நிலன் நெறிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம
இவண்தட் டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே
நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ, அங்கெல்லாம், நீர் நிலைகள் அமையும்படி கரை அமைக்கும் மன்னர்களே, இவ்வுலகில் என்றென்றும் அழியாதப் புகழ் பெற்று போற்றப்படுவார்கள் என்கிறார் ஒரு புறநானூற்றுப் புலவர்.
நீரின் அருமையும், பெருமையும், உயிர்மையும் அறிந்த இனம், உணர்ந்த இனம் நம் இனம்.
தமிழினம்.
சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நீர் மேலாண்மையிலும், பாசனப் புலமையிலும், உலகிற்கே முன்னோடியாய், வாழ்ந்த இனம், நம் இனம்.
தமிழினம்.
வானிலிருந்து பெய்யும் மழையானது, ஆற்றின் வழி பயணித்து, கடலில் கலந்து, பயனின்றி பாழ் படுவதைத் தடுத்து, மடை மாற்றம் செய்து, விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பொருட்டு, நம் முன்னோர் செய்த ஏற்பாடுகள்தான், இந்த ஏரிகளும், குளங்களும்.
பெரும் பெரும் ஏரிகளில் இருந்து, சிறு சிறு குளங்களுக்குத் தண்ணீரைக் கொண்டு சென்று, விவசாயம் செய்தனர்.
நாம், பல ஏரிகளின் கரையில் நின்று, நீர் நிறைந்து, ததும்பிக் கொண்டிருக்கும், ஏரியின் பேரழகில் மயங்கி இருப்போம்.
ஆனால், ஏரிகளில் இருந்து, கால்வாய்களோ, வாய்க்கால்களோ, ஆறுகளோ பிரிந்து செல்லாத நிலையில், எவ்வாறு சிறு சிறு குளங்களுக்கு நீர் செல்கிறது என்று எண்ணி வியந்திருப்போம்.
நீர்த் தூம்பு.
பெரும் பெரும் ஏரிகளில் இருந்து, சிறு சிறு குளங்களுக்கு நீரைக் கொண்டு செல்ல, நம் முன்னோர் செய்திருந்த ஏற்பாடுதான் நீர்த் தூம்பு.
நீர்த் தூம்பு.
தூம்பு என்பது, நீரைத் தேவைக்கு ஏற்றபடி, அளந்து அனுப்பும் கட்டுமானம் ஆகும்.
இன்றும் கூட, சில ஏரிகளில், அதன் மையப் பகுதியில், இரு கற்தூண்கள் நிற்பதைப் பார்த்திருப்பீர்கள்.
இந்த இரு கற் தூண்களுக்கும் கீழே, கல் பலகைகளால் செய்யப் பட்ட, பெட்டி போன்ற ஓர் அமைப்பு இருக்கும்.
இதற்குக் கல்பெட்டி என்று பெயர்.
இந்த கல் பெட்டியின் மேல் ஒரு துளை போடப் பட்டிருக்கும். பக்கவாட்டில் கூட, இரண்டு அல்லது மூன்று துளைகள் இருக்கும்.
இதற்கு ஒரு மூடியும் உண்டு.
இக்காலச் சிறுவர்களுக்குத் தெரியாது.
ஆனால், நமக்குத் தெரியும்.
நாம் சிறுவர்களாய் இருந்தபோது, பம்பரம் விட்டு விளையாடி இருப்போம் அல்லவா, அந்த பம்பரத்தின் வடிவில், ஆனால் பெரிய அளவில், ஒரு கருங்கல் மூடி இருக்கும்.
இக் கல்லுக்கு தூம்புத் துளை அடைப்புக் கல் என்று பெயர்.
இந்த பம்பரம் போன்ற கல்லின் மேல் பகுதியில், ஒரு கம்பி பொருத்தப் பட்டிருக்கும்.
கல் பெட்டிக்கும் மேலே, கற் தூண்கள் நிற்கிறதல்லவா?
அந்த இரண்டு, கற் தூண்களுக்கும் இடையில், மேலொன்று, கீழொன்றுமாக, இரண்டு குறுக்குக் கல் பலகைகள் பொருத்தப் பட்டிருக்கும்.
இந்த குறுக்குக் கல்லில் துளைகளை இட்டு, அந்தத் துளைகள் வழியே, கம்பியைச் செலுத்தி, அடைப்புக் கல்லுடன் இணைத்திருப்பார்கள்.
அடைப்புக் கல் துளையினை முழுமையாக மூடி இருக்கும்.
கம்பி மூலம், அடைப்புக் கல்லை மேலே தூக்கினால், ஏரியில் இருக்கும் நீர், இத்துளைக்குள் வெகுவேகமாய் நுழையும்.
பெருங்
குள மருங்கில் கருங்கைச் சிறுவழி
இரும்
பெரு நீத்தம் புகுவது போல
அளவச்
சிறு செவி அளப்பு – அரு நல் அறம்
உளம்
மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம்.
- மணிமேகலை – அறவாணர் தொழுத கதை 79-82
ஏரியில் நீர் நிறைந்திருக்கும் காலத்தில், இந்த அடைப்புக் கல்லை, மேலே தூக்கினால், எரியின் நீரானது, வெகுவேகத்துடன், சுற்றிச் சுழன்று, பெரும் பெரும் சுழிகளை உருவாக்கியவாறு, இந்த சிறு துளைக்குள் நுழையும்.
ஏரியில் இருந்து, அதன் சுற்றுப் பகுதிகளில் இருக்கும், குளங்களுக்கு நீரைக் கொண்டு செல்வதற்கு வசதியாக, பூமிக்குள்ளேயே, குழாய் போன்ற கட்டுமானங்களை, நம் முன்னோர் அமைத்திருந்தனர்.
நீர்த்தும்பின் வழி நுழையும் நீர், குழாய்களின் வழியே, குளங்களைச் சென்றடையும்.
நீர்த் தூம்பினால் இரு பலன்கள் உண்டு.
முதலாவது, ஏரியில் எவ்வளவு நீர் நிரம்பினாலும், கரை உடைப்பெடுக்காது.
ஏரியில் கொள்ளளவைத் தாண்டி, நீர் மட்டம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டாவது, ஏரியின் நீர் வெகுவேகமாய் சுழன்று, சுழன்று, பெரும் சுழலை ஏற்படுத்தியவாறு, சின்னஞ் சிறு துளை வழியே நுழையும் போது, எரியின் தரைப் பகுதியில் படிந்திருக்கும் வண்டல் படிவுகளையும், நீரோடு சேர்த்து, குழாய் வழியே இழுத்துக் கொண்டு சென்று விடும்.
இதனால் ஏரியைத் தூர் வார வேண்டிய அவசியமே ஏற்படாது.
மேலும் இந்த வண்டல் படிவுகள், குளங்களின் வழியே, வயல்களைச் சென்று சேருவதால், விளைச்சலும் அதிகமாகும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
எல்லாம், நம் முன்னோர் ஏற்பாடு.
இதுமட்டுமல்ல, இந்தப் பாண்டியனின் கல்வெட்டுச் செய்தியினையும் படித்துப் பாருங்களேன்.
நீர்ப்பிழை
புரிதல் ஊர்ப் பிழைத் தற்றால்
நெடுமுடி மன்னன் கடுஞ்சினங் கொள்ளும்
நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தாலோ, நீர் வழிப் பாதைகளைத் தடுத்தாலோ, மன்னன் பெருங் கோபம் கொள்வான்.
கடும் தண்டனை கிடைக்கும்.
நினைத்தாலே மெய் சிலிர்க்கிறதல்லவா?
நீர்த் தூம்பு.
இதுபோன்ற ஒரு நீர்த் தூம்பு, தஞ்சாவூர், கரந்தையில் இருக்கிறது.
இன்றும் இருக்கிறது.
ஆனால், ஏரியில் அல்ல.
ஆற்றில்.
வடவாற்றில்.
வீர சோழ வடவாற்றில்.
கரந்தை வடவாற்றில் ஒரு நீர்த் தூம்பு.
கரந்தை.
தஞ்சாவூர் கூற்றத்து, தஞ்சாவூர் புறம்படி கருந்திட்டைக்குடி என்று இவ்வூரின் பெயரினை முழங்குகிறது, பரகேசரி வர்மன் கல்வெட்டு.
ருத்த வினோத வடநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர் புறம்படி வடவாற்றின் வடகரை கருந்திட்டைக்குடி என்று உரத்து உரைக்கிறது, முதலாம் இராசராசனின் பதினேழாம் ஆட்சியாண்டு கல்வெட்டு.
இந்த வடவாற்றின் வடகரை, கருந்திட்டைக்குடியில் அமைந்திருப்பதுதான், மகாதேவர் ஆலயம் என்னும் தொன்மை வாய்ந்த ஆலயமாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாய், இக்கோயில் போற்றப்படுகிறது.
முற்காலச் சோழர்கள் காலத்தில் எழுப்பப்பெற்ற கற்றளி.
பின்னர், மதுராந்தக உத்தம சோழன் காலத்தில், மீண்டும் திருப்பணி செய்யப்பெற்று புதுப்பிக்கப்பெற்றக் கோயில்.
இக்கோயிலில் இருபது கல்வெட்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இக்கோயில் கல்வெட்டுகளுள் பழமையானது, கோப்பர கேசரிவர்மனான, மதுராந்தக உத்தம சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும்.
இதுமட்டுமல்ல, இராசராசன், இராசேந்திரன், குந்தவை பிராட்டியார் ஆகியோரின் கல்வெட்டுச் சாசனங்களும் இக்கோயிலில் உள்ளன.
இக்கோயிலின் கிழக்கே ஒரு குளம்.
அகன்று, பரந்து விரிந்த, சற்றேறக்குறைய ஐந்து எக்கர் பரப்பளவு உடைய ஓரு குளம்.
கோயில் கட்டியபோது, வெட்டப்பெற்ற குளம்.
பல பெரு நோய்களைத் தீர்க்கும் புண்ணிய மருந்தாய் போற்றப் பெற்ற குளம்.
வடவாற்றில் நீர் ஓடும் பொழுதெல்லாம், இக்குளம் நீரால் நிரம்பும், ததும்பும்.
ஆனால், கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, இக்குளம் நீரின்றி வறண்டு போய்விட்டது.
காரணம், வடவாற்றில் இருந்து, இக்குளத்திற்கு வரும், நிலத்தடி நீர் வழிப் பாதையானது, பாழ்பட்டுப் போனதால், குளம் நீரின்றி தவித்துப் போனது.
மகாதேவர் ஆலயக் குளம், நீரின்றி வாடுவதைக் கண்டு, மனம் வெதும்பிய அன்பர்கள் பலர், அரசிற்கு மனுக்களை அனுப்பத் தொடங்கினர்.
மனுக்கள் அரசின் கவனத்தைக் கவர்ந்தன.
அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டது.
வடவாற்றிற்கும், இக்குளத்திற்கும் இடைப்பட்ட தூரம், சுமார் 400 மீட்டர் ஆகும்.
நிலத்திற்கு உள்ளேயே பயணிக்கும், இந்த நீர் வழிப் பாதையின் தொடக்கமும், முடிவும் தெரிந்த போதிலும், நிலத்தடி நீரின் பாதையினைக் கண்டறிய இயலவில்லை.
அரசு இயந்திரம் ஆர்வத்தோடு இறங்கிப் பணியாற்றிய போதிலும் குளத்திற்குத் தண்ணீரைக் கொண்டு வர இயலவில்லை.
இந்நிலையில், நண்பர்கள் பலர் இதுபற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ஒருவர் கூறினார்.
வடவாற்றில் இருக்கும், நீர் வழிப் பாதையின் முகத்துவாரத்திற்கு, போதிய அளவு நீர் வராததால்தான், போதிய அளவு நீர் உள்ளே நுழையாததால்தான், குளத்திற்கு நீர் வரவில்லை.
எனவே, முகத் துவாரத்தில், ஒரு தடுப்பினை ஏற்படுத்தி, ஆற்றில் வரும் நீரை, நீர் வழிப் பாதைக்குத் திருப்பிவிட வேண்டும் என்றார்.
கேப்டன் ராஜன் என்பவர் உடனே செயலில் இறங்கினார்.
கேப்டன் ராஜன்.
இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் மாணவர்.
பள்ளியில் படிக்கும் பொழுதே, கப்பல் பணியினையே தன் வாழ்வின் இலட்சியமாய் கொண்டவர்.
முயன்றார்.
வென்றார்.
கப்பல் கேப்டன் ஆனார்.
கடல் ஆறு மாதம், வீடு ஆறு மாதம் என்று வாழ்ந்து வருபவர்.
கேப்டன் ராஜன் அவர்களது ஆருயிர் நண்பர் ராஜராஜன்.
இவர் தனது சகோதரருடன் இணைந்து, ருத்ரன் கணினியகம் என்னும் பெயரில், கணினி மையம் ஒன்றினை நடத்தி வருகிறார்.
இவர், பொறியாளர் ரகுநாதன், பொறியாளர் சிவக்குமார், ஒப்பந்தக்காரர், கரந்தை கல்லுக்காரத் தெரு செல்வராஜ் ஆகியோரை அழைத்து வந்தார்.
ராஜன் வேண்டும் பொருள்களை வாங்கிக் கொடுத்தார்.
ஒப்பந்தக்காரர் செல்வராஜ் அவர்கள், தன் சொந்த செலவில், பெரும் இயந்திரத்தையும், ஆட்களையும் இறக்கி, ஆற்றின் முகத்துவாரத்தை சுத்தம் செய்து கொடுத்தார்.
ஓரிரு நாட்களிலேயே தடுப்பு ஒன்றும் கட்டப்பெற்றது.
தடுப்புக் கட்டப்பெற்ற சில நாட்களிலேயே ஆற்றில் நீர் வந்தது.
தடுப்பில் மோதித் திரும்பி, நீர் மதகிற்குள் நுழைந்தது.
ஆனால் நுழைந்த நீர், நீர்த் தூம்பினைத் தாண்டவே இல்லை.
நீர்த் தூம்பிலேயே தேங்கி நின்றது.
நண்பர்கள் வருந்தினர்.
என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.
நண்பர்கள், திகைத்து நின்றபோது, வழிகாட்ட வந்தார் ஓர் ஆசிரியர்.
ஆசிரியர் சாமிநாதன் என்பவர், நண்பர்களது, நற்பணியினையும், நல் உள்ளத்தினையும் அறிந்து, தனது நண்பர் பொறியாளர் ஜோதி பிரகாஷ் என்பவருடன், இவர்கள் அணியில் இணைந்தார்.
வழி காட்டினார்.
தக்க மனிதரை அடையாளம் கட்டினார்.
செல்லப் பெருமாள்.
நீரின் போக்கும், நோக்கும் அறிந்தவர்.
சிவ பக்தர்.
தன் கடன் இறைப் பணியே என்று உளமாரப் பணியாற்றி வருபவர்.
தூர்ந்து போன, வறண்டு போனக் குளங்களைச் சீரமைத்து, சீராட்டி, தாலாட்டி, நீர் ததும்பச் செய்வதில் வல்லவர்.
இது போதாதா?
நண்பர்கள் விரைந்து சென்று, செல்லப் பெருமாளைச் சந்தித்தனர்.
நிலைமையினைக் கூறினர்.
அன்றே, 2019 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31 ஆம் நாள், அப்பொழுதே, மாகாதேவர் ஆலயக் குளத்திற்கு வந்தார் செல்லப் பெருமாள்.
புற்களாலும், புதர்களாலும் முழுமையாய் மூடப்பட்டிருந்த குளத்தை முதலில் தூர்வாரி சுத்தம் செய்தனர்.
தன்னார்வலர்கள் பலர் இறங்கிப் பணியாற்றினர்.
குளமோ பெரியது.
சற்றேறக்குறைய ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம்.
இயந்திரங்களை இறக்கினர்.
செலவினங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டனர்.
குளம் சுத்தம் செய்யப்பட்டதும், குளத்திற்கு நீரினைக் கொண்டு வரும் பாதை, கண் முன்னே கம்பீரமாய் எழுந்து நின்றது.
இதற்கு முன், மேற்கொள்ளப்பட்ட, நீரோட்டப் பாதையினைக் கண்டறியும் முயற்சிகள் அனைத்தும, வடவாற்றில் இருந்து தொடங்கின.
இவரோ, குளத்தில் இருந்து தொடங்கினார்.
மூன்று அடி உயரமும், பதினைந்து அங்குல அகலமும் கொண்ட, கட்டுமானம்.
குளத்தில் நின்று கொண்டு, இக்கட்டுமானத்தின் வழி, நீர் வரும் பாதையின் அடைப்புகளை அகற்றத் தொடங்கினார்.
பூமியின் மேற்பரப்பைத் தோண்டுவது என்றால், கடப்பாறை, மண் வெட்டி போதும்.
ஆனால், பூமிக்கள் இருக்கும், பாதையைச் சீரமைத்தாக வேண்டும்.
அடைப்புகளை அகற்றியாக வேண்டும்.
இதற்கென்றே, தனியொரு அம்பு போன்ற கருவியை உருவாக்கிப் பயன்படுத்தினார்.
கருவியின் முனை கூராக இருக்கும்.
நிலத்திற்குள் துளையிடலாம்.
இக்கருவியின் கழுத்துப் பகுதியில், மின் விசிறியின் இறக்கை போன்ற, ஆனால் நீளம் குறைந்த, இரும்பினால் ஆன, மூன்று இறக்கைகள்.
இந்த அம்பு போன்ற கருவியை மண்ணில் உள்ளே செலுத்தும்போது, இந்த இறக்கை போன்ற அமைப்புகள், கம்பியைத் தழுவியவாறு, கம்பியுடன் சேர்ந்து உள்ளே போகும்.
கம்பியை வெளியே இழுக்கும் பொழுது, இறக்கை போன்ற அமைப்புகள், மின்விசிறியைப் போல் விரிந்து, கற்களையும், இடிபாடுகளையும் வெளியே இழுத்து வரும்.
குளத்தில் இருந்து 37 அடி தொலைவிலேயே, கட்டுமானத்தின் அமைப்பு மாறியது.
வெளிப்புறத்தில் நான்கடி நீளமும், நான்கடி அகலமும் கொண்ட, சதுர வடிவிலான கட்டுமானம்.,
உட்புறத்திலோ வட்டவடிவிலான கட்டுமானம்.
பதினாறு அங்குல விட்டமுள்ள கட்டுமானம்.
சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்திய, சப்பை ஓட்டுக் கற்களால் ஆன கட்டுமானம்.
இந்தக் கட்டுமானத்தின் அமைப்பு மாறிய இடத்தில், ஒரு வேப்பமரம்.
மலை வேம்பு.
மரத்தின் காலடியில், ஓர் அம்மன்.
அந்த அம்மனுக்கும் கீழே, தண்ணீர் குழாய்களுக்கான, சதுர வடிவ இணைப்புத் தொட்டி.
செல்லப் பெருமாளின் சிந்தனையை, இந்த மலைவேம்பு தூண்டிவிட்டது.
மலைப் பகுதிகளில் மட்டுமே, வளரக் கூடிய, மலை வேம்பு, ஏன் இவ்விடத்தில் ஓங்கி வளர்ந்து நிற்கிறது?
யோசித்தார்.
மரத்தில் ஏறி, பார்வையை, ஆற்றின் திசையில் படர விட்டார்.
மேலும், நான்கு மலை வேம்புகள் கண்ணில் பட்டன.
குறிப்பிட்ட இடைவெளியில், நான்கு மலை வேம்புகள்.
அதுவும் ஒரே நேர்க் கோட்டில்.
ஒவ்வொரு மலைவேம்புவின் அருகிலும், பள்ளம் தோண்டினார்.
ஒவ்வொரு மலைவேம்புவின், காலடியிலும், தண்ணீர் குழாய்களக்கான இணைப்புத் தொட்டி, எட்டிப் பார்த்து, செல்லப் பெருமாளை வரவேற்றது.
பூமிக்குள் செல்லும், நீர் வழிப் பாதையினை அடையாளம் காட்ட, பூமியின் மீது, ஆங்காங்கே மலை வேம்புகள்.
எல்லாம் நம் முன்னோரின் முன் யோசனை.
மொத்தம் பதினைந்து சதுர வடிவ தண்ணீர் குழாய் இணைப்புத் தொட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன.
பின்னர், அடுத்தடுத்த சதுர வடிவத் தொட்டிகளுக்கு, இடையிலான, வட்ட வடிவ தண்ணீர் பாதைகளின் அடைப்புகள் சீர் செய்யப்பெற்றன
பன்னிரெண்டு மாதங்கள், முழுதாய் ஓர் ஆண்டு இடைவிடா பணி.
தொடக்கத்தில் ஒரு சிலர்.
தகவல் பரவ, பரவ, தன்னார்வலர்கள், சிவனடியார்கள் என வந்து கொண்டே இருந்தனர்.
தங்கள் உழைப்பைத் தானமாய் வழங்கினார்கள்.
இவர்கள் மட்டுமல்ல, தண்ணீர் குழாய் பணியினைப் பார்ப்பவர்கள், தங்களது வேலை நேரம் போக, ஓய்வு நேரங்களில், தங்களையும், இப்பணியில் இணைத்துக் கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் இருந்து ஒரு குழுவினர் வந்தனர்.
பூமிக்குள் தண்ணீர் செல்லும் பாதையின், அடைப்புகளைத், தண்ணீரைக் கொண்டே அகற்ற உதவினர்.
பெரும் வண்டிகளில் நீரைச் சுமந்து வந்து, இயந்திரத்தின் உதவியுடன், குழாயின் வழி, தண்ணீரை, வேகமுடன் பாய்ச்சி அடித்து, துளைகளைச் சுத்தம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட அன்றைய ஆட்சியர் திரு கோவிந்தராவ் அவர்களும், தஞ்சாவூர், மாநகராட்சி மன்ற ஆணையர் திருமதி ஜானகி ரவீந்திரன் அவர்களும், ஆர்வத்தோடு முன்னின்று, வேண்டும் உதவிகளை, வேண்டிய பொழுதெல்லாம், தட்டாமல் செய்து கொடுத்தனர்.
தண்ணீர் குழாய்களை முழுவதுமாய் அடைப்பின்றி சுத்தம் செய்த பின்னர், இவர்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.
வடவாற்றில் இருந்து, மகாதேவர் ஆலயம் வரையிலான, நானூறு மீட்டர் நீளமுள்ள, நீலத்தடி நீர் வழிப் பாதையினை சீர்படுத்தி ஆகிவிட்டது.
ஆனால், எதிர்காலத்தில், செங்கல் கற்கள் உடைந்து விழுந்து, நீர் வழிப் பாதை மீண்டும் அடைபடாமல் தவிர்க்க, பெரும் குழாய்களைச் சொருகினால் என்ன என்று எண்ணினர்.
கரந்தையினை பூர்வீகமாகக் கொண்ட, சென்னை வாழ் அன்பர் இளங்கீரன் என்பார், ஒரு பெருந்தொகையினை முழுமனதோடு, அள்ளிக் கொடுத்ததோடு, பதினைந்து நாள்கள், கரந்தையிலேயே தங்கி பணியாற்றியும் மகிழ்ந்திருக்கிறார்.
நண்பர்கள் பலரின் தொடர் முயற்சியால், செல்லப் பெருமாள் என்னும் உன்னத மனிதரின், அயரா உழைப்பால், ஒரு நிலத்தடி நீர் பாதை, மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.
கடந்த சனவரி மாதம் ஏழாம் நாள், வடவாற்றில் நீர் துள்ளிக் குதித்து, ஓடிவந்த போது, கரந்தை வாழ் மக்களே, மகாதேவர் ஆலயக் குளத்தில் குவிந்தனர்.
வடவாற்றின் நீர் மட்டம் உயர, உயர, இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, நிலத்தடி நீர் பாதையின் இதயம், மீண்டும் துடிக்கத் தொடங்கியது.
வடவாற்று நீர், மகாதேவர் ஆலயக் குளத்தை எட்டிப் பார்த்தபோது, கரந்தையே கரவொலியால் அதிர்ந்து போனது.
வாழ்த்து முழக்கங்கள் விண்ணைத் தொட்டன.
நண்பர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
பூக்களைத் தூவி, தண்ணீர் தாயை வரவேற்றனர்.
இதோ குளம் நீரால் ததும்புகிறது.
நண்பர்களின் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது.
செல்லப்
பெருமாள்
பொறியாளர்
ஜோதி பிரகாசம்
ஆசிரியர்
சாமிநாதன்
சரவணன்,
சுண்ணாம்புக்காரத் தெரு
ரஜினி,
செல்லியம்மன் கோயில் தெரு
கார்த்தி,
தட்டான் குளம்
செந்தில், கவாஸ்காரத் தெரு,
சேவையாளர்கள்
மகாதேவன்,
சன்னதி தெரு
அய்யப்பன்,
திருமானூர்
மணி,
திருமானூர்
பழநி,
திருமானூர்
செல்லதுரை,
திருமானூர்
முத்து,
பூக்குளம்
குமார்,
பூக்குளம்
செல்வக்குமார்,
செல்லியம்மன் கோயில் தெரு
ராசப்பா,
கவாஸ்காரத் தெரு
ஆசிரியர்
கார்த்திக்
தாமு,
குதிரைக் கட்டித் தெரு
செல்வம்,
நீத்துக்காரத் தெரு
ஜீவா,
செல்லியம்மன் கோயில் தெரு
தனபால், தட்டான்குளம்
சிறப்பு
சேவையாளர்கள்
ரவி,
பாலசரசுவதி தொடக்கப் பள்ளித் தாளாளர்
கல்யாணி,
ராமையா நகர்
பொறியாளர்
ஆறுமுகம், ராமையா நகர்
ஒப்பந்தக்காரர்
செல்வராஜ்
பொறியாளர்
சிவக்குமார்
பொறியாளர்
ரகுநாதன்
இவர்களோடு,
கப்பல்
கேப்டன் ராஜன்
மற்றும்
ருத்ரன் கணினியக
ராஜராஜன்
மற்றும்
பெயர் அறியா
பல நண்பர்களின்
அயரா உழைப்பால்
பொருளுதவியால்
தன்னலமற்ற சேவையால்
மகாதேவர் ஆலயக் குளம்
வளம் பெற்றிருக்கிறது.
ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், நண்பர்கள் இவ்வாறு ஒன்றிணைந்து, நீர் நிலைகளைச் செழிக்கச் செய்வார்களேயானால், ஊரும் நலம் பெறும், நாடும் வளம் பெறும்.
இடியுடைப்
பெருமழை எய்தா ஏகப்
பிழையா
விளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து)
ஆண்ட மன்னவன்
-
காடுகான் காதை
27-29
முன்னோரெல்லாம் மூடர்கள் அல்லர் என்பது எவ்வளவு உண்மை! எவ்வளவு அறிவுத்திறன் வாய்ந்தவர்கள்... இப்போதும் இந்த நல்ல காரியத்தைச் செய்ய அனைவரும் கைகோத்தது போற்றுதலுக்குரியது.
பதிலளிநீக்குஉண்மை
நீக்குஇவ்வரிய செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்தான்
நன்றி நண்பரே
நீரின்றி அமையாது உலகு, வள்ளூவர் வாக்கை காப்பாற்றோம் வாருங்கள், உலகமெங்கும் உள்ள நீர்நிலைகள் காப்பாற்றப்பட வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குதங்களைப் போன்ற நல்உள்ளங்களின் முயற்சியால் மட்டுமே, இப்பணி சாத்தியமாகி இருக்கிறது
நீக்குவாழ்த்துகள் நண்பரே
தங்களின் செயல் பலருக்கும் முன்னுதாரனமாக விளங்கட்டும்
பதிலளிநீக்குExcellent Information Sir
நன்றி நண்பரே
நீக்குநானும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதால் என்னால் இந்தக் கட்டுரையுடன் வாஞ்சை யுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது மேலும் நீர்மேலாண்மை என்கிற ஒரு ஒற்றை வார்த்தையின் பின் இருக்கும் கடின உழைப்பு புரிகிறது
பதிலளிநீக்குபிரம்மாண்டம் சார்.
நீக்குநன்றி சகோதரி
நீக்குஉண்மை பிரம்மாண்ட்ப் பணிதான் ஐயா‘
நீக்குநன்றி
இனிய நண்பரே, மிக அற்புதமான அனைவரும் அறிய வேண்டிய பதிவினை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. அவ்வப்பொழுது ஏற்பட்ட அனைத்து இன்னல்களையும் மனம் தளராமல் எதிர் கொண்டு ஆற்றலோடு அயராது உழைத்த அத்துனை நல் உள்ளங்களுக்கும், அன்றாட வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு இந்த ஒரு வேலையை மட்டுமே தங்கள் பணியாக எண்ணி செயல்பட்ட அனைவருக்கும், சிறு துளி பெருவெள்ளம் என்ற உண்மையை நடைமுறையில் கொண்டு வந்த நன்கொடையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்தப் பதிவினை செம்மையாக பதிவிட்ட நண்பருக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள். இந்தப் பதிவினை அப்படியே புகைப்படங்களுடன் ஒரு சிறிய புத்தகமாக பதிப்பித்து ஆவணமாக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
பதிலளிநீக்குவிரைவில் தனியொரு நூலாக வெளியிடுவோம் நண்பரே
நீக்குவாற்று நீர், மகாதேவர் ஆலயக் குளத்தை எட்டிப் பார்த்தபோது, கரந்தையே கரவொலியால் அதிர்ந்து போனது.
பதிலளிநீக்குவாழ்த்து முழக்கங்கள் விண்ணைத் தொட்டன.
நண்பர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
பூக்களைத் தூவி, தண்ணீர் தாயை வரவேற்றனர்.
இதோ குளம் நீரால் ததும்புகிறது.
நண்பர்களின் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது.//
படித்து கொண்டே வர வர அன்பர்களின் அயரா பணியால் நீர் வந்தவுடன் ஆனந்த கண்ணீர் வந்து விட்டது.
பணியில் கலந்து கொண்ட செயல்பட்ட அனைவருக்கும் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
அருமையான பதிவுக்கு நன்றிகள்.
தன்னலமற்ற சேவை வாழ்க வாழ்க!
அன்பர்கன் பலரின் தன்னலமற்ற சேவை பாராட்டிற்குரியது
நீக்குநன்றி சகோதரி
அற்புதமான செயல்... அனைவருக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமை நண்பரே எல்லா ஊர்களிலும் இப்படி செயல்பட்டால் நல்லது.
பதிலளிநீக்குதற்பொழுது நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளது
நீக்குநன்றி நண்பரே
நம் மூதாதையர் அருமையாகத் திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள். இப்போது இந்த அற்புதமானதைச் செய்த,அதற்கு உறுதுணையாக இருந்த மக்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
நன்றி சகோதரி
நீக்குநீர்மேலாண்மை எவ்வளவு அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குநீர்வழிப்பாதை பிரமிப்பாக இருக்கிறது.
//வடவாற்றில் இருந்து, இக்குளத்திற்கு வரும், நிலத்தடி நீர் வழிப் பாதையானது, பாழ்பட்டுப் போனதால், குளம் நீரின்றி தவித்துப் போனது. //
அதை இப்போது பாடுபட்டுச் செயல்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள். தண்ணீர் வந்து குளத்தை அடைவது மகிழ்வான விஷயம். ஆகச் சிறந்த விஷயம்.
அருமையான தகவலை மிக அழகான ஒவ்வொரு நிலையையும் படங்களோடு தந்தமைக்கு மிக்க நன்றி
துளசிதரன்
நன்றி நண்பரே
நீக்குஅருமை அண்ணா வியப்பாக இருக்கிறது எத்தனை பொறியியல் அறிவு.. அரிய தகவல்கள் நன்றி அண்ணா
பதிலளிநீக்குநன்றி சகோதரி
நீக்குஅருமையான தகவல், நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவியப்பில் மூச்சு முட்டுகிறது. இமாலயப்பணி! ஓர் ஆவணப்படம் எடுக்க ஏடகம் முயற்சி செய்யலாம். சொல்லிய வண்ணமும் படங்களும் அருமை. இது ஒரு முத்திரைப் பதிவு.
பதிலளிநீக்குநன்றி ஐயா
பதிலளிநீக்குஅருமையான முயற்சி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அண்ணன் செல்லப் பெருமாள் அவர்களின் உடன்பிறவா தம்பி என்கின்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்....
நீக்குநாம் நமது பின்னோர்களை ஏமாற்றிகொண்டிருக்கிறோம் என்பதும் உண்மையே
பதிலளிநீக்குhttps://vannasiraku.blogspot.com/2019/11/blog-post_18.html
உண்மை
நீக்குநன்றி
அதிசயம் பொருந்திய தண்ணீர் வழி!
பதிலளிநீக்குஆச்சரியம் கொண்டேன்!
சேவையாளர்கள் அனைவரின் தொண்டுகளும் மனிதன் உட்பட அடைத்து உயிரினங்களுக்கும் பயனளிக்கும்!
அருமையான கருத்துகள் பல அடங்கிய பெறுமதி மிக்க கட்டுரை.
பதிலளிநீக்குஉடுவை.எஸ்.தில்லைநடராசா
கொழும்பு-இலங்கை