08 ஏப்ரல் 2022

இறுதி அழைப்பு

     பிப்ரவரி 28.

     திங்கள் கிழமை.

     உடல்நிலை நலிவுற்று படுக்கையில் முடங்கிக் கிடந்த நான், உடல் நலம் தேறி, 18 நாட்களுக்குப் பின், அன்றுதான் பள்ளிக்குச் சென்றேன்.

     சக ஆசிரியர்களையும், மாணவ, மாணவிகளையும் நேரில் பார்த்த பிறகு, உடலிலும்,  மனதிலும் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது.

     காலை மணி 11.00

     ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்திருந்த பொழுது, என் அலைபேசி ஒலித்தது.

     ஹலோ என்றேன்.

     நீங்கள் யார்?

    

மறுமுனையில் இருந்து வந்து விழுந்த கேள்வி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

     நீங்கள்தானே அழைத்தீர்கள். நீங்களே அழைத்து விட்டு, என்னை யார் என்று கேட்கிறீர்களே என்று கேட்கலாமா என்று நினைத்தேன்.

      ஆனால் கேட்கவில்லை

     காரணம் அந்தக் குரல்.

     அந்தக் குரலில் இருந்த ஒரு தவிப்பு, ஒரு தேடல்.

     என் பெயர் ஜெயக்குமார். நான் தஞ்சாவூர், கரந்தை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுகிறேன் என்றேன்.

     என் பெயர் நக்கீரன்.

     என் தந்தை கடந்த 23.2.2022 புதன் கிழமை இரவு இயற்கையோடு இணைந்தார். இறுதி நாள்வரை, உடல் நலக் குறைவு ஏதுமின்றி நலமாகத்தான் இருந்தார்.

      திடீரென்று எங்களைப் பெருந்துயரில் ஆழ்த்திவிட்டு, பிரிந்துவிட்டார்.

      எனவே துயரின் பிடியில் சிக்கித் தவித்திருந்த நாங்கள், இன்றுதான் சற்றுத் தேறினோம்.

     இப்பொழுதுதான் அவரது அலைபேசியை எடுத்துப் பார்த்தேன்.

     கடைசியாக உங்களைத்தான் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

     அலைபேசி வழி எந்தையாரின் இறுதி அழைப்பு உங்களுக்குத்தான்.

     எனவேதான், நீங்கள் யார் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன் என்றார்.

     தங்கள் தந்தையின் பெயரினை அறியலாமா? என்றேன்.

     இராமலிங்கம், வயது 90.

     பெயர் உடனடியாக நினைவிற்கு வரவில்லை. ஆனாலும் வயது 90 என்பதைக் கேட்டவுடன், மனதில் மணியடித்தது.

     தங்கள் தந்தையார், முகம் என்னும் பெயருடைய மாத இதழ் வாங்குபவரா என்றேன்.

     ஆம், எந்தை முகம் இதழைத் தொடர்ந்து வாங்குபவர், வாசிப்பவர் என்றார்.

     புரிந்து  விட்டது.

     முகம் இதழால்தான் என்னோடு பேசியிருக்கிறார்.

     கடந்த 39 ஆண்டுகளாக தமிழுலகை வெற்றிகரமாக, வலம் வந்து கொண்டிருக்கும் மாத இதழ் முகம்.

     முகம்.

     தன் பெயருக்கு ஏற்றாற்போல், தமிழறிஞர் ஒருவரின் முகத்தினை, தன் அட்டையிலும், அவர் குறித்த கட்டுரையினைத் தன் அகத்திலும் சுமந்து வரும் இதழ்.

     39 ஆண்டுகளாக ஓர் இதழ், தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்றாலே, அவ்விதழின் தரம் எளிதில் விளங்கும்.

     இத்தகு இதழில் என் படம்.

     முகம் இதழின் முகப்பு அட்டையில் என் முகம்.

     காரணம் இருவர்.

     ஒருவர்,

     அனந்தபுரம், கல்வெட்டு கிருட்டினமூர்த்தி.

     மின்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

     பணிபுரிந்த காலத்திலும், ஓய்வு பெற்ற பிறகும், ஓயாமல் அலைந்து கொண்டே இருப்பவர்.

     தேடிக் கொண்டே இருப்பவர்.

     கோயில், குளம், பாழடைந்த அரன்மணை, மலைக் குகைகள், காடுகள் என அலைந்து கொண்டே இருப்பவர்.

     கல்வெட்டுகளைத் தேடி, அங்கு இங்கு என எங்கும், அயராது பயணித்துக் கொண்டே இருப்பவர்.

     சொந்த செலவில் கள ஆய்வு செய்து, ஐம்பதிற்கும் மேற்பட்ட சோழர் கால மற்றும் பல்லவர்கள் கால கல்வெட்டுகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட சோழர் மற்றும் பல்லவர் காலச் சிலைகளையும் கண்டு பிடித்தவர்.

     பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பான ஆய்வுகளில் பேரார்வம் காட்டி வருபவர்.

     கல்வராயன் மலை மக்கள், வழக்கிழந்த தமிழ்ச் சொற்கள், வரலாற்றில் திருப்பாதிரிக் கோயில், செஞ்சிப் பகுதியில் சமணம், காளி வழிபாடு, தமிழர் வழிபாட்டில் சங்கு முதலான பல நூல்களின் ஆசிரியர்.

     மற்றொருவர்

     முகம் இதழின் சிறப்பாசிரியர்,

     முனைவர் இளமாறன்.

     முகம் இதழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

     இவரது உழைப்பு முகத்தில் தெள்ளத் தெளிவாய் தெரியும்.

     சிறப்பாசிரியராக இருந்த போதிலும், முகம் இதழின் முழு அலுவலகமும் இவரே.

     முதல் பக்கம் தொடங்கி, கடைசிப் பக்கம் வரை, முழுவதுமாய் இவரே தட்டச்சு செய்கிறார்.

     பிழை, திருத்தம் செய்கிறார்.

     ஒவ்வொரு பக்கத்தையும் இவரே வடிவமைக்கிறார்.

     அச்சிடுவதற்காக மட்டுமே அச்சகம்.

     இதுதான், இவர்தான் முகம் இதழின் வெற்றியின் இரகசியம்.

     இவர்களால்தான், என் முகம், முகம் இதழில், முகம் காட்டியது.

     பிப்ரவரி 2022 திங்கள் இதழில் என் முகம்.

    


அன்று முதல் தமிழகத்தின் பெரும் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், நண்பர்கள் எனப் பலர் என்னை அழைத்தனர், பாராட்டினர், வாழ்த்தினர்.

     மனம் மகிழ்ந்து போனேன்.

     பிப்ரவரி 11 ஆம தேதி முதல் பிப்ரவரி 27 ஆம் தேதிவரை, உடல் நலக்குறைவால் சோர்ந்திருந்த எனக்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த அழைப்புகள், புத்துணர்வைக் கொடுத்தன.

     அப்படித்தான் அந்த அழைப்பும் வந்தது.

     23.2.2022 புதன் கிழமை இரவு, என் அலைபேசி அழைத்தது.

     அன்பும், பாசமும் ததும்பும் குரல்.

     தங்கள் முகத்தை, முகத்தில் பார்த்தேன். தங்களைப் பற்றிய செய்திகளைப்  படித்து அறிந்தேன், மகிழ்ந்தேன். 90 வயது முதியவன் பாராட்டுகிறேன், வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள் என வாழ்த்தினார்.

     நெகிழ்ந்து போனேன்.

     இதுதான், இம்மாமனிதர், தன் அலைபேசி வழி பேசிய கடைசிப் பேச்சு.

     அன்று இரவே, இவர் தன் உறக்கத்தை, மீளா உறக்கமாய் மாற்றி, ஓய்வெடுக்கத் தொடங்கி இருக்கிறார்.

இவர்தான்


முதுபெரும் தமிழறிஞர், திருக்குறள் நெறித் தோன்றல்

புலவர் என்.இ.இராமலிங்கனார்.

     தென்னக ரயில்வேயில் கணக்கு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

     30 நூல்களின் ஆசிரியர்.

     தான் எழுதிய நூல்களுக்காக, ஒரு முறை, இரு முறை அல்ல, நான்கு முறை, தமிழக அரசால் பரிசு வழங்கிப் பாராட்டப் பெற்றவர்.

     ஆதம்பாக்கம் திருவள்ளுவர் கழகத்தை நிறுவியவர்.

வள்ளுவர் வழங்கும் உடைமைகள் பத்து

திருவள்ளுவரின் செயல் நெறிக் கோட்பாடுகள்

திருக்குறள் தெளிபொருள் அகவல்

திருவள்ளுவரின் வாழ்வியல் கோட்பாடுகள்

திருமுறைகளில்  திருக்குறள் பதிவுகள்

என இவர் இயற்றிய நூல்களின் பட்டியலே, இவரது தமிழ்ப் புலமையையும், இவரது தமிழ் உள்ளத்தையும் நன்கு உணர்த்தும்.

     இத்தகு தமிழறிஞர், திருக்குறள் நெறித் தோன்றல், இறுதியாய், தன் அலைபேசி வழி என்னைத்தான் அழைத்திருக்கிறார், கடைசியாய் என்னைத்தான் வாழ்த்தி இருக்கிறார், என்பதை எண்ணும்போது, உள்ளம் நெகிழ்ந்துதான் போகிறது.

     ஆனாலும், மனதில் ஓர் இனம் புரியா கவலை சூழத்தான்  செய்கிறது.

     இத்தகு அறிஞர் இன்னும் பல காலம் வாழ்ந்திருக்கக் கூடாதா? என்னும் ஏக்கம் தோன்றுகிறது.

     இன்னுமொரு பத்தாண்டுகள் வாழ்ந்திருந்தால், அன்னைத் தமிழுக்கு, அருந்தமிழுக்கு, இன்னும் ஒரு பத்து நூல்கள் கிடைத்திருக்கும் அல்லவா.

---

     புலவர் இராமலிங்கனாரின் திருமகனார்  திரு இரா.நக்கீரன் அவர்கள் அலைபேசி  வழி பேசிய பிறகு, பல நிமிடங்கள் அமைதியில் உறைந்திருந்தேன்.

     திடீரென மனதில் ஓர் எண்ணம் மின்னலாய் வெட்டியது.

     என் அலைபேசியில், பொதுவாகவே, எனக்கு வரும் அழைப்புகள் அனைத்தும், அதன் நினைவகத்தில், தானாகவே பதிவாகி இருக்கும் என்பது நினைவிற்கு வந்தது.

    உடனே அலைபேசியின் குரல் பதிவகத்தில் நுழைந்து தேடினேன்.

     கிடைத்தது.

     மூன்று நிமிடம் முப்பத்து ஒன்பது வினாடிகள் நீடித்த, புலவர் இராமலிங்கனாரின் அன்பு ததும்பும் பேச்சின் பதிவு  கிடைத்தது.

     மீண்டும் ஒருமுறை கேட்டேன்.

     இராமலிங்கனாரின் அன்பில் நனைந்தேன்.

     இராமலிங்கனாரின் இறுதி அலைபேசிப் பேச்சை, அவரது திருமகனாருக்கு அனுப்பினேன்.

     மகிழ்ந்து போனார்.

---

எதிர்வரும்

10.4.2022 ஞாயிற்றுக் கிழமை

முதுபெரும் தமிழறிஞர், திருக்குறள் நெறித் தோன்றல்

புலவர் என்.இ.இராமலிங்கனார் அவர்களின்

நிறை வாழ்வு போற்றும்

பாடாண் நிகழ்வு

நடைபெற இருக்கிறது.

     பாடாண் நிகழ்வு.

     ஓர் ஆண்மகனின் வீரத்தையும், சிறப்பியல்புகளையும், அவனது வீரத்தையும், புகழையும், குடிப் பெருமையினையும், கொடை திறத்தையும், கல்வியறிவையும் பாடுதல், போற்றுதல் பாடாண் திணை ஆகும்.


பாடாண் திணை

பாடுதற்குரிய  சிறப்பியல்புகளை

ஒருங்கே பெற்ற

உன்னத மாமனிதர்

புலவர் என்.இ.இராமலிங்கனாரைப்

போற்றுவோம், வாழ்த்துவோம், வணங்குவோம்.