01 பிப்ரவரி 2024

நான் இங்கே இருந்தேன்



      ஆண்டு 1879.

     அது ஒரு பெரும் குகை.

     ஒரு தந்தை, தன் மகளுடன் அக்குகையில் மெல்ல நடந்து கொண்டிருக்கிறார்.

     பன்னிரெண்டே வயதான அவரது மகள், திடீரெனக் கத்தினாள்.

     அப்பா, உங்களுக்குப் பின்னால், ஒரு காட்டெருமை நிற்கிறது.

     தந்தை பயத்தில் உறைந்து போனார்.

     பின் பதட்டத்துடன் மெல்லத் திரும்பினார்.

     ஆம், ஒரு காட்டெருமை அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

     நிஜத்தில் அல்ல.

     ஓவியத்தில்.

     பாறை ஓவியத்தில்.

    


ஸ்பெயின் நாட்டின், அல்டமீரா எனும் இடத்தில் இருக்கும் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியம்தான், நமக்குத் தெரிந்த முதல் பாறை ஓவியம்.

     இதன்மூலம்தான், பழங்கால மனிதர்கள் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்கள், தங்கள் எண்ணங்களை ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது  வெளி உலகிற்குத் தெரிய வந்தது.

     இதில் வேடிக்கை என்ன தெரியுமா?

     இதற்கு முன்பே, 1838 ஆம் ஆண்டிலேயே, சர் ஜார்ஜ் கிரே என்பவர், ஆஸ்திரேலியாவில் உள்ள பாறை ஓவியங்களைக் கண்டு பிடித்திருந்தாலும், அவை உலகின் கவனத்தைக் கவரவில்லை.

     அல்டமீரா குகை ஓவியங்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியதற்குக் காரணம், அதனைக் கண்டு பிடித்தவர்.

     மார்சலிகோ சவுட்டோலோ.

     புகழ் பெற்றத் தொல்லியல் ஆய்வாளர்.

     இவர்தான், தன் மகளுடன் சென்று, காட்டெருமைகளின் ஓவியத்தைக் கண்டுபிடித்து, ஆய்வும் செய்து அறிவித்தார்.

     15,000 ஆண்டுகள் பழமையானவை.

     அதுவும் பல ஓவியர்கள் சேர்ந்து வரைந்தவை.

     உலகே வியந்து போனது.

     1887 ஆம் ஆண்டு, ஆர்ச்சிபால்ட் கார்லைல் என்பவர் இந்தியாவின், மத்தியப் பிரதேசத்தில் உள்ள, ஜமூர் மலைத் தொடரில், பல ஓவியங்களைக் கண்டு பிடித்தார்.

     இதுவும் உலகின் கவனத்தைக் கவராமல் போய்விட்டது.

     1957 ஆம் ஆண்டு, வி.எஸ்.வாகன்கர் என்பவர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள, பிம்பெட்கா என்னும் இடத்தில் உள்ள குகைகளில், பழங்கால ஓவியங்களைக் கண்டு பிடித்தார்.

     இந்த பிம்பெட்காவை, இந்தியாவின் பாறை ஓவியங்களின் தலைநகரம் என்றே கூறலாம்.

     காரணம், ஒன்றல்ல, இரண்டல்ல, 750 க்கும் மேற்பட்ட குகைகளில் ஒவியங்கள் பெரிய அளவில், அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப் பட்டன.

     எனவே, வி.எஸ்.வாகன்கர், இந்தியப் பாறை ஓவியங்களின் தந்தை என்றே போற்றப்படுகிறார்.

     இவரது கண்டுபிடிப்பால்தான், 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்டப் பாறை ஓவியங்கள், ஐரோப்பாவில் இருப்பதைப் போலவே, இந்தியாவிலும் இருக்கின்றன என்பது தெரிய வந்தது.

     ஐரோப்பிய, இந்தியப் பாறை ஓவியங்களைப் பற்றிப் பேசும் பொழுது, நம் உள்ளத்தில், தமிழ் நாட்டில் இதுபோன்ற ஓவியங்கள் இருக்கின்றனவா? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது அல்லவா?.

     இருக்கின்றன.

     மிகவும் தாமதமாக, 1972 ஆம் ஆண்டில்தான் கண்டு பிடித்தார்கள்.

     கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூருக்கு அருகில் உள்ள, மல்லப்பாடியில் உள்ள மலைக் குகை ஒன்றில், கண்டுபிடிக்கப் பட்ட வெள்ளை நிற ஓவியம்தான், தமிழகத்தில் கண்டுபிடிக்கப் பட்ட முதல் பாறை ஓவியமாகும்.

     இதனைக் கண்டுபிடித்தப் பெருமை, சென்னைப் பல்கலைக் கழகத்தின், தொல்லியல் துறையின் தலைவரான திரு இராமன் அவர்களின் தலைமையிலானக் குழுவினரையேச் சாரும்.

    


இரண்டு மனிதர்கள், வெவ்வேறு குதிரைகளின் மீது அமர்ந்து கொண்டு, நீண்ட குச்சுகளுடன், சண்டையிடுவது போன்ற ஓவியம்.

     இவர்கள் சண்டையிடவில்லை, நீண்ட குச்சுகளைக் கொண்டு, ஆநிரைகளை மேய்க்கிறார்கள் என்று கூறுவாரும் உளர்.

     இந்த ஓவியத்தின் கண்டு பிடிப்பிற்குப் பிறகு, ஆய்வாளர்களும், தன்னார்வலர்களும், மேலும் இதுபோன்ற பாறை ஓவியங்கள், தமிழகத்தின் பிற இடங்களில் இருக்கின்றனவா? என தேடத் தொடங்கினர்.

     தேடியதன் பலன் என்ன தெரியுமா?

     இரு நூற்றிற்கும் அதிகமான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

     கிருஷ்ணகிரியில் அதிக அளவில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும்,

வெள்ளரிக் கோம்பை

கரிக்கியூர்

அஞ்சு குழிப்பட்டி

சீகூர்

ஏர்பெட்

கோவனூர்

வாசிமலை

என, பாறை ஓவியங்களைத் தன்னகத்தே சுமந்து கொண்டிருக்கும் இடங்களின் பட்டியல், ஐம்பதையும் கடந்து செல்கிறது.

     ஓவியங்களை, பழங்கால மக்கள் ஓவியம் என்று சொன்னதே கிடையாது.

     எழுத்து.

     ஆம், அவர்கள், இவற்றை எழுத்தாகத்தான் பார்த்தார்கள்.

     இன்றும் பல இடங்களில், இந்த ஊரில் ஏதாவது பாறை ஓவியங்கள் இருக்கின்றனவா? என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் உரைப்பார்கள்.

     பாறையில் எழுத்துகள் இருக்கின்றனவா? என்று கேட்டால், ஆம் இருக்கின்றன, என்று கூறி, அவை இருக்கும் இடங்களைக் கூறுவார்கள்.

     ஆம், இவை ஓவியங்கள் அல்ல.

     எழுத்துகள்.

     பழங்கால மனிதர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் எழுத்துகள்.

     தமிழகப் பாறை ஓவியங்களின், இடம் பெற்றிருக்கும் காட்சிகள் என்னென்ன தெரியுமா?

     மனித உருவங்கள்.

     விலங்கு உருவங்கள்.

     வேட்டைக் காட்சிகள்.

     சண்டைக் காட்சிகள்.

     கொண்டாட்டங்கள்.

     சடங்குகள்.

     கை வடிவங்கள்.

     எக்ஸ்ரே ஓவியங்கள்.

     வானியல் தொடர்பான குறியீடுகள்.

     அன்றாட வாழ்வியல் காட்சிகள்.

     எழுத்துகள்.

     பண்பியல் அல்லது கருத்துருக்கள்.

     ஓவியங்களைப் பெரும்பாலும், கை விரல்களாலும், குச்சி, எலும்பு, பறவைகளின் இறகு போன்றவற்றாலம் வரைந்துள்ளனர்.

     வெள்ளை மற்றும் சிவப்பு நிற ஓவியங்களே அதிக அளவில் காணப்படுகின்றன.

     இருப்பினும், கருப்பு, மஞ்சள், பச்சை வண்ண ஓவியங்களும் அரிதாகக் கிடைக்கின்றன.

     பாறை ஓவியங்கள் என்பன, ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள் முதலியவற்ளின் முந்தையப் பதிவுகளாகும்.

     இப்பாறை ஓவியங்கள், வெறும் பொழுது போக்கிற்காக, நம் முன்னோர்களால் வரையப்பட்டவை அல்ல.

     அவர்கள் காலத்தியப் பண்பாட்டைப்  பதிவுகளாக நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

     பாறை ஓவியங்களில் கை வடிவங்கள் நிறைய இடங்களில் இருக்கின்றன.

     வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே, மனிதர்கள் தங்கள் வருகையை, தங்களின் இருப்பை, பதிவு செய்ய, தங்களது கைகளின் அச்சைப் பதிந்து சென்றுள்ளனர்.

     இந்தோனேசியாவின், சுலாவசித் தீவில் காணப்படும், கை ஓவியங்கள், 35,000 ஆண்டுகள் பழமையானவை என கணிக்கப்படுகின்றன.

     இதுபோன்ற கை ஓவியங்கள், தமிழகத்தின் திருமயத்திலும் இருக்கின்றன.

     திருமயத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருக்கின்றன.

    




அக்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான கையொப்பம்தான் இந்த ஓவியங்கள்.

     இந்த ஓவியங்கள் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான்.

     நான் இங்கே இருந்தேன்.

---

    





கோவை மாவட்டத்தின் குமுட்டிபதி என்னும் இடத்தில் ஓர் ஓவியம்.

     வெள்ளை நிற ஓவியம்.

     மக்கள் ஒரு தேரினை இழுத்துச் செல்லும் காட்சி.

     இறப்புச் சடங்கின்போது, இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் காட்சி.

     தேரின் அடுக்குகளின் எண்ணிக்கை, இறந்தவரின் தகுதி, பதவியைப் பொறுத்து கூடுகிறது.

---

    








கொற்றவை.

     கொற்றவையை நாம் அறிவோம்.

     வெற்றியைக் கொடுக்கும் தெய்வம்.

     கொற்றவை பல்வேறு காலங்களில், பல்வேறு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது.

     மான்.

     கையில் ஆயுதங்கள்.

     எருமைத் தலை பிற்காலத்தில் இணைந்தது.

     ஆதிச்ச நல்லூரில் கிடைத்தப் பான ஓட்டிலும் காட்சி அளிக்கிறார் கொற்றவை.

     பெண் நிற்கிறார்.

     கீழே மான்.

     மேலே ஆயுதம்.

     பல இடங்களில் கொற்றவை இருக்கிறார்.

     பெண் ஒரு குறிப்பிட்டப் பெண் அல்ல.

     மானும் ஒரு குறிப்பிட்ட மான் அல்ல.

     அது ஒரு கருத்து.

---

     தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்களில், தனித்துவமிக்க, கணிதக் குறியீடுகளுடன் கூடிய ஓவியங்கள் மதுரை மாவட்டம், மேலூர் திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள கீழவளவில் இருக்கின்றன.

     வழக்கமாகக் காணப்படும், மனித, விலங்கின, உருவங்கள் இல்லாமல், முற்றிலும வடிவ கணித குறியீடுகளால் ஆன ஓவியங்கள்.

     சதுரம், முக்கோணம், வட்டம், அரை வட்டம் என முற்றிலும் வடிவியல் தொடர்பான உருவங்கள்.

     பாறையின் இடது புறத்தில் ஓர் அரை வட்டத்தில் இருந்து, மேலெழுந்து, வலது புறம் தொண்ணூறு பாகை திரும்பி கோட்டிற்குக் கீழே ஒரு சதுரம், அதன் மேலே ஒரு முக்கோணம், அம்முக்கோணத்தின் உச்சியில் இரு கொம்புகள்.

     இதன் கீழே இடப்புறம் வட்டமும், வலப்புற மேற்பகுதியில், அரை வட்டமும் உள்ளன.

     இவற்றிற்குக் கீழேயும், மேலேயும் அரைவட்டங்கள்.

    




இக்கணித உருவங்கள் மிக நுட்பமான மறைபொருளை உணர்த்துகின்றன என்று ஆய்வாளர்கள் வியக்கின்றனர்.

     இந்த உலகம் எத்தனை அணுக்களால் ஆனது?

     அரிஸ்டாட்டில் நான்கு என்றார்.

     நம் முன்னோர் ஐந்து என்றனர்.

     நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்.

     கிரேக்கர்களுக்குத் தெரிந்தது நான்குதான்.

     கிரேக்கர்களையும் தாண்டி, ஆகாயத்தை அறிந்திருந்தவர்கள் தமிழர்கள்.

நாற்கோணம் பூமி புனல்நண்ணும் மதியின் பாதி

ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் ஆக்கும்

அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா

ஊறுகாயம் ஆம் இவற்றால் உற்று.

     சதுரம் – பூமி

     அரைவட்டம் – நீர்

     முக்கோணம் – நெருப்பு

     அறுகோணம் – காற்று

     கால்வட்டம் – ஆகாயம்

     இந்த ஓவியத்தில் எல்லாமே உள்ளன. அறுகோணம் மட்டும், வேறிடத்தில் உள்ளது.

---

    


பாறை ஓவியங்களில் பெரும்பாலும் எழுத்துகள் காணப்படுவதில்லை.

     ஆனால், எழுத்துகள் தமிழகத்திலேயே இருக்கின்றன.

     அதுவும் அலங்கார எழுத்துகள்.

     எங்கு தெரியுமா?

     குடுமியான் மலையில் இருக்கின்றன.

     குடுமியான் மலை என்றாலே அனைவருக்கும் இசைக் கல்வெட்டுகள்தான் நிறைவிற்கு வரும்.

    ஆனால், குடுமியான் மலையின் மற்றொரு சிறப்பு, இந்த அலங்கார எழுத்துகள்.

     சீன எழுத்துகளை நினைவுபடுத்தும் வகையில், கருப்பு நிறத்தில் பட்டையாகத் தூரிகைகளைக் கொண்டு எழுதப் பெற்ற எழுத்துகள்.

     இவ்வெழுத்துகள் சங்கு எழுத்துகள் அல்லது சங்கு லிபி என்ற வகையைச் சார்ந்தவை.

     சங்கு.

    சங்கு என்ற சொல் எழுத்து வடிவத்தில் ஏன் வரவேண்டும்?

     ஏரல் எழுத்துப் போல்வதோர் விழுக்காடாதலின் என்பது திருக்குறளின் 404 வது குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரையில் காணப்படுகிறது.

     ஏரல் என்றால் கிளிஞ்சல்.

     கிளிஞ்சல் ஈரத் தரையில் ஊர்ந்து செல்லும் போது ஏற்படும் கோடுகளைக் கண்டு, அதில் இருந்துதான் நம் முன்னோர் எழுத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

     எனவே இதன் பெயர் சங்கு எழுத்துகள்.

     இவ்விடத்தில் எழுத்துகள் பற்றிய ஒரு செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

     இவ்வுலவில் மூன்று வகையான எழுத்துக் குடும்பங்கள் உள்ளன.

     எத்தியோப்பியக் குடும்பம்.

     கிரீக் குடும்பம்.

     அபுகிடோ குடும்பம்.

     குடுமியான் மலையில் இருப்பதும், இன்றைய நம் எழுத்தும் அபுகிடோ குடும்ப எழுத்தாகும்.

     என்பது அடிப்படை எழுத்து.

     மேலே ஒரு கொக்கி போட்டால் கி.

     அதையே கீழே போட்டால் கு.

     அதாவது அடிப்படை எழுத்தை சிறிது மாற்றி எழுதுவது அபுகிடோ குடும்பம் எனப்படும்.

     குடுமியான் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட அலங்கால எழுத்து வடிவம், தமிழ் எழுத்துகளின் ஆரம்பகால வடிவம் என்பதே தொடக்கநிலை கருத்தாக உள்ளது.

---

     திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில், கோழியூத்து என்னும் பகுதியில், ஒரு பெரும் குகையில் ஒரு பாறை ஓவியம்.

     ஏணி.

     அடிலு ஏணி.

     



நீண்ட மூங்கில் கழிகளை, குறுக்காகக் குச்சிகளுடன் இணைத்து உருவாக்கப்பட்ட ஏணி.

     பலர் ஒரே நேரத்தில் ஏறுவதற்கு வசதியான ஏணி.

     இதில் ஏறுபவர்கள், எப்போதும் ஒரு கையால் ஏணியைப் பிடித்திருக்க வேண்டும்.

     பாதுகாப்பு அற்றது.

     விபத்துகள் அதிகம் எற்பட வாய்ப்புள்ள ஏணி.

     எனவே, பின்னர், இந்த அடிலு ஏணியை விட்டுவிட்டு, மால்பு ஏணிக்கு மாறிவிட்டனர்.

பெருந்தேன் கண்படுவரையில் முது மால்பு

அறியாது ஏறிய மடவோன் போல

என்கிறது குறுந்தொகை.

நெடுவரை நிலைபெய்து இட்ட மால்பு

நெறியாக பெரும்பயன் தொகுத்த

தேங் கொள் கொள்ளை

என்கிறது மலைபடுகடாம்.

     மால்பு.

     சங்க இலக்கியச் சொற்களை பழங்குடியினர இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.

---




ஒட்டன் சத்திரத்திற்கு அருகில் உள்ள, வடகாடு ஊராட்சியைச் சேர்ந்த, கும்மாளமரத்துப் பட்டி குகையில் ஓர் ஓவியம்.

     ஒரு தூளியில் கிடத்தப்பட்ட மனிதனைப் பலர் தூக்கிச் செல்லும் ஓவியம்.

     தாரை, தப்பட்டைகளுடன் பலர்.

     இறந்தவர்களின் உடலுக்கு சடங்குகள் செய்யும் இடமாக, இவ்விடம் இருந்திருக்க வேண்டும்.

     இதே குகையில் இதே போன்ற வேறொரு படம்.

     தூளியில் கிடத்தப்பட்டிருக்கும் மனிதன் தலையில் கிரீடம் போன்ற ஏதோ ஒன்று காட்டப்பட்டுள்ளது.

    அப்பகுதி மக்களின் தலைவனாக இருக்கலாம்.

---

    



மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புலிப்படவு எனும் குகையில் ஓர் ஓவியம்.

     வானியல் ஓவியம்.

     இரு வட்டங்களாய் சூரியன் மற்றும் நிலவு.

     இரண்டையும் இணைக்கும் ஒரு வளைந்த கோடு.

    அந்த வளைந்த கோட்டில் நிமிர்ந்து நிற்கின்றன 15 கோடுகள்.

     அமாவாசைக்கும், முழுநிலவிற்கும் இடைப்பட்ட நாள்களைக் குறிக்கின்றன இந்த 15 நிமிர்ந்த கோடுகள்.

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

     எழுத்து தோற்றம் பெறாத அக்காலத்திலேயே, வானியல் நிகழ்வுகளை கவனித்து, அதனைக் குகையில் ஓவியமாய் பதிவும் செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்.

     சரி, இதில் எது சூரியன்?

     எது நிலவு?

     கூற முடியுமா? பாருங்கள்.

     இடதுபுறம் உள்ள பெரு வட்டம் சூரியன், வலது புறம் உள்ள சிறு வட்டம் நிலவு என்று நினைத்தால் அது தவறு.

     ஏன் தவறு?

     இதற்கான விடை, கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் பேராசிரியர், குடியரசுத் தலைவரின், தொல்காப்பிய விருது பெற்ற பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்கள், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்திற்காகப் பதிப்பித்த, காலச் சக்கரம் என்ற நூலில் இருக்கிறது.

ஐந்திருபத் தொன்றேழ் அதன்பின்னோற் கொன்பது பத்(து)

உந்தியவீ ரெட்டுநான் கொரு நாள்(கு – (உந்தும்)

கதிராதி பாம்பீறாய்க் கட்டுரைத்த கோள்கட்(கு)

ஏதிரா வருங்கதிராம் என்.

     சினேந்திர மாலையில் இடம் பெற்றுள்ள இப்பாடலில், சில கோள்களின் பெயரைக் கூறி, அக்கோள்களுக்கு எத்தனைக் கதிர்கள் எனக் கூறியுள்ளனர்.

     நிலவுக்கு 21 கதிர்கள்.

     சூரியனுக்கு 5 கதிர்கள்.

     இப்பொழுது படத்தைப் பாருங்கள்.

     ஒரு வட்டத்தில் 21 கோடுகள்.

     மற்றொரு வட்டத்தில் 5 கோடுகள்.

     நம்பமுடியவில்லை அல்லவா?

     21 கோடுகளை உடையது நிலவு.

     5 கோடுகளை உரையது சூரியன்.

     இது நிலவு நாட்காட்டி.

     நிலவு நாட்காட்டிதான் முதன் முதலில் தோன்றியது.

     பின்னர்தான் சூரிய நாட்காட்டி வந்தது.

     இவ்விரண்டையும் உருவாக்கியவர்கள் நம் முன்னோர்.

     தமிழர்கள்.

     ஆம், நம் முன்னோர், சூரிய நாட்காட்டியை உருவாக்கியதற்கானத் தரவுகளை, காளையார் கோயிலுக்கு அருகில் அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

     மேலும், காளையார் கோயிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சூரிய நாட்காட்டி, 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று கனித்திருக்கிறார்கள்.

     வானியலிலும் வலுவாய், தன் தடங்களைப் பதித்தவர்கள் நம் முன்னோர்.

     நம் பழந் தமிழர்கள்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்

கடந்த 14.1.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை,

போகிப் பொங்கலன்று, ஒரு பொழிவு.

பாறை ஓவியங்களில் பண்பாட்டுப் பதிவுகள்

திருச்சி, பாரதி பதின்ம மேனிலைப் பள்ளித்

தாளாளரும், முதல்வரும்

பறவை ஆர்வலரும்,

வானியல், பாறை ஓவிய ஆய்வாளருமான



பாலா பாரதி

என்கிற

திரு கா.பாலகிருட்டினன் அவர்களின்

பொழிவு.

ஒளிப்படக் காட்சிகளுடன் கூடியப் பொழிவு.

     பாறை ஓவியங்களைத் தேடித் தேடி, தேடுதலையே தன் வாழ்வாக்கிக் கொண்ட, தொல்லியல் ஆய்வாளரின் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, நேர்த்தியானப் பொழிவில் ஏடக அரங்கு உறைந்துதான் போனது.

     ஒவ்வொரு படமாய் திரையில் ஓட, பின்னனியில் எழுந்த அலங்காரமற்ற, நிதானமான, மென்மையானக் குரல் கேட்டு, நம் முன்னோர் இத்தனை ஆற்றலாளர்களா? இத்தனை அறிவாளிகளா? என எழுந்த வியப்பு அடங்க வெகுநேரமாயிற்று.

     நீண்ட நாட்களுக்குப் பிறகு, மனதைக் கவர்ந்தப் பொலிவானப் பொழிவு.

தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசு கலைக் கல்லூரி

தமிழ்த் துறை இணைப் பேராசிரியர்


முனைவர் வி.பாரி அவர்களின்

தலைமையில் நடைபெற்ற, இப்பொழிவிற்கு வந்திருந்தோரை

ஏடகப் பொருளாளர்


திருமதி கோ.ஜெயலட்சுமி அவர்கள்

வரவேற்றார்.

ஏடகம், மகளிர் முற்றப் பொறுப்பாளர்


முனைவர் மாலதி.திரு அவர்கள்

நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், அரசர் மேனிலைப் பள்ளி

முதுகலைத் தமிழாசிரியர்


முனைவர் பழ.பிரகதீசு அவர்கள்

தன் தேர்ந்த தமிழால்

விழா நிகழ்வுகளை அழகுறத் தொகுத்தளித்தார்.

மேலும், இவ்விழாவின்போது,

ஏடகம் மகளிர் முற்றப் பொறுப்பாளர்

முனைவர் மாலதி.திரு அவர்களின்

மண்ணின் வரலாற்றில் நாஞ்சில் நாடன்

எனும் ஆய்வு நூலினை

தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசு கலைக் கல்லூரி

தமிழ்த் துறை இணைப் பேராசிரியர்

முனைவர் வி.பாரி அவர்கள்

வெளியிட,



திருச்சி, பாரதி பதின்ம மேனிலைப் பள்ளித்

தாளாளர், முதல்வர்

திரு கா.பாலகிருட்டினன் அவர்கள்

முதற் படியினைப் பெற்று மகிழ்ந்தார்.

 

ஏடக அரங்கை

இருளாக்கி,

பழந்தமிழர் வாழ்வியலை

பண்பாட்டுக் கூறுகளை

பாறை ஓவியங்களின் வழி

வெளிச்சமிட்டுக் காட்டப்

பெரிதினும் முயன்று – வென்ற

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

 

 

 

12 கருத்துகள்:

  1. பல வாரங்களாக நான் வலைப்பதிவு பக்கம் வாராமல் இருந்து விட்டேன். தங்கள் அற்புதமான எழுத்தில் தகுதி மிக்க பல செய்திகளைத் தவற விட்டுவிட்டேன். இன்றுமுதல் தொடர்ந்து வரலாம் என்று நம்புகிறேன். இன்றைய கட்டுரையும் மார்பில் சிறந்த ஒன்று என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது நண்பரே

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா01 பிப்ரவரி, 2024

    மிகவும் சிறப்பு
    வந்து காணவில்லையே
    என வருந்துகிறது உள்ளம்

    பதிலளிநீக்கு
  4. தி. செழியரசு01 பிப்ரவரி, 2024

    பயன்பாடு மிக்க நிகழ்வு
    இதனை கட்டுரையாக்கியதும்
    தளத்திற்கு கொணர்ந்ததும்
    அருமை பாராட்டும்
    அன்பும்....

    பதிலளிநீக்கு
  5. அருமையாக தொகுத்தளித்திருக்கிறீர்கள். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் விரிவான கட்டுரை. நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  7. விரிவான, சுவாரஸ்யமான விவரங்கள்.

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான பதிவு.
    பாறை ஓவியங்களை தொகுத்து வழங்கி விவரங்களை அருமையாக சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. Dear JK, பாறை ஓவியங்கள் பற்றி , எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் எழுத்தோட்டம் இருந்தது. மனிதர்களின் வாழ்க்கை, வானவியல் அனைத்தையும் ஓவியங்கள் எப்படி உணர்த்தின என்பதை உங்கள் பகிர்வு தெளிவு படுத்தியது . நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பாறைகளில் உள்ள ஓவியங்கள் எத்தனை தகவல்கள்… பிரமிப்பு.

    பதிலளிநீக்கு
  11. பல அரிய தகவல்களையும் விரிவாக தந்துள்ளீர்கள். அறிந்துகொண்டோம்.

    காத்திரமான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு