12 அக்டோபர் 2022

காட்டுயானம்

     ஆண்களுக்குத் தனி.

     பெண்களுக்குத் தனி.

     குழந்தைகளுக்குத் தனி.

     பூப்படைந்த மற்றும் கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களுக்குத் தனி.

     தனி, தனி.

     தனி, தனி என்றால், எது தனி?

      உணவு.

     அரிசி வகைகள், தனித் தனியாய் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.

     நம் முன்னோர், இப்படித்தான் உணவினை உண்டிருக்கிறார்கள்.

     உண்ண வைத்திருக்கிறார்கள்.

     ஆரோக்கியமாய் வாழ்ந்திருக்கிறார்கள்.

     மருத்துவரை நாடி ஓடியதில்லை.

     காரணம்,

     உணவே மருந்து.

     மருந்தே உணவு.

     நாம் இன்று, தீட்டப்பட்ட, பார்ப்பதற்கு வெண்மையாய் இருக்கும் அரிசியைத்தான் சமைத்துச் சாப்பிடுகிறோம்.

     தீட்டப்பட்ட அரிசியில் வெறும், கார்போஹைட்ரேட் மட்டுமே மீதம் இருக்கும்.

     இந்த அரிசி சாதத்தை, அளவின்றி உண்ணலாம்.

     தொப்பை விழும்.

     சர்க்கரைக் குறைபாடு, எளிதில் நம்மைப் பற்றிக் கொள்ளும்.

     மருத்துவர்களும், மருத்துவமனைகளும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் செழுமையுறும்.

     தீட்டப்படாத அரிசியை உணவாக்கி உண்டால், நாம் நலம் பெறுவோம், வளம் பெறுவோம்.

     காரணம், தீட்டப்படாத அரிசியில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஒரைசால் எனப்படும் ஓமேகா பேட்டிஆசிஸ்.

     இதன் வேலையே, நீரிழிவு நோய் வராமலும், இருதய நோய் தாக்காமலும், நம்மைக் காப்பதுதான்.

சிவப்புக் குடவாழை

வெள்ளையான்

பனங்காட்டுக் குடவாழை

ஒசுவக்குத்தாலை

குருவிகார்

கல்லுருண்டை

சிவப்புக் கவுனி

கருடன் சம்பா

வரப்புக் குடைஞ்சான்

குழியடிச்சம்பா

நவரா

காட்டுயானம்,

சிறுமணி

கரிமுண்டு

ஒட்டடையான்

சூரக்குறுவை

வாடன் சம்பா,

முடுவு முழுங்கி,

களர் சம்பா,

குள்ளக்கார்,

நவரை,

குழிவெடிச்சான்,

அன்னமழகி,

இலுப்பைப்பூ சம்பா,

மாப்பிள்ளைச் சம்பா,

கருங்குறுவை,

கல்லுண்டை,

சீரக சம்பா,

வாசனை சீரக சம்பா,

விஷ்ணுபோகம்,

கைவரை சம்பா,

அறுபதாம் குறுவை,

பூங்கார்,

காட்டு யானம்,

தேங்காய்ப்பூ சம்பா,

கிச்சடி சம்பா,

நெய் கிச்சி,

பூங்கார்,

கருத்தகார்,

சீதாபோகம்,

மணக்கத்தை

     இவையெல்லாம், நம் பாரம்பரிய நெல் ரகங்களுள் ஒரு சிலவாகும்.

     நமது பாரம்பரிய அரிசி வகைகள் சிலவற்றின் சிறப்புகளைப் பார்ப்போம் வாருங்கள்.

     முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

     RICE  என்ற பெயரே, நம் அரிசி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து, தோற்றம் பெற்றதுதான்.

     அரிசியில் -வை நீக்கிவிட்டு, ரிசி என்பதையே ரைஸ் ஆக மாற்றியுள்ளனர்.

     குழந்தை பிறந்தது முதல் வயோதிகம் வரை, ஒவ்வொரு சூழலுக்கும், ஒவ்வொரு நெல் ரகத்தைப் பயிரிட்டுப் பயன்படுத்திய பெருமைக்கு உரியது நம் இனம், தமிழினம்.


     வாடன் சம்பா.

     இது ஒரு நெல் ரகம்.

     வறட்சியைத் தாங்கி வாழக்கூடிய, வளரக் கூடிய நெல் வகை.

     அளவில் மிகவும் சிறியது.

     இதனை வளர்க்கப் பூச்சிக் கொல்லியோ, ரசாயண உரங்களோ தேவையில்லை.

     ஏனெனில், இது இயற்கையாகவே, பூச்சிகளுக்கு எதிராகப் போரிடும் குணம் வாய்ந்தது.

     இந்த அரிசி எளிதில், செரிமானமாகக் கூடியது.

     எனவே, நம் முன்னோர், ஆறுமாதம் ஆன குழந்தைகளுக்கு, முதல் சோறாக, வாடன் சம்பா சோற்றைத்தான் கொடுத்தனர்.


       மாப்பிள்ளை சம்பா.

     ஆண்களுக்கானத் தனி அரிசியாகும்.

     ஆறடி உயரம் வரை வளரக்கூடிய தன்மை உடையது.

     புதிதாக திருமணம் ஆன, மாப்பிள்ளைகளுக்கு வீட்டில், மாப்பிள்ளை சம்பாவைத்தான் சமைத்துப் பரிமாறுவார்கள்.

     ஆண்களின் விந்து அணுவை அதிகரிக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தது, இந்த மாப்பிள்ளை சம்பா.


     
பூங்கார்.

     இதுவும் நம் பாரம்பரிய அரிசி.

     பெண்களுக்கான அரிசி.

     பூப்படைந்தப் பெண்களுக்குக் கொடுத்தால், கர்ப்பப் பை வலுவடையும்.

     கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்தால், சுகப் பிரசவம் உறுதி.

     இதுமட்டுமல்ல, இந்தப் பூங்கார் அரிசியானது, கருப் பையில், நீர்க் கட்டிகள் வராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.

     குழந்தையின்மை பிரச்சினையை அறவே தடுப்பது.

     இதுமட்டுமல்ல பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப் பை புற்றுநோயை உருவாக்கும் செல்களைத் தாக்கி அழிக்கும் வல்லமையும் வாய்ந்தது.
      பிசினி அரிசி.

     பால்குட வாழை.

     இந்த அரிசிகள் தாய்மார்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தவை.


     தங்க சம்பா.

     சொர்ண மயூரி.

     ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொதுவானது.

     வாழ்நாளை நீட்டிக்கும்.


     காட்டுயானம்.

     இதுவும் ஒரு வகை அரிசிதான்.

     பக்கவாட்டுத் தோற்றத்தில், யானையின் வயிறு எப்படி இருக்குமோ, அதே உருவில் இருப்பதால் இப்பெயரினைப் பெற்ற அரிசியாகும்.

     இதுமட்டுமல்ல, வயலில் காட்டு யானைகள் இறங்கினால், அவற்றையே மறைக்கும் வகையில், உயரமாய் வளரக்கூடியது.

     வரப்புப் படிஞ்சான்.

     வயல் வரப்புகளில் தானே வளரக் கூடிய அரிசி.

     தூய மணி.

     மனிதனின் நாடி நரம்புகளை வலுவாக்கும் தன்மை வாய்ந்தது.

     குழி அடிச்சான்.

     குழி வெடிச்சான்.

     தண்ணீரே இல்லாவிட்டாலும் வளரும்.

     இதன் வேர்கள் பூமிக்குள், தண்ணீர் இருக்கும் இடம் வரை சென்று, தண்ணீர் பெற்று வளரும்.

     எளிதில் மறப்பது, புதியவற்றைக் கற்பதில் சிக்கல் எனத் தொடங்கும் அல்மைசர் நோயினையும், இதனைத் தொடர்ந்துவரும் பார்க்கின்சன் நோயினையும் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.


     கருடன் சம்பா.

     கருடன் கழுத்தில் இருக்கும் வெள்ளை நிறம் போன்ற வடிவத்தில் இருக்கும்.

     மரபு ரீதியாக வரக்கூடிய அரிவாள் செல் உயிரணுச் சோகையினைத் தடுக்கும் பெரு ஆற்றல் பெற்றது இந்த கருடன் சம்பா.

     பொதுவாகவே, நம் பாரம்பரிய அரிசிகள் வண்ணமயமானவை.

     நம் அரிசி வகைகளில், நிறைந்திருக்கும் வண்ணங்களை உருவாக்கும், நிறமிகள், புற்று நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

     இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் ரசாயணக் கலவையானது, உடல் செல்களை இறவாமல் பாதுகாக்கும் தன்மை உடையதால், புற்றுநோய் நம் பாரம்பரிய அரிசி வகைகளைக் கண்டாலே அஞ்சும்.


     கருப்பு கவுனி.

     சிகப்பு கவுனி .

     இந்த அரிசி வகைகளை கொஞ்சம் சாப்பிட்டாலே போதும், வயிறு நிரம்பும்.

     நம் உடலுக்குத் தேவையான, உடனடி சக்தி கிடைக்கும்.

     இன்சுலின் என்றால் என்னவென்று நாம் அனைவரும் அறிவோம்.

     இன்சுலினின் வேலையே, சர்க்கரையை நம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான்.

     இதன் மூலம் நம் உடல் சுறுசுறுப்பாய் இருக்க உதவுவது.

     இன்சுலின் குறையக் குறைய, நம் உடல் சோர்வடையும்.

     அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.

     இந்தச் சிறுநீர், நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளை, இரத்தத்தில் கலக்காமல், வெறியேற்றிவிடும்.

     இதைத் தடுப்பதற்கான, சர்க்கரையினை உடல் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான, என்சைம் கருப்பு மற்றும் சிகப்பு கவுனியில் உள்ளது.

     நம் பாரம்பரிய உணவு வகைகள், வயிற்றுக்கு மட்டும் உணவல்ல.

     உடலுக்கும் மருந்தாய் இருந்தவை.

     இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தியவை.

     சர்க்கரை நோயை விரட்டியவை.

     செரிமானம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் கேடயமாய் விளங்கியவை.

     நாம்தான், நமக்கு பாதுகாப்பு அரண்களாய் விளங்கிய அரிசி வகைகளைப் புறக்கணித்தோம்.

     பட்டை தீட்டப் பட்ட பள, பள அரிசியில் மயங்கினோம்.

     மருத்துவமனைகளை நோக்கி அலையாய் அலைந்து கொண்டிருக்கிறோம்.

---

ஏடகம்.

ஞாயிறு முற்றம்.

கடந்த 9.10.2022 ஞாயிற்றுக் கிழமை மாலை.

ஏடகப் பொழிவில்.

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

உயிர் தொழில் நுட்பவியல் துறைப்


பேராசிரியர் முனைவர் சே.வா.பாக்கியலெட்சுமி அவர்களின்

தமிழர் கண்ட நெல்

எனும் தலைப்பிலானப் பொழிவு

அரங்கில் குழுமியருந்த அனைவர் உள்ளத்திலும்,

நம் பாரம்பரிய நெல் ரகங்களின்

அருமையை, பெருமையைத்

தனித் தன்மையை

நன்றாகத் தண்ணீர் விட்டு விதைத்தது.

இனி முளைக்கும், வளரும், நம் பாரம்பரிய

நெல் ரகங்களைத் தேடி ஓடவைக்கும் என்பது உறுதி.

     பொறியியல் பட்டம் பெற்றபின், வேலைத் தேடி அலையாமல், விண்ணப்பம் எழுதி நேரத்தை வீணடிக்காமல், தன் வயலில் இறங்கியவர்.

தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும்

கிரியேட்

அமைப்பின்

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராய்

தன் சொல்லையும், செயலையும், பொழுதையும்

நெல், நெல், நெல்

என

நெல்லுக்காகவே செலவிட்டுவரும்


குருவாடிப்பட்டி நெல். தமிழ்செல்வன் அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற, இப்பொழிவிற்கு வந்திருந்தோரை

ஏடகப் பொறுப்பாளர் மற்றும் புரவலர்


திரு பி.கணேசன் அவர்கள்

வரவேற்றார்.

ஏடகப் புரவலர்


திரு ரி.இராமகிருட்டினன் அவர்கள்

நன்றியுரையாற்ற

விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்


செல்வி யாழினி தவச்செல்வன் அவர்கள்

விழா நிகழ்வுகளை சிறப்புறத் தொகுத்து வழங்கினார்.

 

ஐந்து ஆண்டுகள்

அறுபது பொழிவுகள்

ஓலைச் சுவடிகளில்

உறங்கும் தமிழை

மீட்டெடுக்க – ஓயாத

ஓலைச் சுவடி வகுப்புகள் என

தன் அயரா உழைப்பால்

தளரா முயற்சியால்

ஏடகத்தை

ஆறாம் ஆண்டிற்கு

அழைத்துச் சென்றிருக்கும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

--------------------------

நமது பாரம்பரிய நெல் ரகங்கள் 

பற்றிய கூடுதல் தகவல்களை அறிய விரும்பினாலும்,

பாரம்பரிய அரிசி வாங்கி

ஆரோக்கியமாய் வாழ விரும்பினாலும்.

தயங்காமல் அழையுங்கள்

குருவாடிப்பட்டி நெல்.அன்புசெல்வன் அவர்களை

90 42 50 44 53

 

32 கருத்துகள்:

 1. எத்தனை எத்தனை வகைகள்...! அதனின் பயன்கள்...! வியக்க வைக்கும் தகவல்கள்...

  பதிலளிநீக்கு
 2. அருமையான பயன்மிக்க நிகழ்ச்சி

  பதிலளிநீக்கு
 3. வியப்பான தகவல்கள் நண்பரே... நான் தற்போது மட்டை அரிசிதான் வாங்குகிறேன். முரட்டு சிகப்பு அரிசி.

  பதிலளிநீக்கு
 4. நிகழ்ச்சியை தவறவிட்டாலும் தங்களின் தொகுப்பு பயனுள்ளதாக இருந்தது. நன்றி

  பதிலளிநீக்கு
 5. பயனுள்ளது. பகிர்வுக்கு நன்றி நண்பரே !

  பதிலளிநீக்கு
 6. உண்மை தான் நண்பரே. பட்டை தீட்டப் பட்ட அரிசி மீது மோகம் கொண்டு பலவற்றை இழந்து நிற்கிறோம். பயனுள்ள தகவல். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. நம் பாரம்பரியத்தை அறிந்து நாம் பெருமைப்படுவதோடு, காப்பாற்ற வேண்டிய கடமையும் உள்ளது. மிக அரிதான தலைப்பில் அமைந்த பொழிவு. பொழிவாளருக்கு வாழ்த்துகள். சிறப்பாகப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 9. நம் பாரம்பரிய அரிசி வகைகளின் பெருமையையும் நம் உடலுக்கு அவை தரும் நன்மைகளையும் அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 10. பாரம்பரிய அரிசிகளின் வகைகள் (அறிந்திருந்தாலும்..) அவற்றின் பயன்கள் என்று அனைத்தும் இங்கு கொடுத்திருக்கிறீர்கள். நம் வீட்டில் ஜீரகசம்பா சிவப்பு கேரளா மட்டை அரிசிதான் பெரும்பாலும். சிவப்பரிசியும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி. நான் இனிதான் பாரம்பரிய அரிசிக்கு மாற உள்ளேன்

   நீக்கு
 11. மிக விரிவான சத்து அரிசிப் பட்டியலுக்கு மிக நன்றி அன்பின் ஜயக்குமார்.
  மகள் வீட்டில் சிகப்பு அரிசிதான்.

  என சர்க்கரை நோய்க்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
  குழந்தைகளுக்கும் முதலிலிருந்தே பழக்கி விட்டால் வாழ்க்கை வளப்படு,'

  அருமையான தகவல்களுக்கு மிக நன்றி/

  பதிலளிநீக்கு
 12. அருமையான பதிவு. எத்தனை வகை அரிசி வகைகள்!
  அதன் பயன்பாடு விளக்கம் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. சிறப்பான தகவல்கள் , நன்றி

  பதிலளிநீக்கு
 14. படிக்கும் போதே வியக்க வைக்கிறது இத்தனை வகைகளா என. மிகவும் விரிவான பகிர்வு அவசியமும் கூட.

  பதிலளிநீக்கு
 15. எனது சிறு வயதில் எனது கிராமத்தவர்கள் கிராமத்தில் கிடைத்த பொருட்களை வைத்து உணவு செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். சிலர் மூன்று வேளையும் சோறு சாப்பிட்டார்கள்.வேறு சிலர் ஒரு நேரச் சோறு- மற்றும் படி இடியப்பம்-தோசை-அப்பம் பிட்டு உள்ளூர் மரக்கறி-பிரதான உணவாகவும்-சில வேளைகளில் உள்ளூர் மீன்- ஆட்டிறைச்சி-கோழியிறைச்சி கறியாகவும் அமைந்தது. நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி சுகமாக சந்தோஷமாக வாழ்ந்தார்கள். இன்று இறக்குமதி செய்யப்பட்டதும் தகரத்தில் அடைக்கப்பட்டதுமான உணவு பொருட்கள் அவர்களை நோயாளியாக்கி விடுகிறது. பழைய வாழ்க்கை வாழப் பழகினால் ஆரோக்கியமாக ஆனந்தமாக வாழலாம்.

  உடுவை.எஸ்.தில்லைநடராசா
  கொழும்பு-இலங்கை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது ஒவ்வொரு சொல்லும், அக்கால வாழ்வியல் யதார்த்தத்தைச் சொல்லுகிறது ஐயா.
   நீண்ட் கருத்துரைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 16. மிகவும் சிறப்பான நிகழ்வு. அதனை தாங்கள் பகிர்ந்துள்ள விதம் பாராட்டுக்குரியது. பாரம்பரிய அரிசி இரகங்களை தற்காலத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் தூண்டுதலில் நெல் ஜெயராமன் தன்னுடைய இறுதி காலம் வரை மீட்டெடுத்து வந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அந்த நற்செயலை பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர்ந்து செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு