூறிய பலன் ஒன்றுதான்.

     ஆனால் பயன்படுத்திய வார்த்தைகள் வேறுவேறானவை.

     சொற்களைப் பொருளறிந்து, இடமறிந்து, காலமறிந்து பயன்படுத்த வேண்டும்.

     கேட்பவர்கள் ஏற்கும்படி பேச வேண்டும்.

--

கோபத்தோடு பேசுபவன்

குணத்தை இழக்கிறான்.

வேகமாய் பேசுபவன்

அர்த்தத்தை இழக்கிறான்.

பொய்யாய் பேசுபவன்

புகழை இழக்கிறான்.

தற்பெருமை பேசுபவன்

தகுதி இழக்கிறான்.

ஆணவமாய் பேசுபவன்

அன்பை இழக்கிறான்.

வெட்டியாய் பேசுபவன்

வேலையை இழக்கிறான்.

சிந்தித்துப் பேசுபவனே

சிறப்புடன் வாழ்கிறான்.

     நாம் சொல்லும் சொற்களுக்கு உயிருண்டு.

     ஒரு சொல் வெல்லும்.

     ஒரு சொல் கொல்லும்.

     எனவே, பேச்சில் கவனம் வேண்டும்.

     ஆதியில் நான் வார்த்தையாய் இருந்தேன் என்று இயேசு கூறுவதாகத்தான் பைபிளின் முதல் வரியே தொடங்குகிறது.

     இந்துக்களோ, நாவில் சரசுவதி இருக்கிறார் என்பர்.

பழைய அம்புகள்

இன்று ஏவுகணைகளாகிவிட்டன.

மரங்கள் கூட – ஆண்டுக்கு ஒரு முறை

தன் பழைய சருகுகளை உதிர்த்து

புதிய இலைகளைப் பெறுகிறது.

செடிகளும் கொடிகளும்

தினம் தினம்

தன் மொட்டுகளை – பூக்களாய்

புதுப்பித்துக் கொள்கிறது.

     மொழி நடை இன்று மாறிவிட்டது. உலகம் வேகமாய் மாறிக் கொண்டிருக்கிறது. நாமும் உலகில் வேகத்திற்கு ஈடு கொடுத்தாக வேண்டும்.

ஐந்து புலனடக்கம்.

அதன் தொடக்கம்

நாவடக்கம்

ஈரமான நாவில்

இருந்து

சூடான சொற்கள்

வேண்டவே வேண்டாம்.

     பேசியதை எல்லாம் நினைத்துப் பார்க்கலாம். ஆனால் நினைப்பதை எல்லாம் பேசிவிடக் கூடாது.

     எதை எதை பேச வேண்டும் என்பதைவிட, எதை எதையெல்லாம் பேசக் கூடாது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.

     பிறந்த ஒரு வருடத்தில் பேசுவதற்குக் கற்றுக் கொள்கிறோம்.

     ஆனால் எத்தனை வருடமானாலும், என்ன பேசுவது என்பதை, நாம் கற்றுக் கொள்வதேயில்லை.

     பேசுவதில் இவ்வளவு பிரச்சனையா? மௌனமாகவே இருந்துவிடலாமா? என்றால் அதுவும் தவறுதான்.

     உலகத்திலேயே அதிக முறை தவறாக மொழி பெயர்க்கப்படுவது மௌனம்தான்.

     எனவே, நம் கருத்தை பிறர் ஏற்கும் வகையில் பதிவு செய்வதே நலம் பயக்கும்.

     மற்ற பொருள்களுக்கும், நாக்கிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

     பொருள்கள் எல்லாம், பயன்படுத்தப் பயன்படுத்த தேய்மானம் ஆகும்.

     நாக்குதான் பயன்படுத்தப் பயன்படுத்த கூர்மை ஆகும்.

     பேசத் தெரிந்தவர்களை மட்டுமே, இன்று அனைத்து நிறுவனங்களும், கை நீட்டி வரவேற்கின்றன.

     குடும்ப உறவுகளின் மேன்மைக்குக் கூட பேச்சு முக்கியம்.

கொள்வாய் கொள்வாய் என

கேளாதிருந்தவையும்

கேட்பாய் கேட்பாய் என

சொல்லாதிருந்தவையும் – வேறேதுமில்லை

ரகசியங்களும்

இடைவெளிகளும்

என்று எழுதுவார் கவிஞர் மனுஷ்ய புத்திரன்.

     அவர் சொன்னால் கேட்டுக்கலாம் என மனைவி நினைப்பதும், கேட்டால் சொல்லிக்கலாம் என கணவன் நினைப்பதும், உறவில் இடைவெளியை உண்டாக்கிவிடும் வலிமை வாய்ந்தவை.

     எனவே பேசுங்கள்.

     இனிமையாய் பேசுங்கள்.

நமக்குள்ளே

ஒரு நாடகம் இருக்கிறது – அதை

நடித்தாக வேண்டும்.

நமக்குள்ளே

ஒரு சிற்பம் இருக்கிறது – அதை

செதுக்கியாக வேண்டும்.

நமக்குள்ளே

ஒரு பாடல் இருக்கிறது – அதை

இசைத்தாக வேண்டும்.

நமக்குள்ளே

ஒரு ஓவியம் இருக்கிறது – அதை

வரைந்தாக வேண்டும்.

நமக்குள்ளே

ஒரு கதை இருக்கிறது – அதை

சொல்லியாக வேண்டும்.

நமக்குள்ளே

ஒரு கவிதை இருக்கிறது – அதை

எழுதியாக வேண்டும்.

 

நமக்குள்ளே

ஒரு கனவு இருக்கிறது – அதை

நிறைவேற்றியாக வேண்டும்.

நமக்குள்ளே

ஒரு லட்சியம் இருக்கிறது – அதை

அடைந்தாக வேண்டும்.

நமக்குள்ளே

ஒரு பாதை இருக்கிறது – அதை

கடந்தாக வேண்டும்.

     இதற்கெல்லாம் தேவை பேச்சுத் திறன்.

     தகவல் தொடர்புதான் வாழ்க்கை.

     நாம் நேர்படப் பேசுவோம்.

     நெளிவுபட வாழ்வோம்.

     பாதையின் முடிவில் ஒளி இருக்கும்.

     பயணம் தொடர்வோம்.

---

     நாற்பத்து ஐந்து நிமிடப் பொழிவு, நான்கே நொடிகளில் முடிந்துவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு.

     பேசுங்கள், பேசுங்கள்.

     எல்லா சொற்களும் பொருளுடைத்தே

     பேசுங்கள், பேசுங்கள்

     கேட்பவர்கள் மனம் கோணாது பேசுங்கள்.

     பேசுங்கள், பேசுங்கள் என,

கடந்த 8.11.2020 ஞாயிற்றுக் கிழமை

ஏடகம்

ஞாயிறு முற்றத்தில்


நகைச்சுவைப் பேரரசு

கவிஞர் வல்லம் தாஜ்பால் அவர்கள்

நேர்படப் பேசு

என்னும் தலைப்பில்

தன் பொழிவை,

கவித்துவமானப் பொழிவாய் பொழிந்து,

அனைவரையும், மகிழ்ச்சியில் நனைய வைத்தார்,

நெகிழ வைத்தார். 

வெற்றித் தமிழர் பேரவையின்

மாநில துணைப் பொதுச் செயலர்


திரு இரா.செழியன் அவர்களின்

தலைமையில்

நடைபெற்ற நிகழ்விற்கு

வந்திருந்தோரை

ஏடகப் புரவலர் மற்றும் பொறுப்பாளர்


திரு கணேசன் அவர்கள்

வரவேற்றார். 

ஏடகம், சுவடியியல் மாணவி


செல்வி செ.சரண்யா அவர்கள்

நன்றி கூறு

விழா இனிது நிறைவுற்றது.

இந்நிகழ்வினை

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி ஜா.சுஜா அவர்கள்

சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

பாலைவனத்துக்கு ஒட்டகம்

பொருளைப் பாதுகாத்திடப் பெட்டகம்

செய்திகளைப் பரப்ப ஊடகம்

சிந்தனை செழிக்க ஏடகம்.

இளங்கோவின் அண்ணன்

சேரனாம்

ஏடகத்தின் மன்னன்

மணி மாறனாம் – என

கவிஞர் வல்லாம் தாஜ்பாலின்

வரிகளால்

தொய்வின்றிப் பொழிவுகளை

அரங்கேற்றி

ஏடகத்திற்கு

மெருகேற்றிவரும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி. மாறன் அவர்களை


நாமும்

வாழ்த்துவோம், போற்றுவோம்.

 

 


    

12 கருத்துகள்:

  1. நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. அக்குறையை போக்கிவிட்டிர்கள். நன்றி. பேச்சின் வலிமை. அருமை. மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. பேசியதை எல்லாம் நினைத்துப் பார்க்கலாம். ஆனால் நினைப்பதை எல்லாம் பேசிவிடக் கூடாது.
    அருமை
    திருவிளையாடல் படம் பார்த்தது போலவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. பேசும் முன் யோசிக்க வேண்டும்.  சீற்றத்தோடு பேசுவதற்கு பதில் சிக்கனமாக, சீராகப் பேசலாம்.  சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  4. அருமை அருமை அருமை.
    நானும் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. சொற்களைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனம் தேவை. அனுபவத்தில் கண்டுள்ளேன். அருமையான பொழிவினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. DD : தாத்தா, முதல் குரல் எவ்வாறு இருக்க வேண்டும்...?

    1 - ஒன்று - ஒன்றே போல் இருக்க வேண்டும்...

    DD : சரி தாத்தா, முதல் குரலின் முதல் சொல்லுக்குப் பின் வருபவை என்னவென்று அறியவில்லை...?

    1 - பகு எண்ணும், பகா எண்ணும் அல்லாத ஒன்றுடன் சுழியம் சேர்வது போல - அதாவது 10 - அவ்வாறு சுழியம் சேர்ந்தாலும், மதிப்பும் இருக்கலாம்: மதிப்பில்லாமலும் இருக்கலாம்... ஆனால் முதல் சொல்லிற்கு எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது...

    DD : ஓரளவு கண்ணில் தெரிகிறது தாத்தா... ஆனால் புரியவில்லையே...

    சரி, எண் 10- உடன் இன்னொரு சுழியத்தைச் சேர்த்துக் கொண்டு யோசித்தால் புரிந்து கொள்வாய்...

    DD : முதலில் அறிந்தேன்; அதன்பின் தெரிந்தேன்... ஆனால் குறளைப் படிக்காது குரல் என மாற்றிக் கேட்டேன்...

    கொம்பில்லா மனிதம் எனப் பதிவு செய்தாய் அல்லவா...? அதன்
    முதல் குறள் அல்ல; ஆனால் (1)
    முதல் அதிகாரம் அல்ல ஆனால் 10 (1+0)
    முதல் குறள் அல்ல ஆனால் எண் 100 (1+0+0) இப்போது இதைப் புரிந்து கொள்ளா விட்டாலும்..........

    உயிர் தமிழுக்காக...

    இறப்பேன்;

    நன்றி அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  7. மீளக்கேட்ட உணர்வுதரும் பதிவு. அருமை.

    பதிலளிநீக்கு
  8. பேசியது கேட்டு இனித்தது செவி...

    பதிலளிநீக்கு
  9. மனைவி மகனிடம் சொல்லிய சொல்லில் கணவரின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  10. சில வரிகள் வாட்ஸாப் செய்திகள் போல இருந்தது

    பதிலளிநீக்கு
  11. எப்படி உயிர்ப்புடனும் அர்த்தத்துடனும் பேசுவது என்பது பற்றி அளித்திருந்த அத்தனை வரிகளும் மிக அருமை! அழகு!

    பதிலளிநீக்கு
  12. அன்பின் இனிய
    தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு