24 ஏப்ரல் 2022

கடைசிக் கடிதம்

 


அன்புகெழுமிய அண்ணலே,

     தங்கள் நலம் விழையும் அவாவினேன். எனது அன்பிற்குரிய சிதம்பரம், அண்ணாமலை, சொக்கலிங்கம், திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தம் ஆகிய அனைவரும் நலந்தானே.

     தமிழாண்டின் முதனாளாகிய நன்னாளில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு, உதவி செய்யும் பெரியோர்களை யான் நினைப்பதும், அவர்கள் இயற்றிய அறச் செயல்களின் பெருமைகளை நினைத்து நினைத்து நன்றி கூர்வதும் இயல்புதானே.

    

தாங்கள் செய்த நன்றியோ ஞாலத்தின் மாணப் பெரிது, அதனால் நலம் பெற்று வளரும் சங்கம்  நெறிப்பட்டு நடக்கிறதாவென ஓரோர்கால், இங்கு வந்து நீங்கள் கண்காணிப்பது நற்பயனை விளைக்கும்.

     கரந்தைப் புலவர் கல்லூரி இதுபோழ்து, பல்கலைக் கழகத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்கின்றது. இனி கல்லூரி செழுமையுடன் வளர்ந்துவர வழி துறைகளை நாடுவது  எளியேன் கடனாயிருக்கிறது.

     தாங்கள் கல்லூரியின் நலத்தைக் கருத்தில் இருத்தி, ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செய்யுமாறு இறைவன் திருவருள் கூடுவதாக.

     இப்புத்தாண்டு தங்கட்கு நலங்கள் பலவற்றையும் நல்கி, இன்பம்  வரையிராது வழங்கி அருள் புரிவதாக.

தங்கள் நன்றி மறவாத அன்பன்,

த.வே.உமாமகேசுவரன்

    
கடிதத்தைப் படிக்கும் பொழுதே மனம் உருகுகிறது அல்லவா.

     செய்த உதவியினை ஒவ்வொரு நன்னாளிலும் நினைத்துப் பார்ப்பதும், ஒவ்வொரு நன்னாளின் போதும், கடிதம் எழுதி நன்றி கூர்வதும் இவரது இயல்பாகவே இருந்திருக்கிறது.

     பொருளுதவி புரிந்தால் மட்டும் போதாது, தாங்கள் கொடுத்த பொருளைப் பெற்று வளரும் சங்கம், நெறிப்பட்டு நடக்கிறதா என்பதையும், அடிக்கடி வந்து கண்காணிக்க வேண்டும் என்று  உரைப்பதில் ஓர் உண்மை உணர்வு, நேர்மைத் திறம், பெருமிதம் மேலிட்டு எழுந்து நிற்கிறது அல்லவா.

     இக்கடிதம் எழுதப்பட்ட ஆண்டு 1941.

     1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் நாள்.

     இன்றைக்கு 81 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பெற்றக் கடிதம்.

    


இக்கடிதத்தை எழுதியவர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார்.

      அன்பு கெழுமிய அண்ணலே என்று விளித்து, இக்கடிதத்தை யாருக்கு எழுதினார் தெரியுமா?

    கோணாபட்டு விசுவநாதஞ் செட்டியார் அவர்களுக்கு எழுதினார்.

     இக்கடிதத்தின் ஒளி நகலை கடந்த 17.4.2022 ஞாயிறன்று மாலை, நான் என் அலைபேசி வழி பெற்றபோது, என் உடலும், உள்ளமும் ஒரு நொடி சிலிர்த்துத்தான் போனது.

     நான்கு வருடத் தேடல்.

     நான்கு வருடக் காத்திருப்பு பலனளித்தது.

---

     நான்கு ஆண்டுகளுக்கும் முன், ஒரு நாள் காலைப் பொழுதில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வளாகத்திற்குள் ஒரு மகிழ்வுந்து வந்தது.

     திரு சொ.மாணிக்கம் செட்டியார் என்பவர் தன் மனைவியோடும், மகனோடும், மகளோடும் வந்திருந்தார்.


நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும், நானும் வரவேற்றோம்.

     சங்கத்தை ஒருமுறை கண்ணாரக் கண்டு மகிழ வேண்டும் என்றார்.

     கண்டு மகிழ்ந்தனர்.

     சங்கத்திற்கும், எங்கள் குடும்பத்திற்குமான உறவு என்பது நூறாண்டுகளைக் கடந்த  உறவு என்றார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் செயலாளர் கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், முதன் முதலாக ஆசிரியராகப் பணியாற்றியது எங்கள் பள்ளியில்தான் என்றார்.

     வக்கீல் ஐயா எங்கள் வீட்டிற்குப் பலமுறை வந்துள்ளார். பல நாட்கள் தங்கியுள்ளார். வக்கீல் ஐயா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன், என் தாத்தாவிற்கு எழுதிய கடிதம், இன்றும் எங்கள் வீட்டில் உள்ளது என்றார்.

      ஆடிப்போய்விட்டோம்.

     வக்கீல் ஐயா, வக்கீல் ஐயா என்று அன்பொழுக இவர் அழைத்தது, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களைத்தான்.

     திரு மாணிக்கம் செட்டியாரின் தாத்தாவான, திரு விசுவநாதஞ் செட்டியாரும், தமிழவேளும், மிக மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்துள்ளனர்.

     திரு விசுவநாதஞ் செட்டியார் அவர்கள், அக்காலத்திலேயே, சிங்கப்பூர், மலேசியா எனப் பறந்து பறந்து, வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டியவர்.

     தான் ஈட்டிய பொருளை, தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் செயலாற்றிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வாரி வாரி வழங்கியவர்.

     திரு மாணிக்கம் செட்டியார் அவர்கள் பேசப் பேச, தமிழவேளின் அந்தக் கடைசிக் கடிதத்தைப் பார்க்க வேண்டும், பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவலால் மனம் படபடக்கத் தொடங்கியது.

     கடிதத்தைப் பார்க்க முடியுமா? என்று கேட்டேன்.

     விரைவில் அனுப்புகிறேன் என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.

     ஆனாலும் பணிச் சுமையால் அவரால் அனுப்ப இயலவில்லை.

     இவர் இருப்பதோ பெங்களூருவில், கடிதம் இருப்பதோ கோணாபட்டுவில்.

     நாட்கள் மாதங்களாகி நகர்ந்து கொண்டே இருந்தன.

     ஓராண்டு கடந்த நிலையில், மூன்றாண்டுகளுக்கு முன், சித்திரைத் திங்கள் முதல் நாளில், பிள்ளையார் பட்டி, குன்றக்குடி செல்வதற்காக, மகிழ்வுந்தில் புறப்பட்டோம்.

     நண்பரும் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், நண்பர்கள் திரு கா.பால்ராஜ் மற்றும் திரு ப.ராஜதுரை மற்றும் நான் என நால்வர் பயணித்தோம்.

     புதுக்கோட்டையினைக் கடந்து, திருமயம்  வழிச் செல்லும் பொழுது, இடதுபுறம் ஒரு பெயர்ப் பலகை.

     கோணாபட்டு.

     மனதில் ஒரு மின்னல் வெட்டியது.

     திரு விசுவநாதஞ் செட்டியார் வாழ்ந்த ஊர்.

     அதுமட்டுமல்ல, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் செயலாளர், கரந்தைக் கவியரசு ஆசிரியராய் பணியாற்றிய கற்பக விநாயகா கல்விச் சாலை அமைந்திருக்கும் ஊர்.

     ஊருக்குள் நுழைந்தோம்.

     கல்விச்சாலை பெயர் மாற்றம் பெற்று, ஸ்ரீசரசுவதி தொடக்கப் பள்ளியாய், ஒரு பழங்காலக் கட்டடத்தில் தலை நிமிர்ந்து நின்றது.

     விசாரித்தோம்.

     வழி காட்டினர்.

     சென்றோம்.

    


அந்தத் தெருவின் பெயரே, விசுவநாதஞ் செட்டியார் வீதி எனப் பெயர் பெற்றிருந்தது.

     வீட்டினைக் கண்டு பிடித்து உள்ளே சென்றோம்.

     ஒரு முதியவர் கட்டிலில் அமர்ந்திருந்தார்.

     ஐயா வணக்கம். நாங்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வருகிறோம் என்றோம்.

     அவ்வளவுதான்.

     அப்பெரியவர் விருட்டென்று, கட்டிலில் இருந்து எழுந்து கை கூப்பினார்.

     வக்கீல் ஐயா வளர்த்த, சங்கத்தில் இருந்து வருகிறீர்களா? வாருங்கள், வாருங்கள் என்றார்.

    
இப்பெரியவர் திரு. வி.திருஞான சம்பந்தம்.

     சம்பந்தஞ் செட்டியார் என்று அழைக்கப்படுபவர்.

     மூன்று வருடங்களுக்குமுன், நாங்கள் பார்த்தபோது, இவரது வயது என்ன தெரியுமா?

     சொன்னால் நம்பமாட்டீர்கள்.

     103.

     வக்கீல் ஐயா, வக்கீல் ஐயா என பேசிப் பேசி உருகினார்.

    


கரந்தையில் இருந்து சென்ற எங்களைப் பார்த்ததும், அவருக்கு வக்கீல் ஐயாவையே பார்த்த ஓர் உணர்வு.

     கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழியத் தொடங்கியது.

     உமாமகேசுவரனார் மீது, இப்பெரியவர் வைத்திருக்கும் பாசத்தையும், நேசத்தையும் கண்டு நெகிழ்ந்து போய்விட்டோம்.

     தமிழவேளின் ஆருயிர் நண்பர் திரு விசுவநாதஞ் செட்டியாருக்கு ஐந்து மகன்கள்.

     திரு வி.சிதம்பரம்

     திரு வி.அண்ணாமலை

     திரு வி.சொக்கலிங்கம்

     திரு வி.திருஞானசம்பந்தம்

     திரு வி.திருநாவுக்கரசு

     ஐவரில் திரு சம்பந்தஞ் செட்டியார் என்று அழைக்கப்படும், திருஞானசம்பந்தம் மட்டுமே தற்போது உள்ளார்.

     இவரது வயது 103 என்பதை நம்பவே முடியவில்லை.

     பேசிக் கொண்டே இருந்தார்.

     உமாமகேசுவரனாரின் நினைவலைகளில் மூழ்கிப் போனார்.

     மெல்ல உமாமகேசுவரனாரின் கடைசிக் கடிதம் பற்றிக் கேட்டோம்.

     அவர், தன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள, தனது மூத்த சகோதரர் திரு வி.சொக்கலிங்கம் அவர்கள் வாழ்ந்த வீட்டில்  இருப்பதாகச் சொன்னார்.

     ஆனால் நாங்கள் சென்றிருந்தபோது, அந்த வீட்டில் யாரும் இல்லை.

     அனைவரும் சிங்கப்பூரில் இருந்தனர்.

     எனவே வேறு வழியின்றி, பெரியவரைக் கண்ட மகிழ்வோடும், மன நிறைவோடும் திரும்பினோம்.

     அடுத்தடுத்த வருடங்களில் பயணம் மேற்கொள்ள இயலா நிலை.

     காரணம் பெருந்தொற்று.

     கொரோனா.

     இரண்டு ஆண்டுகள் கடந்தபின், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த 17.4.2022 ஞாயிற்றுக் கிழமை, நண்பர்கள் திரு கா.பால்ராஜ், திரு ப.ராஜதுரை, திரு சீனிவாசன் ஆகியோருடன் இணைந்து பிள்ளையார்பட்டிக்குப் புறப்பட்டேன்.

      கோயிலுக்கு முன், கோணாபட்டுக்குள் நுழைந்தோம்.

     திரு சம்பந்தஞ் செட்டியாரின் இல்லம் சென்றோம்.

     பெரியவர் வீட்டில் இல்லை.

     அவரது மகன்கள் இருவர் எங்களை வரவேற்றனர்.

     தங்கள் தந்தை தற்பொழுது, கோயமுத்தூரில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

     பெரியவர் திரு சம்பந்தஞ் செட்டியார், தனது 106 வது வயதில், நலமுடன் இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தோம்.

     பெரியவருக்கு எங்கள் வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னோம்.

     பின்னர் அருகில் இருந்த, திரு வி.சொக்கலிங்கஞ் செட்டியார் வாழ்ந்த வீட்டிற்குச் சென்றோம்.

     திரு சொக்கலிங்கஞ் செட்டியாரது திருமகனார் வரவேற்றார்.

     இவருக்கு வயது 76.

     சிங்கப்பூரில் வசிப்பவர்.

     அன்றுதான் கோணாபட்டுக்கு வந்திருந்தார்.

   


  இவரது பெயர் திரு விசுவநாதன்.

     தன் தாத்தாவின் பெயரையே, தன் பெயராய் பெற்ற பெருமைக்கு உரியவர்.

     வந்த காரணத்தைச் சொன்னோம்.

     ஆம், வக்கீல் ஐயா அவர்கள் எழுதிய கடிதம், எங்கள் வீட்டில் இருந்தது உண்மைதான்.

     ஆனால், வீடு புதுப்பிக்கப்பட்டு, புது வண்ணம் பூசப்பெற்றபோது, எங்கேயோ எடுத்து வைத்துவிட்டோம்.

     தற்பொழுது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

     உங்களுடைய அலைபேசி எண்ணைக் கொடுங்கள்.

     தேடிப் பார்க்கிறேன், கிடைத்தால் படம் எடுத்து அனுப்புகிறேன் என்றார்.

     நாங்கள் வாடிப் போனோம்.

     நான்காண்டுகளாகக் காத்திருந்தோமே, கிடைக்கவில்லையே என்ற ஓர் ஏமாற்றம்.

     அலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினோம்.

     முப்பது நிமிடங்கள் கடந்திருக்கும், அலைபேசியானது, செய்தி, செய்தி என முனுமுனுத்தது.

     எடுத்துப் பார்த்தேன்.

     வாட்ஸ்அப்பில் மூன்று படங்கள்.

     வக்கீல் ஐயா, தமிழவேளின் முத்தான கையெழுத்தில், ஒன்றல்ல, இரண்டு கடிதங்கள், அலைபேசித் திரையில் மின்னின.

     இதயம், ஒரு நொடி துடிக்க மறந்துதான் போனது.

     முதல்  கடிதம், 1941 ஆம் ஆண்டு, தமிழாண்டில் முதல் நாளில் எழுதியது.

     இரண்டாவது கடிதம், வக்கீல் ஐயாவின் இறுதிக் கடிதம்.

---

     1941 ஆம் ஆண்டு, திருநாவுக்கரசர் திருநாளன்று, சங்க அன்பர் திரு அ.கணபதிப் பிள்ளை அவர்களை மட்டும் அழைத்துக் கொண்டு, வடபுலப் பயணம் மேற்கொண்டார் உமாமகேசுவரனார்.

     கல்கத்தாவில் சில நாட்கள் தங்கினார்.

     தமிழன்பர்களைக் கண்டு அளவாவினார்.

     அரிய தமிழ் விரிவுரைகளை நிகழ்த்தினார்.

     கல்கத்தாவில் ஆசுத்தோசு மூகர்சி முதலிய பெரியோர் செய்து வைத்துள்ள, வேலையின் திறனை நுணுகி, நுணுகி ஆய்ந்தார்.

     அத்தகைய பணிகளை, சங்கத்தை நிலைக்களனாக வைத்து, தான் மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணினார்.

     பின்னர் உலகம் மெச்சும் சாந்தி நிகேதனைக் கண்டார்.

     கவியரசு ரவீந்திரநாத்தின் பணிகளை நேரே கண்டு தெரிந்து மகிழ்ந்தார். உடனே சங்க வளர்ச்சியைக் கருதினார்.

     கயாவிற்குச் சென்று வணங்கினார்.

     பின்னர் காசிப் பதியைக் கண்டார், கண்டு நீராடினார். அத்தூய நீர் கொண்டு  பெரிய பெருமா(விசுவநாத)னையும் திருமஞ்சன நீராட்டினார்.

     இந்து பல்கலைக் கழகத்தைக் கண்டார்.

    சாரநாத் சென்று புத்த பொருமானின் அருட்கோலத்தைக் கண்டு வணங்கினார்.

     பிரயாகையில் நீராடினார்.

     அரித்துவாரம் சென்றார்.

     இவ்வாறு, தன் வடபுலப் பயணத்தை இனிதாய் நிறைவு செய்து, தமிழகம் திரும்புவதற்காக, புகை வண்டியில் புறப்பட்டார்.

     வழியில் உமாகேசுவரனாருக்கு சிறிது காய்ச்சல் ஏற்படவே, உடன் சென்ற  கணபதியா பிள்ளை திகைத்தார்.

     அயோத்திக்கு அருகில் உள்ள பைசாபாத் என்னும் புகைவண்டி நிலையத்தில், உமாமகேசுவரனாரை அழைத்துக் கொண்டு இறங்கினார்.

     குறஷி (Qureishi)  என்னும் மருத்துவமனையில், உமாமகேசுவரனாரைச் சேர்த்தார்.

     அடுத்த நாள், மே திங்கள் ஒன்பதாம்நாள் காலை வரை, உமாமகேசுவரனார், உடன் வந்த கணபதியா பிள்ளை அவர்களைத் தேற்றிக் கொண்டும், கரந்தை சென்றடைந்தவுடன், ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றியும் பேசினார்.

     காய்ச்சல் ஒரு நாளைக்கு மேல் தன்னை வாட்டாது என்றார்.

     அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை.

     அவ்வப்போது மருந்து, பால் முதலியவற்றை ஏற்றார்.

     மாலை 3.50 மணிக்கு எந்தவொரு வாதனையும் இன்றி, துடுமென மூச்சொடுங்கிப் போனார்.

     உடன் சென்ற கணபதியா பிள்ளை அழுதார், புரண்டார், துடியாய் துடித்தார்.

     பின்னர், தன் மனதைத் தேற்றிக் கொண்டு, வக்கீல் ஐயாவின் திருமேனியை, சரயு நதிக்கரையில், தசரதனுக்கு இறுதிக் கடன் செய்த இடத்திலேயே கிடத்தித் ,தன் கைகளாலேயே நெருப்பிட்டார்.

     தமிழவேள் உமாகேசுவரனார், வக்கீல் ஐயா, தமிழகம் திரும்பாமலேயே, கரந்தைத் தமிழ்ச் சங்க மண்ணை மிதிக்காமலேயே, சரயு நதிக்கரையில், காற்றோடு கலந்தார்.

     1941 மே திங்கள் 9 ஆம் நாள்.

     இதற்கு இரண்டு நாட்களுக்கு முன், 1941 மே திங்கள் 7 ஆம் நாள், வக்கீல் ஐயாவின் பிறந்த நாளாகும்.

     தான் பிறந்த நன்னாளில், பிரயாகையில் இருந்து, தன் அன்பிற்குரிய கோணாபட்டு விசுவநாதஞ் செட்டியாருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

     நாமறிந்த வகையில், இதுவே, இவரது கடைசிக் கடிதமாகும்.

ராவ் சாகிப்                                                                                               பிரயாகை,

த.வே.உமாமகேசுவரன்                                                                         7.5.1941    

 

அன்புமிக்க ஐயா,

     நலம். தாங்கள் எல்லீரும நலனே இருப்பீர்கள் என எண்ணியிருக்கின்றேன். காசியிலும், இங்கும், அரித்துவாரத்திலும், நகரத்தார் சத்திரத்தில் வசதியாக இருந்து வருகின்றோம்.

     காசியில் நடு இரவுப் பூசனையை கண் குளிரக் கண்டு இன்புற்றேன். நகரத்தார் செய்து வரும் சிவபெருக்கும் அறச் செயல்கட்டு, சைவ மக்கள் செய்யவல்ல கைம்மாறு யாதுமில்லை. தங்கள் பழங்குடிச் சிறப்புகள் சீருடன் விளங்குகவென இறைவனை மனமொழி மெய்களான் வணங்குகின்றேன்.

     தம்பிகட்கு என் வாழ்த்தையும், அன்பையும் கடத்துக.

அன்பன்,

த.வே.உமாமகேசுவரன்

    


      கோணாபட்டு விசுவநாதஞ் செட்டியார் அவர்கள் குடும்பத்தால், கடந்த 81 ஆண்டுகளாக, பொக்கிசத்தினும் மேலாய் பாதுகாக்கப்பட்டு வந்த, வக்கீல் ஐயாவின், கடைசி கடிதத்தை, தமிழுலகின் பார்வைக்கு கொண்டு வர, எனக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி, எண்ணி மகிழ்கிறேன்.

     கடிதத்தைப் பார்க்கப் பார்க்க, உமாமகேசுவரனாரையே நேரில் பார்த்த ஓர் உணர்வு.

     அதுவும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், கடந்த முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றிய, கணித ஆசிரியர் என்னும் பணி  நிலையில் இருந்து, ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்குமுன், தமிழவேளின் கடைசி கடிதத்தை, இணைய வழி  வெளியிட, வெளி உலகிற்கு அறிவிக்கக் கிடைத்த நல்வாய்ப்பை, தமிழவேளே, வக்கீல் ஐயாவே எனக்களித்த வாய்ப்பாக, எண்ணி, எண்ணி மகிழ்கின்றேன்.

                         வக்கீல் ஐயாவுக்கு என் வணக்கங்கள்.