24 நவம்பர் 2020

அபிராமி, அபிராமி

     நட்ட நடு ராத்திரி, முழிப்பு வந்துடுச்சா, மாடு வேற கத்துது, சரி, மாட்டுக்குப் பசிபோல, வைக்கோல் போடலாம்னுட்டு வெளியே வந்தேன்.

     வைக்கோல் போட்டுட்டு பார்க்கிறேன்.

      உங்க வீட்டு வாசல்ல, வெள்ளையா ஓர் உருவம், கால் இருக்கான்னு பார்க்கிறேன், இல்லை.

    

மிரண்டுபோய், யாரையாவது கூப்பிடலாம்னா, எனக்கோ வாய் குளறுது.

     அந்தப் பேய் உங்க வீட்டுப் புளிய மரத்திலிருந்து, பக்கத்து வீட்டுப் புளிய மரத்துக்கு அப்படியே தாவுது.

     கிளையைப் பிடிச்சு ஊஞ்சலாடுது.

     அதுக்கு மேல, என்னால நிக்க முடியல.

     கிடுகிடுன்னு வீட்டுக்குள்ளே போய், ஒரு சொம்பு தண்ணிய மடக் மடக்குன்னு குடிச்சுட்டு, நடுங்கியபடியே படுத்துட்டேன்.

---

     வீட்டிற்கு வெளியில் காய்ந்த, தந்தையின் வேட்டி, பேயாய் பயமுறுத்திய நிகழ்வினை, நம்மில் பலரும் அனுபவித்திருப்போம். இவரும் நடுங்கியிருக்கிறார்.

---

     நானும் உன்னைப் பார்த்துன்டே இருக்கேன், நிறைய தண்ணி ஊத்துறேன், உரம் போடறேன். ஆனாலும் நீ பழமே கொடுக்க மாட்டேங்குற.

      உன்னை என்ன செய்யலாம்? ம் . . . இந்த வருஷம் பார்ப்பேன் . . . பழம் கொடுக்கலேன்னா, உன்னை இந்த அருவாளாலே இப்படி வெட்டிடறேன் பாருன்னு, இரண்டு, மூன்று இடங்களில் வெட்டினேன்.

     என்ன ஓர் ஆச்சரியம். அந்த வருடம் அந்த மரத்தில் 10, 15 பூக்கள் மலர்ந்து, பிஞ்சாகி, பின்னர் பெரிய காய்களானது.

     பலாப் பிஞ்சுகள் வந்த அன்றே பார்த்து, மரத்தினை ஆரத் தழுவி, நீ நல்ல மரம், உன்னை இன்னும் கவனமா பார்த்துக்கிறேன் என்றேன்.

---

     சக மனிதனையே, மனிதனாய் மதிக்காத மாக்கள் நிரம்பி வழியும் இவ்வுலகில், மரத்தினையும், சக உயிராய், சக உணர்வோடு போற்றும், இந்தப் பண்பு, இவரிடத்தும், இவர்தம் குடும்பத்தினரிடத்தும் ததும்பி வழிந்திருப்பதை அறிந்து மனம் மகிழ்கிறது.

---

     அம்பிகாபதியின் மனதைக் கொள்ளை கொண்ட அமராவதி போலவே, என் மனதையும் கொள்ளையடித்தாள் ஓர் அமராவதி.

     அமராவதிக்கு என்மேல் காதல் இருந்ததோ, இல்லையோ, எனக்கு அமராவதி மேல்  ரொம்பவே காதல்.

     ஒரு தலைக் காதல் என்று கூட சொல்லலாம்.

---

     ஆகா, இவர் காதலித்திருக்கிறாரா?

     காதலித்த அனுபவமும் இவருக்கு இருக்கிறதா?

     காதலில் வென்றாரா?

     காதலியைக் கரம் பிடித்தாரா? எனப் படிக்கும்போதே, குதிரையில் ஏறி, என் மனமும் பறக்கத்தான் செய்கிறது.

     உங்களுக்கும் தெரிய வேண்டுமா?

     நான் சொல்லப்போவதில்லை, இவரது நூலினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

     என் மனதைப் போல் தங்கள் மனமும், ஆகாய விமானத்தில் ஏறிப் பறக்கவேண்டும் அல்லவா?

---

     நாங்கள் இருந்த வீடு அடையாளம் தெரியாத அளவு மாறியிருக்கிறது.

     வாயிலில் இருந்த காலி இடத்தில், ஒரு பெரிய அறை.

     வாயிலில் இருந்த புளிய மரம் இன்றும் இருக்கிறது.

---

     நாம் குடியிருந்த வீடு, நமக்கு உரிமையில்லாத வீடாய் மாறிய பிறகு, பல வருட நகர்தலுக்குப் பிறகு பார்க்கும் போது, உள்ளத்துள் எழும் மகிழ்ச்சிக்கு எப்படி அளவில்லையோ? அதுபோலவே, அப்பொழுதே எழும் பிரிவுத் துயருக்கும் அளவில்லை.

     நானே உணர்ந்திருக்கிறேன்.

     நானே, என் வாழ்வில் அனுபவித்தும் இருக்கிறேன்.

---

     முதன் முதலாக சைக்கிள் ஓட்டப் பழகியது. என்னை அடித்த சம மாணவனுடன் கட்டிப் பொறண்டு சண்டை போட்டு, அவன் வயிற்றில் கடித்து வைத்தது, ஓணான் அடித்தது எனப் பலப் பல நினைவுகளை எனக்குக் கொடுத்த, நடு நிலைப் பள்ளி வாயிலுக்குச் சென்றபோது, ஆள் நடமாட்டமே இல்லை.

     பள்ளியை சில காலம் முன்னர் மூடிவிட்டார்களாம்.

     என்ன காரணம் என்று கேட்டபோது, அப்பள்ளியில் படிக்கவரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்ததுதான் காரணம் என்றார்கள்.

     நான் படித்தப் பள்ளியை மூடிவிட்டார்கள் என்பதை அறிந்தபோது, மனதில் வலித்தது.

     நான் படித்த, என் கல்விக்கு வழிகோலிய, என் வளர்ச்சிக்கு வழி காட்டிய, பள்ளியின் வாயிலில், நேரம் போது தெரியாமல் நின்று கொண்டே இருக்கிறேன்.

---

     பல காலமாய் கல்வி புகட்டிய பள்ளிகள், நமக்கும், நம் தந்தைக்கும்,  தாய்க்கும், நம் பாட்டனுக்கும், பாட்டிக்கும் எழுத்தறிவு அளித்த பள்ளிகள், காணாமல் போவதற்கும், புதிது புதிதாய் வானுயர்ந்த கட்டடங்களைக் கொண்ட, தனியார் பள்ளிகள் முளைப்பதற்கும், வண்ண வண்ணப், பள்ளிப் பேருந்துகள் நம் தெருக்களில் வலம் வருவதற்கும், யார் காரணம்?

     நாம்தானே காரணம்.

---

     நூலினை, இம்மின்னூலினைப் படிக்கப் படிக்க, என் சிறு வயது நினைவுகளுக்குள் புகுந்து, மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்த உணர்வு.

     இந்நூலாசிரியர் வாழ்ந்த வாழ்க்கையின் பெரும் பகுதியை, நானும் வாழ்ந்திருக்கிறேன்.

     இடங்கள் மட்டுமே மாறியுள்ளன.

     நிகழ்வுகள் ஒன்றுதான்.

     நான் மட்டுமல்ல, இந்நூலினைப் படிக்கும் ஒவ்வொருவரும் இப்படித்தான் உணர்வார்கள், ஏற்கனவே படித்த ஒவ்வொருவரும், இப்படித்தான் உணர்ந்து இருப்பார்கள் என்பது நிச்சயம்.

     அன்று பென்சில் மாதிரி இருந்தவர், இன்று பெரும் கழுகாய் மாறி, இந்தியா முழுவதும் பறந்து கொண்டே இருக்கிறார்.

     தன் பருந்துப் பார்வையால் பார்த்தவற்றை எல்லாம், புகைப்படக் கருவியால் சிறைபிடித்து, தன் எழுதுகோலால் வடம் பிடித்து, இழுத்து வந்து, கணினியில் ஏற்றி, மின்னூலாய் மாற்றி, உலகையே வலம் வரச் செய்துகொண்டேயிருக்கிறார்.

பயண நாயகர்

ஒளிப்பட வித்தகர்


வெங்கட் நாகராஜ் அவர்களின்

இளமைக்கால நினைவலைகளால்

ததும்பி வழியும்

மின்னூல்


 

வாழ்த்துகள் ஐயா,

தங்களின் பயணங்கள் தொடரட்டும்,

மின்னூல்கள் சிறகு விரித்துப் பறக்கட்டும்.


 

11 கருத்துகள்:

  1. உண்மை தான் ஐயா...

    "அனைத்தும் அவனாலே"
    என்று எண்ணாமல்
    "அனைத்தும் நம்மாலே"

    என்று தோன்றும் தாய்மை உருவானால்..

    நம் நாடு சிறக்கும்...

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.... மனம் மகிழ்ச்சி அடைந்தது. மின்னூலை படித்து தங்கள் பாணியில் அறிமுகம் செய்திருப்பதைப் பார்த்தேன். மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... அனைத்து வலைப்பூவையும் வாசிப்பது மகிழ்ச்சி...

      நீக்கு
  3. அருமை. ஆசிரியரின் பசுமையான நினைவுகளை பதிவு செய்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமை நண்பரே அழகான விமர்சனம் திரு. வெங்கட்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அருமை சகோ. நாம் முன்னேற காரணமான பள்ளிகளை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை நிதர்சனமான உண்மை.

    பதிலளிநீக்கு
  6. வெங்கட் நாகராஜ் பயணக்கட்டுரை எழுதுவதில் வல்லவர். அவருடைய நூல் என்றால் கேட்கவா வேண்டும்?
    அருமையான அறிமுகம்!

    பதிலளிநீக்கு
  7. எழுத்து, புகைப்படம், ஆவணப்படுத்தல் என்ற வகையில் மிளிரும் திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் நூலினைப் பற்றிய, உங்கள் பாணியிலான, மதிப்புரை சிறப்பு. நூலாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல் பதிவு அருமை நண்பரே.
    இன்னொரு "சின்ன வயதினிலே "வாக தான் இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

    அப்புறம் இவர் காதல் கை கூடி இருக்காதா என்ன.....

    பதிலளிநீக்கு
  9. சகோதரர், பயண நாயகர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் உற்சாகம் தரக்கூடிய இந்த மாதிரி திறனாய்வு அவசியம் தேவை! அவர் இன்னும் உற்சாகமாகப் பறப்பார்! அருமையாக விமர்சனம் எழுதியிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு