21 நவம்பர் 2021

தமிழறம்     அறம்.

     தமிழ் மொழியைத் தங்கள் தாய்மொழியாய் பெற்ற குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.

     இவர்கள் பள்ளியில், முதல் வகுப்பில் நுழைந்தவுடன், முதல் நாள், தங்கள் செவி குளிர கேட்கும் ஔவையின் அமுதமொழி, ஆத்திசூடி.

    

அறம் செய விரும்பு.

     ஆத்திசூடியின் தொடக்கமே இதுதான்.

     தமிழ்க் கல்வியின் தொடக்கமும் இதுதான்.

     அறம் செய விரும்பு.

     அறத்தில் இருந்துதான் தமிழே தொடங்குகிறது.

     தமிழின் பெருமையே இதுதான்.

     அறம்.

     அறம் என்றால் என்ன?

     அறம் என்பது, தருமம், புண்ணியம், நோன்பு, கடமை, கூற்றுவன், தானம், கற்பு, இல்லறம், துறவறம், நல்வினை, கையறம், அறநூல் என விரிந்து கொண்டே செல்லும் பொருண்மை உடையது.

     உலகியல் சார்ந்த அறத்தை முதன் முதலில் முன்வைத்த ஒரே மொழி, நம் மொழி, தமிழ் மொழி.

     யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று அன்று கனியன் பூங்குன்றன் உரைத்த சொல், இன்று ஐக்கிய நாடுகள் சபையின் அரங்கை அலங்கரிக்கிறது.

     உலகில் இன்றளவும், அதிக எண்ணிக்கையில் மொழிபெயர்க்கப் பெற்ற பெருமை பெற்ற நூல்கள் இரண்டு.

     ஒன்று பைபிள்.

     இரண்டாவது, உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள்.

     இத்திருக்குறளில் 60 இடங்களில், உலகு என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

     வையம் என்ற வார்த்தையும் இடம் பிடித்துள்ளது.

     உலகம் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அறத்தை வலியுறுத்துகிறது திருக்குறள்.

     உலகம் உவப்ப என்றுதான் திருமுருகாற்றுப்படை தொடங்குகிறது.

     ஞாலம் நின் புகழே மிக வேண்டும் என்று பாடுகிறார் ஞானசம்பந்தர்.

     உலகமெங்கம் மேவிய எனப் பாடுகிறார் சுந்தரர்.

     உலகம் யாவையும் எனத் தொடங்குகிறார் கம்பர்.

     உலகெலாம் எனத் தொடங்குகிறார் சேக்கிழார்.

     மலர் தலை உலகத்து என உரைக்கிறது நம்பியகப்பொருள் மாலை.

     திரைக்கடலோடியும் திரவியம் தேடச் சொல்கிறார் ஔவையார்.

     யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிறார் திருமூலர்.

     இவர்கள் மட்டுமல்ல,

     சமண மதத்தைச் சார்ந்த சிலப்பதிகாரம்,

     பௌத்த மதத்தைச் சார்ந்த மணிமேகலை.

     கிறித்துவ மதத்தைச் சார்ந்த தேம்பாவணி,

     இசுலாம் மதத்தைச் சார்ந்த சீறாபுராணம்

என தமிழ்க் காப்பியங்களும் உலகில் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற அறத்தைத்தான் வலியுறுத்துகின்றன.

     தமிழர் அறத்தின் மற்றொரு சிறந்த கூறு, விருந்தோம்பல்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு

     என்பார் வள்ளுவர்.

அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்

விருந்து எதிர்க் கோடலும் இழந்த என்னை

     என, கோவலனைப் பிரிந்த கண்ணகி, தன் கணவன் தன்னுடன் இல்லாததால், விருந்தோம்பல் செய்ய இயலாத நிலையில் இருப்பதை எண்ணிக் கலங்கியதை எடுத்துரைக்கிறது சிலப்பதிகாரம்.

உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

     உண்டானால் உணவளித்தும, இல்லையெனில் உள்ளத்தைப் பகிர்ந்தளித்தும் மகிழும் வறியோர் தலைவன் என அதியமானைப் புகழ்ந்து பாடுவார் ஔவை.

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய,

------------------------

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ? கூறுமின் எனக்கே

     பசியால் வாடுவோர்க்கு எல்லாம் உணவளித்துக் காக்கும், சிறுகுடி கிழான் பண்ணனை, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், என் வாழ்நாளையும் தருகிறேன் என வாழ்த்துவதை புறநானூறு எடுத்துரைக்கிறது.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று

     வீட்டிற்கு வந்த விருந்தினரை, வெளியே அமர வைத்துவிட்டு, தான் மட்டும் தனித்து உண்ணுதல் என்பது, அது அமிழ்தமாகவே இருப்பினும், விரும்பத்தக்கது அல்ல என உரைக்கும் வள்ளுவர், விருந்தோம்பலுக்காகவே ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார்.

     இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு படி மேலே போய்,

விருந்து இன்றி உண்ட பகலும் திருந்திழையார்

புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று

ஈயாது ஒழிந்தகன்ற காலையும் – இம்மூன்றும்

நோயே, உரன் உரையார்க்கு

என்கிறது திரிகடுகம். அதாவது விருந்தினர் இல்லாமல் உண்ட பகலும், மனைவியில்லா இரவும், வறியவர்க்குக் கொடுக்காத காலையும் அறிவுரையார்க்கு நோய்களாகும்.

     பார்த்தீர்களா, இதுதான் நம் முன்னர் விருந்தோம்பல்.

     விருந்தில் மட்டுமல்ல, செய்யும் போரிலும் அறத்தைக் கடைபிடித்தவர்கள் நம் முன்னோர்.

     போர் என்பதல் பொருள் என்ன?

     போரில் பின்பற்ற வேண்டிய  நெறிகள் என்ன என்பதை சங்க இலக்கியங்கள் தெள்ளத் தெளிவாய் கூறுகின்றன.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்

தென்புல வாழ்நருக்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வனைப் பெறாதீரும்

எம் அம்பு கடிவிடுதுத் நும் அரண் சேர்மின் என

அறத்தாறு நுவலும் புட்கை, மறத்தின்

     போர் நிகழவிருக்கும் நேரத்திற்கு முன், ஓர் அறிவிப்பு வரும். அது போர் தர்மத்தை, போர் அறத்தைக் குறிக்கிறது.

     பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபு நோய் உள்ளவர், இறந்த முன்னோர்க்குக் கடன் செலுத்தும் குழந்தைப் பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களக்குச் சென்று விடுங்கள், இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது என, பல்யாகசாலை, முதுகுடுமி பெருவழுதியை நெட்டிமையார் பாடும்போது, போரிடும் பாங்கை, போர் அற நெறிமுறைகளைக் கூறுகிறார்.

ஒருவனை ஒருவர் அடுதலும், தொலைதலும்

புதுவது அன்று, இவ் உலகத்து இயற்கை

     போர் இல்லாமல் இவ்வுலகம் இருக்க முடியாது. போர் இயற்கை என்றே, இப்புறநானூற்றுப் பாடல் கூறிகிறது.

     அதேசமயம், தகுந்த காரணங்களுக்காக மட்டுமே போர் புரிய வேண்டும் என்ற  வலியுறுத்துகின்றன, சங்க பாடல்கள்.

     போரைப் போலவே, விருந்தோம்பலைப் போலவே, ஈகையும் சீரிய அறம் என்று முழங்குகின்றன நம் சங்க இலக்கியப் பாடல்கள்.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும்

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓரொக் குமே,

அதனால், செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

     ஒருவன் கடல் சூழ் உலகு முழுவதையும் பிறர்க்கு உரிமையின்றி, தனக்கே உரியதாய், தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து ஆண்டு கொண்டிருந்தாலும், மற்றொருவன், பகல், இரவு என்று பாராமல், உணவுக்காக வேட்டையாட விலங்கினைத் தேடிக் கொண்டிருந்தாலும், யாராய் இருந்தால் என்ன?

     இருவருமே, உண்பது ஒரு படி உணவு,

     உடுத்துவது மேலாடை, கீழாடை என இரண்டு.

     ஆகையால் செல்வத்தைச் சேர்த்து வைப்பதில் பயனில்லை.

     செல்வத்தின் பயனே ஈதல் எனப் புறநானூற்றில் பாடுகிறார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

     வள்ளுவரும், இதனைத்தான் உரைக்கிறார்.

வறியார்க்கொன்று ஈவதேஈகை மற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.

     போர் அறத்தைப் போன்றே, ஈகை அறத்தைப் போன்றே, அன்பும் ஒரு மிகச் சிறந்த அறம்தான் என்பதை நம் முன்னோர் அறிந்து, தெரிந்து, தெளிந்து வைத்திருந்தனர்.

ஒரோஒகை தம்முள் தழீஇ ஒரோஒகை

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.

     மிகக் கொடுமையான வறுமையில் வாடினாலும், ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை என்கிறது இப்பாடல்.

     இதேபால், அடைக்கலம் போற்றலும், இருப்பதை பகுத்துண்டு வாழ்தலுமே உயரிய அறம் எனப் போற்றுகின்றன, நம் சங்க இலக்கியப் பாடல்கள்.

     இத்தகு அறங்களைக் காட்டிலும் மேலான அறம் ஒன்று உள்ளது.

     அதுதான் நன்றியறிதல்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

---

கடந்த 14.11.2021

ஞாயிறன்று

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவில்

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழக

தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்


முனைவர் ஜெ.சந்திரகலா அவர்களின்,

இலக்கியத்தில் அறம்

என்னும் தலைப்பிலானப் பொழிவானது.

தங்கு தடையற்ற அருவியாய் ஆர்ப்பரித்து

இறங்கி,

அரங்கில் இருந்தோர்

உள்ளங்களை நிரப்பித் ததும்பி வழிந்தது.

தஞ்சாவூர், கரந்தை

உமாமகேசுவர மேனிலைப் பள்ளித்

தமிழாசிரியை

முனைவர் இரா.மீனாகுமாரி அவர்களின்

தலைமையில் நடைபெற்ற

இப்பொழிவிற்கு வந்திருந்தோரை,

தஞ்சாவூர், முல்லைபாரதி கம்ப்யூட்டர் பிரிண்டர்ஸ்

திரு வை.இராமமூர்த்தி அவர்கள்

வரவேற்றார்.

பொழிவின் நிறைவில்

ஏடகப் புரவலர்

திரு வா.செந்தில்குமார் அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

கோயமுத்தூர், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

இளங்கலைத் தாவரவியல் மாணவி

செல்வி தி.இ.சாருகா அரசு அவர்கள்

விழா நிகழ்வுகளைத் திறம்பட

எழிலுற தொகுத்து வழங்கினார்.

 

ஏடகத்தை

ஏடு அகத்தின்

ஞாயிறு முற்றத்தை,

தொடர் பொழிவுகளால்

உரமிட்டு

மெருகேற்றி

ஏடக அறம் காக்கும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

11 கருத்துகள்:

 1. அற்புதமான நிகழ்வை எங்களுக்கு அழகாக எடுத்து வைத்தமைக்கு நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. அன்பு நண்பரே, அறம் பற்றிய சிந்தனை சிறிது சிறிதாக குறைந்து வருகின்ற வேளையில் "அறம்" பற்றிய அற்புதமான பொழிவு. அதனை சுவை குறையாமல் பதிவு செய்து அறம் செய்த எங்கள் நண்பருக்கு மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
 3. படிக்க படிக்க இனிக்கும் தமிழ்... சிறப்பான தகவல்களுடன் நிகழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 4. முனைவர் ஜெ.சந்திரகலா அவர்களின்,
  இலக்கியத்தில் அறம் பேச்சை அருமையாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி.
  வெகு அருமையான பேச்சு.

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா21 நவம்பர், 2021

  கேட்கமுடியாத வருத்தம் எழுத்தில் வடித்ததை படித்ததால் தீர்ந்தது. ஏடகம் தமிழர் கூடகம்! வாழ்த்துகள் மணி.மாறன் ஐயா. -ப.திருநாவுக்கரசு

  பதிலளிநீக்கு
 6. அற்புதமான பதிவு. பாராட்டுக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 7. அறத்தின் சிறப்பியல்புகளைப் பகிர்ந்த விதம் சிறப்பு. பொழிவாளருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அழகிய நல்லதொரு பகிர்வு.

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு! தமிழ‌றத்தின் அருமை தனை வழக்கம்போல் இனிய தமிழுடன் எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு அன்பு நன்றி!!

  பதிலளிநீக்கு
 10. அற்புதம் . இனிக்கும் தமிழ். நன்றி

  பதிலளிநீக்கு
 11. அருமையான பதிவு இப்படிக்கு இராசராசன்

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு