29 அக்டோபர் 2021

தஞ்சையார்

     ரோகிணி.

     ரோகிணி ஆறு.

     இரு நாடுகளுக்குப் பொதுவாய் ஒரே ஓர் ஆறு.

     இது போதாதா, பிரச்சினைகளை ஏற்படுத்த.

     ஆண்டுதோறும் பிரச்சினைதான்.

    

ஒரு நாட்டினர் தீர்மானித்தனர்.

     ஆயுதம் எந்திய முழுமையானப் போரைத் தொடங்கி, அடுத்த நாட்டை அழித்தே விடுவது என்று  தீர்மானித்தனர்.

     தீர்மானமும் கொண்டு வந்தனர்.

     போர்.

     அந்நாட்டு சங்கத்தின் பெயர் சனஸ்தார்.

     சனஸ்தார்.

     மிகவும் சக்தி வாய்ந்த சங்கம்.

     தேவைப்படுமானால், நாட்டின் அரசரையே மாற்றுவதற்கான அதிகாரத்தையும், வலிமையையும் பெற்றிருந்த சங்கம்.

     இச்சங்கத்தின்  விதி என்ன தெரியுமா?

     ஒருமித்த கருத்தோடு தீர்மானம் இயற்ற வேண்டும்.

     பின் செயலாற்ற வேண்டும்.

     சங்கம் கூடியது.

     இளைஞர்கள் குவிந்தனர்.

     போர், போர் என ஆர்ப்பரித்தனர்.

     அத்துணை இளைஞர்களுக்கும் நடுவில் இருந்து, ஒரு குரல், ஒரே ஒரு குரல், இக்கருத்திற்கு முற்றிலும் எதிராய் ஓங்கி ஒலித்தது.

     போர் கூடாது.

     உலக வரலாற்றில், போருக்கு எதிராக எழுந்த முதல் குரல் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

     போர் கூடாது.

     இளைஞர்கள் முதலில் திகைத்தனர்.

     பின்னர் கொதித்து எழுந்தனர்.

     இளைஞர்கள் மட்டுமல்ல, ஊரே ஒன்று கூடி, முடிவாய் ஒரு தீர்மானத்தை எடுத்தது.

     போர் கூடாது என்று மறுத்த இளைஞன் மீது மட்டுமல்ல, அந்த இளைஞனின் குடும்பத்தின் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திடமாய் முடிவெடுத்தது.

     இளைஞர் சற்றும் கலங்காமல் பேசினான்.

     போர் வேண்டாம் என்றது நான்தான்.

     என் குடும்பம் அல்ல.

     எனவே என் குடும்பத்தை விட்டு விடுங்கள்.

     என்னை நாடு கடத்துங்கள்.

     இளைஞன் நாடு கடத்தப்பட்டார்.

     நாட்டை விட்டு வெளியேறி நடந்தார்.

     வழியில் ஒரு ஆட்டு மந்தையைப் பார்த்தார்.

     ஒரு குட்டி ஆடு, நொண்டி, நொண்டி நடந்தது.

     நொண்டி ஆட்டை, தூக்கி தன் தோள் மீது போட்டுக் கொண்டு, ஆடு மேய்ப்பவர்களோடு சேர்ந்து நடந்தார்.

     அடுத்த நாட்டிற்குள் நுழைந்தார்.

     எதிரே ஒரு யாக சாலை.

     யாக சாலையே இரத்தக் காடாய் காட்சி அளித்தது.

     ஆடுகள் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன.

     ஒரு ஆடு, பலி பீடத்தில், தன் முடிவிற்காக, தன் கழுத்தின மீது, கத்தி இறங்குவதற்காகக் காத்துக் கொண்டிருந்தது.

     அந்த இளைஞன் ஓடிப்போய், அந்த ஆட்டை விடுவித்தார்.

     பலி பீடத்தில் தன் தலையை வைத்தார்.

     வெட்டுங்கள்.

     அந்நாட்டு அரசன் திகைத்தான்.

     இத்தனை ஆடுகளின் குருதியைக் கண்டால்தான், தேவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றால், அவர்கள், நய வஞ்சகர்கள் அல்லவா?

     ஏன் ஆடுகள்.

     என்னை வெட்டுங்கள்.

---

     இவர்தான் சித்தார்த்தன்.

     கி.மு.538, வைகாசி மாதம் 6 ஆம் நாள், அரச மரத்தடியில், போதி ஞானத்தைப் பெற்றவர்.

     கௌதம புத்தர்.

---

     வருணாசிரமம் ஒரு அதர்மம்.

     தர்மம் அல்ல.

     தொடக்கம் முதலே வருணாசிரமத்தை எதிர்த்தவர் புத்தர்.

     சாதி ஏற்பாட்டினை அடித்து நொறுக்குவதுதான், தனது நோக்கங்களுள் முதன்மையானது என்று எண்ணிப் புறப்பட்டவர் புத்தர்.

     சாதி ஒழிப்பை, புத்தர் நடைமுறைப்படுத்திய விதம் அதி அற்புதமானது.

     ஒரு சங்கத்தை நிறுவினார்.

     தன் கொள்கைகளை ஏற்றுக் கொள்வோரை எல்லாம் உறுப்பினராக்கினார்.

     சங்க உறுப்பினர்களுக்கு சாதி கிடையாது.

     மதம் கிடையவே கிடையாது.

     அனைவரும் சமம்.

---

     புத்தர் பாலி மொழியில் பேசினார்.

     புத்தர் தனது செய்திகளையும், உபதேசங்களையும் எழுத்தில் விட்டுச் செல்லவில்லை.

     புத்தர் மறைந்து 45 ஆண்டுகள் கடந்த நிலையில்தான், புத்தரின் உபதேசங்களைத் தொகுக்கும் பணி தொடங்கியது.

     இத்தொகுப்புப் பணிகளுக்குத் தலைமை தாங்கியவர் ஒரு தமிழர்.

     காசியபர்.

     பின்னாளில், பௌத்த தருக்க நூல்கள் பெரும் களஞ்சியமாக மாற்றப் பட்டதற்குக் காரணமும் இரு தமிழர்கள்.

     ஒருவர் தின்னாகர்.

     மற்றொருவர் தரும கீர்த்தி.

---

புத்தர் எனும் மானுடன்

     எட்வின் ஆர்னால்ட் என்பவர் எழுதிய ஆசிய ஜோதியில் மட்டுமே காணப்படுகின்ற, செய்திகளைக் கூட ஒன்று விடாமல் திரட்டி, தனியொரு நூலாக உருவாக்கி இருக்கிறார்.

 படிக்க படிக்க, பக்கத்திற்குப் பக்கம்,  வியப்பைத் தரக்கூடிய செய்திகளின் அணிவகுப்பு இந்நூல்.

     பலவருட படிப்பின், பல வருட அயரா உழைப்பின் விளைவு இந்நூல்.

     இந்நூலை எழுதிய இளைஞரின் வயது என்ன  தெரியுமா?

     வெறும் 85 தான்.

     ஆம், எண்பத்து ஐந்து.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     எண்பத்து ஐந்து வயதிலும், தன் நினைவடுக்குகளில் பதிந்திருக்கும் செய்திகளை, எழுத்தாக்கி, ஏட்டில் இறக்கி வைத்து, நூலாக்கி இருக்கிறார் இவர்.

     இவர் ஒரு ஆசிரியர்.

     வழக்கறிஞர்.

     அரசியல்வாதி.

     தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க, காமராசர் தலைமையிலான காங்கிரசில் சேர்ந்து, மேனாள் இந்தியப் பிரதமர்கள் இந்திரா காந்தி அம்மையாரோடும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களோடும் இணைந்து பணியாற்றியவர்.

     இதுமட்டுமல்ல, மேனாள் இந்தியப் பிரதமர், சந்திரசேகரோடு இணைந்து, இளம் துருக்கியர் குழுவில் இணைந்து,  அகில இந்தியப் பொறுப்பேற்றுப் பணியாற்றியவர்.

     இவரது பெயரைச் சொல்லவே தேவையில்லை.

     ஊரைச் சொன்னாலே போதும், உலகம் இவரை நன்கறியும்.

தஞ்சையார்

தஞ்சை அ.இராமமூர்த்தி

இவரது நூல்


புத்தர் எனும் மானுடன்.

---

இந்நூலின் வெளியீட்டு விழா

கடந்த 24.10.2021 ஞாயிறன்று

தஞ்சாவூர்

பெசண்ட் அரங்கில்

நடைபெற்றது.

    


பல ஆண்டுகளுக்கு முன்னர், இதே அரங்கில், பெசண்ட் அரங்கில், நடைபெற்ற ஒரு விழாவில்,

இனிமேல்

தஞ்சை இராமமூர்த்தி

என்று சொல்லக் கூடாது.

தஞ்சையார்

என்றுதான் அழைக்க வேண்டும்

என்று கூறி,

தஞ்சையார், தஞ்சையார், தஞ்சையார்

என்று முழங்கி

அரங்கில் குழுமியிருந்தவர்களை எல்லாம்

வாழ்க, வாழ்க, வாழ்க

என அரங்கே அதிர

முழக்கமிட வைத்த

தமிழக அரசின்,

மேனாள் வணிகவரித்துறை அமைச்சர்


திரு சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள்

இவ்விழாவிற்குத்

தலைமை ஏற்றார்.

     தஞ்சையார் என்று சொன்னால், ஒரு கால கட்டத்தின், தஞ்சை மாவட்டத்தின் அரசியல் வரலாறு ஆகும்.

     பௌத்தத்தைப் பற்றியும், கொளதம புத்தரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், ஐயா தஞ்சையார் அவர்கள் எழுதியுள்ள, இந்த ஒரு நூலைப் படித்தாலே போதும்.

     எல்லா தகவல்களையும், ஆதாரமானக் கருத்துக்களையும் தரக்கூடிய, நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது, என்று பெருமிதம் பொங்க சொற்பெருக்காற்றி நூலினை வெளியிட்டார்.

இந்திய அரசின், நிதித்துறை

மேனாள் இணை அமைச்சர்

தஞ்சைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்


திரு ச.சு.பழநிமாணிக்கம் அவர்கள்.

     பல இளைஞர்களுக்கு, அரசியலிலே இருக்கக் கூடிய பல இளைஞர்களுக்கு, புதிய ஊக்கத்தையும், உந்து விசையையும் தந்தவர் தஞ்சையார்.

     நான் ஐந்தாம் வகுப்புச் சிறுவனாக, தஞ்சாவூர், ஒக்கநாடு கீழையூர் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பாரதி விழாவில் பேசுவதற்காக, எம் பள்ளிக்கு வந்தார் தஞ்சையார்.

     அன்று பாரதி விழாவில், தஞ்சையார் பேசிய பேச்சுதான், அவர்போல் பேச வேண்டும், அவர்போல் இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை, அச்சின்னஞ்சிறு வயதில், எனக்குள் விதையாய் விதைத்தது, என்று மகிழ்ந்து, நெகிழ்ந்து சிறப்புரையாற்றினார், நூலின் முதற் படியினைப் பெற்றுக் கொண்ட,

இந்தியப் பொதுவுடமைக் கட்சியின்

தேசிய  நிர்வாகக் குழு உறுப்பினர்


தோழர் சி.மகேந்திரன் அவர்கள்.

 ---

அயனாபுரம் சி.முருகேசன்,   முத்து உத்திராபதி

பி.ஜி.இராசேந்திரன்,   காளியப்பன்

செம்மலர்,   ஜோ.கென்னடி

நா.வைகறை,   ப.வடிவேல்

பேரா கோ.விசயராமலிங்கம்,   கவிமணி

பு.விசுவநாதன்,   ஜெ.ஆனந்தன்

ஆகியோர், நூலின் அடுத்தடுத்த படிகளைப் பெற்று மகிழ்ந்தனர்.

தஞ்சையார் அவர்கள்

ஏற்புரையாற்றினார்.

முன்னதாக, விழாவிற்கு வந்திருந்தோரை,

தமிழக அரசின், கலைப் பண்பாட்டுத் துறையின்

மேனாள் உதவி இயக்குநர்


முனைவர் இரா.குணசேகரன் அவர்கள்

வரவேற்றார்.

இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளைச் சிறப்புறச் செய்து,

விழா நிகழ்வுகளை எழிலுறத் தொகுத்துச் சிறப்பித்த,

தஞ்சையாரால்,

தான் பெற்றெடுக்காத பிள்ளை

எனப் போற்றப்படும்,

தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசினர் கல்லூரி

தமிழ்த் துறை, பேராசிரியர்


முனைவர் வி.பாரி அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.