17 நவம்பர் 2020

தோரோ

 


     முடியாது.

     தீர்மானமாய் சொன்னார்.

     என்னால் வரி கொடுக்க முடியாது.

     தர மாட்டேன்.

     அரசு விதிக்கின்ற வரியைத் தரமுடியாது எனத் துணிந்து சொன்னார்.

   

  அதற்கானக் காரணத்தையும் கூறினார்.

     என்னுடைய வரிப் பணத்தை அரசு முறையற்று செலவு செய்கிறது.

     அந்நிய நாட்டில், நான் கொடுத்த வரிப் பணத்தைக் கொண்டு, போர் தொடுக்கிறது.

     அறமற்ற அரசாக, இவ்வரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது.

      எனவே, தவறான செயல்களைச் செய்து கொண்டிருக்கிற, தவறான செயல்களுக்குத் துணை போகிற, இந்த அரசாங்கத்திற்கு வரி கொடுக்க மாட்டேன்.

---

     நல்ல அரசாங்கம் எப்படி  இருக்க வேண்டும்.

     இதற்கும் தெள்ளத் தெளிவாய் பதில் கூறினார்.

     எந்தவொரு அரசாங்கம் மிகக் குறைந்த ஆளுகையைக் கொண்டிருக்கிறதோ, The Government, Which has least Governance is the Great Government, அதுதான் மிகச்சிறந்த அரசாங்கம்.

     மையத்தில் அதிகாரங்கள் குவிக்கப்படாத, மாநிலங்களுக்கு எல்லா சுதந்திரங்களையும் கொடுக்கிற அரசாங்கம்தான் சிறந்த அரசாங்கம்.

     இவர் இப்படி உரைத்தது, இன்று, நேற்றல்ல.

     150 வருடங்களுக்கு முன்.

     அதுவும் இங்கு அல்ல.

     அமெரிக்காவில்.

     இவர் ஒரு கவிஞர்.

     அமெரிக்க எழுத்தாளர்.

     மெய்யியலாளர்.

     இயற்கை நோக்கர்.

     இவர் அமெரிக்காவில் மாசாசுட்சு என்னும் பகுதியில் உள்ள, வால்டன் என்னும் குளத்தின் அருகே, சின்னஞ்சிறிய குடில் ஒன்றினை அமைத்துக் கொண்டு, இரண்டாண்டுகள், இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்.

    


இந்த இரண்டாண்டு அனுபவத்தை, வால்டன் என்னும் பெயரில், தனியொரு நூலாக எழுதி வெளியிட்டவர்.

     தென்னாப்பிரிக்கச் சிறையில் இருந்தபோது, இவர் எழுதிய இன்னொரு நூலைப் படித்துப், படித்து, மனமொன்றி, தன் வேதநூலாகவே எடுத்துக் கொண்டு, தன் போராட்ட வழிமுறைகளை அமைத்துக் கொண்டவர் மகாத்மா காந்தி.


Resistance to Civil Government

அல்லது

Civil Disobedience

அதாவது

ஒத்துழையாமை.

 

இதுதான்

காந்தியின் வேத நூல்.

காந்தியின் போராட்ட நெறிமுறைகளை

வகுத்துக் கொடுத்த நூல்.

இதனை எழுதியவர்

ஹென்றி டேவிட் தோரோ.

---

அண்மையில்,


பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்களின்

ஒத்துழையாமை

என்னும் தலைப்பிலானப் பொழிவினை

இணையத்தில் கேட்கும் ஒரு வாய்ப்பு கிட்டியது.

 

     இப்பொழிவு ஹென்றி டேவிட் தோரோவை மட்டும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. மகாத்மா காந்தி அவர்கள், அந்நியத் துணிகளைப் புறக்கணிக்க விடுத்த அழைப்பில் ஒளிந்திருந்த, உண்மை உணர்வினையும் வெளிச்சமிட்டுக் காட்டியது.

     காந்தியம் பற்றிய புதிய புரிதலை உண்டாக்கியது.

     அந்நியத் துணிகள் புறக்கணிப்பு என்றால், எதோ வெளிநாட்டுத் துணிகளை மட்டும்தான் என்று இதுநாள் வரை எண்ணியிருந்தேன்.

     என் எண்ணம் தவறு என்பதை அறிந்து கொண்டேன்.

     தஞ்சையில் இருக்கிற மக்களுக்கு, சென்னையில் இருந்து, துணிகள் வருமானால், அதுவும் அந்நியத் துணிதான்.

     தஞ்சையில் இருக்கிற மக்களுக்கானத் துணி, தஞ்சையிலேயே உற்பத்தி செய்யப் படவேண்டும்.

     உப்பு ஒன்றினைத் தவிர, ஒவ்வொரு பொருளும், உண்ணும் உணவும், உடுத்தும் உடையும், பயன்படுத்தும் சாதனங்களும், என அனைத்தும், அந்தந்தப் பகுதியிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

     ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற, குடியரசாக இருக்க வேண்டும்.

     இதுதான் காந்தியின் கனவு.

     வாழ்க மகாத்மா காந்தி.

 

(இப்பதிவு, பொழிவின் ஒரு துளி)