23 அக்டோபர் 2022

தொவரக் காடு

     ஏண்டி … அசதிக்கு ஒதுங்குனத எல்லாம் நா … கட்டித் தொலைக்கனும்னா எத்தனயதான்டி கட்றது. ஒங்க ஊருல ஒங்களையெல்லாம் தொட்டாலே தீட்டுங்குறானுக.

     போனாப் போகுதுன்னு, எறக்கப்பட்டு தொட்டா, புள்ளய சொமந்துக்கிட்டு புருசன் கேக்குறீங்களோ …

     சொல்லிக்கொண்டே, தாவணியால் கழுத்தை இறுக்கினான்.

    

எரிந்து விழும் நட்சத்திரமாய் மீளமுடியாமல் உதைத்து உதைத்து எந்திரிக்கப் பார்த்தாள்.

     தரையில் பள்ளம்தான் விழுந்தது.

     அவனிடமிருந்து அவளால் விசும்ப முடியவில்லை.

     படிக்கப் படிக்க, நமக்கே மூச்சுத் திணறித்தான் போகிறது.

     கல்வித் துறையில் வெகுவேகமாய் முன்னேறி, அறிவியல் கண்டுபிடிப்புகள், நம் வாழ்க்கை முறையினையே தலைகீழாய் புரட்டிப் போட்ட போதும், சாதீயக் கொடுமைகள் மட்டும் மாறாது, ஆணவத்துடன் தலைநிமிர்ந்து, அன்று போல், இன்றும் நிற்பது வேதனையினைத்தான் தருகிறது.

     ஒங்களுக்கு இதுதான் பெரச்சனையோ.

     ஓம்புட்டு சாதிதான் ஒசந்ததுன்னா, நாலு மரத்த ஒன்னோட வூட்டுக்குள்ள நட்டு வச்சு, நீ மட்டும் காத்து வாங்கிக்க பார்ப்போம்.

     அப்படி செஞ்சியானா, ஓம்புட்டு சாதிதான் ஒசந்ததுனு ஒத்துக்கிறேன்.

     அதுமட்டும் முடியாதுல்ல.

     அப்புறம் எதுக்குலருந்துய்யா இந்த மானங்கெட்ட சாதிய நொழச்சி, ஒங்க வீராப்ப காட்றீங்களோ.

     சாதியப் பாகுபாடு, சின்னஞ் சிறுவர்களிடமும், தன் கோர முகத்தைக் காட்டுவதை நினைக்கும் பொழுது, நெஞ்சம் பதைபதைத்துத்தான் போகிறது.

     இந்த நொண்டி பெருமாள் பத்தி, வந்து போன பயலுக்கு என்ன தெரியும்?.

     ரெண்டா நடுக நெலம் வச்சுருக்கது அந்த ஆளுக்கு பொறுக்கல.

     ஏங்கிட்ட வித்துடு, வித்துடுனு வம்படியா இருக்கான்.

     மண்ட மண்ணுக்குள்ளே போனாலும், அந்த நெலத்த அவங்கிட்ட கொடுப்பனா.

     இன்னிக்கு தல நிமிர்ந்து நா... பாக்க முடியுதுன்னா, அந்த நெலத்துனாலத்தான்.

     ரெண்டா நடுவக்கி தண்ணி கேட்டா, ஓசி கரண்ட் வச்சுக்கிட்டு ஓராயிரம் சட்டம் பேசுறான்.

     சிறு, குறு விவசாயிகளின் இன்றைய வாழ்வியல் யதார்த்தம் வேதனையினைக் கொடுத்தாலும், மண்ணை உயிராய் போற்றும் அவர்களது குணத்தைப் படிக்கப் படிக்க மனம் மகிழ்ந்துதான் போகிறது.

     கண்களை சொருகி, சொருகி விழித்தாள்.

     காலையிலேயே ஏதும் சாப்ட்டுருக்க மாட்டா. கூழுக்கட்டிய கரைச்சுக் கொண்டாங்க.

     மண் சட்டியில் கூழைக் கரைத்துக் கொண்டு வந்தாள் சின்ன மருமகள்.

     மகன்கள் இருவரும், தலையில் கை வைத்தவாறு, சுவரில் சாய்ந்து புலம்பிக் கொண்டே இருந்தனர்.

     அட… ஒங்… கம்மாளுக்கு ஒன்னும் இல்லடா.. சின்னப் புள்ள மாறி ஏன்டா அழுகுறீங்க.

     வந்தவர்கள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

     ம்… ஏம்… பொம்பள பொழக்க மாட்டா.

     ஏங்… கதையும் முடியப் போவுது.

     திண்ணையில் புலம்பிக் கொண்டிருந்த தாளமுத்துக்கு, கரட்டு, கரட்டு என மேல் மூச்சு வாங்கியது.

     காலும், கையும் நீட்டியபடி, திண்மையிலிருந்து தொப்பென விழுந்தார்.

     கண்கள் மேலே பார்த்தவாறு, நிலைகுத்தி நின்றன.

     பெரியப் பெரிய படிப்பெல்லாம் படித்து, பலப் பல பட்டங்கள் பட்டங்கள் பெற்று, கை நிறைய, பை நிறைய சம்பாதிப்பவர்கள், பலர், நீதி மன்ற வளாகங்களில், விவாகரத்திற்காக அலையும், இக்காலத்தில், பாசத்தோடும், நேசத்தோடும், மண் வாசனையோடும் வாழும் குடும்பத்தைப் பார்க்கும் போதும், படிக்கும்போதும், மனம் நெகிழ்ந்துதான் போகிறது.

     மாட்டுக்கு புல்லு கொடுக்க யோசிக்கிறவன் கிட்டயும், நாலு சொல்லு, நல்ல சொல்லா பேசத் தெரியாதவன் கிட்டயும், சகவாசமே வச்சுக்கக் கூடாது.

     போகிற போக்கில், எளிமையான வார்த்தைகளில், வலிமையான கருத்துக்களை உதிர்த்துச் செல்லும், கிராமத்து மனிதர்களைப் படிக்கப் படிக்க மனம் வியந்துதான் போகிறது.

     சன் டீவில பார்த்தேன், தூர்தர்சன் டீவில பார்த்தேன் என்று சொல்லும்போது, செல்வி, உங்க வீட்டுல இத்தனை டீவி வச்சிருக்கீங்களா எனக் கேட்கத் தோன்றும் அவனுக்கு.

     வாழ்வில் வறுமையினை மட்டுமே பார்த்த சிறுவனின், வெள்ளந்திப் பேச்சு, வேதனையினைத்தான் தருகிறது.

     ஒவ்வொரு பக்கத்திலும் உண்மையும், வறுமையும், கிராமிய மண் வாசத்தோடு போட்டிப் போடுகின்றன.

     எப்படி, இப்படி, இவரால் எழுத முடிந்தது? என்பதை யோசித்தபோதுதான் புரிந்தது.

     இவரும், இதுபோன்ற கிராமத்து மண்ணில் பிறந்து, தவழ்ந்து, எழுந்து வறுமையை நேருக்கு நேர் சந்தித்துப் போராடி வென்றவர் என்பது தெரிந்தது.

     இவர், தொடக்கப் பள்ளி வாழ்வின்போது, இவரது நண்பன் ஒருவன், இவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.

     இவரும், அன்றைய இரவுப் பொழுதை, நண்பனின் வீட்டிலேயே கழித்திருக்கிறார்.

     மறுநாள் காலை எழுந்து, கண்மாயில் குளித்து, நண்பனின் வீட்டிற்குத் திரும்பியபோது, நண்பனின் தாயார், ஒரு பையினைக் நீட்டியிருக்கிறார்.

     புடிப்பா.

     உள்ளே போய் போட்டுக்கிட்டு வா.

     பையில் புத்தம் புதிய பேண்ட், சட்டை.

     இவருக்காகவே அளவெடுத்துத் தைத்தது போன்ற பேண்ட், சட்டை.

     அந்நாள்தான், இவர், தன் வாழ்வில், பள்ளிச் சீருடை தவிர்த்து, வேறு ஆடை அணிந்த, முதல் நாள்.

     படிக்கும்போதே மனம் கனத்துப் போய்விட்டது.

     அந்த நண்பனுக்குத்தான், இவர், இந்த நூலைப் படைத்திருக்கிறார்.

     புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வீராச்சிலை திரு வயிரவன், சாந்தி இணையரின் அன்பு மகன், இவரது ஆரூயிர் நண்பன் கருப்பையா.

     இந்த கருப்பையா, இன்று இல்லை.

     காரணம், கொரோனா.

தொவரக் காடு.

மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகள்.

ஒவ்வொன்றும் வெவ்வேறு களம்.

வெவ்வேறு சூழல்.

ஒவ்வொன்றும் ஆழமானவை.

ஒவ்வொரு கதையிலும் பொதுவாய் இருப்பது,

வாசனை,

கிராமத்து மண் வாசனை.

தொவரக் காடு.

சற்றுப் பொறுமையாய், நிதானமாய் படித்தால்,

உயிர்ப்பை அனுபவிக் முடியும்,

மண் வாசனையினை உணர முடியும்.

தொவரக் காடுநண்பர் சோலச்சி அவர்களின்

அற்புதப் படைப்பு.

அனுபவப் படைப்பு.

படித்துப் பாருங்கள்,

அனுபவித்துப் பாருங்கள்.

 

தொவரக் காடு

அகநி வெளியீடு

3, பாடசாலை வீதி,

அம்மையப் பட்டு,

வந்தவாசி – 604 637.

98426 37637

 

நண்பர் சோலச்சி

97882 10863

    

 

 

 

24 கருத்துகள்:

 1. அருமையான நூல் மதிப்புரை ஐயா... நண்பர் சோலச்சி அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா23 அக்டோபர், 2022

  வாசிக்கும் ஆவலைத் தூண்டும் மதிப்புரை ஐயா... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. நெஞ்சம் நிறைந்த நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே. தங்களின் படைப்பு அற்புதமானப் படைப்பு. வாழ்த்துகள்

   நீக்கு
 4. நெகிழ வைக்கும் பதிவு. நன்றி.
  புத்தக ஆசிரியருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. அருமை அருமை தங்கள் பதிவு படிக்கையில் தொவரக்காட்டைப் படித்ததுபோல் இருக்கிறது நூலாசிரியருக்கும் தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.
  நண்பர் திரு.சோலச்சி அவர்களுக்கு வாழ்த்துகள்.
  - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 7. நல்லதொரு பகிர்வு, அறிமுகம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. அருமையான விமர்சனம்.
  திரு . சோலச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. இப்போது இலங்கையிலும் அநேகமான கதைகள் அந்தந்த பிரதேச பேச்சுவழக்கு மொழிகளில் வௌியாகின்றன. உங்கள் பகிர்வும் மகிழ்ச்சியை தந்தது.

  உடுவை.எஸ்.தில்லைநடராசா
  கொழும்பு-இலங்கை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரை மகிழ்வினை அளிக்கிறது . நன்றி ஐயா

   நீக்கு
 10. இறுதி வரியில் மனம் நெகிழச் செய்து விட்டீர்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூலினைப் படித்து நானும் நெகிழ்ந்துதான் போய்விட்டேன் நண்பரே

   நீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு