03 அக்டோபர் 2022

ரஞ்சன் குடி கோட்டை

 


 ஒரு யானை படுத்திருப்பது போன்ற வடிவம் கொண்ட சிறு மலை.

     நான்காயிரம் மீட்டர் சுற்றளவு.

     80 மீட்டர் உயரம்.

     இம்மலையின் உச்சியில் ஒரு கோட்டை.

    

இது மன்னர்கள், ஆட்சியாளர்கள் வாழ்ந்த கோட்டை அல்ல.

     ஒரு காவல் கோட்டை.

     எல்லைப் புற காவல் கோட்டை.

     ஓங்கி உயர்ந்த மதில் சுவருடன், கருங்கல்லால் கட்டப்பெற்ற கோட்டை.

     மூன்று அடுக்குகளை உடைய கோட்டை.

     உட்கோட்டை.

     கீழ்க் கோட்டை.

     மேல்க் கோட்டை.

     உட்கோட்டை பகுதிதான் தொன்று தொட்டுப் போர்க்களமாக விளங்கியுள்ளது.

     படையெடுப்பாளர்களின் முதல் தாக்குதல் இந்தப் பகுதியில்தான.

     இதனை ஒட்டிய பகுதிகளில்தான் நாணயச்சாலை, கிணறுகள், குதிரை லாயம் இருந்துள்ளது.

     போர் வீரர்கள், படைத் தளபதிகள் பயணிப்பதற்குத் தனி வழி.

     குதிரைகளுக்குத் தனி வழி.

     இதுதான் ரஞ்சன்குடி கோட்டை.

     வால் கொண்ட கோட்டை.

     புலி கொண்ட கோட்டை.

     துருவத்துக் கோட்டை எனப் பல பெயர்களால், இக்கோட்டை அழைக்கப் படுகிறது.

     யானை படுத்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட மலையின் மீது அமைந்திருப்பதால், இக்கோட்டையினை, தூங்கானை என்றும் அழைக்கிறார்கள்.

     ரஞ்சன்குடி கோட்டை.

---

     திருச்சி, சென்னை நெடுஞ்சாலையில், பெரம்பலூரைத் தாண்டி பயணிக்கையில், இடதுபுறம் தெரியும் கம்பீரமான கோட்டைதான், ரஞ்சன்குடி கோட்டை.

     கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில், ரஞ்சன்குடி கோட்டையின் அடிவாரத்தில் நின்றோம்.





நான், என் வாழ்க்கை இணையர் பிரேமா, என் மகள் செல்வி சுவாதி, எங்களின் இரண்டாம் மகள், புது மகள், மருமகள் இளமதி மற்றும் மகிழ்வுந்து ஓட்டுநர், நண்பர் திரு ரெங்கநாதன்.

     கோட்டையின் நுழைவு வாயில் பூட்டியிருந்தது.

     அருகில் விசாரித்தோம்.

     மகிழ்வோடு பதில் அளித்தார்கள்.

     திரு துரைராஜ் என்பவர்தான், இக்கோட்டையின் காவலர் என்று கூறி, அவரது அலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள்.

     அலைபேசியில் அழைத்தேன்.

     ஒலித்துக் கொண்டே இருந்தது.

     மறுமுறை முயற்சிப்பதற்குள், அவரே வந்துவிட்டார்.

     பூட்டைத் திறந்தார்.

     கோட்டைச் சுவர் எங்களை வரவேற்றது.

     கோட்டையைச் சுற்றி அகழி.

     தண்ணீர் இன்றி தரையாய் காட்சியளித்தது.

     மதில் சுவரைக் கடந்தோம்.

     மரங்கள் நிறைந்த பகுதி.

     மெல்ல நடந்தோம்.

     பெரிய அகலமானப் படிக்கட்டுகள்.

     ஏறினோம்.

     சிவலிங்கம்.

    பிள்ளையார்

    அனுமன்

    மூவரும் எங்களை வரவேற்றனர்.

    


மூவரைக் கடந்ததும் உள்ளே பள்ளி வாசல்.

     மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவே இக் கோட்டை காட்சியளித்தது.

     பள்ளி வாசலுக்கு இடது பக்கத்தில் ஒரு இரும்புக் கதவு.

     பூட்டி இருந்தது.

    




      உள்ளே கீழ்நோக்கிச் செல்லும் படிகள்.

     படிகளின் முடிவில் ஒரு சிறைச்சாலை.

     மலையினைக் குடைந்து உருவாக்கிய சிறைச்சாலை.

     பள்ளிவாசலுக்கு நேர் எதிரே, மேல் கோட்டைக்குச் செல்லும் படிகள்.

     ஏறினோம்.

     மேல்கோட்டை.

     மேடை போன்ற அமைப்பு.

     இதன் கீழே கிணறுகள்.

   



 
தண்டனைக் கிணறுகள்.

     விசாரணைக் கைதிகளை விசாரனையின் முடிவில், இக்கிணற்றில் இறக்கி விட்டுவிடுவார்களாம்.

     உணவு கொடுக்கும் பழக்கமே கிடையாதாம்.

     மரணத்தைத் தழுவும் வரை கிணறே சிறை.

     இதுபோல் பல கிணறுகள்.

     மேல்கோட்டையில்., ஒரு பெரும் நீச்சல் குளமும் இருக்கிறது.

  



  
ராணி குளம் என்று பெயர்.

     இது நிச்சயம் நீச்சல் குளமாக இருந்திருக்க முடியாது.

     கோட்டையின் கட்டுமானத்திற்கான நீரைத் தேக்கி வைப்பதற்காகவும், பின்னர் குடிநீர் வசதிக்காகவும் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

     கோட்டையின் மேல் பகுதியில், சிதிலமடைந்த வழித் தடங்கள் காணப்படுகின்றன.

     இங்கெல்லாம் சுரங்கப் பாதை இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

    



கோட்டையின் நாற்புறமும் கண்காணிப்புக் கோபுரங்கள்.

     ஆனால் இந்த கோட்டை குறித்த வேதனையான செய்தி என்ன தெரியுமா?

    இச்சிறப்புமிக்க கோட்டையினைக் கட்டியது யார்? என்ற கேள்விக்கு இன்றளவும், யாருக்கும் விடை தெரியவில்லை.

     சுந்தரசோழனின் சிற்றரசன் வன்னாட்டு தூங்கனை மறவன் என்பான் கட்டியதாக, வாலிகண்ட புரம் கோயில் கல்வெட்டு ஒரு சிறு குறிப்பினைத் தருகிறது.

     பிற்காலத்தில் நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான் சுல்பீர்கான், மராட்டியர்கள், முகலாய, ஆற்காடு நவாப் கூட்டுப் படையினர் என ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில், தங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு இக்கோட்டையினைப் பயன்படுத்தி உள்ளனர்.

     ரஞ்சன்குடி கோட்டை இன்றளவும், ஒருசில சிதைவுகளை மட்டுமே சந்தித்துள்ளது.

     மற்றபடி அதன் உள் கட்டமைப்புக் கட்டுமானம் குலையாமல்தான் இருக்கிறது.

     வரலாற்று சிறப்புமிக்க இந்தக் காவல் கோட்டை, அனைவரும் ஒருமுறையேனும் கண்டு மகிழ வேண்டிய கோட்டையாகும்.

    


வாய்ப்பு கிடைக்கும்பொழுது சென்று பாருங்கள்.


 








38 கருத்துகள்:

  1. பெயரில்லா03 அக்டோபர், 2022

    அரிதான செய்திகளைத் தேடி அழகான தமிழில் தரும் கரந்தையார் இப்போது குடும்பத்தோடு இப்பணியில் இறங்கியது அருமை நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்புக் கிடைக்கும் பொழுது குடும்பத்தோடு செல்கிறேன். நன்றி நண்பரே

      நீக்கு
  2. கிணற்று தண்டனை பீதி அளிக்கிறது.  காணொளியில் நாங்களும் கோட்டையைக் கண்டோம்.  ஏதோ இந்த மட்டில் குடிகாரர்களின் கூடாரமாக, சீட்டாடுபவர்களின் மற்றும் தூங்குமூஞ்சி சோம்பேறிகளின் சொர்க்கமாக இல்லாமல் காப்பாற்றி வைத்திருக்கிறார்களே..  பாராட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். காரணம், மாலை வேலைகளில் பூட்டிவிடுவதாலும், காவலுக்கு காவல்காரர் இருப்பதாலும், அவரும் அவரது பணியினைச் செம்மையாகச் செய்வதாலும், இக்கோட்டை சுத்தமாய் பேணிபாதுகாக்கப்படுகிறது. நன்றி நண்பரே

      நீக்கு
  3. இந்த இடத்திற்கு சென்று வர வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைசெல்லும் பொழுது அவசியம் சென்று பாருங்கள் ஐயா. நன்றி

      நீக்கு
  4. மிக அருமையான பணியில் இறங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. செறிவான தகவல்கள் நன்றி. 2012 ஆம் ஆண்டு நான் சென்ற போது எடுத்த படங்களை இங்கு காணலாம். https://commons.wikimedia.org/wiki/Category:Ranjankudi_Fort புதிய வாயில் கதவுகள் இப்பொழுது பொருத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. --தகவலுழவன்

    பதிலளிநீக்கு
  6. அருமையான விளக்கம் ஏற்கனவே இப்பதிவு யூட்டிப்பில் தாங்கள் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  7. ராஜராஜேஸ்வரன்04 அக்டோபர், 2022

    இதுவரை அறிந்திடாத கோட்டை. அருமையான விளக்கம்;நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் விபரமான பதிவுகளை படித்தபோது- இலங்கையிலும் இப்படியான சில இடங்களுக்கு சென்ற நினைவு வந்தது. ஆனால் மரண தண்டனை யோடு தொடர்பான கிணறுகள் சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது. நன்றி !
    உடுவை.எஸ்.தில்லைநடராசா
    கொழும்பு-இலங்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வினைத் தருகிறது. நன்றி ஐயா

      நீக்கு
  9. ரஞ்சன்குடிகோட்டை பற்றிய தகவல்களை இனிதே அறிந்துகொண்டோம்!

    பதிலளிநீக்கு
  10. ரஞ்சன்குடி கோட்டையும் வரலாறும் அருமை.
    பார்க்கும் ஆவலை தருகிறது பதிவு.

    பதிலளிநீக்கு
  11. அரிதான காட்சிகளில் தெரியாத தகவல்கள் அருமை கரந்தை மைந்தரே வாழ்க நலம் !

    பதிலளிநீக்கு
  12. மகிழ்ச்சி. நான் வெகு நாள்களாக பார்க்க ஆசைப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அங்கு சென்று வர வேண்டும் என எனக்கும் ஆவல் பிறக்கிறது நண்பரே. அப்புறம் இதை யார் கட்டியது யார் என தெரியவில்லை என்பது ஆச்சர்யம் thaan நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. அடுத்தமுறை தஞ்சை வரும்பொழுது அவசியம் பாருங்கள்

      நீக்கு
  14. அறியாத செய்திகளை அறிந்து கொள்ளும் பொழுது அந்த இடத்தை காண வேண்டும் என்று ஆவல் அதிகரிக்கிறது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நண்பரே.

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. தங்களை இணையவழி சந்தித்து நெடுநாட்கள் ஆகிவிட்டன.
      நலம்தானே.

      நீக்கு
  16. பெயரில்லா08 அக்டோபர், 2022

    ஆச்சர்யமான தகவல். நன்றி

    பதிலளிநீக்கு
  17. அருமையான தகவல்கள் இடம், அதன் வரலாறு. யார் கட்டியது என்பது பற்றி தெரியவில்லை என்பது ஆச்சரியம்தான் இல்லையா?

    யுயூட்பிலும் பார்த்தோம். கோட்டையைக் காண வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அறியாத தகவல்களை அறிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  19. அறிந்திடாத கோட்டை. அருமையான விளக்கம்;நன்றி

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு