26 பிப்ரவரி 2024

காந்தியின் நிழல்

     


 ஆண்டு 1942.

     ஆகாகான்அரண்மனை.

     மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில், எரவாடா பகுதியில், 1892 ஆம் ஆண்டு, சுல்தான் முன்றாம் முகமது ஷா அவர்களால் கட்டப்பெற்ற அரண்மனை.

     மொத்தப் பரப்பளவு 19 ஏக்கர்.

     சுல்தான் தனக்காகப் பார்த்துப் பார்த்துக் கட்டிய அரண்மனையை, ஆங்கிலேய அரசு சிறைச்சாலையாக மாற்றி இருந்தது.

      மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார்.

     ஆங்கிலேய அரசு வெகுண்டு எழுந்தது.

     காந்தியைக் கைது செய்தது.

     ஆகாகான் அரண்மனையில் காவலில் வைத்தது.

     காந்தியை மட்டுமல்ல, காந்தியோடு, காந்திய இயக்கவாதிகள் பலரையும் கைது செய்து, இங்குதான் வைத்தது.

     1942 ஆகஸ்ட் 15.

     திடீரென்று அரண்மனை பரபரப்படைந்தது.

காவலில் இருந்த ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார்.

     வலிப்பு வந்துவிட்டது.

     பாபுவை அழையுங்கள்.

     பாபுவை அழையுங்கள்.

     பதற்றத்தில் குரல்கள் எழுந்தன.

     செய்தியறிந்த காந்திஜி ஓடோடி வந்தார்.

     வலிப்பு வந்து தரையில் கிடந்தவரை வாரி அணைத்துத் தூக்கி, அவரது தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டார்.

     வாயில் இருந்து நுரை தள்ளியது.

     மூச்சு ஒழுங்கற்று வெளிவந்தது.

     கைகளும், கால்களும் குளிரத் தொடங்கிவிட்டன.

     மிகவும் சிரமப்பட்டு வாந்தி எடுத்தார்.

     தன் மடியில் இருந்த, அவரதுத் தலையைத் தடிவியபடி, காந்திஜி, எழுந்திரு, எழுந்திரு என அவரைப் பெயர் சொல்லி அழைத்தார்.

     காந்திஜி முழுமையாய் நம்பினார்.

     கண் திறந்து பார்த்துவிட்டால் போதும், தன் வார்த்தைக்கு நிச்சயம் கட்டுப்பட்டு எழுந்துவிடுவார் என முழுதாய் நம்பினார்.

    அவரும் கண்களைத் திறக்க முயன்றார்.

     முடியவில்லை.

     உடல் முழுவதும் வியர்வை ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

     முகம் வெளிறியது.

     காந்திஜி தன்னுடைய துண்டால், அவரது உடல் முழுவதும் துடைத்து விட்டார்.

     பதற்றத்தில் வியர்த்திருந்த, தன் உடலையும், அதே துண்டால் துடைத்துக் கொண்டார்.

    மருத்துவர் வந்தார்.

    பரிசோதித்தார்

    இறந்து விட்டார் என அறிவிக்கிறார்.

     காந்திஜியால் நம்ப முடியவில்லை.

     தன் மடியில் இருக்கும், அவரது முகத்தையே கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

     பின், இறந்தவரைத் துடைத்த துண்டை, அருகில் இருந்தவரிடம் கொடுத்து, இறந்தவரின் மகனிடம் கொடுக்கச் சொல்கிறார்.

     ஆகாகான் அரண்மனையிலேயே இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

     உடலை எரியூட்ட கட்டைகள் அடுக்கப்படுகின்றன.

     ஆறுபோர் பூத உடலைச் சுமந்து வருகின்றனர்.

     இறந்தவரின் முகத்தை இறுதியாய் ஒருமுறை வெகுநேரம் உற்றுப் பார்த்த மகாத்மா காந்திஜி, தன் கரங்களாளேயே அவருக்கு நெருப்பு வைத்தார்.

     ஒரு தந்தை, தன் மகனுக்குக் கிரியைச் செய்வது போன்ற ஓர் உணர்வு காந்திக்கு.

     நெருப்பு வைத்தபிறகு அமைதியாய் காத்திருந்தார்.

     நெருப்பு முழுவதும் அணைந்தபிறகு, காந்திஜி சிறிது சாம்பலை எடுத்துத் தன் நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டார்.

     பின் தானே, தன் கரங்களால் சாம்பலைச் சேகரித்தார்.

     அருகில் இருந்த சிறை அதிகாரியிடம், சாம்பல் கலசத்தைக் கொடுத்து, இறந்தவரின் மனைவிக்கு அனுப்பச் சொன்னார்.

     ஒருவேளை நாங்கள் யாரும், இவ்விடத்தில் இருந்து உயிருடன் திரும்பப் போகவில்லை எனில், எரியூட்டப்பட்ட இவ்விடத்தை, இறந்தவரின் மகனுக்குக் காட்டுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

     இறந்தவருக்கு இரண்டே இரண்டு ஆசைகள், உள்ளத்தில் இருந்தன.

     ஒன்று, காந்திஜி உயிருடன் இருக்கும் பொழுதே, தன் உயிர் பிரிந்துவிட வேண்டும்.

     இரண்டாவது, தன் உயிர் காந்திஜியின் மடியில் போகவேண்டும்.

     இரண்டு ஆசைகளுமே நிறைவேறிவிட்டன.

     காந்திஜியின் சிறைவாசம் தொடர்கிறது.

     இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், 1944 ஆம் ஆண்டு, கஸ்தூரிபா காந்தி அவர்களும், இதே ஆகாகான் அரண்மனையில் உயிர் துறந்தபோது, இவரை எரித்த இடத்திற்கு அருகில்தான், தன் மனைவிக்கு எரியூட்டினார்.

    


இன்றும் ஆகாகான் அரண்மனையில் அருகருகே இரு சமாதிகள்.

     படிக்கும்போதே கண்கள் கலங்குகின்றன அல்லவா?

     காந்தி தன் கரங்களால் எரியூட்டும் அளவிற்கு, காந்தியின் மனதில் இடம் பிடித்த இவர்தான்,

     காந்தியில் நிழல்.

     இப்படித்தான் இவரை உலகமே பார்த்தது, போற்றியது.

     இராஜாஜி சொன்னார், இவர் காந்திஜியின் மறு உடல். காந்திஜி ஓய்வெடுக்கும்போது இந்த உடல் வேலை செய்யும்.

     தன் ஐம்பதாண்டுகால வாழ்வில், சரிபாதி வாழ்வை மகாத்மா காந்திக்காகவே வாழ்ந்தவர்.


     காந்தியின் நிழல்.

     மகாதேவ தேசாய்.

---

கடந்த 19.2.2024 திங்கள் கிழமை மாலை.

தஞ்சாவூர்,

அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கக் கட்டடத்தில் ஒரு கூட்டம்.

தஞ்சாவூர்

காந்தி இயக்கத்தின் சார்பில்

மகாதேவ தேசாய்

காந்தியின் நிழல்


நூல் அறிமுகக் கூட்டம்.

மக்கள் சிந்தனைப் பேரவையின், துணைத் தலைவர்

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்கள்

தலைமையில் நடைபெற்றது.

அவ்வமயம்

தஞ்சாவூர், பாரதி புத்தகாலயா மண்டலப் பொறுப்பாளர்


திருமிகு சிவகுரு நடராசன் அவர்கள்

நூல் அறிமுக உரையினை

உணர்வு மயமான உரையாக நிகழ்த்தி

வந்திருந்தோரை நெகிழச் செய்துவிட்டார்.

காந்திக்காக இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?

என்று எண்ணி கலங்க வைத்துவிட்டார்.மகாதேவ தேசாய்

காந்தியின் நிழல்

நூலின் ஆசிரியர்

காந்திய மாமணி டி.டி.திருமலை அவர்களின்

திருமகனார்

திரு தி.விப்ரநாராயணன் அவர்கள்,

தன் மனைவி, மகனோடு,

தன் நூல் அறிமுக விழாவிற்கு வந்திருந்து

உணர்ச்சிமிகு உரைகேட்டு மகிழ்ந்து போனார்.

முன்னதாக

தஞ்சாவூர், காந்திய இயக்கத் தலைவர்


பேராசிரியர் வீ.சு.ரா.செம்பியன் அவர்கள்

விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார்.

நூல் அறிமுக விழாவிற்குத் தலைமையேற்றுச் சிறப்பித்த

காந்தியவாதி

மக்கள் சிந்தனைப் பேரவையின் துணைத் தலைவர்

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்கள்

தன் சொந்த செலவில்

மகாதேவ தேசாய்

காந்தியின் நிழல்

நூல்களை விலை கொடுத்து வாங்கி,

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்,

உயரிய, உன்னத இந்நூலினை

அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தார்.

---

மகாதேச தேசாய்

(காந்தியின் நிழல்)

நூல் அறிமுகக் கூட்டத்தின்

ஒலி வடிவத்தை

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிக் கேட்டு

மகிழுங்கள்

நெகிழுங்கள்.