02 அக்டோபர் 2021

கரந்தைக்கு இரண்டு


 

     இவர் கரந்தைப் புலவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர்.

     ஒன்றல்ல, இரண்டு கல்லூரிகளைத் தூக்கி நிறுத்தியவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின்போது, தொடங்கப் பெற்ற, கரந்தைப் புலவர் கல்லூரி, பிற்காலத்தில், தளர்வுற்றபோது, கல்லூரியின் முதல்வராய் பொறுப்பேற்று, புது இரத்தம் பாய்ச்சி, புத்துணர்வு கொடுத்து, புதுமெருகூட்டிக் காத்தவர், வளர்த்தவர்.

    

    பாவநாசம், வள்ளுவர் செந்தமிழ்க் கல்லூரி, அரசின் அங்கீகாரத்தையே இழந்த சூழலில், அக்கல்லூரியின் முதல்வராய் பொறுப்பேற்று, திருவள்ளுவர் கலைக் கல்லூரியாய் உயிர்ப்பித்துக் காத்தவர்.

     அங்கொன்றும், இங்கொன்றுமாக, ஒன்றுக்கு ஒன்று தொடர்பின்றி, சிதறிக் கிடந்த, தமிழ்க் கல்லூரிகளையெல்லாம், ஒன்றிணைத்து, தமிழக மொழிக் கல்லூரிகள் மன்றம் நிறுவியவர்.

     தமிழ்க் கல்லூரிகளையும், கலைக் கல்லூரிகளுக்கு நிகராய் கருதவேண்டும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், ஏனைய பேராசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் எனப் போராடியவர்.

     இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, வரலாறு, அகராதி, கட்டுரை, மொழிபெயர்ப்பு, புதினம், கவிதை, கட்டுரை என முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்.

     இவையாவற்றிற்கும் மேலாக, இந்திய அரசின் அரசியல் அமைப்புச் சட்டதை, இந்திய அரசிற்காக, தமிழ்நாடு சட்ட ஆட்சி மொழி ஆணையத்திற்காகத் தமிழில் மொழிபெயர்த்தவர்.

     சட்ட ஆட்சிய சொற்களஞ்சியம், இவரது உழைப்பில் உயிர் பெற்றதாகும்.

     தமிழில் பெரும் புலமையும், ஆங்கிலத்தில் பெரும் வல்லமையும் உடையவர்.

     நேர்மை, கண்டிப்பு, எதற்காகவும் யாரிடத்தும் வளைந்து கொடுக்காதவர்.

     இத்தகு தகுதிவாய்ந்த மனிதரை, ஆய்வறிஞரை, தமிழறிஞரைத் தேடி வந்திருக்கிறது ஒரு விருது.

---

     இவர் கரந்தைப் புலவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்.

     எந்நாளும் கரந்தையை மறவாதவர்.

     கரந்தைப் புலவர் கல்லூரியில், தமிழ் கற்பதற்காக சென்று சேர்ந்தது, நான் எதிர்பாராத ஒன்று.

     ஆனால் எதிர்பார்த்ததை விடவும் மேலான ஒன்று.

     என் அண்ணன், இளங்கலை வகுப்பில் படிக்கிற போது, அவருக்குத் துணைப் பாட நூலாக இருந்தது, கரந்தைக் கவியரசு அவர்கள் எழுதிய செந்தமிழ்க் கட்டுரைகள் என்ற நூல், எனக்கு பள்ளி நாட்களிலேயே பாரதியையும், பாரதிதாசனையும் அறிமுகம் செய்தது.

     கவியரசு என்ற அடைமொழியே, ஒரு புதிய தமிழ்ப் பரிமாணத்தை, எனக்குள் ஆவலாய் செதுக்கி எடுத்தது.

     அதனால், கவியரசு பற்றியும், கரந்தையைப் பற்றியும் அறிந்த எனக்கு, அங்கு சென்று பயில, ஆவல் பிறந்தது.

     விண்ணப்பித்தேன்.

நான்கு ஆண்டுகள்

தமிழ்ப் புலமை - என்னுள்

ஊன்றிய ஆண்டுகள்.

தமிழ்த் தேனில் - என்னை

ஊற  வைத்த ஆண்டுகள்.

கரந்தை மண்

கந்தக மண்.

தமிழுணர்வு வெப்பமாகத்

தகிக்கின்ற மண்.

தமிழவேள் உமாமகேசுவரனார்

தமிழ் வேள்வி நடத்திய

பூமி அது.

     தமிழ் உணர்வு தொடர்பான, தமிழ்ப் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகள் அனைத்தையும், முன்னெடுத்துச் சென்ற, தமிழ் உணர்வின் விளை நிலம்.

     மாணவர்களைப் பகுத்தறிவு நெறியிலும், முற்போக்கு திசையிலும் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு விடுதலையென சிந்தனைச் சிறகுகளை எடுத்துக் கொடுத்தக் கல்லூரியில், நான் முதன் முதலாக முழு ஞாயிறு தேவ நேயப் பாவாணரைப் பார்த்தேன்.

     எங்களுக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தவர்கள், தமிழில் ஆழங்கால் பட்ட, பகுத்தறிவுப் பேராசிரியர் நா.இராமநாதன், பாவலரேறு பாலசுந்தரனார், புலமைச் சிகரம் அடிகளாசிரியர், கல்வெட்டு கோவிந்தராசனார், மு.சடகோப இராமானுஜன் ஆகியோர்.

     கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்களிடம், ஒரே ஒரு ஆண்டு மாணவனாக இருக்கும் வாய்ப்பும், அவரோடு பழகும் சிறப்பும் எனக்குக் கிடைத்தன.

     இதேபோல், கரந்தைக் கல்லூரியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு, மூன்று நாட்கள் உடனிருக்கும் வாய்ப்பும் பெற்றேன்.

     ஒரு சமயம் ஒரு குவளைத் தண்ணீரைப் போலவும், ஒரு சமயம் ஒரு குவளைத் தேநீரைப் போலவும் அவரருகே இருந்திருக்கிறேன்.

     இன்னொரு சமயம், அவர் பிடிக்கும் சுருட்டின் புகையாக நான் வெளியே வந்திருக்கிறேன்.

     இவர் ஒரு  கவிஞர்.

     கல்லூரிப் பேராசிரியர், மொழி பெயர்ப்பாளர், உரை வீச்சாளர், கட்டுரையாளர், திரைப்படப் பாடலாசிரியர், செய்தி வாசிப்பாளர், ஓவியர், வர்ணனையாளர், இதழாளர், ஆய்வறிஞர், பாப்லோ நெருதாவின் தீவிரக் காதலர், திராவிடம், பெரியாரியம், மார்க்சியம். தேசியம், தமிழ் உணர்வு, உலக மானுடப் பற்றாளர்.

     தமிழின் சிகரக் கவிஞர்களுள் குறிப்பிடத் தக்கவர்,

     இவரது படிமக் கவிதைகள் பரவச அனுபவங்களைத் தரக்கூடியவை.

     மரபிலும் மின்சாரக் கவிதையைப் படைத்துச் சாதனை புரிபவர்.

      ஹைகூ, சென்றியு, லிமரைக்கூ என வெளிநாட்டுக் கவிதை  வடிவங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்ததோடு, பழமொன்றியு என்ற கவிதை வகையை புதிதாய் உருவாக்கி, தமிழின் உயரத்தை உயர்த்தியவர்.

     மழைவளம் மறந்த, ஆழ்ந்த கிணறுகளுக்குள் மக்களின் தாகமும், மண்ணின் தாகமும் தவித்துக் கிடக்கும் சென்னிமலையில் பிறந்தவர்.

     இத்தகு தகுதிவாய்ந்த, திறமை வாய்ந்த மகாகவியை நாடி வந்திருக்கிறது ஒரு விருது.

---


அண்மையில், தமிழக அரசானது,

2010 முதல் 2019 வரையிலான

பத்து ஆண்டுகளுக்கான

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்

விருதுகளுக்கு

தேர்வு செய்யப்பெற்றிருக்கும்

பத்து விருதாளர்களை அறிவித்தது.

அப்பதின்மரில்

கரந்தைப் புலவர் கல்லூரியின்

முன்னாள் முதல்வரும்

முன்னாள் மாணவரும்

விருதாளர்களாக

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர்

ஆய்வறிஞர், தமிழறிஞர்


பேராசிரியர் கு.சிவமணி

இவர்

கரந்தைப் புலவர் கல்லூரியின்

முன்னாள் முதல்வர்.

மற்றொருவர்


மகாகவி ஈரோடு தமிழன்பன்

இவர்

கரந்தைப் புலவர் கல்லூரியின்

முன்னாள் மாணவர்.

இருவருக்கும்,


கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது.

மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

கரந்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது.

     இருவருமே, என்னிடத்தில், இந்த எளியேனிடத்தில் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர்கள்.

     இருவருக்கும் விருது என்ற செய்தியை அறிந்தவுடன், அலைபேசி வழி, இருவரையுமே தொடர்பு கொண்டு, வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்தேன்.


இருவருமே தங்களுக்கு கிடைத்த, இந்த விருதினை, கரந்தைக்குக்  கிடைத்த விருதாகவே எண்ணி மகிழ்ந்தனர்.

     இருவரும், ஒரே வார்த்தையைத்தான் கூறினார்கள்.

     கரந்தைக்கு இரண்டு.