15 ஏப்ரல் 2022

தீ இனிதுஇன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே

இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

என்று பாடியவர், கங்கை ஆற்று நீரை, நறு நீர் கங்கை, நல்ல தூய்மையான நீரை உடைய கங்கை என்று புகழ்கிறார்.

     ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த ஆறுதானே?.

    

கங்கையைப் பாடியவர், தமிழகத்தை நதிகளால் செழித்த மேனி உடைய தமிழ் நாடு என்று பாடி மகிழ்கிறார்.

காவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ்

கண்ட தோர் வையை பொருனை நதி – யென

மேவிய யாறு பல வோடத் – திரு

மேனி செழித்த தமிழ்நாடு

     தமிழகத்து நதிகளைப் பட்டியலிட்டவர், நதி நீர் ஆதாரத்தைப் பாதுகாத்தால், மாசு படாமல் காத்தால், நமக்கு என்னென்ன கிடைக்கும் என்பதையும் பாடுகிறார்.

கன்னலும் தேனும் கனியுமின் பாலும்

கதலியும் செந்நெலும் நல்கும்

நாடு எங்கள் நாடே.

     நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும், நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும், பூமித்தாய் நமக்கு அளித்த நன்கொடை என்கிறார்.

     இதுமட்டுமல்ல, சூரியனின் வெப்பத்தால், கடலின் மேற்பரப்பு சூடாகி, கடல் நீர் ஆவியாகி மேல் எழுந்து, மேலே சென்று, குளிர்ந்து மீண்டும் மழையாய் பொழியும் அறிவியல் உண்மையை அன்றே கவியாக்கித் தந்திருக்கிறார்.

ஞாயிறு வித்தை காட்டுகிறான்

கடல் நீரைக் காற்றாக்கி மேலே கொண்டு போகிறான்

அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகிறான்

மழை இனிமையுறப் பெய்கிறது.

எனப் பாடியவர், ஞாயிறு இருளை நீக்கும் நிலையையும் பாடலாய் பாடுகிறார்.

ஞாயிரே, இருளை என்ன செய்துவிட்டாய்?

ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா?

இருள் நினக்குப் பகையா?

இருள் நின் உணவுப் பொருளா?

     சூழலியல் பாதுகாப்பின் மிக முக்கியமானப் பகுதியான காடு வளர்ப்பைப் பற்றியும் பாடுகிறார்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்

என்கிறார்.

     நல்ல காடு.

     அந்நிய நாட்டு மரங்கள், ஒரு சிறு காற்றிற்கும் தாங்காமல் முறிந்து விழுகிறதல்லவா? அதுபோன்ற மரங்களை வளர்க்காமல், நம் நாட்டு மரங்களை வளர்த்து, நல்ல காடு வளர்ப்போம் என்று அன்றே பாடியிருக்கிறார்.

கேணியருகிலே – தென்னைமரம்

கீற்று மிளநீரும்

பத்துப் பன்னிரெண்டு தென்னைமரம்

பக்கத்திலே வேண்டும்

     பத்துப் பன்னிரெண்டு தென்னை மரமும், கேணியும் வேண்டும் என்கிறார்.

     கேணி.

     இக்காலத்து இளைஞர்கள் பலரும், கேணியை கண்ணால் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள்.

     ஆம், கேணி என்பதே இன்று இல்லை எனும் நிலையினை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

     எங்கெங்கும் ஆழ் குழாய்கள்.

     கேணி இருந்தால்தானே ஊற்று பெருகும்.

     காற்று.

     காற்றுதான் இந்த உலக உயிர்களை வாழ வைக்கும் உயிர் சக்தி என்கிறார்.

     எனவே காற்றை மாசு படுத்தக் கூடாது.

     காற்று மாசு பட்டால் உயிர் அழியும் என்கிறார்.

காற்று தேவனை வணங்குவோம்

அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது

நாற்றம் இருக்கலாகாது

அழுகின பண்டங்கள் போடலாகாது.

புழுதி படிந்திருக்கலாகாது

எவ்விதமான அசுத்தமும் கூடாது.

காற்று வருகிறான்

அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து

நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம்.

அவன் வரும் வழியிலே

கற்பூரம் முதலிய நறும் பொருள்களைக்

கொளுத்தி வைப்போம்.

அவன் நல்ல மருந்தாக வருக

அவன் நமக்கு உயிராக வருக.

     மேலும் காற்றின் வகைகளையும், அதன் நன்மைகளையும் பாடுகிறார்.

மலைக் காற்று நல்லது

கடற் காற்று மருந்து

வான் காற்று நன்று.

     காற்றைப் பாடியவர், சூரியனையும் பாடுகிறார், கேளுங்கள்.

நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி

மின்னல், இரத்தினம், கலை, தீக் கொழுந்து

இவையெல்லாம் நினது நிகழ்ச்சி.

கண் நினது வீடு.

புகழ், வீரம் – இவை நினது லீலை.

அறிவு நின் குறி, அறிவின் குறி நீ.

நீ சுடுகிறாய் வாழ்க, நீ காட்டுகின்றாய் வாழ்க,

உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்.

வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்

நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய்

வாழ்க.

     சூழலியலைப் பேணுகின்ற காடு முதலான அனைத்தையும் தெய்வங்களாகவும், அமுதங்களாகவும் காண்கிறார். அதனைப் புதுப்பிக்க வேண்டும், அழியாதபடி காக்க வேண்டும் என்கிறார்.

காடு, மலை, அருவி, ஆறு

கடல், நிலம், நீர், காற்று

தீ, வான், ஞாயிறு, திங்கள், வனத்துச் சுடர்கள் எல்லாம்

தெய்வங்கள், உலோகங்கள், மரங்கள், செடிகள்

விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன

மனிதர் – இவை அமுதங்கள்.

     சூழலியல் மண்டலத்தை தெய்வங்களாகவும், அமுதங்களாகவும் கண்ட இவர், மனிதன்  சூழலியலைப் பாழாக்காமல், பாதுகாப்பானேயானால், அனைத்துமே இனி இனிது என்கிறார்.

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை

யுடைத்து, காற்றும் இனிது

தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது

ஞாயிறு நன்று, திங்களும் நன்று,

வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது

கடல் இனிது, மலை இனிது, காடு இனிது, ஆறுகள் இனியன

உலோகமும் மரமும் செடியும் கொடியும்

மலரும் காயும் கனியும் இனியன. பறவைகள் இனியன

ஊர்வனவும் நல்லன, விலங்குகளெல்லாம் இனியவை

நீர் வாழ்வனவும் நல்லன.

     இவ்வாறு மண்ணிலுள்ள எல்லாவற்றையும் இனிமையுடையன எனக் கூறும் இவர், இவ்வுலகத்திற்குத் தான் உணவாக வேண்டும் என்கிறார்.

தெய்வங்களே, எம்மை உண்பீர், எனக்கு உணவாவீர்

உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர்.

இவர்தான்

நமக்குத் தொழில்  கவிதை, நாட்டிற் குழைத்தல்

இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்

என முழங்கிய

எட்டய புரத்து எரிமலை

மகாகவி பாரதியார்.

---

கடந்த 10.4.2022 ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக,

இலக்கியத் துறை இணைப் பேராசிரியரும்

கட்டடக் கலைத் துறைத் தலைவருமாகிய


முனைவர் க.திலகவதி அவர்கள்,

பாரதியின் சூழலியல் சிந்தனைகள்

என்னும் தலைப்பில்

சொற்பொருக்காற்றி அமர்ந்தபோது

பெரும் புயலடித்து ஒய்ந்தது போன்ற

ஓர் உணர்வு.

காரணம்,

பேரருவியாய் ஆர்ப்பரித்து எழுந்த பொழிவு.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக

உதவிப் பதிவாளர் (ஓய்வு)


முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற, இப்பொழிவிற்கு வந்திருந்தோரை

தென்னக இரயில்வேயின் ஓய்வு பெற்ற அலுவலர்


திரு த.செ.மோகன் அவர்கள்

வரவேற்றார்.

ஏடகம் சுவடியியல் மாணவரும்,

இந்திய அஞ்சல் துறை அலுவலருமான


திரு சு.சரவணன் அவர்கள்

நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

ஏடகம் சுவடியியல் மாணவியும்,

இடைநிலை ஆசிரியையுமான


முனைவர் மாலதி திரு அவர்களின்,

தங்கு தடையற்ற

தென்றலாய்

உலா வந்த

கவித்துவமான இணைப்புரை

பொழிவிற்கு மேலும் மெருகூட்டியது.

இந்நாள் வரை

நாம் பார்க்காத

பாரதியின் மறுமுகத்தை

சூழலியல் திருமுகத்தை

மனதாரக் கண்டு

அகம் மகிழ வைத்த

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களை

வாழ்த்துவோம், போற்றுவோம்