29 ஜூன் 2021

காந்தி கணக்கு



     காந்தி கணக்கு.

     இந்தச் சொல்லாடலை, நாம் அனைவருமே அறிந்திருப்போம்.

     காந்தி கணக்கு.

     இதன் உண்மைப் பொருளை, இச் சொல்லாடல் உருவான கதையை அறிந்திருப்போர் குறைந்த அளவிலேயே இருப்பர்.

     மகாத்மா காந்தி அவர்கள் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்தபோது, பெரும்பாண்மையான வணிகர்கள், செல்வர்கள், இப்போராட்டத்தை ஆதரித்த போதிலும், இப்போராட்டத்தில் நேரடியாக பங்கெடுக்க விரும்பவில்லை.

     இருப்பினும், சத்தியாகிரகத் தொண்டர்களுக்கு உதவ விரும்பினர்.

     காற்று வெளியில், ஒரு செய்தியை ரகசியமாய் உலாவ விட்டனர்.

    

சத்தியாகிரகத் தொண்டர்கள், எங்கள் வணிக நிறுவனங்களில், தேவையானப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

     காசு கொடுக்க்த தேவையில்லை.

     காந்தியின் கணக்கு என்றால் போதுமானது.

     இதுதான் காந்தி கணக்கு.

     இப்படித்தான் இந்தச் சொல்லாடல் உருவானது.

     ஆனால் இன்று, இதன் பொருள், மிகவும் அபத்தமாக மாறியுள்ளது.

     பொருளை வாங்கிக் கொண்டு அல்லது கடனை வாங்கிக் கொண்டு, நாமம் போட்டால், அதுவே காந்தி கணக்கு என இன்று திரிந்து போயுள்ளது.

     இதுதவிர, காந்தி கணக்கு பற்றிய, வேறு ஒரு கதையும், இம்மண்ணில், நெடுங்காலமாய் வலம் வந்து கொண்டே இருக்கிறது.

     கப்பல் ஓட்டியத் தமிழன் ..சி., அவர்களின் பொருளாதாரத் துயர் நீக்க, காந்தியின் வழியாக, தென்னாப்பிரிக்க மக்கள் வழங்கிய, உதவியை, ..சி., அவர்களுக்குக் காந்தி கொடுக்காமலேயே விட்டுவிட்டார், என்றொரு செய்தி, இன்று வரை, இறக்கை கட்டி பறந்து கொண்டே இருக்கிறது.

     காந்தி கணக்கு.

     ஆனால், உண்மையில் என்னதான் நடந்தது?

     வாருங்கள், சற்று பின்னோக்கிப் பயணித்துப் பார்ப்போம்.

     1915 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள், காந்திதான், ..சி., அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

     சில ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் சார்பாக, தென்னாப்பிரிக்காவில் திரட்டப் பட்டப் பணத்தை, தாங்கள் பெற்றுக் கொண்டீர்களா? என்பதை அறிய விரும்புகிறேன்.

     உங்களுக்கு அனுப்பப்பட்டதாக, நான் கருதிய சில, பணக் கட்டளைகளைத் தேட முயன்றேன்.

     ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

     எனவே, என்னிடம் தரப்பட்டப் பணம், தங்களிடம் வந்து சேர்ந்ததா? என்பதை அறிய விரும்புகிறேன்.

     இக்கடிதத்திற்கு, ஏப்ரல் 22 ஆம் தேதியே, ..சி., அவர்கள் பதில் எழுதுகிறார்.

     நானோ, எனது மனைவியோ, தங்களிடம் இருந்து வந்த பணம் எதையும் பெறவில்லை.

     ..சி., அவர்கள், தன் கடிதத்தில், தன் மனைவியைக் குறிப்பிட்டதற்குக் காரணம், ..சி., சிறையில் வாடியபோது, வழக்கு தொடர்பான செலவினங்களுக்காக, நிதி வேண்டி, ..சி., அவர்களின் மனைவி திருமதி மீனாட்சி அம்மாள் அவர்கள்தான் அறிக்கை  வெளியிட்டிருந்தார்.

     இதனால்தான், தானோ, தன் மனைவியோ, காந்தியிடம் இருந்து பணம் எதனையும் பெற வில்லை என்று எழுதினார்.

      தான் வறுமையில் கோரப் பிடியில் சிக்கித் தவித்தபோதும், இதே கடிதத்தில் மேலும் எழுதினார்.

     தாங்கள் தவறாகக் கருதவில்லையாயின், நான் ஒன்று சொல்வேன்.

     இதுபற்றித் தாங்கள் சிரமப்பட வேண்டாம்.

     வேறு ஒரு நல்ல காரியத்திற்கே, அந்தப் பணம் செலவாகியிருக்கும் என்பது உறுதி.

     காந்தி இதனை ஏற்கவில்லை.

     1915, மே 15 இல் காந்தி இதற்குப் பதில் கடிதம் எழுதினார்.

     தங்களுக்காக, நிதியினை வழங்கியர்களின் பெயர்கள், எனக்குத் தெரியவில்லை.

     ஆனால், அவர்கள் சார்பில், ஒரு நண்பர் மூலம் அந்தப் பணம் என்னை வந்து அடைந்தது.

     அப்பணம், தங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றே இதுநாள் வரை எண்ணியிருந்தேன்.

     அப்பணம் தங்களுக்குத் தேவை இல்லாவிட்டாலும் கூட, பணம் தந்தவர்கள் பற்றிய செய்திகளை அவசியம் அறிவேன்.

     இக்கடிதத்திற்கு, மே 22 இல், ..சி., பதில் எழுதினார்.

     படித்துத்தான் பாருங்களேன்.

     கல்லையும் கண்ணீர் சிந்த வைக்கும் கடிதம்.

     தாங்கள் சென்ற மாதம் 21 ஆம் நாள் எழுதிய கடிதத்தில் இருந்து, எனக்குத் தருவதற்காகத் தங்களிடம் தரப்பட்டப் பணம், தென்னாப்பிரிக்கச் சாத்வீகப் போராட்டத்திற்காகச் செலவிடப்பட்டுவிட்டது என்று எண்ணினேன்.

     எனவே, அந்தப் பணத்தைத் தாங்கள், தங்கள் கையிலிருந்து தர விரும்புவதாகவும்,  அதுவும் முழுமையாக இராது என்றும் நினைத்தேன்.

     எனவே அது குறித்து, இனிமேல் தாங்கள் தொந்தரவு பட வேண்டியதில்லை என்று எழுதினேன்.

     ஆனால், இம்மாதம் 20 ஆம் நாள், தாங்கள் எழுதியக் கடிதம், அந்தப் பணம் எதற்கும் செலவிடப் படவில்லை என்பதையும், அப்பணம் தங்களிடமே இருக்கிறது என்பதையும், தெள்ளத் தெளிவாய் விளக்குகிறது.

     கடந்த இரண்டு ஆண்டு காலமாக, சில தென்னாப்பிரிக்க நண்பர்களின் தயவே, என்னையும், என் குடும்பத்தையும் காத்து வருகிறது என்பதை, நான் ஏற்கனவே, தங்களிடம் நேரிலேயே தெரிவித்துள்ளேன்.

     இந்நிலையில், எனக்காகத் தரப்பட்டப் பணத்தை, எனக்காகத் தரப்படத் தயாராய் இருக்கும் பணத்தை, வேண்டாம் என்று சொல்ல, எக்காரணமும் இல்லை.

     இப்போது இருக்கும் நிலையில், பணம் வேண்டாம் என்று சொல்வேனேயானால், அது, நான், எனக்கும், என் குடும்பத்திற்கும் இழைக்கும் அநீதியாகும்.

     ஆதலால், தாங்கள், தங்களுக்கு வசதிபட்டபோது, அன்போடு அப்பணத்தை அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

     மே 28 இல், காந்தி பதில் எழுதுகிறார்.

     பணம் செலுத்தியவர்களின் பட்டியலைக் கேட்டு, நட்டாலுக்கு எழுதுவேன். அவர்கள் அனுப்பிய தொகையும் தெரியாது, அவர்கள் பெயரும் தெரியாது.

     ஆனால், அவற்றைப் பெற முடியும் என நம்புகிறேன்.

     ஆனால், ..சி., அவர்களையோ வறுமை வாட்டி வதைத்தது.

     எனவே, மே 31 இல் வேறு வழியின்று, வேண்டுதலோடு, ஒரு கடிதத்தை எழுதினார்.

     தங்கள் நண்பர் கொடுத்தப் பணம், இவ்வளவு என்று, தோராயமாகவாவது, தங்களுக்குத் தெரியாதா?

     தெரியும் என்றால், அத் தொகையினையோ அல்லது அதன் பெரும் பகுதியினையோ, தாங்கள் அனுப்பி வைத்தால், இப்போதைய எனது இக்கட்டான சூழ்நிலையில், மிக்க உதவியாக இருக்கும்.

     கணக்குப் புத்தகம் கிடைத்தபின், மீதியை அனுப்பலாமே.

     காந்தி, ..சி.,யின் மன்றாடலையோ, பொருளாதார ரீதியாக அவர் சந்தித்துவரும் இன்னல்களையோ பொருட்படுத்தவே இல்லை.

     கணக்கில் தவறு செய்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே குறியாக இருந்தார்.

     ஜுன் மாதத்தில் ஒரு கடிதம் எழுதினார்.

     தாங்கள் கொஞ்சம் காத்திருந்தால், பணத்தையும், பிற விவரங்களையும் அனுப்புவேன்.

     அந்த நண்பரின் பெயர் தெரிந்தால், தங்களுக்குக் கட்டாயம் தெரிவிப்பேன்.

     ..சி., எழுதிக் கொண்டே இருந்தார்.

     இன்னும் இல்லை.

     இரண்டே இரண்டு சொற்களில் ஒரு பதில் கடிதம் வந்தது.

     மீண்டும் ..சி., எழுதினார்.

      1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், காந்தியிடம் இருந்து ஒரு பதில் கடிதம் வந்தது.

     இம்முறை, அவரது கையெழுத்தில், அதுவும் தமிழில் பதில் கடிதம் வந்தது.

     தென்னாப்பிரிக்காவில் இருந்து இன்னும் வந்து சேரவில்லை.

     எப்பொழுது வரும் என்று தெரியவில்லை.

     வந்தே மாதரம்.

     மோகன்தாஸ் காந்தி.

     காந்தியின் கடிதத்தில், தமிழைக் கண்டதும், ..சி.,க்குத் தன் வறுமை மறந்து போனது.

     உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது.

     1915, ஆகஸ்ட் 15 இல் பதில் எழுதினார்.

     தாங்கள் தமிழில் எழுதிய அஞ்சல் அட்டை, உரிய தேதியில் கிடைத்தது.

     எந்தப் பிழையும் இல்லாமல், தாங்கள் எழுதியுள்ளதைக் காண மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

     சாதாரண நடையில் எழுதப்பட்ட, தமிழ் உரைநடை, செய்யுள் நூல்களைத் தாங்கள் வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடும் என்றால், நான் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் தங்களுக்கு அனுப்பி மகிழ்வேன்.

     இக்கடிதத்திற்கு காந்தியிடம் இருந்து, பதில் வந்ததா எனத் தெரியவில்லை.

     ஆனால், 1916 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாள், காந்தி எழுதியக் கடிதத்துடன், பணம் குறித்த கடிதப் போக்குவரத்து முடிவிற்கு வந்தது.

     நட்டாவில் இருந்து தகவல் வந்துவிட்டது.

     ரூ.347 மற்றும் 12 அணா.

     ஒரு வழியாகப் பணம் ..சி., அவர்களை வந்தடைந்தது.

     இதன் பின்னர் ..சி., அவர்கள் காந்திக்கு எழுதியக் கடிதங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

     ஆனால், ..சி., அவர்கள் 1916 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி, தன் தென்னாப்பிரிக்க நண்பர் திரு .வேதியன் பிள்ளை அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

     இந்த வேதியன் பிள்ளை அவர்கள்தான், தென்னாப்பிரிக்காவில், காந்திக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தவர்.

     ஸ்ரீமான் காந்தி அவர்களிடமிருந்து, ரூ.347 மற்றும் அணா 12 வந்தது.

     ஓர் அச்சாபீஸ்காரருக்கு புதிய டைப்புகள் வார்ப்பதற்காக, ரூ.100 கொடுத்தேன்.

     மீதத் தொகையைக் கொண்டு, எனது கடன்களில், ரூ.50 ஐத் தவிர மற்றைய கடன்களை அடைத்து விட்டேன்.

     காகிதம் வாங்கும்போதுதான், இனி பணம் தேவைப்படும்.

     படிக்கப் படிக்க, வேதனை நம் உள்ளத்தைச் சூழ்ந்து வாட்டுகிறது அல்லவா?

     பல இலட்சம் செலவில், ஒன்றல்ல, இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கி, நமக்காக, நமது நாட்டின் விடுதலைக்காக ஓட விட்டு, ஆங்கிலேயர்களை அலற வைத்தவர், தன் செல்வம் அனைத்தையும் நம் நாட்டிற்காகவே இழந்து, குடும்ப வறுமையில் இருந்து, விடுதலை பெற வழி தெரியாமல், வெறும் ரூ.347 மற்றும் 12 அணாவிற்காகப், பத்து மாதங்கள் கடிதம், கடிதம் எனக் கடிதங்களாய் எழுதி, எழுதி, பணத்திற்காக, வழி மேல் விழி வைத்துக் காத்திருந்திருக்கிறார் என்பது எத்துணை பெரிய கொடுமை.

      பத்து மாதங்கள் காத்திருந்து பெற்ற தொகையினைக் கொண்டு, தன் கடன்களைக் கூட முழுமையாய் அடைக்காமல், எழுத்துருக்களை வார்க்க, அச்சகத்திற்கு ரூ.100 கொடுத்திருக்கிறார் என்றால், அந்த தமிழ் நெஞ்சத்தை, பணம் கிடைக்காத போதும் கூட, காந்தியின் கடிதத்தில், தமிழைக் கண்டு, அகம் மகிழ்ந்த, உன்னத உள்ளத்தை, இரு கரம் கூப்பி வணங்கத்தான் தோன்றுகிறது அல்லவா.

     ங் கு வோ ம்.

     கப்பலோட்டியத் தமிழனை, எந்நாளும் மனதில் நிறுத்திப் போற்றுவோம்.

---

கடந்த 20.6.2021 ஞாயிற்றுக் கிழமை,

வலைத் தமிழ் தொலைக் காட்சியில்

காந்தியம் முன்னெடுப்போம்

தொடரில்

காந்தியைப் பற்றிய தவறான கருத்துக்களும்

சரியான விவரங்களும்

என்னும் பொருண்மையில்.

காந்தி, ..சி.,

பற்றி

மக்கள் சிந்தனைப் பேரவையின்

மாநில துணைத் தலைவர்,

தஞ்சாவூர், காந்தி இயக்க அறக்கட்டளை

அறங்காவலர்,

தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரியின்

வணிகவியல் துறை

மேனாள் தலைவர்

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்களின்

தங்கு தடையற்ற

தெளிந்த நீரோடையாய்

இணைய வழி தவழ்ந்து வந்த

செம்மாந்தச் சொற்பொழிவு

கேட்டு மகிழ்ந்தேன்.

 

காந்தியத்திற்காகவே

வாழும்

காந்தியச் சிந்தனையாளர்


பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.