15 செப்டம்பர் 2022

வெள்ளந்தி

 


ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டானாம்

வெள்ளரிக்காய்.

காசுக்கு நாலாய்

விக்கச் சொல்லி

காயிதம் போட்டானாம்

வெள்ளைக்காரன்.

    

இந்திய நாட்டினுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றை, இந்திய நாடு ஆங்கிலேயர்களுக்கு, வெகுகாலமாய் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, அவர்கள் இங்கே விளைந்த நெல்லுக்கும், உப்புக்கும் வரி விதித்ததையும், இங்கே நெய்யப்பட்ட துணிகளுக்கும், கதருக்கும் வரி போட்டதையும், எளிமையாய், வலிமையாய் நாட்டுப்புறப் பாடலிலே பதிவு செய்திருக்கிறார்கள்.

ஐ .... பை .....

அரைக்கா பக்கா நெய்

வெள்ளைக்காரன் கப்பலிலே

தீயைக் கொளுத்தி வை.

என ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டச் செய்திகள், நம் நாட்டுப்புறப் பாடல்களில் கொட்டிக் கிடக்கின்றன.

மழை வருது ... மழை வருது ...

நெல்லு குத்துங்கோ

முக்காப்படி அரிசிப் போட்டு

முறுக்கு சுடுங்கோ.

ஏர் பிடிச்ச மாமனுக்கு

எண்ணி வையுங்கோ.

சும்மா வந்த மாமனுக்கு

சூடு வையுங்கோ.

என்ற நாட்டுப் புறப்பாடலைத்தான் இந்த நாட்டுப்புறப் பாட்டில் உள்ள கருத்தினைத்தான்,

உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செய்வோம் – வீணில்

உண்டு கழித்திருப்போரை

நிந்தனை செய்வோம்

என்று பாடினான் முண்டாசுக் கவிஞன் பாரதி.

ஆராரோ ஆரிராரோ

ஆரடிச்சா நீ அழுதாய்

பாட்டி அடிச்சாலோ பாலூட்டும் சங்காலே

அத்தை அடிச்சாலோ அரளிப்பூ கம்பாலே

தாத்தன் அடிச்சானோ தங்கப் பிரம்பாலே

மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூ செண்டாலே

     பாடல் கூறும் நயத்தைப் பாருங்கள். அத்தை அரளிப் பூவால் அடிச்சாலா? பாட்டி பாலூட்டும் சங்கால் அடித்தாலா? தாத்தா தங்கப் பிரம்பால் அடித்தாரா? என வினவும் தாய், தன் சகோதரன் மேல் உள்ளப் பாசத்தால், மாமன் அடித்தானோ மல்லிகைப் பூ செண்டாலே எனத் தாலாட்டும் அழகைப் பாருங்கள்.

     பாட்டு இதோடு முடியவில்லை,

     மகன் என் அழுதான் என்பதற்கானக் காரணத்தை தாயே கண்டுபிடிக்கிறாள்.

     தன்னோடு பிணக்கோடிருக்கும், தன் கணவன் வீட்டிற்குள் நுழைவதை குறிப்பால் அறிந்து, இதோ பாடலின் அடுத்த அடியை எப்படித் தொடர்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

யாரும் அடிக்கவில்லை

ஐவிரலும் தீண்டவில்ல

தானே அழுதானாம்

தம்பி துணை வேணுமின்னு.

     தாலாட்டுப் பாடலில் மட்டுமல்ல, ஒப்பாரிப் பாடல்களிலும், தங்கள் எண்ணத்தைப் புகுத்திப் படியுள்ளனர்.

     ஒரு பெண், தன் மாமனார் இறந்தபோது இப்படி அழுதாளாம்.

போறதுதா போற

அந்தப் பெட்டிச் சாவி

எங்க இருக்குன்னு

சொல்லிட்டுப் போ மாமனாரே.

     கூலிக்கு மாரடிப்பதைப் பற்றிய, கிராமப்புறக் கதைகள் உண்டு.

     ஒரு இழவு வீடு.

     எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள்.

     அந்த வீட்டில், பாகற்காய் பந்தல் ஒன்று இருக்கிறது. அந்தப் பந்தலில் பாகற்காய்கள் கொத்து கொத்தாய் தொங்குகின்றன.

    அவ்வீட்டிற்கு கூலிக்கு மாரடித்து அழ வந்த, இரு பெண்களில் ஒருவர், அழுகையோடு அழுகையாய் பாடுகிறார்.

பந்தலிலே பாவக்கா

பந்தலிலே பாவக்கா.

என்று குறிப்பால் தெரிவிக்க, அடுத்தவர் தொடர்கிறார்.

போகையிலே பறிச்சுக்குவோம்

போகையிலே பறிச்சுக்குவோம்.

     இதனைக் கேட்ட அந்த வீட்டு அம்மாள், எதிர்பாட்டுப் பாடினாராம்.

நான் அதை விதைக்கல்லவா விட்டிருக்கேன்

நான் அதை விதைக்கல்லவா விட்டிருக்கேன்.

     இதுமாதிரியான தன்மையுள்ள, ஏராளமான நாட்டுப்புறப் பாடல்கள் இருக்கின்றன,

     நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கதைகளும் நம் சமூகத்தில்  நிறையவே இருக்கின்றன.

     கதை கேட்டு, கதை கேட்டு, கதை சொல்லி, கதை சொல்லி வாழ்ந்த சமூகம் அல்லவா, நம் சமூகம்.

     நம் சமூகம்,

     தாய் வழிச் சமூகம்.

     தெய்வங்களுக்குத் தாய் வழிப் பெயர்கள்.

     நிலத்திற்குத் தாய் வழிப் பெயர்.

     நதிகளுக்கும் தாய் வழிப் பெயர்கள்.

     நம் சமுகம், தாய் வழிச் சமூகம்.

---

     ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது.

     ஒரு நேரம், ஒரு வேளை சமைக்கிற சமையலுக்கு, அரிசி கழுவுவார்கள் அல்லவா? அந்த அரிசி கழுவிய நீர், கழு நீர், ஒரு வேலி நிலத்திற்குப் பாயுமாம்.

     அப்படியெனில், அவன் எவ்வளவு வசதி படைத்தவனாய், எவ்வளவு பேருக்கு சோறு போடுபவனாய் இருப்பான் என்பதை நினைத்துப் பாருங்கள்.

     அவ்வளவு வசதி படைத்தவனின் மகனுக்கும்.

     யானைத் தலையளவு பெருங்காயம் பிய்த்து, கீரை கடையுமாம் ஒரு குடும்பம்.

     ஒரு பெரும் கீரைக் கட்டிற்கு ஒரு துளி பெருங்காயம் போதும்.

     அப்படியானால், யானைத் தலை அளவிற்குப் பெருங்காயம் சேர்த்தால், கீரையின் அளவைக் கற்பனை செய்து பாருங்கள்.

     அவ்வளவு வசதி படைத்தவனின் மகளுக்கும்

     திருமணம் நடைபெற இருக்கிறது.

     அக்காலத்தில் திருமணம் எனில், முதலில் விறகுதான் வாங்குவார்கள்.

     இரு பெரு வசதி படைத்த குடும்பங்களும் இணைந்து, இருபது வண்டிகளில், விறகு வாங்கப் போனார்களாம்.

     இவர்களைக் கண்ட விவசாயி ஒருவர், வடக்குத் தெருவுக்குப் போங்க, அதில் முதல் வீடு பெரிய வீடு.

     அது என் வீடு.

     அடுத்த வீட்டிற்குப் போங்கள்.

     அவ்வீட்டின் கொல்லைப் புறத்தில், நான் மாடுகளை அடித்து அடித்து, உடைத்த குச்சிகள், மலை மலையாகக் குவிந்து கிடக்கும்.

     அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்றானாம்.

     மாடுகளை அடித்த குச்சிகளே, மலை மலையாய் குவிந்து கிடக்கிறது என்றால், அவனிடம் எவ்வளவு மாடுகள் இருக்கும், அவன் எவ்வளவு வசதி படைத்தவனாய் இருப்பான்.

     இருபது வண்டிகளிலும் குச்சிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பினார்கள்.

     வழியில் ஒரு ஆறு.

     வெள்ளம் இரு கரை தொட்டு ஓடியது.

     அப்பொழுது அங்கு வந்த ஒரு விவசாயி, என் வீட்டுக் கொல்லையில், நேற்று சமைத்தபோது மீதமான களி குழம்பு இருக்கும்.

     அதைக் கொண்டு வந்து கொட்டினால், ஆற்றின் குறுக்கே அணை கட்டலாம் என்றானாம்.

     எவ்வளவு சமைத்திருந்தால், மீதம் இவ்வளவு இருக்கும்.

     களியைக் கொண்டு வந்து கொட்டி, பாதை அமைத்து, ஆற்றைக் கடந்தார்கள்.

     ஆனால் ஆற்று நீரைத் தேக்கினால், கரை உடைப்பெடுத்து ஊருக்குள் வெள்ளம் வந்து விடுமல்லவா?

     எனவே குறுக்கே கொட்டிய  களி அணைரய உடைத்தாக வேண்டும்.

     என்ன செய்யலாம்? என்று யோசித்தார்கள்.

     அப்பொழுது அவ்வழி வந்த ஒருவன், என் வீட்டிற்குச் செல்லுங்கள்.

     ஒரு பெரிய பூனை இருக்கும், அதை விட்டு விடுங்கள்.

     ஒரு குட்டிப் பூனை இருக்கும்,

     அதனைக் கொண்டு வாருங்கள்.

     அது மொத்தக் களியையும் திண்றுவிடும் என்றானாம்.

     குட்டிப் பூனை வந்தது, களி திண்றது.

     இவர்கள் பயணம் தொடர்ந்தது.

     சிறிது தூரத்தில் மிகப் பெரும் பள்ளம்.

     எப்படிப் கடப்பது என்று புரியவில்லை.

     அப்பொழுது, வானத்தில் பறந்து வந்த ஒரு, அண்டரண்ட பட்சி, இருபது வண்டிகளையும் தூக்கிக் கொண்டு பறந்து, பெரும் பள்ளத்தைக் கடந்து, ஒரு பெரிய ஆல மரத்தின் மீது உட்கார்ந்ததாம்.

     எடை தாங்காமல், ஆலமரக் கிளை மட மடவென்று உடையத் தொடங்கியதாம்.

     அப்பொழுது, ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்த ஒரு கிழவி, தன் தலைமுடியில், ஒரு ஒரு முடியைப் பிடுங்கி, அம் முடியால், ஆலமரக் கிளை ஒடியாமல், அடுத்த கிளையோடு சேர்த்துக் கட்டினாளாம்.

     கிளை ஒடிவதைத் தடுத்தாளாம்.

     கதை அவ்வளவுதான்.

     யார் பெரிய ஆள்?

     சந்தேகமே இல்லாமல் கிழவிதான்.

     இதுதான் நம் தாய் வழிச் சமூகம்.

     நம் சமூகம், ஒரு காலத்தில் தாய் வழிச் சமூகமாக இருந்ததற்கான எச்சமாய அமைகிறது இந்தக் கதை.

---

     ஒரு அம்மா நாய்.

     அதற்கு இரண்டு மகன்கள்.

     தன் இரண்டு மகன்களுக்கும், பெண் பார்க்க புறப்பட்ட நாயம்மா, பக்கத்து விட்டு, நாயம்மாவிடம், சகுணம் பார்க்கச் சொல்கிறது.

     பக்கத்து வீட்டு நாயம்மா, வீட்டை விட்டு வெளியே வந்து, தெருவைப் பார்க்கிறாள்.

     லட்சுமி தேவி வருகிறார்.

     சே, சே லட்சுமி முகத்தில் முழிக்க மாட்டேன்.

     சிறிது நேரம் கழித்து, பக்கத்து வீட்டு நாயம்மா வெளியில் சென்று பார்க்கிறாள்.

     இம்முறை சரசுவதி தேவி வருகிறார்.

     சே, சே சரசுவதி முகத்தில் முழிக்க மாட்டேன்.

     மூன்றாம் முறை, பக்கத்து வீட்டு நாயம்மா வெளியில் சென்று பார்த்தபோது, மூதேவி வருகிறார்.

     இதுதான் நல்ல சகுணம் என்று நாயம்மா, பெண் பார்க்கக் கிளம்புகிறாள்.

     லட்சுமிக்கும் சரசுவதிக்கும் கடும் கோபம்.

      மன்னனிடம் சென்று முறையிடுகின்றனர்.

      கேவலம் ஒரு நாய் கூட, உன் நாட்டில், எங்களை மதிக்க மாட்டேன் என்கிறது என்கினறனர்.

     துடி துடித்துப் போன மன்னன், நாயம்மாவை அழைத்து வர, ஒரு வீரனை அனுப்புகிறார்

     நான் இந்த நாட்டின் குடிமகள்.

     மன்னர் அழைத்தால் நான் வந்துதான் ஆக வேண்டும்.

     ஆனாலும், ஒரு மரபு தடுக்கிறது.

     மன்னன் எனக்கு மருமகன் உறவு.

     எனவே, மருமகனும், மாமியாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது என்னும் மரபு தடுக்கிறது என்கிறாள் நாயம்மா.

     இது அக்கால மரபு.

     நாயம்மாளின் பதிலைக் கேட்டு மன்னன் திகைக்கிறார்.

     ஆனாலும் விசாரணைக்கு அழைக்கிறார்.

     மன்னன், மந்திரிகள், லட்சுமி, சரசுவதி ஒருபக்கம்.

     நாயம்மாள் மறுபக்கம்.

     நடுவில் ஒரு திரை.

     விசாரிக்கிறார் மன்னர்.

     மன்னா, நம் நாட்டின் மக்கள் தொகை 135 கோடி, இந்த லட்சுமி எத்தனைபேர் வீட்டில் இருக்கிறார்.

     மிகச் சிலர் வீடுகளில் மட்டுமே இருக்கிறார்.

     இவர் எப்படி என் கடவுளாக முடியும்.

     இக்காலத்தில், பணமில்லா விட்டால், படிக்க முடியாது என்னும் நிலை இருக்கிறது.

     லட்சுமி எங்கே இருக்கிறாரோ, அங்கே மட்டுமே சரசுவதி இருக்கிறார்.

     இவர் எப்படி என் சாமியாக முடியும்.

     மூதேவிதானே, பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் இருக்கிறார்.

     எனவே அவர்தான் என் தெய்வம்.

     மன்னனுக்கு அப்பொழுதுதான், தன் நாட்டின் நிலையே புரிகிறது.

     கடைசியாய் ஒரு கேள்வி கேட்கிறார்.

     நான் எப்படி, உனக்கு மருமகன்?

     மன்னா, மன்னா, நேற்று முன்தினம், மாலை அந்தப் புரத்திற்குப் பக்கத்தில் சிறுநீர் கழிக்க வந்தேன்.

     அப்பொழுது நீங்கள், மகாராணி அம்மாவை, நாய்க்குப் பிறந்தவளே என்று திட்டியதைக் கேட்டேன்.

     அப்படியானால், நீங்கள் என் மருமகன்தானே.

     தாயாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, பெயர்த்தியாக இருக்கிற பெண்களை, இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்த்துகிறது இந்த நாட்டுப்புறக் கதை.

---

     ஒரு 17 வயது சிறுவன்.

     எனக்கு ஒன்று முதல் நூறு வதை எண்ணத் தெரியும், எழுதத் தெரியும்.

     வேலை கொடுங்கள் என்கிறான்.

     வேலை கிடைக்கவில்லை.

     மன்னரைப் பார், வேலை கிடைக்கும் என்கிறார்கள்.

     பல நாள் முயன்று, இறுதியில் மன்னரைப் பார்க்கிறான்.

     மன்னா, மன்னா எனக்கு ஒன்று முதல் நூறு வரை எண்ணத் தெரியும், எழுதத் தெரியும், வேலை கொடுங்கள் என்கிறான்.

     மன்னன் மந்திரியை அழைத்து, இவனுக்கு ஒரு வேலை கொடுங்கள் என உத்தரவிடுகிறார்.

     மந்திரி அந்தச் சிறுவதைத் தனியே அழைத்து உனக்கு என்ன வேலை தெரியும் எனக் கேட்கிறார்.

     எனக்கு ஒன்று முதல் நூறு வரை எண்ணத் தெரியும், எழுதத் தெரியும்.

     மந்திரிக்கோ வேலை கொடுக்க விருப்பமில்லை.

     மன்னர் சொல்லிவிட்டார், அதனால் ஏதாவது வேலை கொடுத்துதான் ஆக வேண்டும்.

     எவ்வளவு சம்பளம் வேண்டும்? எனக் கேட்கிறார்.

     எனக்கு சம்பளமே வேண்டாம், வேலை கொடுத்தால் போதும்.

     இவனுக்கு, இன்னாருக்கு இந்த வேலையை கொடுத்திருக்கிறேன் என மன்னர் கையொப்பமிட்டு ஒரே ஒரு ஓலை மட்டும் கொடுத்தால் போதும் என்கிறான்.

     மந்திரி மன்னனிடமிருந்து ஓலை பெற்றுக் கொடுக்கிறார்.

     கடல் அலைகளை எண்ண வேண்டும்.

     இதுதான் உன் வேலை என்கிறார்.

     ஓலையுடன் சிறுவன் கடற்கரைக்குச் செல்கிறான்.

     கடற்கரைக்கு அருகில் வசித்தவர்களை எல்லாம் அழைக்கிறான்.

     மன்னர் எனக்கு ஓலை கொடுத்து, வேலை கொடுத்திருக்கிறார்.

     கான் கடல் அலைகளை எண்ணப் போகிறேன்.

     எனவே, நாளை காலை முதல், யாரும் கடலில் கால் வைக்கக் கூடாது என்கிறான்.

     மக்கள் பதறிப் போகிறார்கள்.

     அப்பகுதி மக்களுக்குக் கடல்தான் வாழ்க்கை.

     மீன் பிடித்தால்தான் அன்றைய உணவே கிடைக்கும்.

     மக்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

     மன்னனின் சிறு ஓலையால், தங்களின் வாழ்வாதாரமே பறிபோய்விட்டதே என்று எண்ணி சிறுவனிடம் கெஞ்சுகிறார்கள்.

     சிறுவன் மக்களிடம் ஓர் உள் ஒப்பந்தம் போடுகிறான்.

     இனிமேல் கடலுக்குள் இறங்குபவர்கள் யாராக இருந்தாலும், ஒவ்வொரு முறையும், என்னிடம் ஒரு தொகை கொடுத்து, அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறான்.

     வேறு வழி.

     மக்கள் தினம், தினம் கப்பம் கட்டுகிறார்கள்.

     பல மாதங்கள் கடந்த நிலையில், அப்பகுதிக்கு மன்னன் வருகிறார்.

     ஒரு சிறுவனை, கடல் அலைகளை எண்ணச் சொன்னோமே, அவன் எப்படி இருக்கிறான் எனப் பார்க்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வருகிறார்.

      பெரும் மாட மாளிகையில் சிறுவன் வசிப்பதைக் காண்கிறார்.

      மகிழ்ந்து போகிறார்.

     அவனுக்குத் தன் பெண்ணைக் கொடுத்து, அவனை நாட்டின் நிதி மந்திரி ஆக்குகிறார்.

     ஒரு குடிமைச் சமூகத்திற்குள் எப்படி அரசும், பெரு நிறுவனங்களும் தலையிடுகின்றன, மக்களின் வாழ்வை மாற்றுகின்றன என்பதுதான் இக்கதையின் கருப்பொருள்.

---

     அண்மையில், அறிவொளி இயக்கத்தில் இணைந்து, எழுதப் படிக்கக் கற்றுக் கொண்ட ஒரு பெண்ணிடம், ஒரு சமூகம் எப்படி இயங்குகிறது? மக்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை அறிய, சொர்க்கம் என்றால் என்ன? என்ற கேள்வியினைக் கேட்டு, அதற்கு பதில் எழுதச் சொன்னார்கள்.

     சொர்க்கம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அந்தப் பெண் எழுதினாள்.

     தினமும் ஐந்து குடமாவது தண்ணீர் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும்.

     ரேசனில் கிடைக்கிற அரிசியில், புழு இல்லாத அரிசி கிடைக்கிற இடமாக இருக்க வேண்டும்.

     சமைப்பதற்கு அடுப்பிற்கு, விறகு கிடைக்கிற இடமாக இருக்க வேண்டும்.

     குழந்தைக்கு நோவு வந்தால், மருந்து கிடைக்கிற இடமாக இருக்க வேண்டும்.

    ஒரு நாளாவது என் கணவன், டாஸ்மாக் கடைக்குப் போகாமல் இருக்கிற இடமாக இருக்க வேண்டும்.

    எங்களவர்கள் செத்துப் போனால், சுடுகாட்டிற்குத் தூக்கிச் செல்வதற்குப் பாதை இருக்கிற இடமாக இருக்க வேண்டும்.

     இதுதாங்க சொர்க்கம்.

     நம் நாட்டு மக்கள் தொகையில், 80 கோடி மக்களின் சொர்க்கம் இதுதான்.

    ஒருவனுடைய உணவுத் தட்டில் இருக்கிற உணவில்  பிறருடைய பங்களிப்பும், பசியும் அடங்கி இருக்கிறது.

     யோசித்துப் பார்க்க வேண்டும்.

     சமூக உணர்ச்சி பெற வேண்டும்.

     நாட்டுப்புறப் பாடல்கள் அனைத்தும் இதனைத்தான் உணர்த்துகின்றன.

     வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும், இந்த நாட்டுப்புறப் பாடல்கள் இருந்து கொண்ட இருக்கின்றன.

     கற்று அறிந்தவர்களால், இந்திய வரலாறு, உலக வரலாறுகள் எல்லாம் தொகுதி தொகுதியாகத் தொகுக்கப் பட்டு, அச்சடிக்கப்பட்டு  புத்தகங்களாய் மாறியுள்ளன.

     ஆனால் எழுதப் படிக்கத் தெரியாத, நாட்டுப்புறப் பாட்டிகள் பாடியிருக்கிற, நாட்டுப்புறப் பாடல்களில்தான், நம் வாழ்ந்த அன்றைய இன்றைய சமூதாய வாழ்க்கை முறைகள், பாடலாய் முகம் காட்டி நிற்கின்றன.

---

கடந்த

11.09.2022 ஞாயிற்றுக் கிழமை

மாலை நடைபெற்ற,

ஏடகம்

ஞாயிறு முற்றப் பொழிவில்,

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக, நாட்டுப்புறவியல் துறைப்

பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்

முனைவர் இரா.காமராசு அவர்களின்


நாட்டுப்புற இலக்கியம் காட்டும் சமூகம்

என்னும் தலைப்பிலானப் பொழிவு கேட்டு

அரங்கே அதிர்ந்துதான் போனது.

நாட்டுப்புறப் பாடல்களுக்குச் செவிமடுத்து,

நாட்டுப்புறக் கதைகளுக்குச் செவிகொடுத்து

இனம் புரியா சோகத்தின பிடியில்

அரங்கே கட்டுண்டு போனது.

முனைவர் இரா.காமராசு அவர்கள்

வெள்ளந்தி மனிதர்

என்னும் சொல்லாடலுக்கான விளக்கத்தை, கருத்தாக்கத்தை

முன்வைத்தபோது, அரங்கே வியந்துதான் போனது.

     வெள்ளம் கரைபுரண்டு ஓடும் பொழுதும், கரையை உடைத்து ஊருக்குள் புகுந்து ஓடும் பொழுதும், பெரிய வீடு, சிறிய வீடு, ஏழை வீடு, பணக்காரர் வீடு எனப் பாகுபாடு பார்க்காமல் அனைத்தையும் நிரப்பிச் செல்லும்.

    தீயும் அதுபோல்தான்.

    பணக்காரன், ஏழை என்று பார்க்காது, பற்றிப் பரவும்.

     எனவே, வெள்ளம் போலவும், தீ போலயும் இருக்கிற மனிதர்களுக்கு வெள்ளம்தீ, வெள்ளந்தி மனிதர் என்று பெயர் என்றார்.

     இதுவும் ஒரு நாட்டுப்புறச் சொல்லாடல்தான்.

     வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும், இந்த நாட்டுப்புறக் கூறுகள் இரண்டறக் கலந்து கிடக்கின்றன.

     நம்முடைய இயக்கப் போக்குகளை, வாழ்க்கையை, வரலாற்றை, எப்படி சங்க இலக்கியங்கள் எடுத்து உரைக்கின்றனவோ, அதைப் போலவே, நாட்டுப்புற இலக்கியங்களில் இருந்தும், வரலாற்றை நம்மால் கட்டமைக்க முடியும்.

     பண்பாட்டு வரலாற்றை எழுத முடியும்.

     சமூக வரலாற்றை உருவாக்க முடியும்.

நாட்டுப்புற இலக்கியங்கள் காட்டும் சமூகம்.

     பொழிவு நிறைவுற்றபோது, இம்மனிதர் இன்னும் சற்று நேரம் பேசமாட்டாரா என்னும் உணர்வுதான் முதலில் தோன்றியது.

      பொழிவாளரைப் போற்றுவோம்.

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்


முனைவர் இரா.தமிழடியான் அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற இப்பொழிவிற்கு வந்திருந்தோரை,

தஞ்சாவூர், முல்லை பாரதி அச்சக உரிமையாளர்


திரு வை.இராமமூர்த்தி அவர்கள்

வரவேற்றார்.

இந்திய அஞ்சல் துறை அலுவலர்


திரு சு.சரவணன் அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

அகிய இந்திய வானொலியின், திருச்சி மண்டல செய்திப் பிரிவு

செய்தி வாசிப்பாளர்


திருமதி தி.ஜெய்கீதா அவர்கள்

தன் வானொலிக் குரலில்

நிகழ்வுகளை அழகுறத் தொகுத்து வழங்கினார்.

 

நாட்டுப்புறப் பாடல்களால்

கதைகளால்

ததும்பியப்

பொழிவில் நனைந்த

ஒவ்வொருவருக்குள்ளும்,

உறங்கிக் கொண்டிருந்த

நாட்டுப் புறத்தானை

எழுப்பிவிட்ட,

மேலும் மேலும்

நாட்டுப்புறப் பாடல்களைத்

தேடி ஓட

உசுப்பி விட்ட

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.