13 அக்டோபர் 2021

மண்ணியாற்று அதிசயம்

          


காவிரி.

     கர்நாடக மாநிலத்தின், குடகு மாவட்டத்தின், தலைக் காவிரியில் தோன்றி, தான் செல்லும் இடமெல்லாம் இருபுறமும், தன் கரங்களாய், பலநூறு கிளை ஆறுகளை விரித்துப் பரப்பி, நிலங்களை செழுமைப்படுத்தி, வயல் வெளிகளைப் பசுமையாக்கி மகிழ்கிறது காவிரி.

கடந்த 10 ஆம் தேதி, ஞாயிறன்று, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு கும்பகோணம் சாலையில், இக்காவிரிக் கரையோரம், இரு சக்கர வாகனத்தில் பயணித்தோம்.

     நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், கரந்தைக் கலைக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற, நண்பர் திரு கா.பால்ராஜ், கரந்தைக் கலைக் கல்லூரியின் கணினித் துறைப் பேராசிரியர் நண்பர் முனைவர் ப.ராஜதுரை, கரந்தைக் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், திருவையாற்று அரசர் கல்லூரி விரிவுரையாளருமாகிய நண்பர் முனைவர் பிரபாகரன் ஆகியோரோடு, நானும் இணைந்து, ஐவராய் பயணித்தோம்.

     கணபதி அக்ரகாரத்தைக் கடந்த சில நிமிடங்களில், மேட்டுத் தெரு எங்களை வரவேற்றது.

     மேட்டுத் தெரு.

     காவிரி புதிதாய், தன் இருபுறமும், இரு சிற்றாறுகளைப் பிரசவிக்கும் பகுதி.

     காவிரியின் தென்புறம், அரசலாறும், வடபுறம் மண்ணியாறும் தோற்றம் பெறும் இடம்.

     காவிரியின் வடகரையில், மண்ணியாற்றின் தலைப்பில் நிற்கிறோம்.

     காவிரியானது, திருவையாறு கும்பகோணம் சாலைக்கும் கீழே பயணித்து, சாலையைக் கடந்ததும், மண்ணியாறு என்னும் புதுப்பெயர் பெற்று, ஆர்ப்பரித்து ஓடுகிறது.

     இம்மண்ணியாறு, சருக்கை, மேல ராமநல்லூர், கீழ ராமநல்லூர், உம்பளபாடி, வாழ்க்கை, திருவைகாவூர், திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள், சிக்கல் நாயக்கன் பேட்டை, காட்டூர் வழிப் பயணித்து, சோழிய விளாகத்தை அடைந்து, கொள்ளிடத்தில் கலந்து அமைதி கொள்கிறது.

     மண்ணியாறு பயணிக்கும் பாதையில் ஒன்றல்ல, இரண்டல்ல 72 மதகுகள் மூலம் தண்ணீர் ஆங்காங்கே, சிறு சிறு வாய்க்கால்களின் வழி திருப்பிவிடப் பட்டு, நிலங்களை பசுமையாக்கிச் செல்கிறது.

     நண்பர்களோடு, மண்ணியாற்றின் தலைப்பில் நின்று கொண்டிருக்கிறேன்.

     நீரின் சலசலப்பு மனதிற்குள் மகிழ்வைப் பரவவிட, மண்ணியாற்றின் அழகில் மயங்கி நின்றோம்.

     நண்பர் பிரபாகரன் கூறினார், இந்த மண்ணியாற்றின் கரையில் சிறிது தூரம் பயணித்தால், இம்மண்ணியாறு, இரண்டாய் பிரிந்து, ஒன்றின் மேல் ஒன்றாகப் பயணிப்பதைக் காணலாம் என்றார்.

     ஒரு ஆறு கீழே.

     ஒரு ஆறு அதன் மேலே.

     இரு சக்கர வாகனத்தில் ஏறி, மண்ணியாற்றின் கரையில் சென்றோம்.

     சிறிது தொலைவில்,  அக்காட்சி எங்கள் கண் முன்னே விரிந்தது.
மண்ணியாற்றின் நடுவில், அதன் கரைகளுக்கு இணையாக, இரண்டு தடுப்புச் சுவர்கள்.

     இந்த இரண்டு தடுப்புச் சுவர்கள், மண்ணியாற்றை மூன்றாகப் பிரிக்கின்றன.

    இம்மூன்று பகுதிகளிலும், கான்கிரீட் தளங்கள், தரை மட்டத்தில் இருந்து, சில அடி உயரத்தில், எழுந்து, பரந்து நிற்கின்றன.

     காவிரி ஆற்றில் இருந்து, மண்ணியாற்றின் தலைப்பு வழி, ஆர்ப்பரித்து நுழைந்து, வெகுவேகமாய் ஓடி வரும் தண்ணீரானது, இந்த காக்கிரீட் தளத்திற்குள் நுழைந்து, காணாமல் போகிறது.

     திரும்பிப் பார்க்கிறேன்.
மண்ணியாறு வெறுமையாய், கட்டாந்தரையாய் காட்சி அளிக்கிறது.

     உள்ளே நுழைந்த நீர் என்னவாயிற்று?

     நண்பர் பிரபாகரன், சிரித்துக் கொண்டே, மண்ணியாற்றின் மேல்புறம் கை காட்டுகிறார்.

     மண்ணியாற்றின் கான்கிரீட் தளத்திற்கும் கீழே நுழைந்த, ஆற்று நீர், பூமிக்குக் கீழேயே, சிறிது தூரம் பயணித்து, இடது புறம் திரும்பி, ஆற்றின் கரையை அடுத்து, ஒரு சிறு மதகின் வழி, சிறு வாய்க்காலாய் வெளிப்பட்டுத் தன் பயணத்தைத் தொடர்கிறது.

     அதனால், மீதமுள்ள மண்ணியாற்றின் தொடர்ச்சி, கட்டாந்தரையாய் காட்சி அளிக்கிறது.

     ஏன்?

     காரணம் புரிந்தபோது, வியந்து போனோம்.

     கட்டாந்தரையாய் தொடரும், இம்மண்ணியாறு சென்று சேருமிடம், கொள்ளிடம்.

     கொள்ளிடம்.

     கொள்ளிடம்  மிக, மிக அகலமான நதியாகும்.

     எவ்வளவுதான் நீர் வந்தாலும், அத்துணை நீரையும், உள் வாங்கினாலும், கொள்ளிடம் நிரம்பாது.

     எனவே இது கொள் + இடம்.

     கொள்ளிடம்.

     கடும் மழைக் காலங்களிலும், வெள்ளப் பெருக்கு ஏற்படும் நேரங்களிலும், காவிரியின் உபரி நீரை, உட்கொண்டு, ஏப்பம் விட்டு செரிக்கும் ஆறு, கொள்ளிடம்.

     காவிரி ஆற்றில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, அதன்  உபரி நீரை, கொள்ளிடத்திற்குக் கொண்டு சேர்க்க செய்யப் பெற்ற ஏற்பாடுதான், இந்த மண்ணியாறு.

     வியப்பாக இருக்கிறதல்லவா.

     காவிரி ஆற்றில் ஓடும் நீரின் அளவானது, அதன் கரையோரப் பகுதிகளில் ஆபத்தை ஏற்படுத்தாத நிலையில், மண்ணியாற்று நீரானது, அதன் கான்கிரீட் தளத்திற்கு உள்ளே மட்டுமே நுழைந்து, விவசாயத்திற்குத் துணை புரியும்.

     மழைக் காலங்களிலும., வெள்ளப் பெருக்கு ஏற்படும் நேரத்திலும், காவிரியின் உபரி நீர், மண்ணியாற்றுக்குள் நுழைந்து, இரு கரை தொட்டு, தன்  அளவில் உயர்ந்து, வெகுவேகமாய் ஓடி, கான்கிரீட் தளத்திற்கு கீழும், மேலும் ஒரே நேரத்தில் பாய்ந்து பயணிக்கும்.

     கான்கிரீட் தளத்திற்குக் கீழ் நுழையும் நீர் விவசாய வயல்களையும், கான்கிரீட் தளத்தைத் தாண்டி ஓடும், உபரி நீர், கொள்ளிடத்தையும் சென்று சேரும்.

    இதனால், காவிரியின் கரை உடைபடுவது தடுக்கப் படுகிறது.

     பெரு வெள்ளச் சேதமும் தவிர்க்கப் படுகிறது.


     நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நம் முன்னோரின் ஏற்பாட்டினைக் கண்டு வியந்து,  மண்ணியாற்றின் நடுவே, நேரம் நகர்வது அறியாமல் நின்றோம்.


15 கருத்துகள்:

 1. வாசிப்பதிலே நுட்பம் வியக்க வைக்கிறது ஐயா... இன்னும் நேரில் காணும் போது - ஆகா...!

  பதிலளிநீக்கு
 2. அன்பு நண்பரே, நானும் அன்று தங்களுடனும் நண்பர்களுடனும் பயணித்த அந்தப் பயணத்தை மறக்க இயலாது. பாசன நீர் மேலாண்மை தமிழகத்தில் ஆதி காலத்தில் இருந்து சிறந்து விளங்குகிறது மகிழ்வை தருகிறது. நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட சிறந்த கட்டுமானங்களில் ஒன்றினை நாம் கண்டோம் என்றால் அது மிகையாகாது.

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான திட்டம்தான் !!! அறியத் தந்தமைக்கு நன்றி தோழர்

  பதிலளிநீக்கு
 4. மண்ணியாறு(மண்ணியார் அன்று) தொழில் நுட்பம் நம் முன்னோரின் கட்டுமானத் திறனுக்குச் சான்று. அரிய செய்திகளை அறியக் கொடுத்தீர்! வாழ்க.

  பதிலளிநீக்கு
 5. மண்ணியாற்றினைப் பற்றி சில வருடங்களுக்கு முன் ஒரு பதிவினைப் படித்த நினைவு. உங்களின் இப்பதிவு நம் மண்ணின் பெருமையோடு தொழில்நுட்பத்தையும் எடுத்துரைப்பதை உணர்த்துகிறது.

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான படங்கள். வியப்பான கட்டுமானம்.

  பதிலளிநீக்கு
 7. வியப்பூட்டும் செய்தி நண்பரே...
  படங்களோடு தந்தது அருமை.

  பதிலளிநீக்கு
 8. அழகாய் விவரிக்கப்பட்ட நீர் மேலாண்மை நண்பரே.

  பதிலளிநீக்கு
 9. மிக அருமையான பதிவு, மிக அழகான காணொளி . உங்கள் குரலில் கேட்க அருமை.

  நீர் மேலாண்மை வியக்க வைக்கிறது.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. அருமையான தகவல்கள் ஐய்யா.
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அழகான வயல்வெளிகள்-செழுமையான நிலங்கள்-நீர் வழிந்தோடும் இடங்கள் என்ற அருமையான வர்ணனைகளாலும் அற்புதமான படஙங்களாலும் எம்மையும் உடன் அழைத்துச் சென்றமைக்கு நன்றி!
  வாழ்த்துகள் !
  உடுவை.எஸ்.தில்லைநடராசா,
  கொழும்பு-இலங்கை.

  பதிலளிநீக்கு
 12. மண்ணியாற்றைப் பற்றி அறிந்து மகிழ்ந்தேன் ..கண்டிப்பாகச் சென்று பார்க்க ஆவல். பகிர்விற்கு நன்றி அண்ணா. காணொலியையும் பார்த்து மகிழ்ந்தேன் .

  பதிலளிநீக்கு
 13. மிக மிக அருமை அன்பின் ஜெயக்குமார். எத்தனை அருமையான பதிவு .நன்றி மா.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு