06 நவம்பர் 2021

சொர்க்கம்

 

     சொர்க்கம் மதுவிலே,

     சொக்கும் அழகிலே.

     சொர்க்கம் மதுவிலே என்னும் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை, மெய்ப்பித்து வருகிறது இன்றைய தமிழகம்.

     ஊரெங்கும் மதுக் கடைகள்.

     மதுவே சொர்க்கமாகிப் போனது, பல இலட்சம் மனிதர்களுக்கு.

   

  உண்மையில், சொர்க்கம் என்றால் என்ன?

     சொர்க்கத்தில் தேன் ஆறும், பாலாறும் ஓடும்.

     காமதேனு பசு இருக்கும்.

     கற்பகத் தரு மரம் இருக்கும்.

     சிந்தாமணிக் கல் இருக்கும்.

     வலம்புரிச் சங்கு இருக்கும்.

     ஐராவதம் என்று அழைக்கப்படும் வெள்ளை யானை இருக்கும்.

     அது இருக்கும்.

     இது இருக்கும் என்றெல்லாம் முடிவற்ற கதை சொல்லுவார்கள்.

     சொல்லுகின்ற யாரும் அதைப் பார்த்ததில்லை.

     சொர்க்கம்.

     உண்மையிலேயே இருக்கிறதா?

     இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது?

     சொர்க்கம்.

     சொர்க்கம் பூமியில்தான் இருக்கிறது.

     கடந்த ஆண்டு, கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது, வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம்.

     வீட்டில் பெற்றோருடனும், மனைவி, பிள்ளைகளுடனும், பலர் தங்கள் பெயரப் பிள்ளைகளோடும், நாள் முழுவதையும், மாதங்கள் முழுவதையும் செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

     உறவுகளோடு தனித்திருந்தபோதிலும்,  சில நாட்களிலேயே, எப்பொழுது வீட்டை விட்டு வெளியே செல்லுவோம், மனதிற்கினிய நண்பர்களை நேரில் கண்டு, பேசி மகிழ்வோம் என்னும் எண்ணம், ஏக்கம், ஒவ்வொருவர் உள்ளத்தும் எழுந்திருக்கும்.

     இதுதான் சொர்க்கம் என்கிறது ஒரு பாடல்.

     நாலடியார் பாடல்.

     நண்பர்களோடு, கருத்துக்களைப் பகிர்ந்து மகிழ்வதுதான், சொர்க்க இன்பத்தைக் காட்டிலும் மேலானது என்கிறது இந்த, நாலடியார் பாடல்.

தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்

இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ

நகலில் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்து

உம்பர் உறைவார் பதி.

     பேசக்கூடிய நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால், சிந்தை ஒத்த கருத்தினை உடையவர்களாக இருக்க வேண்டும்.

     தவல் என்றால் குற்றம்.

     குற்றமற்ற ஞானம் உடையவராக இருக்க வேண்டும்.

     தொல்கேள்வி – பழமையான கேள்வி ஞானம் உடையவராக இருக்க வேண்டும்.

     தொல் என்றால் இயற்கை என்றும் ஒரு பொருளுண்டு. எனவே, இயற்கையான கேள்வி ஞானம் உடையவராக இருக்க வேண்டும்.

     இகழிலர் – இகழ் என்றால் பொறாமை, பகை.

     பொறாமையற்ற, பகையற்ற மனம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

     எஃகுடையார்.

     எஃகு என்றால் அறிவு என்ற ஒரு பொருளும் உண்டு.

     குறிப்பாக ஆய்த எழுத்தைச் சுமந்து வரக்கூடிய வார்த்தைகள் அனைத்தும், மிக நுணுக்கமானப் பொருளைத் தரக்கூடியதாக இருக்கும்.

     அறிவார்ந்த பொருள் பற்றிய உரையாடலாக இருக்க வேண்டும்.

     தம்முட் குழீஇ – தங்களுக்கள்ளேயே ஒரு குழுவாக நின்று, இத்தகைய குணம் உடையவர்கள் பேசி மகிழும் பேச்சு.

     நகலில் இனிதாயிற் – நகல், நகுதல், மகிழ்தல், பேசி மகிழ்வது.

     அகல் வானத்து – அகன்ற வானத்தில்

     உம்பர் உறைவார் பதி – தேவர்கள் உறைவதாகிய உயர்ந்த உலகத்தை

    காண்பாம் – காணக் கடவோம், மகிழ்ச்சிக்கு நிகரானது.

     அதாவது, சிந்தை ஒத்த கருத்தினர், குற்றமற்ற ஞானம் உடையவர்கள், இயற்கையான கேள்வி ஞானம் படைத்தவர்கள், குற்றமற்ற, போட்டி, பொறாமையற்ற மனம் உடையவர்கள், ஒன்று சேர்ந்து பேசி மகிழும் பேச்சு இருக்கிறதல்லவா, அதுதான் சொர்க்கம்.

     சொர்க்கம்.

---

     என்னடா இவன், திடீரென்று சொர்க்கம் பற்றிய ஆய்வில், அதுவும் தமிழாய்வில் இறங்கிவிட்டானே என்று, தாங்கள் புருவம் உயர்த்தி யோசிப்பது தெரிகிறது.

     நான் ஒன்றும் ஆய்வில் இறங்க வில்லை.

     காதுகளைத் தீட்டிக் கேட்டேன்.

     சங்க இலக்கியங்களில் தொடங்கி, பிற்கால இலக்கியங்கள் வரை, சுமார், ஒரு இலட்சம் பாடல்களுக்கு மேல், தன்  நினைவடுக்குகளில் பத்திரமாய் சேமித்து, பாதுகாத்து வைத்திருப்பவரும், நினைத்த நேரத்தில், நினைக்கும் பாடல், வாய் திறந்தால் போதும், அருவியாய் ஆர்ப்பரித்து வெளிவரும் திறமை மிக்கவருமான, 


தமிழ்க் கடல், 

புலவர் முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள், 

சிங்கப்பூரில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற, 


புலவர் ப.திருநாவுக்கரசு அவர்களுடன் 

பேசிய பேச்சுக்களை, அருகிருந்து கேட்கும், ஒரு பொன்னான வாய்ப்பு கிட்டியது.

     சொர்க்கம் அறிந்தேன்.

     தமிழாய்ந்த அறிஞர்கள், பேசும் பேச்சைக் கேட்பதும் சொர்க்கம்தான் என்று தெளிந்தேன்.

     சொர்க்கம்.

     சொர்க்கம் பூமியில்தான் இருக்கிறது.

19 கருத்துகள்:

 1. அடடா. மிகவும் இனிமை நண்பரே. கொடுத்து வைத்தவர் தான் நீங்கள்

  பதிலளிநீக்கு
 2. அன்பு நண்பரே, தாங்கள் மௌனமாக இருந்து சொர்க்கத்தை அனுபவித்து ரசித்ததுடன் அதனைப் பதிவிட்டுள்ளமை சிறப்பு. அதனால்தான் இப்பதிவை வாசித்த நாங்களும் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்து விட்டோம். தமிழறிஞர்கள் இருவருடைய உரையாடலையும் கற்பனையிலே நாங்களும் அனுபவிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. //பேசிய பேச்சுக்களை, அருகிருந்து கேட்கும், ஒரு பொன்னான வாய்ப்பு கிட்டியது.

  சொர்க்கம் அறிந்தேன்.

  தமிழாய்ந்த அறிஞர்கள், பேசும் பேச்சைக் கேட்பதும் சொர்க்கம்தான் என்று தெளிந்தேன்...

  சொர்க்கம் பூமியில்தான். நல்லோர் பேசும் அருமையான பேச்சுகளில் சொர்க்கம் இருப்பது உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 4. // சங்க இலக்கியங்களில் தொடங்கி, பிற்கால இலக்கியங்கள் வரை, சுமார், ஒரு இலட்சம் பாடல்களுக்கு மேல், தன் நினைவடுக்குகளில் பத்திரமாய் சேமித்து, பாதுகாத்து வைத்திருப்பவரும், நினைத்த நேரத்தில், நினைக்கும் பாடல், வாய் திறந்தால் போதும், அருவியாய் ஆர்ப்பரித்து வெளிவரும் திறமை மிக்கவருமான //

  அம்மாடி... பிரமிக்க வைக்கிறார்.

  பதிலளிநீக்கு
 5. கண்ட சொர்க்கத்தைப் பகிர்ந்தமை சிறப்பு.

  பதிலளிநீக்கு
 6. சொர்க்கத்தின் விவரிப்பு அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 7. ' பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே! ' என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது. உயர்ந்த எண்ணங்களை நீங்கள் தொடர்ந்து பதிப்பித்துக்கொண்டேயிருக்கிறீர்கள்! சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது!!

  பதிலளிநீக்கு
 8. நாலடியார் பாடலுக்கு நல்ல உரை தந்தீர். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. கேட்டதை நான் படிக்க பதிவிட்டமைக்கு நன்றி!!

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு