இரு ஆண்டுகளுக்கும் முன்,அந்த நாட்டின் மக்கள் தொகை 60,39,900.
அவ்வளவுதான்.
இதில் சீனர்கள்
75.6 சதவிகிதம்.
மலாய்க்காரர்கள்
15.1 சதவிகிதம்.
இந்தியர்கள்
7.6 சதவிகிதம்.
மற்றவர்கள்
1.7 சதவிகிதம்.
மொத்த மக்கள்
தொகையில் தமிழர்கள் வெறும் 4.9 சதவிகிதம்தான்
இருப்பினும்
தமிழ் இங்கு ஆட்சி மொழி.
இதற்கானக் காரணத்தை,
1965 ஆம் ஆண்டிலேயே, இந்நாடு தனி நாடாக உருவானபோதே, இந்நாட்டின் தந்தையாகப் போற்றப்பெறும்,
இந்நாட்டின் முதல் பிரதமர், தெளிவாகக் குறிப்பிட்டார்.
தொடக்க காலத்தில் தமிழர்கள், எங்களுடன் தோளோடு
தோள் நின்று, இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும், வளப்பத்திற்கும் போராடினார்கள்.
அந்த நன்றிக்கடனுக்காகவே, அவர்களின் தமிழ் மொழியையும்
அதிகாரத்துவ மொழிகளுள் ஒன்றாக ஆக்கியுள்ளோம்.
மேலும், அரசமைப்புச்
சட்டத்திலேயே இதற்கான வழிவகைகளையும் புகுத்தினார்.
Malay, Mandarin, Tamil and English shall
be the 4 official languages.
தமிழ் அதிகாரத்துவ
மொழியாக இருப்பதால், எல்லா அரசாங்க அறிக்கைகளும் நான்கு மொழிகளிலும் வெளியிடப்படும்.
அரசாங்கக் கட்டடங்களிலும்,
பள்ளிகளிலும் பெயர்கள் நான்கு மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும்.
நாடாளுமன்றத்தில்
தமிழிலும் உரையாற்ற முடியும்.
பிரதமரின் தேசிய
தினச் செய்திகளும் உரைகளும் நான்கு மொழிகளிலும் வெளியிடப்படும்.
அரசாங்கத்திற்குத்
தமிழில் கடிதம் எழுதினால், உரிய பதில் வரும்.
தமிழ் வானொலி,
தமிழ் தொலைக்காட்சிகளை நடத்துவதற்கு அரசு மானியம் வழங்கும்.
நூலகங்களில்
தமிழும் இருக்கும்.
பேருந்து நிலையங்களிலும்
தொடர் வண்டி நிலையங்களிலும் தமிழிலும் அறிவிப்பு வெளியிடப்படும்.
அனைத்துவகை பயணச்
சீட்டுகளிலும் தமிழும் இடம்பெறும்.
தானியங்கி வங்கி
இயந்திரங்கள், மருத்துவமனை கட்டணச் சேவை இயந்திரங்கள் அனைத்திலும் தமிழ் இருக்கும்.
நாட்டின் நாணயங்களிலும்,
பணத் தாள்களிலும் தமிழ் கட்டாயம் இருக்கும்.
பொதுவாகச் சொல்வதானால்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.
இதுதான் சிங்கப்பூர்.
---
சிங்கப்பூரில்
உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், வகுப்புகள் தொடங்குவதற்கு முன், மாணவர்கள் அனைவரும் ஒன்றாக
நின்று, பற்றுறுதி எடுத்துக் கொள்ளும்
நிகழ்வு, இன்றும் தொடர்கிறது.
சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம், இனம், மொழி,
மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபட்டு, நம் நாடு மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம்
ஆகியவற்றை அடையும் வண்ணம், சமத்துவத்தையும், நீதியையும் அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயக
சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதி மேற்கொள்ளுவோமாக.
---
திறமைக்கு முதலிடம்.
இதுவே சிங்கப்பூர்
கல்வித் துறையின் அடிப்படைக் கொள்கை.
மாணவர்கள் பெறும்
மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, மேற் படிப்பிற்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
சிபாரிசு என்பதற்கு
எள் அளவும் இடம் கிடையாது. கிடையவே கிடையாது.
முதலாம் வகுப்பில்
இருந்து தொடக்கக் கல்லூரி வரை, அனைவரும், தங்கள் தாய் மொழியில் கற்பது கட்டாயம்.
தமிழர் அல்லாத
பிற இந்திய மாணவர்கள், தங்கள் தாய் மொழியைக் கற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இன்று
தமிழர்களின் மனநிலை மாறிவருவதுதான் வேதனைக்கு உரியதாக மாறியிருக்கிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட
சிறிய அளவிலான ஆய்வின்படி, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பலரும், தங்கள் தாய்
மொழியாம் தமிழ் மொழியை, படிப்பு மொழியாக தேர்வு செய்யவில்லை என்பது வெளிச்சத்திற்கு
வந்திருக்கிறது.
2011 ஆம் ஆண்டுக்
கணக்கின்படி, 3771 தமிழ் மாணவர்கள் இந்தியைத் தேர்வு செய்திருந்த நிலையில், 2016 இந்த
எண்ணிக்கை 6,888 ஆக உயர்ந்துள்ளது.
இதனை சிங்கப்பூர்
வாழ் தமிழர்கள் அனைவரும் தங்களின் கவனத்தில் கொள்வதும், தங்களின் மனநிலையை மாற்றிக்
கொள்வதும் நல்லது என்று எச்சரிக்கிறது இந்த நூல்.
---
இரண்டாம் நூற்றாண்டில்
சபானா எம்போரியம்.
மூன்றாம் நூற்றாண்டில்
பூ லுவோ சுங்.
14 ஆம் நூற்றாண்டில்
தெமாசிக்.
பல்வேறு காலகட்டங்களில்,
பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே, தமிழர்களுக்கும்
சிங்கப்பூருக்குமான தொடர்பு தொடங்குகிறது.
கடாரம், ஸ்ரீவிசயம், பண்ணை, மலையூர், மாடியிருங்கம்,
இலங்காசோகம், வளைப்பந்தூர், தலைத்தகோலம், மாதமலிங்கம், இலாமுரிதேசம், மானக்கவாரம்
இவையெல்லாம்,
அலைகடல்
நடுவுள் பலகலம் செலுத்தி
முதலாம் இராசேந்திர சோழன் வெற்றிகொண்ட தென்கிழக்கு ஆசியாவின்
13 தீவுக் கூட்டங்களாகும்.
இதிலும் ஒரு
பெருவியப்பு அடங்கியிருக்கிறது,
இந்த 13 தீவுக்கூட்டங்களில்,
நான்கு தீவுக்கூட்டங்கள் எங்கிருக்கின்றன என்று
இன்று வரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.
இன்றுவரை கண்டுபிடிக்கப்படாத
நான்கு தீவுக் கூட்டங்களுள் ஒன்றான, வளைப்பந்தூருதான்
சிங்கப்பூர் என்கிறார்கள் இன்றைய ஆய்வாளர்கள்.
---
யாரும் அறியாத
மீனவர் கிராமமாக இருந்த சிங்கப்பூரை, பெரும் துறைமுகமாகவும், நவீன நகரமாகவும் மாற்றுவதற்குத்
தன் கூர்மதியாலும், புலன் உணர்வாலும் உணர்ந்து உயர்த்த பெருமுயற்சி மேற்கொண்டவர் ராஃபிள்ஸ்.
ராஃபிள்ஸ்.
தென் கிழக்கு
ஆசியாவில் புத்தம் புதிதாய் ஒரு பிரிட்டீஸ் தளம் அமைப்பதற்கானத் தகுதியான இடத்தைத்
தேடிப் புறப்பட்டவர் கண்டுபிடித்ததுதான் சிங்கப்பூர்.
1819 ஆம் ஆம்
ஆண்டு சனவரி 28 ஆம் நாள்.
மாலை 4.00 மணி
ஒரே ஒரு சிப்பாயுடன்
கப்பலை விட்டு இறங்கி, சிங்கப்பூர் மண்ணில் கால் பதித்தார்.
அந்த சிப்பாய்,
இந்தியர்.
சிங்கப்பூர்
அப்பொழுது, ஜொகூர் சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது.
வர்த்தக நிலையம்
அமைப்பதற்கு, ஜொகூர் சுல்தானுடன் ஒப்பந்தம் போட்டார்.
ஒப்பந்த நகலை,
பினாங்கில் உள்ள ஆளுநரிடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் சிங்கப்பூர் திரும்பியபோது,
ஒரு முக்கியமான மனிதரையும் உடன் அழைத்து வந்தார்.
அவர் ஒரு இந்தியர்.
அதுவும் தமிழர்.
நாராயண
பிள்ளை.
பினாங்கு கிழக்கிந்திய
நிறுவனத்தில் எழுத்தராகப் பணியாற்றியவர்.
ராஃபிள்ஸ் அவர்களுடன்
நெருங்கிப் பழகியவர்.
நாராயண பிள்ளையின்
திறமையினையும், புத்திக் கூர்மையினையும் நன்கு அறிந்த ராஃபிள்ஸ், நாராயண பிள்ளையை பினாங்கில்
இருந்து சிங்கப்பூருக்கு அழைத்து வந்தார்.
சிங்கப்பூரில்
ஒரு நவீன நகர்புற குடியேற்றம் அமைக்கப்பட இருப்பதால், அங்கு கட்டட வேலைகளுக்கும், கட்டடப்
பொருள்களுக்கும் சிறப்பான எதிர்காலம் இருப்பதை உணர்ந்த நாராயண பிள்ளை, பினாங்கில் உள்ள
தன் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார்.
செங்கல் சூளை வேலையாட்கள்.
தச்சர்கள்
கொத்தனார்கள்
துணி வியாபாரிகள்
உடல் உழைப்புத் தொழிலாளிகளை அனுப்பவும்.
ஆட்கள் வந்து
குவிந்தனர்.
நாராயண பிள்ளையே
முதல் செங்கல் சூளையினை அமைத்தர்.
நாராயண பிள்ளை.
சிங்கப்பூரின் முதல் கட்டட குத்ததையாளர்.
செங்கல் சூளை
பஞ்சு விற்பனை
துணி விற்பனை
என அனைத்து வணிகத்திலும் இறங்கினார்.
வாழ்வில் உயர்ந்தார்,
ஆங்கிலேயர்கள்,
நாராயண பிள்ளையை, இந்திய மக்களின் தலைவராக
நியமிக்கும் அளவிற்கு உயர்ந்தார்.
இந்துக்களுக்கு
என்று ஒரு மாரியம்மன் கோயிலைக் கட்டினார்.
இக்கோயில் வழிபாட்டுத்
தலமாக மட்டுமல்லாமல்,
சிங்கப்பூருக்கு
வரும் இந்தியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாகவும் மாறியது.
சமுதாய நடவடிக்கைகளுக்கான
முக்கிய இடமாக வளர்ந்தது.
இந்தியர்களின்
திருமணங்களைப் பதிவு செய்யும் இடமாக உயர்ந்தது.
இக்கோயில் இன்றும்
இருக்கிறது.
சிங்கப்பூரின்
தேசிய நினைவுச் சின்னமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
---
அவற்றுள் ஒன்று.
நாராயண பிள்ளையின்
சிலை.
இன்று சிங்கப்பூரில் உள்ள ஆவணங்களின்படி, சிங்கப்பூருக்கு
வந்த முதல் தமிழர், இந்த நாராயண பிள்ளைதான்.
---
இராசேந்திர சோழன்
பதினொன்றாவது நூற்றாண்டில், பெரும் கப்பற்படையுடன் வந்து, தென்கிழக்காசியா முழுவதையும்
கைப்பற்றியபோது, அவருடன் வந்த வீரர்களோ அல்லது அதற்கும் முன் வந்த வணிகர்களோ, சிங்கப்பூரில்
தங்கியதற்கான எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை.
யாருமே இங்கு
தங்கவில்லையா?
அனைவருமே திரும்பிவிட்டார்களா?
எப்படிப் பார்த்தாலும், வணிகர்கள், இங்கு தங்கித்தானே
வணிகம் செய்திருக்க வேண்டும்.
அனைத்து வணிகர்களும்
தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட்டார்களா?
எவ்வித பதிலும்
இல்லை.
எந்தவிதமான ஆவணங்களும்
இல்லை.
மலேசியாவின்
வடபகுதியான கெடா மாநிலத்தில், பூஜங் பள்ளத்தாக்கில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்துள்ள
சில தடயங்கள் மற்றும் இராசேந்திர சோழனின் மெய்கீர்த்தி தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை.
இதற்கு விடைதேட
வேண்டுமானால், பூமியைத்தான் தோண்ட வேண்டும் என்கிறார், இந்த நூலின் ஆசிரியர்.
ஆம், அகழாய்வுகள்
நடத்தப்பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறது
இந்த நூல்.
---
சிங்கப்பூர்.
தென்கிழக்கு
ஆசியாவின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறிய நாடு.
ஆங்கிலேயர் ஆட்சியின்
கீழ் வருவதற்கு முன், இதன் வரலாறு என்ன?
இத்தீவை ஆட்சி
செய்தவர்கள் யார்? யார்?
ஜப்பானியப் படையெடுப்பு.
போரின் முடிவு.
போருக்குப் பிந்தைய
சிங்கப்பூர்.
தன்னாட்சிக்கான
முன்னெடுப்புகள்.
லீ குவாய் யூவும்
மக்கள் செயல் கட்சியும்.
புதிய அரசாங்கத்தின்
சவால்கள்.
ஆங்கிலேயர் ஆட்சியின்
கீழ் வந்த பிறகு இந்நாட்டின் நிலை என்ன?
ஆங்கிலேயர்கள்
எப்போது சிங்கப்பூருக்கு விடுதலை அளித்தனர்?
சிங்கப்பூர்
ஏன் மலேசியாவில் இணைந்தது.
எதற்காக மலேசியாவில்
இருந்து வெளியேற்றப்பட்டது?
வேண்டாத விடுதலை,
தன்மீது திணிக்கப்பட்டபோது, சிங்கப்பூர் அதனை எவ்வாறு எதிர்கொண்டது?
அதன் பிறகு,
இதன் வளர்ச்சியின் போக்கு எப்படி மாறியது?
மூன்றாம் உலக
நாடாக இருந்த சிங்கப்பூர், முதலாம் உலக நாடாக உயர்ந்தது எப்படி?
உலகமே வியந்து
பார்க்கும் அளவிற்கு, ஒரு பொருளாதார சக்தியாக வளமை பெற்றது எப்படி?
சிங்கப்பூரில்
தமிழர்கள்
சிங்கப்பூரில்
தமிழ்க் கல்வி
சிங்கப்பூரில்
தமிழ் அமைப்புகள்
தமிழ் முன்னோடிகள்,
பின்னோடிகள்
சிங்கப்பூர்
அரசியலில் இந்தியர்கள்
சிங்கப்பூர்
அரசியலில் தமிழர்கள்
இன்னும், இன்னும்,
என்ன, என்ன சந்தேகங்கள் எழுந்தாலும், அனைத்திற்கும் விடை கூறுகிறது இந்த நூல்.
இந்து புராணத்தில்
இருக்கும், ஓர் உருவகக் குறிப்பை, சிங்கப்பூரின் உருவத்துடன் ஒப்பிட்டு, தனது நூலிற்குத்
தலைப்பாக்கி இருக்கிறார் இவர்.
வாமனத்
தீவு.
இந்த அரிய வரலாற்று நூலை நமக்கு வழங்கி இருப்பவர்
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர்
திரு நா.ஆண்டியப்பன்
அவர்களின் இந்த வரலாற்றுப் பதிவு, பெரிய இயக்கங்கள் தொடங்கி, அவற்றை சாத்தியமாக்கிய
தனி மனிதர்கள் வரை, அத்துணை பேரின் உழைப்பையும், அத்துணை இயக்கங்களின் முன்னெடுப்புகளையும்,
ஒன்றுவிடாமல் குறிப்பிட்டு, சிங்கப்பூரின் வளர்ச்சியை படிப்படியாக, பக்கத்துக்குப்
பக்கம், ஒரு திரைப்படம் போல் ஒடவைக்கிறது.
மண் சார்ந்த
அறிவுத் திறன்கள் ஏற்கப்படுவதையும், மதிக்கப்படுவதையும் நிலை நாட்டுகிறது இந்த நூல்.
மதிப்பு மிக்க ஒரு வரலாற்றுப் பெட்டகம்.
வாமனத்
தீவு
பரநியா பதிப்பகம்,
சிங்கப்பூர்
BLK 723, No.13-149,Yishun street 71,
Singapore – 760723
விலை ரூ.700
.jpg)

%20(1).jpg)



