06 அக்டோபர் 2023

அரந்தரங்க சுத்தி

 


சாவது எளிது, அரிது சான்றாண்மை நல்லது

மேவல் எளிது, அரிது மெய்போற்றல் – ஆவதன்கண்

சேறல் எளிது, நிலை அரிது தெள்ளியராய்

வேறல் எளிது, அரிது சொல்.

உயிர் விடுதல் எளிது.

     கல்வியில் சிறத்தல் அரிது.

     மேவல், இல்லற வாழ்வு எளிது.

     இல்லறத்தைச் சரியாய் வாழ்தல் அரிது.

     சேறல், துறவு எளிது.

     துறவில் இறுதிவரை நிலைத்தல் அரிது.

     வேறல், சொல்லுதல் எளிது.

     சொன்னதைச் செய்தல் அரிது.

     எளிது, அரிது எனும் இரு சொற்கள் இணைந்தே நிற்கின்றன.

     இரண்டும் ஒன்றுதான்.

     மிகத் துல்லியமான நிலையில் பொருள் வேறுபடும்.

     எளிது அரிதாகும்.

     அரிது எளிதாகும்.

     இதுதான் ஏலாதிப் பாடலின் நுட்பம்.

ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல்

     அண்டாது மற்ற வியாதியெல்லாம்

பேயும் மறந்திடும் பில்லி வினாடியில்

     பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     நீரிழிவு நோய் பற்றி அன்றே கொங்கணச் சித்தர் பாடியிருக்கிறார்.

வடு அஞ்சி வாய் மொழிந்து

தமவும் பிறவும் ஒப்பநாடி

கொள்வதூஉம் மிகை கொளாது

கொடுப்பதூஉம் குறைகெடாஅது.

     பிறர் ஏதேனும் குறைகூறிவிடுவார்களோ என அஞ்சி, பொருட்களை வாங்கும் பொழுது, அதிகம் எடுக்காமலும், விற்கும் பொழுது அளவு குறையாமலும், ஏமாற்றாமல் வணிகம் செய்தனர் தமிழர்கள் எனப் பெருமையுடன் முழங்குகிறது பட்டினப்பாலை.

     கொள்வதூஉம் மிகை கொளாது

     கொடுப்பதூஉம் குறை கெடாஅது.

     அன்றைய நிலையினை எண்ணினால், இன்றைய நிலை, நினைவில் வந்து பெருமூச்சுவிட வைக்கிறது.

திருடாதே, கொலை செய்யாதே, பொய் சொல்லாதே

சினவாதே, பிறரைக் கண்டு கடுகடுக்காதே

தன்னைப் புகழாதே பிறரைக் கண்டு புழுங்காதே

இதே அந்தரங்க சுத்தி, இதே பகிரங்க சுத்தி

இவையே எங்கள் கூடல் சங்கமனை வசமாக்கும்

வழியாம்…

     மனித வாழ்வில் எழும் சிக்கல்களுக்கு எல்லாம் காரணமானவற்றை உரைக்கும் இராமலிங்க அடிகளாரின் இப்பாடலுக்குப் பொருள் கூற வேண்டிய தேவையே இல்லை.

     அத்தனை எளிமை.

     அத்துணையும் வலிமை.

அறிவினர்க் கடையாளம் அவர்நாவில்

நீதியது மிகநடனம் பண்ணும்.

     அறிவாளி யார்? என்பதைச் சொல்ல வந்த நீதிசாரத் திரட்டு இப்படித்தான் தொடங்குகிறது. அறிவாளியைத் தொடர்ந்து பகட்டினர் யார்? எப்தையும் ஒரு பெரிய பட்டியலாய் உரைக்கிறது.

பகட்டினர் எல்லாந்தான் படித்தவரைப் போலப்

பகர்வர்உண் மைநில பகரார்.

பகட்டினர் இருளுக்குப் பிச்சுண்டு

முயலுக்கு கொம்பும்உண் டென்பார்

பகட்டினர் ஆகாயப் பூஉண்டு

மலடிக்கோர் பிள்ளையுமுண் டென்பார்.

பகட்டினர் பகருகின்ற பொய்யினுக்கோர்

அளவில்லை.

     நீதிசார அனுபவத்திரட்டு என்னும் பெயரே, நம் முன்னோரின் அனுபவ வரிகளை நன்கு உணர்த்துகின்றன அல்லவா.

     சங்க இலக்கியங்கள் வீரத்தையும், காதலையும், தன் இரு கண்களாய் போற்றிப் புகழ்வன என்பதை நாம் அறிவோம்.

     வீரம் என்றால் போர்தானே?

     போர் என்றால் யானை இல்லாமலா?

     சங்க இலக்கியங்களில் போர் மற்றும் கொடை என இரு சூழல்களிலும் யானைகள் அதிகம் வலம் வருகின்றன.

     யானையினைக் குறிக்க, நம் புலவர்கள் பயன்படுத்தி இருக்கும், சொற்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

     பிடி, களிறு,  கரி, கைம்மா, கோட்டுமா, உவா, வாரணம், வேழம், குஞ்சரம், கலாபம்.

     இதுமட்டுமல்ல,

     யானை பிறந்தவுடன் உள்ள நிலையினைக் குறிக்க கயந்தலை,

     பிறந்த யானை எழுந்து நிற்கும் நிலையைக் குறிக்க, போதகம்.

     எழுந்து நின்ற யானை ஓடி, ஆடி துள்ளி விளையாடும் நிலையைக் குறிக்க துடியடி,

     உணவு தேடிச் செல்வதைக் குறிக்க கலாபம்

     பயிற்சி அளிக்கும் யானையைக் குறிக்க கயமுனி.

    ஓர் உருவிற்கு எத்தனைப் பெயர்கள், வியப்பாக இருக்கிறதல்லவா?

     யானையை மட்டுமல்ல, ஆமையைக் குறிக்கவும், ஆமை என்றால் உண்மையான ஆமை அல்ல, மை என்னும் விகுதியைக் கொண்டமைந்த சொற்களின் பயன்பாடு, படிப்போரை, மூச்சு திணற வைக்கும்.

     பொய்யாமை, தள்ளாமை, கள்ளாமை, வையாமை, நையாமை, விதையாமை, உரையாமை, கிளைமை, கேண்மை, செய்யாமை, பொய்யாமை, சொல்லாமை, பேணாமை, மாணாமை, வெருவாமை, அழியாமை, பழியாமை, ஒளியாமை, கறவாமை, முற்றாமை, கொல்லாமை, கல்லாமை, மொழியாமை, உண்ணாமை, எண்ணாமை, அல்லாமை, அஞ்சாமை, ஏலாமை, சாலாமை, கலங்காமை, இலங்காமை, விலங்காமை, சூலாமை, வல்லாமை, படாமை, விருந்தாமை, வாய்மை.

     இத்துணை ஆமைகளும், காரியாசான் அவர்களால், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான, சிறுபஞ்ச மூலத்தில், தவழவிடப்பட்ட ஆமைகளாகும்.

     நமது செம்மொழி இலக்கியங்கள் பேசாத செய்திகளே இல்லை. அனைத்தையும் பேசியிருக்கின்றன.

     செம்மொழி இலக்கியக் கடலில், ஆழமாய், வெகுஆழமாய் மூழ்கி இவர், முத்துக்குளித்து எடுத்து வந்து முத்துக்களில் சிலவற்றை, எளிமையாய், வெகு எளிமையாய், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், எழுத்தாக்கி, நூலாக்கி விருந்து படைத்துள்ளார்.

     இவர், இந்நூலின் வழி நம்மிடம் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

     செம்மொழி இலக்கியங்களில் இருந்து, இந்நூலில் இறக்கி வைக்கப்பட்டுள்ள செய்திகளில், ஒன்றிரண்டை மட்டுமாவது, நாம், நம் துலைமுறைகளுக்குச் சொன்னால்கூட போதும், இந்நூலின் நோக்கம் நிறைவேறிவிடும் என்கிறார்.

     இவரது பல படைப்புகள், பல பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாய், மாணவ, மாணவியரின் உள்ளம் புகுந்து, தமிழுணர்வு ஊட்டி வருகின்றன.

     கடந்த 44 ஆண்டுகளாகப், படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வருபவர் இவர்.

     படித்தலும், எழுதுதலுமே இவரது தினசரி வாழ்வாகிப் போய்விட்டது.

     ஆய்வியல் நூல்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கவிதை நூல்கள், பெண்ணியல், கட்டுரை என சற்றேறக்குறைய 60 நூல்கள்.

     மேலும் பல நூல்கள் அச்சு வாகனம் ஏற, வரிசை கட்டிக் காத்திருக்கின்றன.

     இதுமட்டுமல்ல, மேலும் பல நூல்கள், என்னை, இறக்கி வை, இறக்கி வை என இவரது விரல் நுனியில், எழுதுகோலுக்காகக் காத்திருக்கின்றன.

      தமிழ்ப் பேராசிரியராய் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகுதான், இவரது எழுதுகோலின் வேகம் அதிகரித்திருக்கிறது.

     ஓய்வின்றி எழுதிக் கொண்ட இருக்கிறார்.

எழுத்தாளர்

ஹரணி

என்ற தமிழ்ப் படைப்புலகில் அறியப்படும்


முனைவர் க.அன்பழகன்

அவர்களின்


செம்மொழி அறங்கள்.

நூலின் ஒவ்வொரு பக்கமும்,

சங்க இலக்கிய காலத்திற்குள்

நம்மை அழைத்துச் செல்லும் வல்லமை வாய்ந்தமை.

 

 

செம்மொழி அறங்கள்

கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்.,

31, பூக்குளம் புது நகர்,

கரந்தை, தஞ்சாவூர்-2

uthraperumal@gmail.com

94423 98953

விலை ரூ.170