04 செப்டம்பர் 2021

மருந்தென வேண்டாம்     மருந்து.

     வாழ்வு முழுவதும் மருந்து, மருந்து, மருந்து.

     உணவு உண்ண மறந்தாலும் மறப்போம், ஆனால் மருந்துண்ண மறக்க மாட்டோம்.

     நமது இன்றைய வாழ்வு, மருந்துடன் பின்னிப் பிணைந்த வாழ்வாகி விட்டது.

     மருந்தில் இருந்து, நமக்கு விடுதலையே கிடையாதா?

     உண்டு.

    

உண்டு என்கிறார் இவர்.

     யார் இவர்?

     என்று சொன்னார்?

     இவர் இப்பொழுது சொல்லவில்லை.

     இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லி விட்டார்.

     மருந்து வேண்டாம்.

     உடலுக்கு மருந்து, வேண்டவே வேண்டாம்.

---

     கடந்த ஆண்டு மருத்துவம் தொடர்பாக, வெளிவந்த நூல், இவ்வாண்டு பழமையாகி விடுகிறது.

     காரணம் அறிவியல் வளர்ச்சி.

     மருத்துவ வளர்ச்சி.

     புதுப்புது கண்டுபிடிப்புகள்.

     ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், இவர் எழுதிய எழுத்துக்கள், இன்றும் புத்தம் புதிதாய் தோன்றுகின்றன.

     எக்காலத்தும் பொருந்தும் வல்லமை வாய்ந்தவை இவரது எழுத்துக்கள்.

     இவர்தான்,

     திருவள்ளுவர்.

     திருக்குறள்.

     திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது.

     133 அதிகாரங்களை உடையது என்பதை நாம் அறிவோம்.

     இந்த 133 அதிகாரங்களுள், ஒரே ஒரு அதிகாரத்தை, மருந்திற்காக ஒதுக்கியிருக்கிறார் திருவள்ளுவர்.

     மருந்து.

     அதிகாரத்தின் தலைப்பே மருந்துதான்.

     பத்தே, பத்து குறள்களில், எக்காலத்திற்கும் பொருந்தும், மருத்துவத்தை முன் வைக்கிறார்.

     மருந்தையும், மருத்துவத்தையும், இந்த பத்தே பத்து குறள்களில் அடக்கி உள்ளார்.

     நோய் ஏன் வருகிறது? என்பதற்கு முதல் குறள்.

     மருந்தே வேண்டாம் என்பதையும், உடல் நோய்வாய்ப் படாதிருக்க, கடைபிடிக்க வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகளையும், அடுத்து வரும் ஆறு குறள்களில் தெள்ளத் தெளிவாய் விளக்குகிறார்.

     மருத்துவர்களுக்கு இரண்டு குறள்களை ஒதுக்கியுள்ளார்.

     நோய் ஏன்வருகிறது என்பதற்கு ஒரு குறள்.

     உணவுக் கட்டுப்பாட்டிற்கு ஆறு குறள்கள்.

     மருத்துவர்களுக்கு இரண்டு குறள்கள்.

     மொத்தம் ஒன்பது குறள்களாவிட்டதா?

     இவ்வதிகாரத்தின் பத்தாவது குறளில், மருத்துவத்தின் கூறுகளைக் கூறுகிறார்.

     பத்தே பத்து குறள்கள்.

     உலகின் மொத்த மருத்துவமும், இந்தப் பத்திற்குள் அடக்கம்.

     திருவள்ளுவர் அல்லவா?

     வைத்தியத்தில், வைத்திய முறைகளில் தமிழர்களுக்கு இருந்த, பாரம்பரிய அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

     முதல் குறள்.

     மிகினும் குறையினும் நோய் செய்யும்.

     நோய் வருவதற்கானக் காரணங்கள் இரண்டே இரண்டுதான்.

     மிகினும், குறையினும்.

     அதிகரித்தாலும் நோய்.

     குறைந்தாலும் நோய்.

     எது குறைந்தால்?

     எது அதிகரித்தால்?

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று

     மூன்று.

     வாதம், பித்தம், சிலேப்பம்.

     வாதம் என்றால் காற்று.

     பித்தம் என்றால் நெருப்பு.

     சிலேப்பம் என்றால் நீர்.

     நீர், நெருப்பு மற்றும் காற்று இம்மூன்றாலும், சமநிலைப் படுத்தப் பட்டதே, நமது உடம்பு, என்பதை நம் முன்னோர் அறிந்திருந்தனர்.

     இம்மூன்றையும் நாடிகளைப் பார்த்து அறியலாம் என்பதையும், தெரிந்து வைத்திருந்தனர்.

     வாத நாடி.

     பித்த நாடி.

     சிலேப்ப நாடி.

     இம்மூன்று நாடிகளையும், கணித்து, நமது உடலுக்குள் நிகழும் மாற்றத்தை, உண்மை நிலையை கண்டுபிடிக்கலாம் என்பதை, வெகு காலத்திற்கு முன்பே, நம் முன்னோர் அறிந்து, உணர்ந்து, தெளிந்து மருத்துவம் பார்த்தனர்.

     மனிதனின் புறத் தோற்றமானது, ஒன்றே போல், இருப்பினும், ஒவ்வொருவருடைய உடலும், உடலியல் இயக்கமும் வேறுபட்டது என்பதைக் கண்டு பிடித்தனர்.

     எனவே, ஒவ்வொரு நோயாளியும், தனித் தனியே கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்ந்திருந்தனர்.

     எனவே ஒவ்வொருவருக்கும் தனித் தனி மருந்து செய்தனர்.

     நம் வைத்திய முறை தொலைந்து போனதற்கு, இந்த அணுகுமுறைதான் காரணம்.

     பலருக்கு ஒரே நோய்.

     ஆனால், ஒவ்வொருவருக்கும் தனித் தனி மருந்து.

     எனவே, பொதுவான மருந்து கொடுக்கும், ஆங்கில மருத்துவத்துடன், தமிழ் மருத்துவத்தால் போட்டி போட முடியாமல் போனது.

     நூறு பேருக்கு ஆங்கிலப் பொது வைத்தியம் பார்த்தால் 90 பேர்  பிழைப்பார்கள், 10 பேர் இறப்பார்கள்.

     ஆனால் நூறு பேரும் பிழைக்க வேண்டும் என்று போராடுவதுதான் தமிழ் வைத்திய முறை.

     இந்த நேர்மையால்தான், தமிழ் வைத்தியம் பின்தங்கிப் போனது.

    மிகினும்.

    குறையினும்.

    வாதம், பித்தம், சிலேப்பம் இம்மூன்றும், சமநிலை குழைந்தால், உடல் நோய்வாய்ப் படுகிறது.

     மிகினும், குறையினும் நோய்.

     எனவே, இம்மூன்றையும் சம நிலையில் வைத்துக் கொண்டால், மருந்தே தேவையில்லை என்கிறார்.

     இம்மூன்றையும் சமநிலையில் வைத்திருப்பது எப்படி?

     அடுத்த ஆறு குறள்களும் இதற்குத்தான்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

     அருந்தியது, சாப்பிட்டது.

     அற்றது போற்றி உணின்.

     செரித்ததை அறிந்தபின், அடுத்த உணவு உண்.

     அவ்வளவுதான்.

     சாப்பிட்டது செரித்துவிட்டது என்பதை எப்படி அறிவது?

     அதற்கும் நம் முன்னோர், நான்கு வழிகளைக் கூறியிருக்கிறார்கள்.

     சோர்வு தோன்றும்.

     ஏப்பம் வரும்.

     வரும் ஏப்பமும், வாசனையில்லாமல் வரும்.

     வாசனையின்றி ஏப்பம் வந்தால், வயிற்றில் ஒன்றுமில்லை என்று பொருள்.

     கருவிகள் செயலுக்குத் தயாராகும்.

     அதாவது, உணவைக் கண்டாலே, வாய் ஊறும்.

     நான்காவதாக பசி மிகும்.

     எவ்வளவு  எளிமையான வழிகள்.

     அடுத்த குறளில் அற்றால் அளவறிந்து உண்க என்றார்.

     இன்னும் ஒரு பிடி சாப்பிட்டால் போதும், என்ற நிலைவருகிறதா? போதும் நிறுத்து என்றார்.

     அளவறிந்து சாப்பிடு.

     நான்காம் குறளில் சொன்னார்.

     மாறல்ல துய்க்க துவரப் பசித்து.

     உடலுக்கு மாறுபாடு இல்லாத, காலத்திற்கு மாறுபாடு இல்லாத, உடல் ஏற்றுக் கொள்ளும் உணவுகளை உண்க என்றார்.

     ஐந்தாம் குறளில், மாறுபாடு இல்லாத உண்டி என்றார்.

     உண்ணுகின்ற உணவுகளுக்குள் மாறுபாடு இல்லாத உணவுகளைச் சாப்பிடு என்றார்.

     அதாவது, தேனும் நெய்யும் சம அளவாக உண்டால், உணவே நஞ்சாகும்.

     மரவள்ளிக் கிழங்கோடு, இஞ்சியை உண்டாலும் உணவு நஞ்சாகும்.

     எனவே, உணவுகளுக்குள் மாறுபாடு இல்லாத உணவை உண்.

     இழிவறிந்து உண்பான்கண் என்று உரைத்தார் ஆறாவது குறளில்.

     உண்ணும் உணவின் அளவை குறைத்து உண்பதே உடலுக்கு நல்லது என்றார்.

     ஏழவாது குறளில், தீயளவு அன்றி என்றார்.

     உடம்பின் இயல்பு, அதற்கு ஒத்த உணவு, வயிறு செரிக்கும் திறன் அறிந்து உண் என்றார்.

      ஏழு குறள்களாகிவிட்டதா?

     எட்டு மற்றும் ஒன்பதாவது குறள்களை மருத்துவருக்கு ஒதுக்கினார்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்‘

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

     நோய் இது என அறிந்து, அந்நோய் வந்ததற்கான காரணத்தை அறிந்து, அதனைத் தீர்க்கும் வழியினை அறிந்து, தவறு நிகழா வண்ணம் மருத்துவம் செய் என்றார்.

     மேலும் கூறினார்.

உற்றான்அளவும் பிணி அளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.

     நோயாளியின் வயது, நோயின் அளவு, நோயை நீக்குவதற்கு ஏற்ற காலம் இவற்றை அறிந்து, இவையாவும் பொருந்துமாறு வைத்தியம் செய் என்றார்.

     இறுதியாய் பத்தாவது குறளில், மருத்துவத்தின் கூறுகளைக் கூறு போட்டுக் காட்டுகிறார்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்று

அப்பால் நாற்கூற்றே மருந்து.

     நாற் கூற்றே மருந்து.

     மருத்துவத்தின் கூறுகள் நான்குதான்.

     வைத்தியன்.

     நோயாளி.

     மருந்து.

     பக்கத்தில் இருந்து, மருந்து கொடுத்து உதவுபவன் என நான்கே நான்கு கூறுகள் தான்.

     பத்து குறள்கள்.

     பத்தே பத்து குறள்கள்.

பத்தே பத்து குறள்களுக்குள்,

மொத்த உலக மருத்துவத்தையும்,

முற்றாய், முழுதாய்,

முழு ஓவியமாய் தீட்டிக் காட்டிய

மருத்துவப் பேராசிரியர் திருவள்ளுவரைப்

போற்றுவோம், பின்பற்றுவோம்.

---

நன்றி

மக்கள் சிந்தனைப் பேரவை

 

கடந்த 2.8.2021 திங்கள் கிழமையன்று


கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

எனும் தலைப்பில் ஆற்றியப் பொழிவின்

சில துளிகளே, இப்பதிவு.13 கருத்துகள்:

 1. "நோய்நாடி" குறள் ISO வகுப்பின் போது, ISO விதிமுறைகளை எளிதாக விளக்க உதவும்...

  பதிலளிநீக்கு
 2. சமீபத்திய ISO 9001 விதிமுறைகள், கொள்கைகள் என அனைத்தையும், குறள்களை மேற்கோள் காட்டி, ஒரு ISO பயிற்சியாளர் நூல் எழுதி இருந்தார்... மின்னூல் கூட இருக்கிறது என நினைக்கிறேன்... அடைந்த வியப்பிற்கு எல்லையில்லை...!

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான பதிவு.
  இவர் பேசியதை கேட்டு இருக்கிறேன்.

  //உடம்பின் இயல்பு, அதற்கு ஒத்த உணவு, வயிறு செரிக்கும் திறன் அறிந்து உண் என்றார்.//

  ஆமாம். அது தெரிந்து வாழ்ந்தாலே போதும்.

  பதிலளிநீக்கு
 4. மனம் போன போக்கில் நடந்து மருத்துவருக்கும் மருந்துக்கும் பணத்தை வாரி இறைக்காமல் நாளாந்தம் நாம் செய்ய வேண்டியவற்றை திருவள்ளுவர் வெகு அழகாகச் சொல்லியுள்ளார். பின் பற்றி நடந்தால் துன்பமில்லை.

  உடுவை.எஸ்.தில்லைநடராசா
  கொழும்பு-இலங்கை

  பதிலளிநீக்கு
 5. மிகவும் சிறப்பு.  திருக்குறளில் சொல்லாத விஷயம் எது?

  பதிலளிநீக்கு
 6. வியப்பான தகவல்கள் நண்பரே...
  உலகுக்கே பயனுள்ள பதிவு வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
 7. இவற்றில் பலவற்றை நான் அக்குபஞ்சர் வகுப்பில் பயின்றிருந்தாலும் உங்கள் பதிவின் மூலம் படிக்கும் போது தனி மகிழ்ச்சியே நண்பரே.

  பதிலளிநீக்கு
 8. வார்த்தைகளே இல்லை ஐய்யா.
  அணைத்தும் உண்மையென நான் சமீபத்தில்தான் ஒரு நூலை படித்து உணர்ந்தேன்.
  திருவள்ளுவரிந் கருத்துக்களை இப்படி எளிமையாக மக்களிடம் சேர்க்க உம் போன்றோர் பலர் தோன்றினால் நாம் கொரானா போன்ற எந்த கொடிய நோய்க்கும் அஞ்ச வேண்டியதில்லை.
  சமீபத்தில் திரு Accu Healer A. Umar Farook அவர்களின் "வீட்டுக்கு ஒரு மறுத்துவர்" நூலை படித்து அதை பின்பற்ற முயன்று ஆரோக்கியத்தில் மிகவும் பலனடைந்துள்ளேன்.
  கிண்டிலில் கிடைக்கிறது.
  முழுவதையும் ஆய்ந்து என் உடலை பரிசோதித்த பிறகு அந்நூலை விரைவில் அறிமுகம் செய்யும் என்னம் உள்ளது.
  திருக்குறள் சொல்வதையே அந்நூல் மேலும் தெளிவாக எடுத்துறைக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. திருக்குறளில் இல்லாததே இல்லை எனலாம். அதில் ஒரு கூறினைப் பற்றிய பொழிவினை பதிவாக்கியது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 10. என்ன இல்லை நம் குறளில்... என்று சொல்லும் அளவிற்கு சிறப்பான திருக்குறளின் மருந்து அதிகாரம் குறித்த இந்தப் பதிவு மிகச் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 11. திருக்குறள் தந்த மருந்துகள் அருமை. நன்றி

  பதிலளிநீக்கு
 12. வெகு சிறப்பு! ஆம் திருக்குறளில் இல்லாதது என்ன? மருந்து, மருத்துவம் பற்றி திருவள்ளுவர் சொல்லியிருப்பதை இங்கு எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.

  கீதா

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு