06 ஜூன் 2021

ஆண்டிப்பட்டி சமீன்

 


     ஆண்டு 1924.

     சனவரி மாதத்தில் ஓர் நாள்.

     கரந்தைத் தமிழ்ச் சங்க முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களும், வள்ளல், வள்ளல் என்றால் பெரு வள்ளல் ஒருவரும், சாரட் வண்டியில் பயணித்தவாறு, தஞ்சாவூர் முழுவதையும் ஒரு சுற்று சுற்றினர்.

     
எதற்காக இந்தப் பயணம்?

     இடம் வாங்குவதற்காக.

     அமிழ்தினும் இனிய தமிழ் அன்னைக்கு, வடவேங்கடம் முதல் தென் குமரி இடைப்பட்ட இடங்கள் யாவும், உரியனவாக இருந்தும், கரந்தையம்பதியில், தமிழன்னைக்கு இல்லம் எடுக்க ஓர் அடி நிலம் கூட சொந்தமாக இல்லாத நிலையினைப் போக்கத்தான் இந்தப் பயணம்.

     தஞ்சை முழுவதும் சுற்றியவர்களுக்கு, கரந்தையிலேயே, வடவாற்றின் வட கரையில், கருவேல மரங்கள் மட்டுமே குடிகொண்டிருந்த ஓர் இடம், மனதைக் கவர்ந்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கான இடம், கரந்தையிலேயே அமைதல் பொருத்தமல்லவா?

     ஆனால் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அந்த இடம் பாவா மடத்திற்குச் சொந்தமான இடம் என்று.

     மடத்திற்குச் சொந்தமான இடத்தினை விலைக்கு வாங்க முடியுமா?

     வாங்குவதற்கு உரிய பொருளில்லை என்பது ஒரு புறமிருக்க, மடத்திற்குச் சொந்தமான இடத்தை விலைக்கு வாங்குவதில் உள்ள சட்ட சிக்கல்களை எண்ணிப் பார்த்தார் உமாமகேசுவரனார்.

     உமாமகேசுவரனார் வழக்கறிஞர் அல்லவா.

     தொண்டு , தமிழ், முன்னேற்றம் என்பதனையே குறிக்கோளாகக் கொண்டு, மாபெரும் தமிழ்ப் பணியாற்றிவரும், கரந்தைத் தமிழ்ச் சங்கம், காலூன்ற இடம் இன்றியும், இடம் வாங்கப் பொருளின்றியும் தவியாய் தவிக்கிறது.

     எனவே, ஆட்சியாளர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு, இடம் வழங்கி உதவிட வேண்டும் என்று, அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

     வேண்டுகோள் பலித்தது.

     சென்னை மாகாண சட்டத்துறைச் செயலாளர் திவான் பகதூர் இராமச்சந்திர ராவ் அவர்களின், உத்தரவிற்கு இணங்க, கரந்தை வடவாற்றின் வட கரையில் அமைந்திருந்த, பாவா மடத்திற்குச் சொந்தமான இடம், 1894 ஆம் ஆண்டின் நிலம் கையகப் படுத்துதல் சட்டத்தின்படி, உரிய இழப்பீட்டுத் தொகை, அரசால் வழங்கப் பெற்று, நிலம் கையகப் படுத்தப்பட்டது.

     பின்னர், நிலத்தைக் கையகப்டுத்திய, சட்டத் துறைச் செயலாளர் இராமச் சந்திர ராவ் அவர்கள், தானே பத்திரத்தில் கையெழுத்திட்டு, இவ்விடத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு உரிமையாக்கி, பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.

     44,662 சதுர அடி நிலமானது, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சொந்தமானது.

     


இப்பெரும் இடத்திற்கு, ஆங்கிலேயர்கள், சங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட தொகை ரூ.1,807 மற்றும் 5 அணா மட்டுமே.

     ஆனால், சங்கம் தொடங்கிய நாள் முதல், சங்கத்தினர் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த தொகை ரூபாய் ஆயிரத்தைக் கூடத் தாண்டவில்லை.

     தமிழவேள் உமாமகேசுவரனாருடன், அலையாய் அலைந்து, இவ்விடத்தைத் தேர்வு செய்தார் அல்லவா, ஒரு வள்ளல், பெரு வள்ளல், அவர் தன் பங்கிற்கு ரூ.1,000 ஐ அன்பளிப்பாய் அள்ளி வழங்கினார்.

     நினைத்துப் பாருங்கள், 1924 ஆம் ஆண்டில் ரூபாய் ஆயிரத்தின் மதிப்பை எண்ணிப் பாருங்கள்.

     1924 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள், இவ்விடம், தமிழ்த் தலமாம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு உரிமையானது.

     இப்பெரு வள்ளல், சங்கத்திற்குப் பொருளை மட்டுமல்ல, எண்ணிறந்த நூல்களையும் ஏற்கனவே வாரி வாரி வழங்கி உள்ளார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதினோராவது ஆண்டு விழா, கந்தப்பச் செட்டியார் சத்திரத்தில், 1922 ஆம் ஆண்டு நடைபெற்றது.

     இவ்விழாவில் உரையாற்றிய இப்பெருவள்ளல், தனது இல்லத்தில் உள்ள நூல்கள் முழுவதையும், சங்க நூல் நிலையத்திற்கு வழங்க விரும்புகிறேன் என்றார்.

     இக்கால கட்டத்தில், சங்க நூலகம், கரந்தைக் கடைத் தெருவில் அமைந்திருந்த, காலஞ்சென்ற வாசுதேவ நாயக்கருக்குச் சொந்தமான சத்திரத்தில் நடைபெற்று வந்தது.

     கரந்தை கோவிந்தராஜுலு மற்றும் சுப்பராயலு நாயுடு ஆகியோரின் பெருமுயற்சியின் பயனாக, தர்மாபுரம் உதவி ஆட்சியர் வேங்கடசாமி நாயுடு என்பார், இவ்விடத்தை, சங்கத்தின் உபயோகத்திற்காக, வாடகை ஏதுமின்றி, ஆறு ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி இருந்தார்.

     விழாக்களுக்கு, கந்தப்பச் செட்டியார் சத்திரம்.

     அலுவலகப் பயன்பாட்டிற்கும், நூலகத்திற்கும், நாயுடு சத்திரம்.

     இதுதான் அன்றைய நிலை.

     இந்நிலையில்தான், தன் சொந்த சேமிப்பில் உள்ள, நூல்களை, சங்க நூலகத்திற்குத் தருவதாக கூறினார் இவ்வள்ளல்.

    சில மாதங்கள் கடந்த நிலையில், சங்க உறுப்பினர்கள் சிலரை, தனது இல்லத்திற்கு அழைத்து, தனது நூல்கள் முழுவதையும், தானே, தனது திருக்கரங்களால் எடுத்துக் கொடுத்தார்.

     நூல்கள் என்றால் ஏதோ பத்து, இருபது நூல்கள் அல்ல.

     மொத்தம் எட்டு மரப் பேழைகளையும், அவற்றுள் இருந்த நூல்கள் அனைத்தையும் சங்கத்திற்கு வழங்கினார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையம் என்ற பெயருடன் நடைபெற்று வந்த நூலகத்தில், இவ்வள்ளல் வழங்கிய நூல்கள், தனிப் பகுதியாக வைக்கப் பெற்றன.

     அப்பகுதிக்கு, அவ் வள்ளலின் பெயரே வைக்கப்பெற்றது.

     பெத்தாச்சி புகழ் நிலையம்.

     1923 ஆம் ஆண்டு நடைபெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 12 ஆம் ஆண்டு விழாவிற்கு இவரையே, தலைமையேற்க வைத்து,

மதுரைத் தமிழவை மாட்சியிற் புரப்போய்

கரந்தையெம் சங்கம் காதலித் தளிப்போய்

இன்னும்பல் சீரும் எண்ணி ஆங்கில

மன்னவர் சூட்டு திவான்பக தூரினை

ஆண்டிப் பட்டிநா டாளுங் காவல

வருக பெத்தாச்சி மாண் பெயரோய் நலம்

பெருக எம் சங்கத் திருவிழாப் பீடுற

வருக தலைமையின் வாழியர் வருகவே

என வரவேற்று, இவரது சகோதரரும், அன்றைய சென்னை அரசாங்க சட்டமன்ற உறுப்பினருமாகிய சர் மு.சித.முத்தையா செட்டியார் அவர்களின் திருக்கரங்களால், இந்த நூல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

     சங்கத்திற்கு இடமும், எண்ணற்ற நூல்களையும் வழங்கியதோடு, சங்க ஆதரிப்பாளராய் அமர்ந்து, தேவைப்படும் பொழுதெல்லாம் வாரி வாரி வழங்கி, சங்கத்தைக் காத்த, வளர்த்த, இவ்வள்ளல் யார் தெரியுமா?

கரூர் நகர் மன்றத் தலைவர்,

ஆண்டிப்பட்டி சமீன்தார்

பெருவள்ளல்


திவான் பகதூர் முத்தையா சிதம்பரம் பெத்தாச்சி செட்டியார்

சுருக்கமாய்,

திவான் பகதூர் மு.சித.பெத்தாச்சி செட்டியார்.
பெருவள்ளல் பெத்தாச்சி செட்டியாரின்

நினைவினைப் போற்றுவோம்.

----

நண்பர்களே, வணக்கம்.

     எனது நூல்கள் மூன்று, புதிதாய் அமேசான் தளத்தில் இணைந்துள்ளன. இம்மூன்று நூல்களையும், 7.6.2021 திங்கட்கிழமை பிற்பகல் முதல் 9.6.2021 புதன் கிழமை பிற்பகல் வரை, கட்டணம் ஏதுமின்றி தரவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்.

வாசித்துத்தான் பாருங்களேன்.
வலைச் சித்தருக்கு ஜெ

என்றென்றும் பேரன்புடன்,

கரந்தை ஜெயக்குமார்     


36 கருத்துகள்:

 1. கடையெழு வள்ளல்களுடன் ஒப்பிடப் பட வேண்டியவர் என்றே தோன்றுகிறது நண்பரே.

  பதிலளிநீக்கு
 2. கடையெழு வள்ளல்களுடன் ஒப்பிடப் பட வேண்டியவர் என்றே தோன்றுகிறது நண்பரே.

  பதிலளிநீக்கு
 3. அருமை. மின்நூல்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. அன்பு நண்பருக்கு, நம் தாய் மொழி தமிழ் மொழிக்கு தொண்டு செய்து முன்னேற்றி வரும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு நூல்களையும் நன்கொடையையும் வாரி வழங்கிய உத்தமர் தம் புகழினைப் போற்றுவோம், நன்றி செலுத்துவோம். சிறப்பான பதிவிற்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 5. 1000 ரூபாய், எட்டு மரப் பேழைகள் நிறைய நூல்கள்... சிறப்பான நிகழ்வு ஐயா...

  பதிலளிநீக்கு
 6. ஆரம்பித்த நாளும், ஆண்டும், ஒரு அற்புதமான கணக்கீடு ஒன்றை எண்ண வைத்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த அற்புதக் கணக்கீட்டினை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன் ஐயா

   நீக்கு
 7. இதுவரை அறியாத ..அறிந்திருக்க வேண்டிய தகவல் ..அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 8. பெருவள்ளல் பெத்தாச்சி செட்டியாரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
  அருமையான பகிர்வு.

  மின்னூல்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. வள்ளல் வரலாறு அறிந்தோம் . நன்றி

  பதிலளிநீக்கு
 10. அரிய மனிதரைப்பற்றிய விடயம் தந்தமைக்கு நன்றி.

  மின்நூல்கள் வெளியீட்டிற்கு வாழ்த்துகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 11. எத்தனை எத்தனை பெரும் தொண்டு ஆற்றிய வள்ளல்கள் இருந்த இடம். ஒவ்வொருவரைப் பற்றியும் படிக்கும் போதும் அவர்கள் மீதான மரியாதை அதிகரிக்கிறது. தொடரட்டும் சிறப்பான பதிவுகள்.

  மின்னூல் வெளியீடு - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 12. மிகமிக அருமையானப் பொக்கிஷப்பதிவு.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. இதே போல ஒரு ஆர்ச் புதுகையில் விக்டோரியா ராணிக்காக அமைக்கப்பட்டிருந்தது . எத்தகைய வேறுபாடு!!! அருமை அண்ணா!

  பதிலளிநீக்கு
 14. பெத்தாச்சி செட்டியார் அவர்களின் கொடை சிறப்பான ஒன்று. அருமை

  மின்னூல்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!

  துளசிதரன்

  அருமையான பதிவு. மின்னூல்களுக்கு வாழ்த்துகள் சகோ

  கீதா

  பதிலளிநீக்கு
 15. மிக அருமையான பதிவு!
  மின்னூல்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. நான் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பதாலும் கரந்தைத் தமிழ்க் கல்லூரி யில் பயின்ற நிறைய உறவினர்கள் சொன்ன அக்கல்லூரி பற்றிய விஷயங்கள் அவ்வளவும் உங்கள் பிளாக் செய்திகள் படிக்கப் படிக்க ஞாபகம் வருகிறது .நன்றி கோர்வையாக ஞாபகம் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் தஞ்சையைச் சார்ந்தவர் என்பதை அறிந்து மகிழ்கிறேன்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 17. ஒவ்வொருவரும் முடிந்தளவு நூல்களை பொது நூலகங்களுக்கு அன்பளிப்பு செய்தால் எல்லா இடங்களிலும் அறிவு பரவும்.

  உடுவை.எஸ்.தில்லைநடராசா
  கொழும்பு-இலங்கை

  பதிலளிநீக்கு
 18. அருமை. மின்நூல்களுக்கு வாழ்த்துகள்

  https://kovaikkothai.wordpress.com/2021/08/26/24-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-74/

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு