10 நவம்பர் 2021

திருநாவுக்கரசர்

 


 

     ஆண்டு 1975.

     கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி.

     கணிதமேதை சீனிவாச இராமானுஜன் கல்வி பயின்ற கல்லூரி.

     சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைவுடன் இயங்கி வந்த காலம்.

     இளங்கலை மாணவர்களுக்கானத் தேர்வு முடிவுகள் வெளியிடப் பெற்ற நாள்.

     வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று முழக்கமிடுகின்றனர்.

     கல்லூரி வளாகம் முழுமையும் ஒரே பரபரப்புடன் காணப்படுகிறது.

     ஆனால் ஒரு மாணவர் மட்டும், முகத்தில் கவலையின் ரேகைகள் படர, மகிழ்வின்றி, ஆழ்ந்த யோசனையோடு திரும்பிச் செல்கிறார்.

    

ஒரு பாடத்தில் தோல்வி.

     எப்படி என்று புரியவில்லை.

     நன்றாய்தானே தேர்வை எழுதினோம்.

     எப்படி தோல்வியுற்றோம்.

     தெரியவில்லை.

     அடுத்த தேர்விற்குப் பணம் கட்டிவிட்டு, குழம்பிய மனதோடு வீடு திரும்புகிறார்.

     நண்பர்கள் பலர் வீடு தேடி வந்து ஆறுதல் கூறகிறார்கள்.

      சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், தங்கள் துறைத் தலைவர் பேராசிரியர் வி.இராமகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து, நன்றி கூற புறப்படுகிறார்கள்.

     நானும் வருகிறேன் என, தோல்வியுற்ற மாணவரும், தன் நண்பர்களோடு கிளம்புகிறார்.

     பேராசிரியர் வி.இராமகிருஷ்ணன் மகிழ்வோடு மாணவர்களை வரவேற்கிறார்.

     நன்றி சொல்ல வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்கிறார்.

     ஒவ்வொருவராய் வாழ்த்துகிறார்.

     மேலே என்ன படிக்கப் போகிறீர்கள் என தோல்வியுற்ற மாணவரை வினவுகிறார்.

     அம்மாணவர் தயங்கித் தயங்கிக் கூறுகிறார்.

     ஐயா, நான் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டேன்.

     பேராசிரியர் திகைக்கிறார்.

      நன்றாகப் படிக்கும் மாணவராயிற்றே என்று எண்ணியவர், மாணவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புகிறார்.

     ஒரு மாதம் கடந்த நிலையில், தோல்வியுற்ற மாணவரின் இல்லம் தேடி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருந்து, ஒரு கடிதம் வருகிறது.

     உங்கள் மதிப்பெண் பட்டியலை சரிபார்க்க வேண்டியிருக்கிறது. உடன் அனுப்பவும்.

     அனுப்புகிறார்.

     சில நாட்களில், புது மதிப்பெண் பட்டியல் வருகிறது.

     அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி என அறிவிக்கிறது.

     மாணவர் வியந்து போகிறார்.

     எப்படி இது?

     எல்லாம் பேராசிரியர் வி.இராமகிருஷ்ணனின் செயல் என்பதை அறிகிறார்.

     நன்கு படிக்கும் மாணவர், தோல்வி அடைந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதிய பேராசிரியர், மாணவருக்குத் தெரிவிக்காமல், தானே கடிதம் எழுதி, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருக்கிறார்.

      பேராசிரியரின் முயற்சி அறிந்து மகிழ்கிறார்.

      அன்று முதல் மாணவரின் உள்ளத்தில், நிரந்தரமாய் ஒரிடம் பிடித்தார் பேராசிரியர்.

     உடனே முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பிக்கிறார்.

     ஆனாலும், காலம் கடந்து விட்டது.

     அவ்வாண்டின் மாணவர் சேர்க்கைக்கான காலம் முடிந்து விட்டதால், அடுத்த ஆண்டுதான், கல்லூரியில் காலடி எடுத்து வைக்கலாம் என்னும் நிலை.

     மாணவர் தூரிகையை கையில் எடுத்தார்.

     ஓவியம் வரைவதில் ஆர்வமும், மிகுந்த திறமையும் பெற்றிருந்த, இம்மாணவர், ஒரு வருடத்தை, சும்மா ஏன்  வீணடிப்பானேன், உழைப்போம், குடும்பத்திற்கு உதவுவோம் என்று எண்ணி, வணிக ஓவியரானார்.

     கடைகளுக்கு பெயர்ப் பலகை எழுதுதல்.

     கட்சிகளுக்கு சுவர் விளம்பரம் செய்தல்

      புத்தம் புதிதாய் அச்சு வாகனம் ஏறும் நூல்களுக்கு, முகப்பு அட்டையினை வடிவமைத்துக் கொடுத்தல் என முழு நேர ஓவியர் ஆனார்.

     அடுத்த ஆண்டு முதுகலை வகுப்பில் சேர்ந்தார்.

     வென்றார்.

     தொடர்ந்து, ஒரத்தநாடு, அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார்.

     வென்றார்.

     ஆனாலும், தன் ஓவியப் பணியை ஒரு நாளும் கைவிடவே இல்லை.

     ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியையே தன் ஓவியங்களால் எழிலாக்கினார்.

      ஆசிரியர் பணிக்கானத் தகுதியினை பெற்ற பிறகும், ஓவியராகவே தன் ஊரை வலம் வந்தார்.

     இவரது சொந்த ஊர், தஞ்சை மாவட்டத்தின், பாபநாசம்.

     முதுகலை படித்தவர், ஆசிரியர் பயிற்சி பெற்றவர், சுவர் விளம்பரம் எழுதுகிறாரே என பாபநாசமே இவரை வியந்து பார்த்தது.

     இவர் தன் ஓவியப் பணியால், அரசியல் வாதிகள், தமிழன்பர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கவர்ந்தார்.

     பாபநாசத்திற்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர் வழுத்தூர்.

     வழுத்தூரில் ஒரு மேனிலைப் பள்ளி.

     சௌகத்து இசுலாம் (பா.மு.ச) மேனிலைப் பள்ளி.

     இப்பள்ளியில் ஒரு முதுகலைத் தமிழாசிரியர் பணியிடம், நிரப்பப்பட, இருப்பதை அறிந்து விண்ணப்பித்தார்.

     மொத்தம் 67 விண்ணப்பங்கள்.

     பள்ளியோ, இசுலாமியர் சமுதாயத்திற்கானப் பள்ளி.

     இவரோ, மாற்று மதத்தைச் சார்ந்தவர்.

     ஆனாலும், இவர் முதுகலைத் தமிழாசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

     பணியமர்த்தப் பட்டார்.

     காரணம் இவரது ஓவியப் பணி.

     இவரது  பணியினைக் கண்டு வியந்தவர்கள், மகிழ்ந்தவர்கள் எல்லாம், இவர் சௌகத்து இசுலாம் பள்ளியில் ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார் என்பதை அறிந்து, இவருக்குத் தெரியாமலே, பள்ளி மேலாண்மையினரிடம், இவருக்காகப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

     விவரம் அறிந்த போது நெகிழ்ந்து போனார்.

     தனக்கு வாழ்வு கொடுத்தப் பள்ளிக்கு, முழுமையாகப் பணியாற்றுவதே, அப்பள்ளிக்குத் தான் செய்யும் நன்றிக் கடன் என்பதை உணர்ந்து, அயராது உழைத்தார்.

      பள்ளி மட்டுமல்ல, வழுத்தூரே, இவரை, தங்கள் மண்ணின் மைந்தராய் வாரி அணைத்துக் கொண்டது.

     இவர் சன்மார்க்க குடும்பத்தில் பிறந்தவர்.

     இவரது தந்தை, திரு பஞ்சநதம் அவர்கள், வள்ளலார் வழியில் வாழ்ந்து, தன் குடும்பத்தையும் வள்ளலார் காட்டிய வழியில் வாழச் செய்தவர்.

     இராமலிங்க அடிகளாரின் அருட்பா முழுவதையும், மனப்பாடமாய், மடை திறந்த வெள்ளமாய் பொழியும் ஆற்றல் பெற்றவர்.

     இவர் தன் இறுதிக் காலத்தில், தன் மனைவியையும், மக்களையும் அழைத்து, உறுதியாய் சொன்னார்.

     தான் இறந்த பிறகு, இம்மண்ணில் புதைத்திட வேண்டும்.

     சடங்கு சம்பிரதாயங்கள்  செய்யக் கூடாது.

     குறிப்பாக யாரும் அழவும் கூடாது.

     இவர் மறைந்தபோது, இவரது இல்லத்தில், உறவுகளும், நட்புகளும், கடலென திரண்டபோதும், இவரது இல்லம் அமைதியில் உறைந்திருந்தது.

      சடங்குகள், சம்பிரதாயங்கள் இல்லை.

      அண்மையில், இவரது தாயார் மாணிக்கத்தம்மாள் மறைந்தபோதும், இல்லம் முழுவதும் நிரம்பி வழிந்தது அமைதிதான்.

      தன் தந்தையின் சொல்லை மந்திரமாய் இன்று  வரை கடைபிடிப்பவர் இவர்,

     இவரும், இவர் குடும்பமும் முழு சைவம்.

     ஆனால் இவர் பணியில் சேர்ந்த பள்ளி, இசுலாமிய சமுதாயத்திற்கானப் பள்ளி.

     பள்ளி சார்ந்த சிற்றூரோ, இசுலாமியர்களால் நிரம்பி வழியும் பகுதி.

     இவர், இசுலாமியச் சகோதரர்களின் அன்பில்  கரைந்தார்.

     வேறுபாடில்லாத நல்லுறவில் கலந்தார்.

     பள்ளியில் பயிலும் மாணவர்களை, தன் சொந்த பிள்ளைகளாய் கருதி வளர்த்தார்.

     ஏழை மாணவர்களுக்கு உதவுதல், கிராமத்து மாணவர்களை, தன் இல்லத்திலேயே தங்க வைத்தல் என மாணவர்களுக்கான ஆசிரியராக மாறிப்போனார்.

     மாணவர்களும், பள்ளியும், ஊரும் போற்றும் ஆசிரியராக உயர்ந்தார்.

     ஆனால் ஓவியத்தை ஒரு போதும் கைவிட வில்லை.

     சைவத்தையும் ஒரு நாளும் துறந்தது இல்லை.

     இவரது சைவத்தை, இசுலாமிய சகோதரர்கள் மதித்தனர்.

     தங்கள் இல்ல விழாக்களில், இவருக்கு மட்டும், சைவ உணவு படைத்து மகிழ்ந்தனர்.

     இவரும் இசுலாமிய மெய்யறிவை கற்றும், கேட்டும் தெளிந்தார்.

     சன்மார்க்கமும், இசுலாமும் கலந்த கலவையாக மாறிப்போனார்.

     வழுத்தூர் பள்ளிவாசல் மலருக்கான முழுப் பணியினையும், பொறுப்பையும், முகப்பு அட்டை வடிவமைப்புப் பணியினையும், தன் தோளில் சுமந்து, வெற்றிகரமாய் நூலாக்கி, இசுலாமிய மக்களின் பாராட்டைப் பெற்றவர் இவர்.

     அது மட்டுமல்ல, தன் ஆய்வியல் நிறைஞர் ஆய்வுப் படிப்பிற்காகத் தலைப்பாக, இவர் தேர்ந்தெடுத்தது,  கவிஞர் க.மு.செரீபு அவர்களின் ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழைத்தான்.

இவரது ஆய்வு, நூல் வடிவம் பெற்றபோது,அந்நூலை

தன் பள்ளியின் நிருவாகி

ஹாஜி கா.இ.ப.முகமது அலி அவர்களுக்கும்,

தன்

பள்ளிக்கும்

காணிக்கையாய் படைத்து மகிழ்ந்தவர் இவர்.

     பதிமூன்று ஆண்டுகள், சௌகத்து இசுலாம் மேனிலைப் பள்ளியில், முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி, அனைவர் உள்ளத்தும் நிரந்தரமாய் ஓர் இடத்தினைப் பிடித்தவர், 1994 இல் சிங்கப்பூர் பறந்தார்.

சிங்கப்பூர், நன்யாங் தொடக்கக் கல்லூரியில்

தமிழ் விரிவுரையாளராய்

பதினாறு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

     அங்கும் ஓவியப் பணியைக் கைவிடவில்லை.

     சிங்கப்பூரின், தமிழில் பேசுவோம் இயக்கத்திற்கான இலச்சினையை வடிவமைத்துக் கொடுத்ததும் இவர்தான்.

      சிங்கப்பூர், சிம் பல்கலைக் கழகத்தில், இளங்கலை தமிழ் வகுப்பு தொடங்கப் பெற்றபொழுது, பகுதி  நேர விரிவுரையாளராய் பணியாற்றி இருக்கிறார்.

சிங்கப்பூர் தமிழாசிரியர் கழகத்தின்

செயற்குழு உறுப்பினர்.

கவியரங்கம், வாழ்த்தரங்கம்

நூல் ஆய்வரங்கம்

என ஒவ்வொன்றிலும் தன் முத்திரையைப்

பதித்திருக்கிறார் இவர்.

சிங்கப்பூரின்

நல்லாசிரியர் விருது

தான் பணியாற்றிய கல்லூரியில்

தனியாசிரியரின் சிறந்த பங்களிப்பிற்கானப் பரிசு

வழங்கிப் பாராட்டப்பெற்றவர் இவர்.

     இவர், தனக்குச் செல்வமும், செழிப்பும் வழங்கிய சிங்கப்பூரை என்றும் மறவாதவர். தன்  கவி  வரிகளால், சிங்கப்பூரை என்றும் போற்றுபவர்.

மண்ணில் வயலிலை வரப்பிலை எனினும்

எண்ணில் வளமுள நாடு – கடல்

விண்ணில் தரையில் ஊர்திகள் வலம்வர

பண்ணிசை முழங்கிடும் நாடு.

 

பெண்ணின் பெருமையைப் போற்றியும் காத்தும்

மண்ணில் புகழ்செயும் நாடு – அவர்

கண்ணில் கல்வியும் கவிதையும் சேர்த்தே

கண்ணியம் காத்தநன் னாடு.

 

இவர் யார் தெரியுமா?

இவர் ஆட்டுப் பால் குடித்து வளர்ந்தவர்.

இவர் தன் தாயின் திருவயிற்றில்

மகவாய் உதித்தபோது,

இவரின் தாயிடம், தாய்ப்பால் இல்லாமல் போனது.

எனவே, அச்சமயம் திருமணம் ஆகாமல் இருந்த,

இவரது தாய் மாமனால், தனது தாழக்குடி என்னும்  கிராமத்திற்கு

எடுத்துச் செல்லப்பெற்று, ஆட்டுப்பால் கொடுத்து

வளர்க்கப் பெற்றவர் இவர்.

 

இவர் தாழக்குடியில்

தவழ்ந்து, வளர்ந்தபோது,

இவர் வீட்டிற்கு அடுத்து வசித்தவர்

ஒரு கோயில் அதிகாரி.

திரு சுப்பராய முதலியார்.

இவர் நாவுக்கரசரின் தேவாரத்தில் மூழ்கித் திளைப்பவர்.

ஒரு நாள் இவர்

நாவுக்கரசரின் தேவாரப் பாடல்களை

மனமுருகிப் பாடிக் கொண்டிருந்தபோது,

பாடல்களின் இனிமையான ஒலியால்

ஈர்க்கப்பட்டு, மெல்ல தவழ்ந்து அருகில் சென்றார்.

 

     தேவாரம் பாடிக் கொண்டிருக்கும்போது, தன்னருகில் மலர்ந்த முகத்தோடும்,  புன்சிரிப்போடும், தவழ்ந்து வந்த குழந்தையை, வாரி அணைத்துத் தூக்கியவர் தன் மனைவியின் பக்கம் திரும்பி,

இக்குழந்தைக்குப் பெயர் வைத்துவிட்டார்களா? என்றார்.

இல்லை.

அப்படியானால், இக்குழந்தைக்கு திருநாவுக்கரசு எனப் பெயர் சூட்டச் சொல் என்றார்.

அப்படி பெயர் பெற்றவர்தான் இவர்


திருநாவுக்கரசு

கவிஞர் ப.திருநாவுக்கரசு

இவர் மனைவி

தமிழ்ச் செல்வி

மகன்

பாவேந்தன்

மகள்

அன்னம்

பெயர்த்தி

அன்றில்.தமிழ், தமிழ், தமிழ்

தமிழே இவரது வாழ்வாகிப் போனது.

     இவர், இன்றும், தன் உறவினர்கள், தங்கள் குழந்தைக்குத் தூய தமிழில் பெயர் வைக்கும் பொழுது, அக்குழந்தைக்கு, ஒரு கிராம் தங்க காசு வழங்குவதை, பழக்கமாகவே கடைபிடித்து வருகிறார்.

     இவர் மனதில் நிரந்தரமாய் நிலைத்து நிற்கிறது ஓர் ஆசை, தமிழாசை.

எனக்கென்று இவ்வுலகில்

இருக்கிற ஒரே ஆசை

பிறக்க வேண்டும் ஆயிரம்

பேரப் பிள்ளைகள்.

பேரெல்லாம்

பாவேந்தராகவே

இருக்க வேண்டும்.