17 மார்ச் 2022

விண்ணில் மறைந்தவர்

 


     நீ எங்கே அமர்ந்தாலும், அவ்விடத்தை சுத்தம் செய்துவிட்டுத்தான் அமர்கிறாய். இடத்தை துடைப்பதற்கான துணி கிடைக்காவிட்டாலும், வாயால் ஊதியாவது, அவ்விடத்தை சுத்தம் செய்த பிறகுதான் அமர்கிறாய்.

     நீ அமரும் இடம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது, உன் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

    

சின்னஞ்சிறு வயதில், அன்புத் தாயார் கூறியதே, இவருக்கு வேத வாக்காகிப் போனது.

     இவர் 87 ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்தார்.

     இறுதி நாள் வரை, இறுதி நிமிடம் வரை, கள்ளம் கபடமற்ற குழந்தை முகம்.

     என்றும் வற்றாத புன்னகை.

     இவர் தன் வாழ்நாளில் பள்ளிக்குச் சென்றதே இல்லை.

     மூன்று வயது முதல், தன் தந்தையிடமே கல்வி கற்றார்.

     தந்தையே குருவானார்.

     எட்டு வயதிலேயே, பதினைந்தாயிரம் தமிழ்ப் பாடல்களை மனனம் செய்து, அருவியாய் பொழியத் தொடங்கினார்.

     பெரும் புலவர்கள் கூட இயற்றத் தயங்கும், வெண்பா, ஒன்பது வயதிலேயே, இவரின் செல்லப் பிள்ளையானது.

     பதிமூன்று வயதிலேயே, தனித்துச் சொற்பொழிவாற்றும் வல்லமை பெற்றார்.

     சென்னையிலும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், அதிக நிகழ்ச்சிகளில் சொற்பொழிவாற்ற வாய்ப்புகள் வரவே, சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

     அப்பொழுது இவருக்கு வயது 16.

     இவருக்கு ஓர் ஆசை.

     இசை கற்க வேண்டும் என்னும் ஆசை.

     கர்நாடக சங்கீதத்தை அறிய ஆவல்.

     வீணை வாசிக்க வேண்டும் என்ற தணியாத தாகம்.

     சென்னை, யானைகௌனியில் ஒரு குரு கிடைத்தார்.

     வரதாச்சாரியார்.

     இவர் இருப்பதோ சிந்தாதிரிப் பேட்டை.

     யானைகௌனியோ, சிந்தாதிரிப் பேட்டையில் இருந்து ஒன்பது கி.மீ., தொலைவு.

     தினமும் நடந்தார்.

     யானைகௌனிக்கு 9 கி.மீ.,

     மீண்டும் சிந்தாதிரிப் பேட்டைக்கு 9 கி.மீ.,

     ஒவ்வொரு நாளும் 18 கி.மீ.,  நடந்தார்.

     கை வீசிக் கொண்டு நடக்கவில்லை.

     வீணையைத் தோளில் சுமந்தபடி நடந்தார்.

     ஒரு நாள் இரு நாள் அல்ல.

     நான்கு ஆண்டுகள் நடந்தார்.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     இவரது ஆர்வம் அப்படிப் பட்டது.

     19 வயதில் திருமணம்.

     மனைவி அமிர்த லெட்சுமி.

     எனவே, தான் தொடங்கிய மாத இதழுக்கு திருப்புகழ் அமிர்தம் எனப் பெயரிட்டார்.

     திருப்புகழ் அமிர்தம்.

     38 ஆண்டுகள் தமிழுலகை வலம் வந்தது இந்த இதழ்.

     இவரது ஆன்மிகப் பொழிவு கேட்டு, தமிழுலகே மயங்கித்தான் போனது.

     கடல் கடந்தும் அழைப்புகள் வரத் தொடங்கின.

     இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்து, பறந்து ஆன்மிகச் சொற்பொழிவாற்றி, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார்.

     இவர் தினமும் காலையில், பூசை அறையில் நுழைந்துவிட்டார் என்றால், வெளியே வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும்.

     உலகையே மறந்து இறைச் சிந்தனையில் ஆழ்ந்து போவார்.

     பின் உணவு.

     சற்று ஓய்வு.

     மாலையில் ஆன்மிகப் பொழிவு.

     இரவு பத்து மணிக்கு மேல், அன்றைக்கு, தனக்கு வந்த கடிதங்களுக்குத் தானே, தன் கைப்பட பதில் எழுதத் தொடங்குவார்.

     பல நாட்கள் விடிய, விடிய எழுதுவார்.

     அதிகாலை புலர்ந்து விட்டதை அறிந்தால், உறங்கச் செல்ல மாட்டார்.

     அடுத்த நாள்  பணியைத் தொடங்கிவிடுவார்.

     ஆன்மிகத்தை நகைச் சுவை என்னும் தேனில் கலந்து வழங்குவதில் வித்தகர் இவர்.

     ஒருமுறை, இவர் திருப்பரங்குன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, ஒருவர் குறுக்கிட்டு கேள்வி கேட்டார்.

     சுவாமி, இத்திருப்பரங்குன்றத்தை, சிக்கந்தர் மலை எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று, இசுலாமியர் சிலர், கோரிக்கை விடுத்துள்ளனரே, இது குறித்துத் தங்களின் கருத்து என்ன? என்றார்.

     ஒரு நொடி கூடத் தயங்காமல், யோசிக்காமல், உடனே பதில் அளித்தார்.

     இதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் சிக்கந்தர் மலை எனப் பெயர் வைத்தால், வைத்துக் கொள்ளட்டுமே என்றார்.

     குழுமியிருந்தோர் திகைத்தனர்.

     இவரோ, சிரித்துக் கொண்டே தொடர்ந்தார்.

     முருகனின் தந்தை பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தன் எனக் குறிப்பிட்டு, சிக்கந்தர் மலை என கூற முற்படுகின்றனர் என்றார்.

     அவ்வளவுதான், கூட்டமே ஆர்ப்பரித்து மகிழ்ந்தது.

     இவர் செல்லும் இடங்கள் எல்லாம், இப்படித்தான் கலகலக்கும்.

     ஒருமுறை, கந்தசாமி பிள்ளை என்பாரின் மளிகைக் கடையைத் திறந்து வைத்தார்.

     அன்று மாலை கூட்டத்தில் பேசும்போது,

     கந்தசாமி பிள்ளையின் மளிகைக் கடையைச் சுற்றிப் பார்த்தேன்.

     விநாயகர் படம் இருந்தது.

     முருகன் படம் இருந்தது.

     லெட்சுமி படம் இருந்தது.

     சரசுவதி படம் இருந்தது.

     பரமசிவன், பார்வதி படம் இருந்தது.

     எல்லா படமும் இருந்தது.

     எல்லா இடத்திலும் தேடித் தேடிப் பார்த்தேன்.

     ஒரு படம் மட்டும் இல்லை.

     ஆம்,

     கலப்படம் மட்டும் இல்லை என்றார்.

     இதுமட்டுமல்ல, ஆன்மிகத்தோடு, அரிய பல கருத்துக்களை முன் வைப்பதற்கும் என்றுமே தயங்காதவர்.

     பிள்ளைகள், தங்கள் தாயின் பெயரின் முதல் எழுத்தை, தங்கள் பெயரின் முன்னெழுத்தாக வைத்துக் கொள்ளலாம் என முதன் முதலில் அறிவித்தவர் இவர்தான்.

     தன் ஆன்மிகப் பொழிவில் திரட்டிய நிதியினைக் கொண்டு, எண்ணிலடங்கா கோயில்களுக்குத் திருப்பணிச் செய்தவர் இவர்.

     வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயச் சுற்றுச் சுவர், சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் என இவர் செய்த திருப்பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

     இறுதிவரை ஆன்மிகவாதியாகவே வலம் வந்த, இவரது உள்ளத்தில், ஒரு பெரும் தாக்கத்தை, ஒரு எழுத்தாளர் ஏற்படுத்தினார்.

     லியோ டால்ஸ்டாய்.

     ஒருமுறை, பழநி ஈசான சிவாச்சாரியார் அவர்கள், லியோ டால்ஸ்டாய் எழுதிய, நாம் என்ன செய்யவேண்டும்? என்ற நூலை இவருக்குக் கொடுத்தார்.

     இவரும் படித்தார்.

     படித்த நாள் முதல், முழுவதுமாய்  மாறிப்போனார்.

     பொன், பொருள், உலகம் என்ற பற்று துறந்தார்.

     தான் அணிந்திருந்த தங்க நகைகளை, காங்கேய நல்லூர் முருகனுக்கு காணிக்கை ஆக்கினார்.

     திருச்சி, கரூர் சாலையில், திருப்பராயத் துறையில், பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய, இராமகிருட்டின குடில் என்னும் அமைப்பிற்கு, இவர் பல ஆண்டுகள், தன் பொழிவின் மூலம் நிதி திரட்டிக் கொடுத்து ஆதரித்தார்.

     இந்த அமைப்பு, இன்று வளர்ந்திருப்பதற்குக் காரணமே இவர்தான்.

     150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

     இவரது குரல் தாங்கிய 83 குறுந்தகடுகள் மூலம், இன்றும் தமிழுலகு முழுவதும், இவரது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

     1988 ஆம் ஆண்டு, இவரது மனைவி அமிர்தம் மறைந்தபோது, வேதனையோடு சொன்னார்.

     வாழ்க்கைப் பயணத்தில், அவர் இறங்க வேண்டிய ஸ்டேசன் வந்துவிட்டது, அவர் இறங்கி விட்டார். என் ஸ்டேசன் வரும் பொழுது, நானும் இறங்கத்தானே வேண்டும் என்றார்.

     ஆனால் இவர் இறங்கவே இல்லை.

     1993 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள், இலண்டனில் இருந்து புறப்பட்டு, மும்பை வந்து, மும்பையில் இருந்து சென்னைக்கு வான் ஊர்தி வழி, பறந்து வந்த பொழுது, பூமியில் இறங்கும் முன்பே, வானிலேயே, இவர் உயிர் பிரிந்து விண்ணில் கலந்தது.

     வாழ்நாள் முழுவதும் ஆன்மிகத்திற்காகவே வாழ்ந்தவர் மறைந்தார்.

     இவர்தான்.


திருமுருக கிருபானந்த வாரியார்.

---

கடந்த 13.3.3022 ஞாயிறன்று

ஏடகம்

ஞாயிறு முற்றம்

தஞ்சாவூர், ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி இயக்குநர்


திரு கோ.முரளி அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற விழாவில்,


திரு நா.சிவராமகிருட்டினன் அவர்கள்.

வாரியாரும் தமிழும்

எனும் தலைப்பில் உரையாற்றினார்.

விழவிற்கு வந்திருந்தோரை

ஏடகப் புரவலர் மற்றும் பொறுப்பாளர்


திரு பி.கணேசன் அவர்கள்

வரவேற்றார்.

தஞ்சாவூர், மருத்துவத் துறை சார்ந்த


திரு ரி.இராமகிருட்டினன் அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், பெரியார் சமுதாய வானொலி

தொகுப்பாளர்


பொறிஞர் எம்.ஆர்.ஜெயந்தி அவர்கள்

விழா நிகழ்வுகளைச் சுவைபட தொகுத்து வழங்கினார்.

 

ஓலைச்சுவடிகளில்

உறங்கிய எழுத்துகளை

அச்சில் ஏற்ற

உ.வே.சா., பட்ட

துன்பங்களை, துயரங்களை

கடந்த ஞாயிறு முற்றத்தில்

பொழிவாக்கி

உள்ளத்தை நெகிழ வைத்ததோடு

மனநிறைவு பெறாமல்,

இத்திங்களில்

கிருபானந்த வாரியாரையும்

அழைத்து வந்து

தமிழ் மனங்களை

மகிழ வைத்த

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.