17 பிப்ரவரி 2024

பிஷ்னோய்

 


 

     ஈஸ்டர் தீவு.

     சிலி நாட்டின் தீவு.

     சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த தீவு.

     ஒரு காலத்தில் ஐம்பதாயிரம் மக்களால் நிரம்பித் ததும்பியத் தீவு.

     இத்தீவின் தலைவருக்குத் திடீரென்று ஓர் எண்ணம் உதித்தது.

மனித உருவங்களில் ஆயிரம் சிலைகளைச் செய்தார்.

     ஒவ்வொன்றும் 80 டன் முதல் 100 டன் வரை எடையுள்ள சிலைகள்.

     இச்சிலைகைளைத் தீவைச் சுற்றிலும் வைக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு.

     உத்தரவிட்டார்.

     100 டன் எடையுள்ள சிலைகளை தீவின் விளிம்பிற்குக் கொண்டு சென்றாக வேண்டும்.

     எப்படிக் கொண்டு செல்வது?

     தீவில் உள்ள மரங்களை வெட்டினார்கள்.

     மரங்களை உருளைகளாகப் பயன்படுத்தி சிலைகளை நகர்த்தினார்கள்.

     ஆயிரம் சிலைகளையும் தீவைச் சுற்றிலும் நிற்க வைத்து, தீவிற்கு அழகு சேர்த்தபின், மன்னர் திரும்பித் தன் தீவைப் பார்த்தார்.

     மரங்களே இல்லை.

     எல்லா மரங்களும் வெட்டப்பட்டு, மரமில்லாதத் தீவாய் காட்சியளித்தது.

     மரம் இல்லாததால், மழை பொய்த்துப் போனது.

     மக்களால் வாழ முடியாமல் போனது.

     வேறுவழியின்றி மக்கள் தங்களது சொந்தத் தீவை விட்டு வெளியேறினர்.

     1722 ஆம் ஆண்டு ஒரு ஐரோப்பியர், இத்தீவிற்குச் சென்ற பொழுது, வெறும் இருநூறு பேர் மட்டுமே இருந்தனர்.

     இவர்களும் இப்பொழுது இல்லை.

     சுற்றுலாத் தலமாக மட்டுமே விளங்குகிறது.

     காலையில் சென்றால், மாலையில் வெளியேறி விடுகிறார்கள்.

     மரங்கள் இல்லை.

     மழை இல்லை.

     எனவே, மக்களும் இல்லை.

---

    


      கம்போடியா.

     அங்கோர் வாட் ஆலயம்.

     விஷ்ணு கோயில்.

     400 ஏக்கர் பரப்பளவில், சோழ வாரிசான சூரிய வர்மனால், 12 ஆம் நூற்றாண்டில் கட்டி எழுப்பப்பெற்ற, உலகிலேயே மிகப் பெரியக் கோயில்.

     இக்கோயிலைக் கட்டுவதற்காக, இந்த 400 எக்கர் பரப்பிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன.

     கோயில் மிகப் பிரமாண்டமாய் எழுந்தது.

     இருப்பினும், மரங்கள் இல்லாததால், மழை திரும்பிக்கூடப் பார்க்க வில்லை.

     மக்களால் வாழ இயலவில்லை.

     அங்கோர்வாட் ஆலயத்தை தனித்து விட்டு விட்டு, மக்கள் இடம் பெயர்ந்தனர்.

     கோயில் தன்னந்தனியாய், துணைக்கு யாருமின்றி, அனாதையாகிப் போனது.

          இருபதாம் நூற்றாண்டில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற, ஒரு தாவரவியல் ஆய்வாளர்தான், இங்கு இப்படி ஒரு பெரும் கோயில் இருப்பதை உலகிற்கு அறிவித்தார்.

---

     மரங்கள்.

     மரங்களின்றி மழையில்லை.

     மழையின்றி மனிதர்களில்லை.

     நம் முன்னோர், மரங்களின் இன்றியமையாமையை, முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தனர்.

     தமிழக மன்னர்கள், குறிப்பாகச் சோழ மன்னர்கள், ஒரு கோயிலைக் கட்ட விரும்பினால், முதலில் அவ்விடத்தைச் சுற்றி, இலுப்பைத் தோப்பை உருவாக்குவார்கள்.

     காரணங்கள் மூன்று.

     ஒன்று, அன்று இலுப்பைப்பூ தான் சர்க்கரை.

     இரண்டு, இலுப்பை மர எண்ணெய்.

     விளக்கிற்காக, வெளிச்சத்திற்காக.

     மூன்று இலுப்பை மரம், எடை குறைந்தது, இருப்பினும் வலுவானது.

     எனவே மன்னர்கள் தங்களுக்குத் தேர்  செய்யவும், பல்லக்குகள் செய்யவும் இலுப்பை மரத்தைத்தான் பயன்படுத்தினார்கள்.

     1873, 74 ஆம் ஆண்டுகளில், பீகாரில் பெரும் பஞ்சம் தலை விரித்தாடியபோது, பெரும்பாலான மக்கள், இந்த இலுப்பை மரப் பட்டைகளை சாப்பிட்டுததான், தங்கள் உயிரைக் காத்துக் கொண்டனர்.

---

     சில நேரங்களில் மன்னர்கள், மரங்களின் அருமையைப் புரியாமல் நடந்து கொள்ள முற்பட்டபோது, மக்கள் போராடி மரங்களின் முக்கியத்துவத்தை மன்னர்களுக்குப் புரிய வைத்திருக்கிறார்கள்.

     இராஜஸ்தான்.

     இராஜஸ்தானில் 1730 ஆம் ஆண்டில், மொகலாயர்களுடன் சண்டையிட்டு, சண்டையிட்டு, அசந்துபோன, மார்வா சாம்ராஜ்ஜிய மன்னருக்கு ஓர் எண்ணம்.

     ஒரு பாதுகாப்பான அரண்மனையினைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம்.

     அருகில் இருந்த, நன்கு வளர்ந்திருந்த, வன்னி மரக் காட்டைத் தேர்ந்தெடுத்தார்.

     வீரர்களை அனுப்பினார்.

     மரங்களை வெட்டி, அரண்மனை கட்ட ஏதுவாக, நிலத்தை சமப்படுத்தச் சொன்னார்.

     வீரர்கள் கோடாளிகளோடு, வன்னி மரக் காட்டுக்குள் நுழைந்தபோது, அங்கு கண்ட காட்சி, அவர்களை அதிர வைத்தது.

     அப்பழகுதியில் வாழ்ந்த மக்கள், குறிப்பாக பெண்கள், வன்னி மரங்களைத் தழுவியபடி நின்றனர்.

     மரங்கள் எங்கள் தெய்வம்.

     மரங்களை வெட்டக் கூடாது.

     வெட்டியே தீரவேண்டும் என்றால் முதலில் எங்களை வெட்டுங்கள்.

     பெண்கள் உறுதியாய் நின்றனர்.

     கோபம் கொண்ட வீரர்கள், பெண்களை வெட்டத் தொடங்கினர்.

     363 பெண்களை வெட்டிச் சாய்த்தனர்.

     இருப்பினும், மற்ற பெண்கள் எங்களையும் வெட்டுங்கள் என, வன்னி மரங்களைத் தழுவியபடி, தங்கள் உயிரை விடத் தயாராய் நின்றனர்.

     மன்னருக்குச் செய்தி சென்றது.

     திடுக்கிட்டுப்போன மன்னர், புதிய அரண்மனை வேண்டாம், திரும்பி வாருங்கள் என வீரர்களுக்கு கட்டளையிட்டார்,

     வன்னி மரக்காடு பிழைத்தது.

     இவ்வன்னி மரக்காடுகளை, இராஜஸ்தானில் உருவாக்கியவர் யார் தெரியுமா?

     குரு ஜம்பேஷ்வர்.

     ஏன் உருவாக்கினார்?

     கி.பி.1451 ஆம் ஆண்டு இராஜஸ்தானில் ஏற்பட்ட பெரும் பஞ்சம்.

     ஒன்றல்ல, இரண்டல்ல எட்டு வருடங்கள் நீடித்தது.

     வயிற்றிற்கு உணவின்றி தவித்த மக்கள், தங்கள், கால்நடைகளைக் கூட்டிக் கொண்டு இடம்பெயரத் தொடங்கினர்.

     இராஜஸ்தான் வெயிலில் பொசுங்கி மக்களும், விலங்குகளும் கொத்துக் கொத்தாய் மடிந்தனர்.

     இப்பஞ்சத்தில் தப்பிப் பிழைத்த ஒருவர் மட்டும், இப்பஞ்சத்திற்குக் காரணம் என்ன? ஏன் வந்தது? என்று யோசித்தார்.

     காரணத்தையும் கண்டு பிடித்தார்.

     மரங்கள் இல்லை.

     மழை இல்லை.

     எனவே பஞ்சம்.

     கண்டுபிடித்தவர் குரு ஜம்பேஷ்வர்.

     இனியொரு பஞ்சம் வரவே வடாது என்று எண்ணிய, குரு ஜம்பேஷ்வர், ஒரு புது மதத்தை உருவாக்கினார்.

     விஸ்னோய்.

     இம்மதத்தின் நோக்கம், குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்.

     மரம் வளர்ப்பது.

     மரம் வளர்ப்பது.

     மரம் வளர்ப்பது.

     இப்படி வளர்க்கப்பட்டக் காடுதான் அந்த வன்னி மரக்காடு.

     இப்படித்தான் அன்றைய மன்னர்களும், மக்களும் இருந்தார்கள்.

    

     1730-ஆம் ஆண்டில் மரங்களை காத்திட, உயிர் துறந்த பிஷ்னோய் மக்களின் நினைவிடம


மன்னன் இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டால், மக்கள் போராடி, மன்னரின் மனதை மாற்றினர்.

     இயற்கை தழைத்திருந்தது.

     மனித வாழ்வு மலர்ந்திருந்தது.

---

     இயற்கையைப் போற்ற, மரங்களைக் காக்க நம் முன்னோர் பெரிதும் முயன்றிருக்கின்றனர்.

     தொடக்க காலத்தில் நம் வழிபாடு, விருட்ச வழிபாடுதான்.

     மர வழிபாடுதான்.

     எந்த மரம் பலன் கொடுக்குமோ, அந்த மரத்தைத்தான் மனிதன் வழிபட்டான்.

     ஆனால், காலப்போக்கில், அருகில் நீர் இருந்ததால், தீர்த்த வழிபாட்டில் இறங்கினான்.

     விருட்சமும், தீர்த்தமும் வழிபடப் பெற்றன.

     மிகவும் பிற்காலத்தில்தான், விருட்சமும், தீர்த்தமும் மாறி, மூர்த்தி வழிபாடு, உருவ வழிபாடு என்ற நிலைக்கு மாறி, இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.

     காடுகளும், மரங்களும் அழிக்கப்பட்டன.

     அங்கோர் வாட் ஆலயம் போல.

     இன்று ஒவ்வொரு கோயிலிலும், தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும்.

     இத்தலவிருட்சம் பற்றி, தவறான புரிதலே இன்றும் நம்மிடம் நிலவி வருகிறது.

     தஞ்சாவூரில் இருக்கும் புகழ் பெற்றக் கோயில்.

     புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்.

     இக்கோயிலின் தலவிருட்சம்.

     புன்னை.

     புன்னை மரம்.

     ஆனால் உண்மையில், புன்னை மரம் என்பது இக்கோயிலின் தல விருட்சம் கிடையாது.

     பரந்து விரிந்த புன்னை மரக்காட்டிற்கு இடையில் ஒரு புன்னை மரத்தடியில், ஒரு காலத்தில் மாரியம்மனை வழிபட்டார்கள்.

     காலப்போக்கில், மரத்தடி, சிறு குடிசையாக மாறியது.

     குடிசை, சிறு கட்டடமானது.

     பின்னர், வழிபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, அங்கிருந்த புன்னை மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஒரு பெரும் கோயில் எழுந்தது.

     தல விருட்சம் என்னும் பெயரில் ஒரே ஒரு மடம் மட்டுமே இன்று மீதமிருக்கிறது.

---

     சிதம்பரத்திற்கு தில்லை என்ற ஒரு பெயரும் உண்டு.

     தில்லை மரங்கள் நிறைந்த ஊர்.

     இல்லை இல்லை.

     தில்லை மரங்கள் நிறைந்த காடு.

     இன்று காடு இல்லை.

     கோயில் இருக்கிறது.

     கோயிலில் தல விருட்சமாய், ஒரே ஒரு மரம்.

---

     காஞ்சி புரம்.

     காஞ்சி மரங்கள் நிறைந்த காடு.

     இன்று காஞ்சி மரங்கள் இல்லை.

     காஞ்சி மரத்தின் பெயர்கூட மாறிவிட்டது.

     ஆற்றுப் பூவரசு.

---

     திருப்பராய்துறை.

     பராய் மரங்கள் நிறைந்த காடு.

     திருப்பாதிரிப் புலியூர்.

     பாதிரி மரங்கள் நிறைந்த காடு.

     ஒவ்வொரு கோயிலின் தல விருடசத்தின் கதையும் இதுதான்.

---

     வில்வ மரத்தில் இருந்து பிறந்தவர் சிவன்.

     புளிய மரத்தில் இருந்து பிறந்தவர் பார்வதி தேவி.

     பராசு மரத்தில் இருந்து பிறந்தவர் எமதர்மன்.

     மூங்கிலில் இருந்து பிறந்தவர் முருகன்.

     அரச மரத்தில் இருந்து பிறந்தவர் சூரியன்.

     வன்னி மரத்தில் இருந்து பிறந்தவர் துர்கா தேவி என, ஒவ்வொரு தெய்வத்தின் பிறப்பிடமாகவும், ஒரு மரத்தைப் போற்றி வழிபட்டவர்கள் நாம்.

     27 நட்சத்திரங்களுக்கும், 27 மரங்களை உரிமையாக்கி மகிழ்ந்தவர்கள் நாம்.

     தமிழ் ஆண்டுகள் அறுபதிற்கும், அறுபது மரங்களை உரிமையாக்கி பெருமை அடைந்தவர்கள் நாம்.

     ஆனால், இன்று யாவற்றையும் மறந்து, காடுகளை அழித்து, தல விருட்சம் என்னும் பெயரில் ஒரே ஒரு மரத்தினை மட்டும் காட்சிப் பொருளாக்கி வணங்கி வருகிறோம்.

---

     இன்று நம்மைத் தவிர, உலக நாடுகள் எல்லாம் விழித்துக் கொண்டன.

     தங்களது இயற்கையை வளர்ப்பதில், காப்பதில், கட்டமைப்பதில் முழு கவனம் செலுத்தி வருகின்றன.

     டுப்ளகோ மரம்.

     1970 ஆம் ஆண்டு, இந்த மரம் முற்றிலும் அழிந்துவிட்டதாக, மொரிசீயஸ் நாட்டுத் தாவரவியல் அறிஞர்கள் கூறினார்கள்.

     இருப்பினும் தளராது, தேடித் தேடி, 300 வயதுடைய 13 டுப்ளகோ மரங்களைக் கண்டுபிடித்தனர்.

     அம்மரங்களில் இருந்து விதைகளை எடுத்து வளர்க்க முயன்றனர்.

     வளரவே இல்லை.

     விட்டுவிட மனமில்லை.

     தொடர்ந்து ஆய்வு செய்தார்கள்.

     ஓர் உண்மையைக் கண்டு பிடித்தார்கள்.

     டோடோ என்று ஒரு பறவை.

     பார்ப்பதற்கு வாத்து போலவே இருக்கும்.

     விதையினை இந்தப் பறவை விழுங்கி, அவ்விதையானது, இந்த டோடோ பறவையின் சீரணப் பாதை வழியே பயணித்து, கழிவுப் பொருளாக பூமியில் விழுந்தால் மட்டுமே, இம்மரம் முளைக்கும் என்று கண்டுபிடித்தார்கள்.

     ஆனால் இவர்கள் கண்டுபிடித்தபோது, டோடோ பறவை இனமே இல்லை.

     இப்பறவையின் இறைச்சி மிகவும் சுவையாக இருந்ததால், ஒரு பறவையைக்கூட மிச்சம் வைக்காமல், சமைத்துச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டார்கள்.

      ஆனாலும், ஆய்வாளர்கள் தளர்ந்துவிட வில்லை.

     வேறு வழிகள், மாற்று வழிகள் ஏதும் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தார்கள்.

     டோடோ பறவையைப் போலவே, ஆமைகளின் சீரணப் பாதைவழியே சென்று வெளியே வந்தாலும், முளைக்கும் என்று கண்டுபிடித்தார்கள்.

     இன்று டுப்ளகோ மரம் புத்தம் புதிதாய் வேர்விட்டு வளர்கிறது.

     அழிவின் விளிம்பில் இருந்து, டுப்ளகோ மரங்களைக் காப்பாற்றி விட்டார்கள்.

---

     ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?

     1970 ஆம் ஆண்டில் இருந்து சுவீடன் அரசானது, தமிழ் நாட்டின் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட எல்லா ஏரி, குளங்களின் கரைகளிலும், நாட்டுக் கருவேல மரங்களை நட்டு வளர்க்க பொருளுதவியை அள்ளி அள்ளி வழங்கத் தொடங்கியது.

     எதற்காகக் கொடுக்கிறார்கள்?

     ஏன் கொடுக்கிறார்கள்? என்ற சிந்தனை ஏதுமின்றி, கேள்விகள் இன்றி, பணத்தை வாங்கி, கருவேல மரங்களை நட்டு, நட்டு வளர்த்தோம்.

     பின்னர்தான் உண்மைக் காரணம் தெரிந்தது.

     தமிழ்நாட்டு நீர் நிலைகளில் இருந்து, நீர் ஆவியாகி மேலெழுந்து செல்வதால், சுவீடன் நாட்டில் பணி அதிகரிக்கிறதாம்.

      நீர் ஆவியானால்தானே பணி அதிகரிக்கும்.

     நீரே இல்லாவிட்டால்?

     இதனால்தான் அவர்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்.

     இன்று அவர்கள் நலம்.

     நாம்?

---

     நம் நாட்டில் தொடர் வண்டி இருக்கைகளுக்காக, தொலைத் தொடர்புத் தூண்களுக்காக, மின் கம்பி இணைப்புத் தூண்களுக்காக, காகிதம் தயார் செய்ய, காபி, தேயிலைச் செடிகளை வளர்க்க என, நம் நாட்டு மரங்களை முழுதாய் வெட்டி, வெட்டி சாய்த்தோம்.

     பின்னர், புதுப்புது ரக மரங்கள் கப்பலேறி வந்தன.

     அவற்றை நட்டோம், வளர்த்தோம்.

     இன்று ஒரு சிறு புயலுக்குக் கூடத் தாங்க இயலாமல், வேரோடு வீழ்கின்றன.

---

     ஓம்லோகாஸ் எலாட்டம்.

     இது ஒரு மரம்.

     இதன் விதையின் எடை இரண்டு முதல் மூன்று கிலோ வரை இருக்கும்.

     இந்த விதையினை உடைக்கும் சக்தி வாய்ந்த ஒரே மிருகம் யானை மட்டும்தான்.

     யானை இந்த விதையை உடைத்து சாப்பிட்டு, தன் வலசைப் பாதையில், போடும் கழிவில் இருந்து, இம்மரம் முளைத்தால்தான் உண்டு.

     இம்மரத்தை நம்மாள் முளைக்க வைக்க இயலாது.

     நாம்தான், யானையின் வலசைப் பாதைகளை எல்லாம் மறித்துத் தடுத்து வேலிகள் போட்டு, கட்டிடங்களாக்கி விட்டோமே.

---

     மனிதன்.

     மனிதன்தான் இவ்வுலகில் தோன்றிய கடைசி உயிரினம்.

     மனித வர்க்கத்திற்குப், பலப்பல நூறு கோடி ஆண்டுகளுக்கும் முன்னரே விலங்குகள், பறவைகள் தோன்றிவிட்டன.

     அதற்கும் பலப்பல நூறு கோடி ஆண்டுகளுக்கும் முன்னரே மரங்கள், செடிகள், கொடிகள் தோன்றிவிட்டன.

     மனிதனின் மிகப் பெரிய அண்ணன் மரங்கள், செடிகள், கொடிகள்தான்.

     நாம் ஒவ்வொருவரும், மரத்திடம் இருந்தும், இயற்கையிடம் இருந்தும் கடன் வாங்கித்தான், நம் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

     ஒரு மனிதன், தன் வாழ்நாளில், மரங்களில் இருந்து கடன் வாங்கி சுவாசிக்கும் பிராண வாயுவின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

     ஒவ்வொரு நாளும், நாம் சுவாசிக்கும் பிராண வாயுவின் அளவு, நாம் சமையலுக்குப் பயன்படுத்தும், எரிவாயு உருளைகளில், மூன்று உருளைகளுக்குச் சமம்.

     ஒரு நாளைக்கு மூன்று உருளைகள்.

     இன்று ஒரு பிராண வாயு உருளையின் விலை ரூ.1000

     ஒரு வருடத்திற்கு 365 நாள்கள்.

     எனவே 365 x 3 = 1095 உருளைகள்

     ஓர் ஆண்டிற்கு 1095 உருளைகள்.

     மனிதரின் சராசரி ஆயுள் 65 வருடங்கள்.

     எனவே 65 X 1095 = 71,175

     71,175 X ரூ.1000 = ரூ.7,11,75,000

     ஏழு கோடி.

     ஒரு மனிதன் தன் சுவாசக் காற்றிற்காக மட்டும், இயற்கைக்கு ஏழு கோடி கடன் பட்டிருக்கிறான்.

---

     நம் உலகில் மூன்று பெரியக் காடுகள் இருக்கின்றன.

     ரஷ்யக் காடுகள்.

     அலாஷ்கா காடுகள்.

     அமேசான் காடுகள்.

     இம்மூன்று காடுகளும் இல்லை எனில், உலகமே இல்லை.

    மனித இனம் உயிர் வாழ வேண்டுமானால், நிலத்தின் பரப்பளவில் 35 சதவிகிதம் காடுகள் இருந்தாக வேண்டும்.

     ஆனால் ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப் படுகின்றன.

     ஒவ்வொரு நொடியும், ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கான காடு, காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

    ஆனால், நாம் ஒரு ஆண்டிற்கு வளர்க்கும் மரங்களின் பரப்பு வெறும் ஆறு ஹெக்டேர் மட்டும்தான்.

     தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, 20 சதவிகிதமாக இருந்த காடு, தற்பொழுது 23 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

     வருடத்திற்கு ஒரு சதவிகிதக் காடுகள் கரைந்து கொண்டே இருக்கின்றன.

     காடுகளின் சதவிகிதத்தினை உயர்த்தினால் மட்டும்தான், தமிழ் நாட்டில் மக்கள் உயிர் வாழ முடியும்.

     இல்லையேல் ஈஸ்டர் தீவு, அங்கோர் வாட் ஆலய நிலைதான் நமக்கும்.

     இந்நிலையினை, நாம் வெகுவேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்.

கடந்த 11.2.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடக அரங்கில்

தஞ்சாவூர், இசைச்சாரல் இன்னிசைக் குழு நிறுவுனர், பன்முகக் கலைஞர்


கவிஞர் இராகவ் மகேஷ் அவர்கள்

தலைமையில்

திருச்சி, அரியவகை மரங்கள் மீட்டெடுப்பாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்

மரம் பி.தாமஸ் அவர்கள்


மக்கள் வழிபாட்டில் மரங்கள்

எனும் தலைப்பில்

ஒளிப்படக் காட்சிகளுடன் உரையாற்றி,

இயற்கையைப் பேணுவதில், போற்றுவதில், காப்பதில், நம் முன்னோர் மேற்கொண்ட முயற்சிகளையும், இன்றைய நம் நிலையினையும் எடுத்துரைத்ததோடு,

சீதையை இராவணன் அசோக வனத்தில் சிறை வைத்ததாகப் படித்திருக்கிறோம் அல்லவா, அந்த அசோக மரத்தைத் தேடித் தேடிக் கண்டுபிடித்ததோடு, அசோக மரக் கன்று ஒன்றினை, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பளிப்பாய் வழங்கி மகிழ்ந்தார்.

ஏடகம், சுவடியியல் மாணவரும், இந்திய அஞ்சல் துறை அலுவலருமான

திரு சு.சரவணன் அவர்கள்

நன்றி கூற

பொழிவு இனிது நிறைவுற்றது.

முன்னதாக,

பொழிவிற்கு வந்திருந்தோரை

ஈரோடு, வெள்ளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பவியல் கல்லூரி

இறுதியாண்டு மாணவி

செல்வி அ.சா.லீனா அவர்கள்

வரவேற்றார்.

புனல்குளம், குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்

முனைவர் இரா.வனிதாமணி அவர்கள்

விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

 

அசோக மரக்

கன்றுகளுக்கும்

செந்தூர விதைகளுக்கும் இடையில்

ஒரு பொழிவு

மரப் பொழிவு நடத்திட

ஆவண செய்திட்ட

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

பாராட்டுவோம், வாழ்த்துவோம்.